கருத்தடை





 “My best birth control now is just to leave the lights on.”
 Joan Rivers, American TV Actress

கருத்தடை என்பது கலவியில் குழந்தை உண்டாவதைத் தடுக்கும் உபாயங்களை, உபகரணங்களைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் இதை Contraception என்பர். ஆணுறை, டயாஃப்ரம், கருத்தடை பஞ்சு, கருத்தடை மாத்திரை, பிறப்புறுப்பு வளையங்கள், கருவக சாதனங்கள், அறுவை சிகிச்சை என்று பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. பெண் பிறப்புறுப்புக்குள் முதலைச் சாணம், தேன், சோடியம் கார்பனேட் கலவையை, பஞ்சைப் பயன்படுத்திச் செலுத்தி விட்டால், கலவியின்போது நுழையும் ஆண் விந்தணுக்கள் அதில் அழிந்து விடும் என கிமு 1850ல் எகிப்தில் நம்பினார்கள். பேரீச்சை, அகாசியா முள்மரம், தேன் கலவையும் பயன்படுத்தினார்கள். பிரசவமான மூன்றாண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதன் மூலமும் கருத்தடையை கடைப் பிடித்தார்கள்.

கிமு 7ம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போக்ரேட்டஸ், மூலிகைகளைக் கருத்தடைக்குப் பயன்படுத்தியதைக் குறிப்பிடுகிறார். தியோஃப்ராஸ்டஸ் என்ற கிரேக்க தாவரவியல் நிபுணர், சிஃபிலியம் என்ற செடி இப்படிப் பயன்பட்டதாகச் சொல்கிறார். தற்போதைய லிபியாவின் சிறிய நிலப்பகுதியில் மட்டுமே இது விளைந்தது, மற்ற இடங்களில் இது விளையவில்லை. இதனால் அதற்கு வெள்ளியைக் காட்டிலும் மிக அதிக விலை இருந்திருக்கிறது. அதன் அதீதப் பயன்பாட்டால் அந்த தாவர இனமே கிமு 2ம் நூற்றாண்டில் அழிந்தது. வில்லோ, மாதுளை, பென்னிராயல், அர்டிமிசியா, மிர்க், ருயி ஆகிய செடிகளும் கருத்தடைக்குப் பயன்படுத்தப்பட்டன.

பிறப்புறுப்பில் ஆலிவ் எண்ணெயைத் தடவுவதன் மூலம் கருத்தடை செய்யலாம் என்றார் அரிஸ்டாட்டில். தேவதாரு எண்ணெய், ஈயக் களிம்பு, ஃப்ரான்கின்சென்ஸ் ஆயில் ஆகியவற்றையும் இதற்குப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார். கலவிக்குப் பின் குத்தவைத்து உட்கார்ந்து எழுவது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுப்பது போன்ற செய்கைகளின் மூலம் பிறப்புறுப்புக்குள் நுழைந்த விந்தை வெளியேற்ற முயற்சித்திருக்கின்றனர்.

கிமு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனரான சுன் சுசு மோ, பாதரசத்தையும் எண்ணெயையும் ஒரு நாள் முழுக்க சேர்த்துக் காய்ச்சி, அதை பெண்களுக்கு உண்ணக் கொடுத்தால் நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் போய் விடும் என்று சொல்கிறார். நம் நாட்டில் பனை ஓலை, சிவப்பு சாக்கட்டி ஆகியவற்றைப் பொடி செய்தும் தேன், நெய், பாறை உப்பு, பலாச மர விதை போன்றவற்றை பிறப்புறுப்பில் செலுத்துவதன் மூலமும் கருத்தடையை சாத்தியப்படுத்தி இருக்கின்றனர்.



15ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பெண்களுக்கான கற்பு பெல்ட்கள் புழக்கத்தில் இருந்தன. இதை இடுப்பில் அணிந்து கொள்ளும் பெண், எவருடனும் கலவியில் ஈடுபட முடியாது. அதனால் கர்ப்பமும் ஆக முடியாது. இதைக் கழற்றவும் முடியாது. இயற்கை உபாதைகளுக்கு அதில் சிறு துவாரங்கள் இருந்தன. இவை பெரும்பாலும் ஒரே அளவில் கிடைத்ததால் குண்டான பெண்கள் வலியுடன் இதை அணிய நேர்ந்தது.

