பழக்கம்

‘‘இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்த பையன், நல்லா சம்பாதிக்கறான். சொந்த வீடும் இருக்கு. நல்ல இடமா தெரியுது. அவங்க அம்மாவும் ரொம்ப மரியாதையா பழகறாங்க. நான் வேலை செய்யிற இடங்கள்ல கடன் வாங்கியாச்சும், அவங்க கேட்கிற பத்து பவுனை போட்டுடுவேன்’’ - மகள் கன்னிகாவிடம் நம்பிக்கையுடன் பேசினாள் சாந்தி.
‘‘சொத்து பத்தை பார்க்காதேம்மா. குடிப்பழக்கம் இருக்கானு பாரு. குடிச்சு குடிச்சுதானே அப்பா சொந்த வீட்டை இழந்துட்டு, நம்மளையும் நடுத்தெருவில் நிற்க வச்சுட்டு, சின்ன வயசிலேயே குடல் கருகி செத்துப் போனார். இப்ப வந்த மாப்பிள்ளைக்கும் குடிப்பழக்கம் இருக்கு. இந்த சம்பந்தம் வேண்டாம்’’ என்றாள் கன்னிகா.
‘‘அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றே..?’’ ‘‘வர்றவங்களுக்கு காபிக்கு பதிலா, கிளாஸ்ல கூல் டிரிங்க்ஸ் கொடுக்கச் சொன்னேன் இல்ல?’’ ‘‘ஆமா...’’
“மத்தவங்க கூல் டிரிங்க்ஸை டம்ளரில் நேரடியா ஊத்திக் குடிச்சாங்க. அவர் மட்டும் கிளாஸை லேசா சரிச்சு, நுரையே பொங்காம விளிம்பு வழியா கூல்டிரிங்க்ஸை ஊத்தினார். அப்பா மாதிரி குடிப்பழக்கம் உள்ளவங்கதான் இப்படிச் செய்வாங்க!’’ - உறுதியாகச் சொன்னாள் கன்னிகா. குடி கெடுக்க வந்தது, கூல்டிரிங்க்ஸோடு போனதே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சாந்தி.
|