கர்ணனின் கவசம்





சரஸ்வதி நதியைத் தேடி வந்த ஒன்பது பேரும் அப்படியே அதிர்ந்து நின்றார்கள். கண்கொட்டாமல் அவர்கள் பார்த்த திசையில் ஆஜானுபாகுவான மணல் மனிதன் நின்று கொண்டிருந்தான். ஒன்பது பேரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் அந்த மணல் மனிதனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

நிதானமாக அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
‘‘யாரும் பயப்பட வேண்டாம். அசோக சக்கரவர்த்தியால உருவாக்கப்பட்ட ரகசியக் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேரோட வம்சத்துல வந்த நமக்கு இவனை சமாளிக்கிற சக்தி இருக்கு...’’ என்றான் குள்ள மனிதன்.

‘‘இப்ப பிரச்னை இவனை சமாளிக்கறது இல்ல...’’ இடையில் புகுந்த உயரமான மனிதனின் குரலில் கவலை வெளிப்பட்டது.
‘‘வேறென்ன சிக்கல்..?’’
‘‘பக்கவாட்டுல பார்...’’

எட்டு பேரும் அவன் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தார்கள். காட்டாறாக வெள்ளம் வந்து கொண்டிருந்தது. இடுப்புயர சிவபெருமான் அந்த வெள்ளத்தில் மிதந்து வந்தது கூட அவர்களை அதிர்ச்சியடைய வைக்கவில்லை. நடராஜரின் சிலையும் உடன் வந்ததுதான் ஒன்பது பேரையும் நிலைகுலைய வைத்தது.

காரணம், வலது காலை உயர்த்தி நடனமாடும் அபூர்வ நடராஜர் அவர். அதுவும் மதுரையில் மட்டுமே தரிசனம் தரும் வெள்ளியம்பல நடராஜர் சிலை அது.

துரிதமாக இயங்கியவன் குள்ள மனிதன்தான். ‘‘எல்லாரும் அந்த மணல் மனிதன் மேல ஏறுங்க. அவனோட வலது காது பக்கத்துல ஒரு சக்கரம் இருக்கு. அதை இடது பக்கமா மூணு முறை திருகுங்க...’’ என்றபடியே ஓட ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். வெள்ளம் அவர்களை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

தன்னை நோக்கி ஓடி வரும் ஒன்பது பேரையும் பார்த்து மணல் மனிதன் நகைத்தான். அது இடியாக எதிரொலித்தது. முன்னால் வந்து கொண்டிருந்த குள்ள மனிதனை நசுக்குவதற்காக தன் வலது காலை மணல் மனிதன் உயர்த்தினான். இதை முன்பே எதிர்பார்த்தது போல் குள்ள மனிதன், தன் கால் கட்டை விரலை ஊன்றி எம்பினான். கைகளை உயர்த்தி, மணல் மனிதனின் வலது கால் கட்டை விரலைப் பற்றினான்.
அதன் பிறகு குள்ள மனிதன் மைக்ரோ நொடியும் தாமதிக்கவில்லை. மடமடவென்று ஏணியில் ஏறுவது போல் ஏறினான். உயர்த்திய பாதத்தை மணல் மனிதன் பூமியில் பதித்தான். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்கள் அவன் மீது ஏறினார்கள். இதனால் வெகுண்ட மணல் மனிதன், தன் கால்களை உதறினான். உடலைக் குலுக்கினான்.

ஒன்பது பேரும் வீசி எறியப்பட இருந்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பதிலாக அவன் உடலிலிருந்த மணலையே கெட்டியாகப் பற்றினார்கள். பற்றிய இடங்களில் இருந்த மணல்கள், துகள்களாகி உதிர ஆரம்பித்தன. எனவே தொட்ட இடம் உதிருவதற்குள் அடுத்த இடத்தை பற்றினார்கள்.

இப்படி அவர்கள் ஏற ஆரம்பிக்க, சீறி வந்த வெள்ளமும் நெருங்க ஆரம்பித்தது. குள்ள மனிதன் ரப்பர் பந்தைப் போல் மணல் மனிதனின் உடலில் தாவினான். வலது காதை நெருங்கினான்.

