பாம்புகளின் குரல் ரகசியம்





‘‘பாம்புக்கடியில இருந்து பல்லுவலி வரைக்கும் எல்லாத்துக்கும் எங்ககிட்ட வைத்தியம் இருக்கு. இங்க விளைஞ்சு கிடக்கிற ஒவ்வொரு இலைக்கும் வைத்திய குணம் இருக்கு. வழிவழியா அதையெல்லாம் எங்க பாட்டன், பூட்டமார் கத்துக் கொடுத்திருக்காங்க. ஆனா இன்னைய பிள்ளைகளுக்கு அதில எல்லாம் ஆர்வமில்லை. எல்லாம் செங்கச் சூளையில வேலைக்குப் போகுதுக. எங்காவது பாம்பைக் கண்டா ஓடிவந்து எங்களக் கூப்பிடுதுக. நாகரிகத்தை கத்துக்கிறதெல்லாம் சரிதான். நல்லாப் படிச்சு, நல்ல வேலைக்குப் போறது முன்னேற்றம்தான். அதுக்காக காலங்காலமா அடையாளமா இருக்கிற அறிவைத் தொலைச்சுடலாமா?’’
- மல்லிகாவின் பேச்சில் சிரிப்பும் வருத்தமும் ஒருசேரக் கலந்திருக்கிறது.

விழுப்புரத்துக்கும் செஞ்சிக்கும் இடையில் இருக்கும் அனந்தபுரம் வட்டாரத்தில், மல்லிகாவைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. எண்ணெய் காணாத வறண்ட கேசம், வெற்றிலைக் கறை தோய்ந்த பற்கள், குச்சி ஊன்றிய வளைந்த நடை, கேலி தொனிக்கும் பேச்சு... இதுதான் மல்லிகாவின் அடையாளம். இன்னொரு அடையாளமும் இருக்கிறது. மல்லிகாவின் வாசம் உணர்ந்துவிட்டால், சாரைப்பாம்பில் இருந்து, சோளப்பொறி நாகம் வரை எதுவாக இருந்தாலும் ஓடிப் பதுங்கிவிடும்.



யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் மல்லிகாவுக்கு அழைப்பு போகும். கவைக்கோல், கடப்பாரை, கொஞ்சம் விஷமுறி மருந்து. கிளம்பி விடுவார் மல்லிகா. பத்து நிமிடத்தில் பாம்பு மல்லிகாவின் கையில். பத்து வயதிலிருந்தே மல்லிகாவுக்கு பாம்புகள் பரிச்சயமாகி விட்டன. இப்போது 55 வயது.

அனந்தபுரம் இருளர் குடியிருப்பில் எல்லோரும் தாயம்மா என்றே இவரை அழைக்கிறார்கள். இருளர்களுக்கு பாம்பு பிடிப்பது குலத்தொழில். பாம்பின் ஒவ்வொரு அசைவையும் மொழிபெயர்க்கும் அளவுக்கு, பிறப்பிலேயே ஞானம் வாய்த்தவர்கள். இன்றைக்கும் சாதிச்சான்று கேட்டுச்செல்லும் இருளர்களை, பாம்பு பிடித்துக் காட்டச் சொல்வது அதிகாரிகளின் வழக்கமாக இருக்கிறது. பாம்பு சார்ந்த வணிகம் குற்றமாக்கப்பட்ட பிறகு, இவர்களுக்கும் பாம்புகளுக்கும் இடைவெளி வந்துவிட்டது. அனந்தபுரம் இருளர் குடியிருப்பில் மல்லிகா உள்ளிட்ட நான்கு பெரியவர்களைத் தவிர மற்றவர்கள், ‘பாம்பு’ என்றாலே பயந்து ஓடுகிறார்கள்.



