வேலைக்குப் போகாதீர்கள்!





உலகில் இரண்டுவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு உண்மையாக வேலை செய்பவர்கள் முதல் வகை; அந்த வேலையை தாங்கள் செய்ததாக நடித்து, அதற்கான பெயரையும் வெகுமதியையும் தட்டிச் செல்பவர்கள் இரண்டாம் வகை. நீங்கள் முதல் வகையில் இருங்கள். அங்குதான் போட்டி குறைவு!
- இந்திரா காந்தி
   
நீங்கள் தியாகியா... இல்லை, இயல்பான ஆசை கொண்டவரா என்பதை இப்போது அறியலாம். நீங்கள் பணியாற்றுவது எந்த இடமாக இருந்தாலும், ‘அன்றாடம் செய்யும் வழக்கமான வேலைகளை மட்டுமே செய்வேன்’ என்றால், உங்களிடம் தியாக மனப்பான்மை குடி கொண்டிருக்கிறது என்று பொருள். ஏனென்றால், உங்கள் பணி வாழ்வில் முன்னேறும் ஆசைகளை நீங்கள் தூக்கி எறிந்துவிட்டிருக்கிறீர்களே!

எனக்குத் தரப்பட்ட வேலைகளை மட்டுமே செய்வேன்... இதற்கே நேரம் போதவில்லை என்றால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் முன்னேற்றம் தேங்கி விட்டது என்று பொருள்.

இப்போது நீங்கள் பார்க்கிற வேலையிலேயே காலம் முழுவதும் இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எந்த நிமிடம் வேண்டுமானாலும் உங்கள் நிலைமை மாறிவிடலாம். அதற்குப் பரிபூரணமாகத் தயாராகாவிட்டாலும், ஓரளவாவது விழிப்புடன் இருக்க வேண்டாமா? 

எனவே, எட்டிப் பாருங்கள். உங்கள் பணி சார்ந்த உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அது தொடர்பான செய்திகளை ஆர்வத்துடன் தேடுங்கள்.

‘இது எல்லாம் என் வேலை இல்லையே... இதைக் கவனிக்க பணி இடத்தில் உயர் பதவிகளில் ஆட்கள் இருக்கிறார்களே... இது அவர்கள் பொறுப்பு’ என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். அது அவர்கள் பொறுப்பாகவே இருக்கட்டும். நீங்கள் உங்கள் அறிவை அதிகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? ஒரு அறிவின் வெளிச்சம், இன்னொரு அறிவின் வெளிச்சத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால், இன்று நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்படியும் நாளைக்கு முன்னேறத்தான் போகிறீர்கள். அந்த நேரத்தில் இப்போது நீங்கள் சேகரித்த அறிவு உங்கள் பாதையில் மலர்களைத் தூவும்.



உங்கள் பாஸ் உங்கள் மூலமாக பணி சார்ந்த லேட்டஸ்ட் தகவல்களை அறிய நேரிடும்போது, அவரது மதிப்பீட்டில் உயர்வீர்கள். இது உடனடி பலன். கூரான கத்தியை யாரும் நீண்ட நாள் பழங்களை வெட்ட மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். ‘‘இந்த விஷயமா? அவரைக் கேளுங்கள்... கண்டிப்பாக அவருக்கு ஒரு ஐடியா இருக்கும்...’’ என்றெல்லாம் நீங்கள் மதிக்கப்படுவது உங்கள் பணி வாழ்வின் வெற்றிக்கு நிச்சயம் உதவும்.

உங்கள் வெற்றிக்கு அடுத்தவர் உதவுவது இருக்கட்டும்... உங்களுக்கு நீங்களே உதவவில்லை என்றால் எப்படி? இதற்குத் தேவையெல்லாம் ஒன்றுதான். செய்யும் தொழிலில் ஈடுபாடு. அது உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

எனவே, முன்னேற்றம் வேண்டுமென்றால் மாறி வரும் உங்கள் பணி உலகிற்கு ஏற்ப உங்கள் தொழில் அறிவும் ஈடு கொடுக்க வேண்டும். முன்னேறுவதை விடுங்கள், குறைந்தபட்சம் தாக்குப் பிடிக்க வேண்டும். இருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்கூட, துறை சார்ந்த அறிவு தேவை.

ஒரு எளிய உதாரணமாக, உங்கள் பாஸ், ‘‘தகவல் அனுப்புங்கள்’’ என்கிறார். உடனே நீங்கள், ‘‘அஞ்சல் அட்டையிலா? இன்லேண்ட் லெட்டரிலா?’’ என்றால், நீங்கள் உங்கள் முன்னேற்றத்தையும் உலகின் முன்னேற்றத்தையும் பற்றி துளிகூட கவலை இல்லாத உல்லாசப் பிறவி என்று பொருள். அறிவை அப்டேட் செய்யாதோர், அறிவுள்ளவர் மத்தியில் அந்நியப்பட்டுத்தான் போவார்கள். கம்ப்யூட்டரை பார்ட் பார்ட்டாகக் கழற்றி மாட்டத் தெரிய வேண்டாம்... குறைந்தபட்சம் இமெயிலாவது அனுப்பத் தெரியவில்லை என்றால் எப்படி?

இதுபோன்ற அத்தியாவசியமான அறிதல்களுக்கு எப்போதுமே நம் மூளையில் இடம் இருக்கும். ஆனால், எப்போதுமே அந்த இடத்தில் சோம்பேறித்தனத்திற்கே இடம் கொடுத்துவிட்டு, ‘‘அந்த மேனேஜருக்கு என்னைப் பாத்தாலே பிடிக்காது...’’ என்று வேலை பார்க்கும் இடத்தில் புலம்புவதில் மட்டும் என்ன அர்த்தம் இருக்கிறது?

