‘‘தன்னைத் திட்டி எதிரி மன்னன் அனுப்பிய ஓலையை எல்லாம் ஏன் மன்னர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்..?’’
‘‘மகாராணி கோபமாக இருக்கும்போது அதைப் படித்துக் காட்டி அவரை குஷிப்படுத்தத்தான்..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘தலைவர் மேடையில் இருக்கும்போதே அவர்கிட்ட மனுவைக் கொடுத்திருக்கலாம்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘கீழே இறங்கினதும் வேற கட்சிக்குத் தாவிட்டாரு..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘கட்சி மாறுவதைத் தடுக்க, தொண்டர்களுக்கெல்லாம் உடனே தடுப்பூசி போடணும்னு அடம் பிடிக்கிறாரு..!’’
- எஸ்.கணேஷ், பெங்களூரு.
என்னதான் அரசியல் தலைவர்ன்னாலும், அவரால மேகக் ‘கூட்டத்துக்கு’ எல்லாம் தலைமை தாங்க முடியாது!
- கூட்டம் வராத மேடையில் திக்கித் திணறிப் பேசுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘அந்த மந்திரவாதி கிட்ட வேலைக்குப் போனியே... என்ன சொன்னார்?’’
‘‘ ‘பேயா வேலை செய்யணும் குமாருன்னு சொன்னார்..!’’
- சம்பத்குமாரி, திருச்சி.
வேர்க்கடலை வேர்லேர்ந்து வரும்... ஆனா கொண்டைக்கடலை கொண்டையிலேருந்தா வருது?
- இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கி ரெண்டு மணி நேரம் சாப்பிடுவோர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
‘‘அந்த ஆளு எம்.பி சீட் கேட்டு அடம் பிடிக்கறாரே... ஏன்யா?’’
‘‘ அவருக்கு டெல்லியில் ரகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்னு யாரோ ஜோசியர் சொல்லியிருக்காராம் தலைவரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.