1839ல் சார்லஸ் குட்இயர் ரப்பரை உறுதியாக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்ததும் கருவகக் கருத்தடை உபகரணங்கள், கருத்தடைப் பஞ்சுகள், Womb Veils   எனப் படும் பிறப்புறுப்பில் வைக்கும் விந்துநாசினி, Douching Syringes என்ற பிறப்புறுப்பிற்கான எனிமா ஆகியவை தயாரித்தார்கள். 1878ல் ஆம்ஸ்டர்டாமில் அலெட்டா ஜேக்கப்ஸ் உலகின் முதல் கருத்தடை மருத்துவமனை நிறுவினார். 1880களில் டயஃப்ரமின் ஆதிவடிவமான Cervical  Cap உருவாக்கப்பட்டது.

1916ல் மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதல் குடும்பக்கட்டுப்பாடு மற்றும் கருத்தடை மருத்துவமனையை ப்ரூக்ளினில் திறந்தார். சாங்கரின் தாயார் 11 குழந்தைகளைப் பெற்றபின் அதன் காரணமாகவே இறந்தார் என்பதே அவருக்குத் தூண்டுதலாய் இருந்தது. மருத்துவமனை திறந்த 9 நாட்களில் போலீஸ் ரெய்டு செய்து, பொதுமக்களுக்குத் தொந்தரவு தருவதாகச் சொல்லி அவரை 30 நாட்கள் சிறையில் அடைத்தது. வெளிவந்ததும் மறுபடி மருத்துவமனையைத் திறந்தார்.

1920களில் அமெரிக்காவில் டாய்லெட் சுத்திகரிப்பானான Lysolஐ கருத்தடை சாதனமாகவும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ‘ஐரோப்பிய டாக்டர்கள் சிலர் இதைக் கருத்தடைக்குப் பயன்படுத்தலாம் என்று சான்றிதழ் கொடுத்திருப்பதாக’ சொல்லி விளம்பரம் செய்தனர். பிற்பாடு இதனால் கருத்தடை சாத்தியமில்லை என்று கண்டு பிடித்தபோது, மேற்கொண்டு விசாரித்ததில், ஐரோப்பாவில் அந்தப் பெயரில் டாக்டர்களே இல்லை என்பது தெரிய வந்தது. இதைப் பயன்படுத்தியவர்களுக்கு பிறப்புறுப்பில் எரிச்சல், காயம், வீக்கம் உண்டாயின. சிலர் இறக்கவும் நேர்ந்தது.
1930களில் கருவகக் கருத்தடைக் கருவிகளின் முன்னோடியான ஸ்டெம் பெசரி அறிமுகப்படுத்தப்பட்டது. பிறப்புறுப்புக்குள் சொருகி வைத்துக் கொள்ளும் ரப்பர், உலோகம் அல்லது கண்ணாடியினாலான, தண்டு போன்ற மேல் பகுதியும், கப் / பட்டன் போன்ற அகன்ற கீழ்ப்பகுதியும் கொண்ட கருத்தடைக் கருவி இது.

1951ல் மார்கரெட் சாங்கரின் தூண்டுதலின் பேரில் க்ரெகரி பின்கஸ் கருத்தடை மாத்திரையைக் கண்டுபிடிக்கும் ஹார்மோன் ஆராய்ச்சி தொடங்கினார். இந்நேரம் சென்டெக்ஸ், சியர்லே என்ற மருந்துக் கம்பெனிகள் செயற்கை ப்ரொஜெஸ்டிரோன் தயாரிக்க ஆரம்பித்திருந்தன. இதனால் பின்கஸ் தன் ஆராய்ச்சியை சுலபமாக மேற்கொள்ள முடிந்தது. 1954ல் இதை 50 பெண்களுக்கு கொடுத்து சோதித்தார். 1960ல் Enovid என்ற கருத்தடை மாத்திரையை ஃப்ராங்க் கோல்டன் என்பவர் கண்டுபிடித்தார். திஞிகி என்ற அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டகம் இதை அங்கீகரித்தது. அடுத்த இரண்டாண்டுகளில் 10 லட்சம் பேர் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டனர். ஆனால் தொடர்ந்த ஆராய்ச்சிகள், இதிலிருந்த அதீத செயற்கை ஈஸ்ட்ரோஜென் அளவுகள் காரணமாக ஹார்ட் அட்டாக், ரத்தக் கட்டி, ஸ்ட்ரோக் ஆகியன ஏற்படும் எனத் தெரிவித்தன.

