கல்யாணம்





‘‘கல்யாணி, என் நண்பன் கோபிகிருஷ்ணன் ஒருவழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான். அதுக்கு நான் பட்ட பாடு...’’ என்று ராமலிங்கம் சொல்லும்போதே, ‘‘நீங்க பட்ட சிரமம் எனக்குத் தெரியும்ங்க’’ என முகம் மலர்ந்தாள் கல்யாணி.

‘‘எப்படியாவது தட்டிக் கழிக்கப் பார்த்தான். கடைசியில, ‘நீங்களும் சொந்தக்காரங்களும் வற்புறுத்தறதாலதான் சம்மதிக்கிறேன்’னுட்டான். அடுத்த புதனில் கல்யாணம். ‘மொத ஆளா நீங்கதான் வந்து என்னையும், என் மனைவியையும் ஆசீர்வதிக்கணும்’னு கண்டிப்பா சொல்லிட்டான் கோபி!’’

‘‘ஒங்க நட்பு பத்தி எனக்குத் தெரியாதாங்க? அவரு சொன்ன படியே செஞ்சுருவோம்!’’ என்றாள் கல்யாணி.
கல்யாணத்தன்று மேடையில் மணமகன் - மணமகளாக கோபி கிருஷ்ணனும் சேதுலட்சுமியும் இருக்க, அவர்களுக்கு மனப்பூர்வமாய் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வழங்கினார்கள் ராமலிங்கமும் கல்யாணியும்! அதன்பின் வந்தவர்கள் அனைவரும் மணமக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். மணமக்கள் அவர்களை ஆசீர்வதித்தார்கள்.

மைக்கில் அறிவிப்பு வெளியானது. ‘‘கோபி-சேது தம்பதியினரின் இந்த அறுபதாம் கல்யாணத்தில், பெரியவர் ராமலிங்கம் ஐயா இப்போது வாழ்த்துரை வழங்குவார். அதன் பின் கோபி-சேதுவின் மகன் வயிற்றுப் பேத்தி எட்டு வயது சவும்யாவின் பரத நாட்டியத்தை மேடையில் காணலாம். இந்த சாந்தி கல்யாணத் தம்பதியின் ஆசீர்வாதம் பெற்றிட ஏனைய தம்பதிகளையும் அன்புடன் அழைக்கிறோம்!’’