சரி, உங்கள் நிறுவனத்தில் தற்போது பரந்துபட்ட அறிவை வளர்த்துக்கொள்ள நீங்கள் வெறித்தனமாய் உழைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கற்க நினைப்பதை உங்களால் கடைசி வரை கற்க முடியவில்லை. அல்லது அரையும்குறையுமாகக் கற்று வைத்திருக்கிறீர்கள்.



ஒரு இடத்தில் பணிபுரிபவர்களுக்கு அக்கவுன்டன்சி தெரிந்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எவ்வளவோ முயன்றும் அந்த அறிவு கை கூடவில்லை. சிலருக்கு ஆங்கிலம் எழுத வரும். ஆனால் பேசும்போது சரளமாக வராது. என்ன செய்வது? உங்களின் சக பணியாளர்கள் இவற்றில் புகுந்து விளையாடும்போது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்தான். என்ன செய்வது?

இதுபோன்ற நேரங்களில் நாம் கவனமாகவும், சமயோசிதமாகவும் இருக்க வேண்டும். எவ்வித குற்ற உணர்வோ, தாழ்வு மனப்பான்மையோ உங்களைப் பாதிக்க இடம் கொடுக்காதீர்கள். இப்படி உங்களை வீழ்த்தும் எண்ணங்களுக்கு இடம் கொடுத்துவிட்டால், நீங்கள் நினைத்திருப்பதை விடவும் வேகமாகக் கீழே சென்று விடுவீர்கள். நீங்கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ முயன்றீர்கள்... உண்மையாகத்தான் முயன்றீர்கள். ஆனால், முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே, கவலையை விடுங்கள்.

அக்கவுன்டன்சியோ, ஆங்கிலமோ அது ஒரு அறிவுதான். அதுவே அறிவின் எல்லை அல்ல. எனவே, தலை குனிந்து, கூசிப் போய் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விடாதீர்கள். அது உங்களது நல்ல விஷயங்களையும் உறிஞ்சிவிடும். நீங்களே மறைமுகமாக உங்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறபோது, மற்றவர்கள் அந்த வேலையை இன்னும் உற்சாகமாகச் செய்து உங்கள் வீழ்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்துவார்கள் என்பதை மறவாதீர்கள்.

முதலில் உங்களின் பலவீனத்தை மறைக்கவோ, மறுக்கவோ செய்யாதீர்கள். அந்தத் திறமைகள் இருக்கிற மாதிரி நடிக்காதீர்கள். இல்லாத திறமைகள் இருக்கிற மாதிரி நடித்தால் - சமாளிக்க முயன்றால் - அசிங்கப்பட்டுப் போவோம். நேர்மையாக இதை அணுகி, உங்களின் பலம் என்று எவற்றை நினைக்கிறீர்களோ, அவற்றை வைத்து பலவீனங்களை ஈடு கட்டுங்கள்.

உதாரணமாக கம்ப்யூட்டர் தெரியாத ஒருவர், நன்றாக உரையாடும் திறன் கொண்டிருந்தால், அந்தத் திறமையில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் உங்களை விட்டால் ஆளே கிடையாது என்கிற அளவு உங்களின் அந்த பலம், உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாது என்கிற பலவீனத்தை மறைக்க வேண்டும்.

நெருப்பின் பலம் சுடுவது என்றால், பனிக்கட்டியின் பலம் குளிர்ச்சிதான். ஓடுவது குதிரையின் குணம் என்றால், நத்தையின் பலம் வேகமின்மைதான். எப்படி வேகத்தினால் விளைகிற நன்மைகளை நத்தை அடையாதோ, அதே போல் வேகத்தால் விளைகிற காயத்தையும், களைப்பையும் அடையப் போவதில்லை. வேகமின்மையின் பலம் இது. இந்த உலகில் முழுக்க முழுக்க பாதகமான விஷயங்களை மட்டுமே கொண்ட தொகுப்பு என்று எதுவும் கிடையாது.

தன் திறமையில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதனால் பணி இட நிம்மதி பறிபோவதுடன், அனைவரின் வளர்ச்சியும் பாதிப்படைகிறது. நன்கு யோசித்துப் பாருங்கள். ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொரு பிரத்யேகத் திறமை நிச்சயம் இருக்கும். உங்களுக்குள் அதைக் கண்டுபிடியுங்கள். மற்றவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும் என்றால் - அவருக்கே அவரது பலம் எதுவென்று தெரியவில்லை என்றால் - நீங்கள் கண்டறிந்து உதவுங்கள். உங்களின் நிம்மதிக்காகவும், அனைவரின் வளர்ச்சிக்காகவும்.

இவற்றைச் சொல்வது நீங்கள் உங்கள் பலவீனத்தை எண்ணி பாதிப்பு அடையக்கூடாது என்ற நோக்கில்தானே தவிர, எதையும் கற்றுக்கொள்ளத் தயங்கும் சோம்பேறித்தனத்திற்கு ஆதரவாக அல்ல. பணி வாழ்வின் வெற்றியையும், அதன் மூலம் தங்கள் பிற வாழ்க்கைகளின் வெற்றியையும் விரும்பக் கூடியவர்கள் இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்வார்கள்.
(வேலை வரும்...)