1960களில் Intrauterine devices (IUDs) எனப்படும் கருவகக் கருத்தடை உபகரணங்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தன. 1965ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம், மணம் ஆனவர்களுக்கு கருத்தடைக்கான தடையை ரத்து செய்தது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் 65 லட்சம் பேர் கருத்தடை மாத்திரை பயன்படுத்தி வந்தனர். 1972ல் அமெரிக்காவில் மணமாகாதவர்களுக்கும் கருத்தடையை அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, 1975ல் Dalkon Shield  என்ற கருவகக் கருத்தடை சாதனம் பெண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதால் மார்க்கெட்டிலிருந்து திருப்பிப் பெறப்பட்டது. மற்ற ப்ராண்ட் மிஹிஞிக்களும் இதனால் பாதிக்கப்பட்டன. 1976ல் ஜி வடிவிலான கருவகக் கருத்தடை சாதனத்தை திஞிகி அங்கீகரித்தது, இதை தேர்ந்த மருத்துவர்கள் பிறப்புறுப்புக்குள் பதித்தனர். பத்தாண்டுகள் வரை இதன் மூலம் கருத்தடை சாத்தியமானது. இந்தியாவிலும் காப்பர் டி என்ற பெயரில் இது பிரபலமானது.

1980களில் குறைந்த டோஸ் கருத்தடை மாத்திரைகள் சந்தைக்கு வந்தன. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 1 கோடிப் பேர் இதைப் பயன்படுத்தினர். 1992ல் Depo Provera என்ற ஹார்மோன் ஊசியை திஞிகி அங்கீகரித்தது. ஒரு மாதத்தில் பலமுறை இதைப் போட்டுக் கொள்வதன் மூலம் கர்ப்பத்தைத் தடுத்தனர். 3 கோடி பேர் இதைப் பயன்படுத்தினர். 2000 முதல் 2002 வரை 4 புதிய கருத்தடை சாதனங்கள் அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்தன: Ortho Evra  உடம்புக்குள்  செலுத்தும் பேட்ச், NuvaRing பிறப்புறுப்பு வளையம், Lunelle ஹார்மோன் ஊசி, Mirena கருவகக் கருத்தடை சாதனம்.

2003ல் Seasonale என்ற தொடர்  கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைப் பயன்படுத்துவதால் வருடத்திற்கு 4 மாதவிடாய் சுழற்சிகள் மட்டுமே உண்டாகும். மற்ற காலங்களில் கரு உண்டாகும் செழிப்பிருக்காது. 2006ல் Implanon   என்ற மெல்லிய, உட்பதிக்கும் கருத்தடை உபகரணம் வந்தது. இதை பெண்ணின் கைகளில் சருமத்துக்குள் பதித்து விடுவர். இது கரு உண்டாவதற்கு எதிரான ஹார்மோன்களைத் தூண்டும். மூன்று ஆண்டுகள் இது பயன்படும். 2007ல் Lybrel என்ற குறைந்த டோஸ் கருத்தடை மாத்திரையை திஞிகி அங்கீகரித்தது. இது மாதவிலக்கை விரும்பும் போது நிறுத்தி வைத்தது.

அதீத மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு இது வரப்பிரசாதம். பாதுகாப்பான முறைகளைப் பெறுவதுதான் கருத்தடை செய்ய சரியான வழி. தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இது கருத்தடைக்கான நிரந்தரத் தீர்வு!
ஒருவகையில் கருத்தடை சாதனங்கள் பெண் சுதந்திரத்தின் நவீன அடையாளம்.     

Stats சவீதா
*  உலகில் 10 கோடிப் பேர் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கின்றனர்
*  கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்டும் 6% பேர் கர்ப்பம் அடைகின்றனர்
*  28% பேர் கருத்தடை மாத்திரைகளை கர்ப்பத்தடைக்கு உபயோகிக்கின்றனர்
*  78% பெண்கள் 85% ஆண்கள் முதல் கலவியில் கருத்தடை செய்கின்றனர்

கருத்தடை
மாத்திரை பெண்ணுள்
யாத்திரை நீந்தி வரும்
ஒரு கோடி அணுக்கள்
கருமுட்டை அண்டாது
வென்றோ கொன்றோ
நன்றாம் உயிர்த்தடை.
- கவிஞர் காத்துவாயன்