‘‘அந்தக்காலத்துல எங்க மக்களுக்கு எலி பிடிக்கிறதுதான் தொழில். எலி வளைக்குள்ள பெரும்பாலும் பாம்புங்க இருக்கும். எலியைப் புடிச்சுக்கிட்டு பாம்பை அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு வந்திடுவாங்க. பாம்புத்தோலுக்கு மதிப்பு இருக்குன்னு தெரிஞ்சபிறகு அதுவே தொழிலா மாறிடுச்சு. என் ஊட்டுக்காரு பாம்பு புடிக்கிறதுல பெரிய ஆளு. எவ்வளவு விஷப்பாம்பா இருந்தாலும் கொத்துப்படாம புடிச்சு வீசிருவாரு. திடீர்னு சொகமில்லாமப் படுத்தாரு. ரொம்ப வருத்திக்காம போய்ச் சேந்துட்டாரு. அதுக்கப்புறம் தனியாளா நான் மட்டுமே பாம்புக்குப் போவேன். அப்பல்லாம் தோலு வாங்க யாவாரிங்க இங்கேயே சுத்திக்கிட்டுக் கிடப்பாங்க. வனத்துறை தடை போட்ட பின¢னாடி யாவாரிகளும் வர்றதில்லை. நாங்களும் பாம்புக்குப் போறதில்லை. வீடுகளுக்குள்ள புகுந்திருச்சுன்னு ஆளு வந்தா, புடிச்சுக் காட்டுல விட்டுருவோம். நூறு, எறநூறு கொடுப்பாங்க. இதுவும் எங்க தலைமுறையோட முடிஞ்சு போச்சு’’ என்கிறமல்லிகா, பலமுறை பாம்புகளிடம் கடி பட்டிருக்கிறார்.

‘‘கருநாகம், செந்நாகம், சோளப்பொறி நாகம், புளியம்பூ நாகம், விரியன்ல கண்ணாடி விரியன், கம்பளத்து விரியன், கட்டைவிரியன், கருவிரியன், சாரையில மஞ்சச்சாரை, கருஞ்சாரை, செஞ்சாரை, கோல்சாரை, கொம்பேறி மூக்கன்னு பாம்புல பலவகைங்க இருக்கு. கவைக்கோல், மம்பட்டி, கடப்பாரை வச்சுத்தான் பாம்பு புடிப்போம். பாம்போட தடத்தை வச்சே, என்ன பாம்பு, எங்கே ஒளிஞ்சிருக்குன்னு கண்டுபிடிச்சிருவோம். தடம் அழிஞ்சிட்டா பாம்போட கூச்சலை வச்சுக் கண்டுபிடிப்போம். விரியனுக்கு சின்னக்குரல்; நல்ல நாகத்துக்கு கட்டைக்குரல், சாரைக்கு பெருங்குரல். சத்தத்துலயும் கண்டுக்க முடியலன்னா, பக்கத்தில எந்த குருவிங்க படபடன்னு அடிச்சுக்கிட்டு கத்துதுன்னு பாப்போம். கல்குருவின்னா விரியன், மைனான்னா நல்ல நாகம், அணிலுன்னா சாரை. இப்பிடி பல கணக்கு இருக்கு. பாம்பு மேல கைவைக்கிறப்போ எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். கோபத்துல கடுமையா தாக்கும். புத்துக்குள்ள இருந்தா கைய விடக்கூடாது. சுத்திவர தரையை வெட்டிட்டு, கவக்கோலைக் கொண்டு அமுக்கிப் புடிக்கணும். அகப்பட்ட உடனே, தலைக்கு மேல தூக்கி நாலு சுத்து சுத்தணும். பாம்பு சோந்து போகும். அதுக்குள்ள தலைப்பகுதியை அழுத்திப் புடிச்சிடணும். அதையும் மீறி சில பாம்புங்க கொத்திடும். என் வயசுக்கு பத்து, பதினோரு முறை கடி வாங்கியிருக்கேன். சாரைப் பாம்பு கடிச்சா விஷமில்லை; சுண்ணாம்பு வச்சாப் போதும். நல்ல பாம்பு, விரியன் பாம்புக ரொம்ப விஷம்.




பாம்பு பிடிக்கப் போனா கையில ‘விஷமுறித்தூளு’ கொண்டு போவோம். பாம்போட ரகத்துக்கு தகுந்த மாதிரி தூளோட அளவு மாறும். தூளை அள்ளிப் போட்டு தண்ணியக் குடிச்சிட்டா விஷம் முறிஞ்சு போயிரும். இதுவரைக்கும் ஒரு தடவை கூட ஆஸ்பத்திரி போனதில்லை...’’ - சாதாரணமாகச் சொல்கிறார் மல்லிகா.