அங்கே சக்கரம் எதுவும் இல்லை. அதிர்ந்தான். அதற்குள் வெள்ளமும் கிட்டத்தட்ட அவர்களை நெருங்கி விட்டது. இன்னும் ஒரேயொரு நிமிடம்தான் கைவசம் இருக்கிறது. அதற்குள் சக்கரத்தைக் கண்டுபிடித்துத் திருகியாக வேண்டும். இல்லாவிட்டால் மணல் மனிதனுடன் சேர்ந்து வெள்ளத்தில் கரைய வேண்டியதுதான்.

என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, உயரமான மனிதன் கத்தினான். ‘‘இடது காதுல சக்கரம் இருக்கு...’’
‘‘அப்ப அதை வலது பக்கமா மூணு முறை திருப்பு...’’
அதன்படியே உயரமான மனிதன் உள்ளங்கை அளவுள்ள சக்கரத்தை திருப்ப முயன்றான். ஆனால், முடியவில்லை. இரும்பாலான அந்தச் சக்கரம் துருப் பிடித்திருந்தது. பற்களைக் கடித்து தம் கட்டினான். அப்படியும் சக்கரம் அசையவில்லை. இன்னும் முப்பது நொடிகள்தான் பாக்கி... வெள்ளம் நெருங்கிக் கொண்டிருந்தது.

உடனே மத்திம உயரம் கொண்ட மனிதன் தன் பாதத் தால் ஓங்கி அந்த சக்கரத்தை மிதித்தான். லேசாக அசைந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு உயரமான மனிதன் வலது பக்கமாக சக்கரத்தைத் திருப்பினான். ஒரு சுற்று. இன்னும் பதினைந்து நொடிகள்தான் பாக்கி. இரண்டாவது சுற்று. ஐந்து விநாடிகள்தான் பாக்கி. மூன்றாவது சுற்று. காட்டாறாக சீறி வந்த வெள்ளம் மணல் மனிதனின் பாத நுனியைத் தொட்டது.
ஆனால் -

அவனைக் கரைக்கவில்லை. அவனைத் தாண்டியும் செல்லவில்லை. அப்படியே நின்றது. அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சர்யம்.

மணல் மனிதனுக்கு பக்கத்தில், அந்தப் பாலைவனத்தில் திடீரென்று கிணறு ஒன்று உருவானது. சீறி வந்த வெள்ளம் அதற்குள் அருவியைப் போல் விழ ஆரம்பித்தது. மணல் மனிதன் அசையாமல் கற்சிலை போல் நிற்க, அவன் மீது ஆங்காங்கே அமர்ந்திருந்த ஒன்பது பேரும் இமை கொட்டாமல் இந்த அதிசயத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து... நிமிடங்கள் முடிவதற்குள் சீறி வந்த வெள்ளத்தின் சுவடே தென்படவில்லை. மிதந்து வந்த சிவனும், நடராஜரும் கூட அந்தக் கிணற்றுக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

மணல் மனிதனின் வலது காதுக்கருகில் நின்று கொண்டிருந்த குள்ள மனிதன், தரையில் குதித்தான். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். சுழல் வட்டப் பாதையில் படிக்கட்டு ஒன்று கீழ்நோக்கிச் சென்றது. ஆனால், பாதாளத்துக்குச் செல்லவில்லை. நடுக்கிணற்றில் இருந்த ஒரு மரக் கதவின் வாசலைத் தொட்டு அந்த படிக்கட்டு நின்றது.

‘‘வாங்க...’’ என்று அழைத்த குள்ள மனிதன் படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தார்கள். மரக் கதவை அடைந்த குள்ள மனிதன், அப்படியே நின்றான்.

‘‘கதவைத் திறக்க வேண்டியதுதானே...’’ முந்தின படிக்கட்டில் நின்று கொண்டிருந்த உயரமான மனிதன் கிசுகிசுத்தான்.
குள்ள மனிதன் திரும்பிப் பார்த்தான். ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒருவர் வீதம் எட்டு பேரும் நின்று கொண்டிருந்தார்கள். மரக் கதவை திரும்பவும் ஏறிட்ட குள்ள மனிதன், அதைத் திறக்க முயற்சி செய்தான். பூட்டோ, தாழ்ப்பாளோ இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. எனவே தன் கால்களை உயர்த்தி அதை இடிக்க முற்பட்டான்.

