கவிதைக்காரர்கள் வீதி




ஆறுதல்
அடைமழையில் நனைந்த
சோளக்கொல்லை பொம்மை
தலை துவட்டிவிட
வருகிறது காற்று!
- பெ.பாண்டியன், காரைக்குடி.

சுதந்திரம்
கொடுக்கப்பட்ட அரை வட்டத்தின்            
மதிப்பைக் கொண்டு
பை ஆர் ஸ்கொயரால் பெருக்கி
வந்த விடையென
மாடு மேய்ந்த இடத்தைக்
குறிப்பிட்டு எழுதுகையில்
கேள்வி எழுப்புகிறது மனம்...
அவ்வளவுதானா
மாட்டின் சுதந்திரம்?
- ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை-90.

சிக்னல்
டோரா பொம்மை
வாங்கச் சொல்லி
அழுகிறது குழந்தை
காருக்கு உள்ளேயும்
வெளியேயும்!
- வி.நாராயணன், தஞ்சாவூர்.

இன்முகம்
எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான் என்றாலும்
இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி இருக்கலாம்
இந்த மருந்துக்கடை
விற்பனையாளர்கள்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி.

தவம்
யாருக்காகவோ தவமிருக்கிறது,
தவறிய
ஒற்றைச் செருப்பு
- கவி கண்மணி, கட்டுமாவடி.