விஷமுறி மருந்தை மல்லிகாவே தயாரிக்கிறார். பாம்பு மட்டுமின்றி, தேள், பூரான் விஷங்களையும் இது முறித்து விடுமாம்.

‘‘சிறியாநங்கை, பெரியாநங்கை, சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான், ஆகாசகருடன், வேப்பிலைக் கொழுந்து, தும்பத்தழை, தொட்டாச்சிணுங்கின்னு நெறைய மூலிகைக கலந்திருக்கு. ஊருக்காட்டில யாருக்கு பாம்பு கடிச்சாலும் என்கிட்டதான் கூட்டிக்கிட்டு வருவாங்க...’’ என்கிறார் மல்லிகா.

இதர நாட்களில் எலி பிடிக்கச் செல்கிறார் மல்லிகா. சின்ராசு, ஆறுமுகம், கண்ணன், பொன்னுசாமி ஆகியோர் மல்லிகாவோடு செல்வதுண்டு. விளைபொருட்களை அழித்துவிடுவதால், விவசாயிகளே இவர்களுக்கு பணம்கொடுத்து தங்கள் வயல்களில் உள்ள எலிகளைப் பிடிக்கச் சொல்கிறார்கள். இதுதவிர, உணவுக்காகவும் இவர்களே வளை தேடிச் செல்வதுண்டு. பெருச்சாளி, மூஞ்சூறு, சுண்டெலி தவிர அனைத்து எலிகளும் உணவுதான். தங்கள் தேவைபோக மீதமிருக்கும் எலிகளை கிராமங்களில் விற்கிறார்கள். ஒரு எலிக்கு 3 முதல் 10 ரூபாய் வரை விலை கிடைக்கும்.

‘‘சர எலி கட்டுற வளைக்கு முன்னாடி, பெரிய பெரிய என்ஜினியரு எல்லாம் தோத்துப் போயிருவாங்க. மண்ணைத் துளைச்சு வளையைத் தோண்டின பிறகு முகப்பு பக்கத்தை அடைச்சிரும். அடைக்காம விட்டா பாம்புங்க உள்ளே புகுந்து, எலியை காலி பண்ணிட்டு வளைய புடிச்சுக்கும். அதனாலதான் இந்த ஏற்பாடு. எங்காவது ஒரு இடத்துல லேசா மண்ணைத் தோண்டி வச்சு, அதுவழியாதான் இரை தேடப் போகும். உள்ளுக்குள்ள இலை, தழையெல்லாம் போட்டு மெத்தை மாதிரி படுக்கான்குழி (படுக்கையறை) செஞ்சுக்கும். தானியங்களை இருப்பு வைக்க ஒரு அறை, கழிவுக்கு ஒரு அறைன்னு பல பக்கமும் வளை விரிஞ்சு ஓடும். ஒரு வளையை தோண்டி எடுத்தா, ஆறேழு மரக்கா நெல்லு கிடைக்கும். அந்தக்காலத்துல அந்த நெல்லை இடிச்சுத்தான் எங்காளுங்க அரிசிச்சோறு சாப்பிட்டிருக்காங்க’’ என்கிறார் மல்லிகா.

இவர்கள் எலி பிடிக்கிற நுட்பம் வியக்க வைக்கிறது. ஒரு பானையில் இலை தழைகளை அள்ளிப் போட்டு பற்ற வைக்கிறார்கள். ‘ஊத்தாம்பானை’ என்று பெயர். பானையை அப்படியே வளைக்குள் கவிழ்த்து, பானையின் பின்பக்கம் சிறிய ஓட்டையிட்டு, அதன்மூலம் ஊதி வளைக்குள் புகையைச் செலுத்துகிறார்கள். உள்ளே செல்லும் புகை, தூரத்தில் இருக்கும் எலியின் ரகசிய வழியில் வெளியேறுகிறது. அதன்மூலம், வளையின் வடிவமைப்பைத் தெரிந்துகொண்டு, வேட்டையைத் தொடர்கிறார்கள்.
உலகம் உருவான நாளிலிருந்து, உணவுக்கும் உயிருக்குமான போராட்டம் தொடர்கிறது!  
- வெ.நீலகண்டன்
படங்கள்: எழில்.கதிரவன்