அதற்குள் மரக்கதவே திறந்தது. ஃபாஸ்ட்டும், சூ யென்னும் சொட்டச் சொட்ட நனைந்தபடி வெளியே வந்தார்கள்.
அதே நேரம் கிணற்றின் அடி ஆழத்திலிருந்து நீரும் குபுகுபுவென மேல் நோக்கி வர ஆரம்பித்தது.
உடைந்த ஓட்டில் இருந்த ஸ்லோகத்தை மீண்டும் ருத்ரன் படித்தான். ‘கோபி பாக்யா மதுவ்ரதா; சிருங்கிசோ தாதி சந்திகா; கால ஜீவிதா கடவா; கால ஹலா ரசந்தரா...’
அதே வாக்கியம். சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் சூ யென்னும், ரவிதாசனும் பேசியதை ஒட்டுக் கேட்டபோது காலில் இடறிய நாணயத்தில் இருந்த அதே ஸ்லோகம். அதைப் பார்த்துவிட்டுத்தான், சூ யென் உருவத்தில் அங்கிருப்பது பகவான் கிருஷ்ணர் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆதிச்சநல்லூரில் தன்னுடன் பேசிவிட்டு காற்றில் மறைந்த பெரியவரும் கிருஷ்ணர்தான் என்பதை உணர்ந்து கொள்ள அதே மந்திரம் பயன்பட்டிருக்கிறது.

கிருஷ்ணர் இருக்கும் இடமெல்லாம் இந்த ஸ்லோகம் இருக்கும் போல... கண்கள் கசிய அதன் கீழே பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளைப் படித்தான். ‘கர்ணனின் கவசம்...’
நிமிர்ந்தான். பரந்து விரிந்த ஆதிச்சநல்லூரின் இந்தப் பக்கத்துக்கு குறிப்பாக எதற்காக பெரியவர் உருவில் வந்த பகவான் கிருஷ்ணர் தன்னை அழைத்து வர வேண்டும்? ஏதோ காரணமிருக்கிறது. அது என்ன?

சுற்றிலும் பார்த்தான். அகழ்வாராய்ச்சிகள் நடந்ததற்கான அறிகுறியாக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய நகரத்தின் ஒரு பகுதி.
கவனத்துடன் பார்வையால் அலசியவன், தன் தலையில் குட்டிக் கொண்டான். உடைந்த ஓடு கிடைத்த இடத்தில்தான் ஏதோ இருக்க வேண்டும். தன் கால்களுக்குக் கீழே பார்த்தான்.
செம்மண் நிலம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. வட்டமாகச் சுற்றி வந்தான். கால்களால் மிதித்துப் பார்த்தான். பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. தோண்டுவதற்கு ஏதேனும் கிடைக்குமா? மரக்கிளை ஒன்று சற்றுத் தள்ளி அவனுக்காகக் காத்திருந்தது.

அதை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தான். குவிந்த மணலைக் கைகளால் அள்ளி அருகில் போட்டான். ஓரடி, இரண்டடி... என மெல்ல மெல்ல ஆறடி வரை தோண்டினான். ஏழடி நீள மண் பெட்டி ஒன்று தட்டுப்பட்டது. கவனத்துடன் அதன் மீது மரக்கிளை படாமல் சுற்றிலும் நோண்டினான். தாழ்ப்பாளுடன் கூடிய கதவு தட்டுப்பட்டது. திறக்க முயற்சி செய்தான்.

முடியவில்லை. எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதோ? இறுகியிருந்தது. தன் சக்தி அனைத்தையும் செலுத்தினான். அப்படியும் அது அசையவில்லை. நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்து மணலில் போட்டான். சட்டையைக் கழற்றி சுருட்டினான். அதைத் தாழ்ப்பாளின் மீது அழுத்தி கையால் நெம்பினான்.

