ரீல் எஸ்டேட்! இனி ஏமாற்ற முடியாது





கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால், உங்கள் முதுகில் கூட ஒட்டிவிடுவார்கள் ‘அரக்கோணம் அருகில்’ போஸ்டரை! ‘செங்கல்பட்டுக்கு மிக அருகில்’, ‘வாசக் கதவத் திறந்தா விமான நிலையம்’, ‘இரண்டடி நடந்தால் இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்று ‘பிதாமகன்’ சூர்யா போல பிடித்திழுக்கின்றன ரியல் எஸ்டேட் விளம்பரங்கள். ‘செங்கல்பட்டு அருகில்’ என கூட்டிப் போய், திருச்சி மாவட்டத்தில் தாசில்தார் மேப்பில் கூட வராத ஒரு தரிசு நிலத்தைக் காட்டுவார்கள். பட்டா, அப்ரூவல் என தேவையான எதுவும் இருக்காது. ‘அடுத்த வருஷத்துக்குள் வந்துடும்... வந்துட்டா ரேட் டபுள்’ என்பார்கள். அந்த இடத்தை வாங்க வருபவர்களின் மன தைரியத்தைப் பாராட்டி பதிவு மட்டும் இலவசம்!

கம்பெனிகள் ஒரு பக்கம், புரோக்கர்கள் ஒரு பக்கம், பில்டர்கள் ஒரு பக்கம் என்று ஆளாளுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது மத்திய அரசின் கடிவாளம். ஆம், ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்தும் மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கலாக உள்ளது.

மனையிலும் நிலத்திலும் செய்யும் முதலீடு பாதுகாப்பானது என்ற நடுத்தர மக்களின் எண்ணத்தை முதலீடாகக் கொண்டு ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் புகார் செய்வது என்றுகூட தெரியாது. தலையெழுத்தை நொந்துகொண்டு அமைதியாகிறார்கள்.

இன்னொரு பக்கம், பில்டர்கள் செய்யும் கில்லாடி வேலைகள். ஆறே மாதத்தில் ஒப்படைப்பதாகச் சொல்வார்கள். கட்டி முடிக்க மூன்று வருஷமாகும். பிளான் ஒன்றாக இருக்கும். கட்டிய வீடு வேறுமாதிரி இருக்கும். மூன்று வீட்டுக்கு அனுமதி வாங்கிவிட்டு ஐந்து வீடுகளைக் கட்டி விற்பார்கள். பூங்காவுக்கு என ஒதுக்கிய இடத்தில் திடீரென பார்த்தால் இன்னொரு கட்டிடம் கட்டுவார்கள்.

தொலைத்தொடர்புத் துறையைக் கண்காணித்து முறைப்படுத்த ‘டிராய்’, காப்பீட்டு நிறுவனங்களைக் கண்காணிக்க ‘ஐஆர்டிஏ ஆணையம்’, பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்ட் வணிகத்தைக் கண்காணிக்க ‘செபி’, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ‘ரிசர்வ் பேங்க்’ என்று இருப்பதைப்போல, ரியல் எஸ்டேட் தொழிலைக் கண்காணித்து முறைப்படுத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக உள்ளது. 1000 சதுர மீட்டர் அல்லது 12 குடியிருப்புகளுக்கு மேல் கட்டும் பில்டர்களும், நிலத் தரகர்களும் அந்த ஆணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வீடு, மனை விற்பனையில் 70 சதவீத பரிவர்த்தனைகள் வங்கிக்கணக்கு மூலமாகவே நடக்க வேண்டும். இதனால் ரியல் எஸ்டேட்டில் புரளும் கறுப்புப் பணம் வெளிச்சத்துக்கு வரும். சரியான நேரத்தில் வீட்டை முடித்துக் கொடுக்காத பில்டர், ப்ராஜெக்ட் தொகையில் 10 சதவீதத்தை அபராதமாகக் கட்ட வேண்டும்; அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மோசடியாக விளம்பரம் செய்து நுகர்வோரை ஏமாற்றினால் சிறைத்தண்டனையும், அபராதமும் உண்டு. இது தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். மாநில ஒழுங்குமுறை ஆணையத்தை, தேசிய ஒழுங்குமுறை ஆணையம் கண்காணிக் கும்.

இந்த மசோதா சில வருடங்களுக்கு முன்பே இறுதி வடிவம் பெற்றுவிட்டது. ஆனால், வீட்டு வசதித்துறை அமைச்சகத்துக்கும், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிடப்பில் போடப்பட்டது. பிரதமர் தலையீட்டின் பேரில், இப்போது தூசி தட்டப்பட்டுள்ளது.

சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் 600க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல்செய்து, குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்த ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு எதிராக போராடிய அனுபவமுள்ள வழக்கறிஞர் ஷியாம் சுந்தரிடம் இந்த மசோதா பற்றி பேசினோம்.



‘‘கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்களுடைய லாபி மிகவும் பலமானது. இந்த மசோதா இன்னும் ஒரு வரைவறிக்கையாகத்தான் இருக்கிறது. விவாதத்திற்கே வரவில்லை. மத்திய அமைச்சர்களிடையேயும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதையெல்லாம் கடந்து இந்த மசோதா சட்டமாகுமா என்பது சந்தேகம்தான். இது சட்டமானால், ரியல் எஸ்டேட் துறையில் நடக்கிற அத்தனை முறைகேடுகளும் முடிவுக்கு வந்துவிடும். மக்களை யாரும் ஏமாற்றமுடியாது. ஆந்திராவில் இந்த நடைமுறை ஏற்கனவே இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் ஒரு ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சர்வசுதந்திரமாக ஏமாற்றுகிறார்கள். மக்களுக்கும் போதிய விழிப்புணர்வில்லை. விளம்பரங்களுக்கு மயங்கி விடுகிறார்கள்.

பல பகுதிகளில் பஞ்சாயத்து தலைவரின் அப்ரூவலோடு மனை விற்பனை செய்கிறார்கள். பஞ்சாயத்து தலைவருக்கு லே-அவுட்டையோ, பிளானையோ அப்ரூவல் பண்ண எந்த அதிகாரமும் இல்லை. சென்னையில் சிஎம்டிஏ மட்டுமே அப்ரூவல் அத்தாரிட்டி. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில், 5 ஏக்கருக்கு குறைவாக இருந்தால் எல்.பி.ஏ எனப்படும் ‘லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி’ என்ற அமைப்பிடம் அப்ரூவல் வாங்க வேண்டும். தமிழகத்தில் 9 இடங்களில் இந்த அலுவலகம் செயல்படுகிறது. 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் டி.டி.சி.பி எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்திடம் அப்ரூவல் வாங்கவேண்டும்.

வீடு கட்டுவதற்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. ரயில்வே லைனில் இருந்து 30 மீட்டருக்கு அப்பாலும், சுடுகாட்டில் இருந்து 90 மீட்டருக்கு அப்பாலும், நீர்நிலைகள் இருந்தால், 15 மீட்டருக்கு அப்பாலும்தான் வீடு கட்டவேண்டும். ஆனால் பில்டர்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் மோசடிகள் ஒழிந்து, ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரும் மறுமலர்ச்சியை எட்டும்’’ என்கிறார் ஷியாம் சுந்தர்.
மக்கள் முக்கியமா? பில்டர்கள் முக்கியமா? இதை மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்.
- வெ.நீலகண்டன்

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்ரீதர், பில்டர்: இந்த மசோதாவில் சொல்லப்படும் பல விஷயங்கள் பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறிய பில்டர்களால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. ரியல் எஸ்டேட் தொழிலின் தன்மையே மாறிவிடும். பில்டர்கள், தரகர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒரு ப்ராஜெக்ட்டில் 50 சதவீதத் தொகையை டெபாசிட்டாக கட்ட வேண்டுமாம். அப்ரூவல் வாங்கியபிறகுதான் போர்டு வைக்க வேண்டுமாம். விற்பனைக்கு முன்னும், விற்பனை முடிந்தபிறகும் தகவல் தெரிவிக்க வேண்டும். பல விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது. இந்த மசோதா சட்டமானால் பெரிய பில்டர்கள் தாக்குப் பிடிப்பார்கள். சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் சிரமப்படுவார்கள்.

ரவிராஜபாண்டியன், நிலம், வீடு, மனைத்தரகு தொழிலாளர் ஒருங்கிணைப்பு சங்கம்: இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு ஒழுங்கு ஏற்படும். முறைகேடான விலையேற்றம், மோசடியான விளம்பரங்கள், ஏமாற்று வேலைகள் நடக்காது. இன்று பணமும், பலமும் இருக்கும் யாரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. பில்டர்கள், தரகர்கள் அனைவருமே ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் தேவையற்ற தலையீடுகள் இருக்காது. இந்த மசோதாவை எங்கள் சங்கம் வரவேற்கிறது.