ஆஸ்கர் வாங்காத பின்லேடன் படம்!





‘‘கண்டிப்பாக இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது ‘ஜீரோ டார்க் தர்ட்டி’ படத்துக்குத்தான். சிறந்த இயக்குனர் விருதும் இதன் இயக்குனர் கேத்ரின் பிகெலோவுக்குத்தான்! மற்றவர்கள் பிற விருதுகள் எதற்காவது குறி வைப்பது நல்லது’’ என அத்தனை விமர்சகர்களும் சொன்னார்கள். ‘உலகின் ஆபத்தான மனிதனை வீழ்த்துவதற்கு மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தேடல்’ என வர்ணிக்கப்பட்ட பின்லேடன் வேட்டையே படத்தின் கதை. ஆனால் ஆஸ்கரில் அரை விருது மட்டுமே இந்தப் படம் வாங்கியதன் பின்னணிக் காரணம், அரசியல்!

இந்தப் படமும் இந்தியாவில் படமானதுதான்! ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் லொகேஷன்களை சண்டிகரில் உருவாக்கி ஷூட்டிங் நடத்தினார்கள். இராக்கில் அமெரிக்க வீரர்கள் படும் அவஸ்தையை ‘ஹர்ட் லாக்கர்’ படம் மூலம் சொல்லி ஆஸ்கரை வாங்கிய முதல் பெண் இயக்குனர் என்ற பெருமை பெற்றவர் கேத்ரின் பிகெலோ. அந்தப் பெருமையோடு இந்தப் படத்தை எடுத்தார் அவர்.
கதை சிம்பிளானது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவில் பணிபுரியும் பெண் மாயா. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட தீவிரவாதிகளை விசாரிக்கும் இடத்தில் பணிபுரிகிறாள். முகத்தில் தண்ணீரை அடித்து மூச்சுத் திணறச் செய்தும், தூங்க விடாமல் சித்ரவதை செய்தும், பாலியல் கொடுமைகள் செய்தும் அவர்களிடம் விசாரிக்கிறார்கள் சி.ஐ.ஏ அதிகாரிகள். சித்ரவதை தாங்காமல் அமர் என்பவன், பின்லேடனின் கூரியராக செயல்படும் அபு அஹமது என்பவனைப் பற்றி தகவல் சொல்கிறான். அபுவை தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அபு பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. எல்லோரும் அதை நம்பி ஃபைலை குளோஸ் செய்கிறார்கள். ஆனால் மாயா தனியாக அலைந்து அபு உயிரோடு இருப்பதைக் கண்டுபிடிக்கிறாள். அவன் பின்லேடனின் அபோதாபாத் வீட்டுக்கு போவதையும் அறிகிறாள். அதன்பின் அமெரிக்கப் படை பின்லேடனை வளைத்துக் கொல்கிறது.

‘‘பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் தூ தரகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர்தான் மாயா கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன்’’ என கேத்ரின் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்தக் கேரக்டரில் ஜெசிகா சேஸ்டெய்ன் நடித்திருந்தார். படம் வெளியான முதல் வாரம் பயங்கர வரவேற்பு. பாராட்டாத விமர்சகர்கள் இல்லை. ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர் பற்றிய முழுமையான படம்’ என்றார்கள். அடுத்தடுத்து விருதுகள் குவிந்தன. 550 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த வெற்றிப் படம் என பெயர் பெற்றது.

அதன்பிறகுதான் நுழைந்தது அரசியல். ‘கைதிகளை சித்ரவதை செய்துதான் பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாக படம் சொல்கிறது. இது அமெரிக்க ராணுவத்தை அவமானப்படுத்தும் செயல். சித்ரவதைக் காட்சிகளைக் காட்டி அமெரிக்கர்களை அவமானப்படுத்தி விட்டார்கள்’ என கட்சி வேறுபாடு இல்லாமல் பலரும் கொந்தளித்தார்கள். உலக நாடுகள் முன்பாக தன்னை மனித உரிமைப் போராளியாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, தன் கொல்லைப்புறத்தில் கொடும் சித்ரவதைகளைச் செய்கிறது என்ற உண்மையை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜான் மெக்கெய்ன் உள்ளிட்ட சிலர், படத்தைத் தயாரித்த சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கண்டனக் கடிதமே எழுதினார்கள்.

இன்னொரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்தார்கள். ‘‘சித்ரவதைகளை இந்தப் படம் நியாயப்படுத்துகிறது. அதைச் செய்யாமல் பின்லேடனைக் கொன்றிருக்க முடியாது என மறைமுகமாக உணர்த்துகிறது. மக்கள் மத்தியில் இது தவறான நம்பிக்கைகளை விதைக்கிறது’’ என்றார்கள்.

டைரக்டர் கேத்ரின் இதை எதிர்த்தார். ‘‘என் படம் அறத்தையே வலியுறுத்துகிறது. சித்ரவதை முறைகளை எதிர்க்கும் படம் இது. பின்லேடனைத் தேடுகிறோம் என்ற பெயரில் என்னவெல்லாம் நடந்ததோ, எல்லாவற்றையும் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்’’ என்றார்.

இதன்பின் ஆஸ்கர் தேர்வில் அரசியல் நுழைந்தது. ‘‘அமெரிக்காவுக்கு அவமானம் தேடித் தந்த இந்தப் படத்துக்கு ஓட்டு போடாதீர்கள்’’ என ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் ஒருவரே சக உறுப்பினர்களிடம் வேண்டிய கொடுமை எல்லாம் நடந்தது. இதையும் மீறி ஐந்து விருதுகளுக்கு படம் பரிந்துரைக்கப்பட்டாலும், சவுண்ட் எடிட்டிங் விருதை மட்டுமே இன்னொரு படத்தோடு பகிர்ந்து கொண்டது ‘ஜீரோ டார்க் தர்ட்டி’.

அமெரிக்கர்கள் உலகையே கேள்வி கேட்கலாம்; ஆனால் அமெரிக்காவை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்பதை ஆஸ்கர் விருதுத் தேர்வு உணர்த்தியிருக்கிறது.
- அகஸ்டஸ்