‘க்ளக்.’
திறந்தது. இரு கைகளாலும் தாழ்ப்பாளை அழுத்தி மேல் நோக்கித் தூக்கினான்.
கரகரவென ஓசையுடன் கதவு திறந்தது. உடனே குப்பென்று ஒருவிதமான நறுமணம் அவன் நாசியைச் சூழ்ந்தது. உள்ளே பார்த்தான்.

சடலம் ஒன்று பதப்படுத்தப்பட்டு கிடந்தது.
அப்படியானால் இது முதுமக்கள் தாழியா? இமைகள் விரிய அந்த உடலைப் பார்வையால் அலசினான். மூலிகைத் தைலத்தால் அடக்கம் செய்யப்பட்டிருந்த அந்த சடலத்தின் சதைகள் கால ஓட்டத்தில் கரைந்திருந்தன. தசைநார்கள் சிதைந்திருந்தன. நடுங்கும் கைகளால் தடவினான். எலும்புகள் உறுதியாக இருந்தன.

உள்ளங்காலில் இருந்து தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்த ருத்ரனின் கரங்கள், சடலத்தின் இதயப் பகுதியை அடைந்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டன. அவனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

காரணம், எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டானோ... இன்னமும் அந்த மனிதன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக அந்த உடலின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

‘‘ருத்ரன் கண்டுபிடிச்சுட்டான்...’’ என்று புன்னகைத்தாள் ஆயி.
‘எதை’ என்பது போல் பார்த்தாள் விஜயலட்சுமி.
‘‘யாரை சந்திக்கிறதுக்காக அவனை ஆதிச்சநல்லூர் அனுப்பினேனோ, அவரைப் பார்த்துப் பேசிட்டான். அவர் மூலமாவே பொருள் இருக்கிற இடத்தையும் தெரிஞ்சுகிட்டான்...’’
விஜயலட்சுமி அமைதியாக இருந்தாள்.

‘‘என்ன பொருள்னு கேட்க மாட்டியா?’’
‘‘நீங்களே சொல்வீங்கனு நினைச்சேன் ஆயி...’’
விஜயலட்சுமியின் தலையை பரிவுடன் கோதியபடி, ருத்ரன் கண்டெடுத்த பொருள் எதுவென்று ஆயி சொன்னாள்.
கேட்ட விஜயலட்சுமி அதிர்ச்சியின் எல்லைக்கு சென்றாள்.

தியானத்தில் இருந்த வியாசர், சட்டென்று கண்களைத் திறந்தார். அவர் உதடுகளில் புன்னகை அரும்பியது.
டுடுமா அருவியின் நடுவில் இருந்த குகையில் சங்கருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த குந்தவை நாச்சியார் நிமிர்ந்தாள்.

‘‘என்ன குருவே..?’’
‘‘ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு குந்தவை...’’
‘‘அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’
‘‘தாராளமா... உங்க சோழ வம்சத்தைச் சேர்ந்த ருத்ரனுக்கு எதிர்பார்க்காத பாக்கியம் கிடைச்சிருக்கு...’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமா. பகவான் கிருஷ்ணர் அவனுக்குக் காட்சி அளிச்சிருக்கார்... அது மட்டுமில்ல! பல்லாயிரம் வருஷங்களா உயிர் வாழ்ந்துக்கிட்டிருக்கிற மனிதரையும் அவன் பார்த்துட்டான்...’’
‘‘அது யார் குருவே...’’
வியாசர் சொன்னார். அதை குந்தவை மட்டுமல்ல, மயக்கம் தெளிந்திருந்த சங்கரும் கேட்டான். திகைத்தான்.

‘‘எந்த உயர்ந்த மனிதரோட கவசத்தைத் தேடி பல்லாயிரம் வருஷங்களா உலகமே அலையுதோ, அந்த மனிதர் உயிரோட இருக்கறதை ருத்ரன் பார்த்துட்டான்...’’
‘‘குருவே...’’
‘‘ஆம் குந்தவை! கர்ணன் புதைக்கப்பட்ட இடத்தை ருத்ரன் தோண்டி எடுத்துட்டான்...’’
(தொடரும்)