இன்டர்வியூவை எதிர்கொள்வது எப்படி?





‘திறமை இருந்தாலும் அதை சரியாக வெளிப்படுத்தாததால் 90 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தவற விடுகிறார்கள்’ என்கிறது அண்மைய ஆராய்ச்சி ஒன்று. சரக்கில்லாத நபர்கள் கூட தங்களை ஆஹா ஓஹோ என்று வெளிப்படுத்திக் கொண்டு, பெரிய பதவிகளில் போய் உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் விஷயம் உள்ளவன் அதை சரியாக வெளிப்படுத்தத் தயங்கி, கடைசி வரை கடைநிலை ஊழியனாகக் குப்பை கொட்டுகிறான்.

‘‘இதற்கெல்லாம் காரணம், கம்யூனிகேஷன் ஸ்கில் எனும் பேச்சுத் திறனில் உள்ள கோளாறே’’ என்று குட்டை உடைக்கிறார், வேலைவாய்ப்பு பயிற்சிகளை சென்னையில் வழங்கி வரும் ‘ஆக்ஷன் டிஎன்ஏ’ நிறுவனத்தின் இயக்குனர் கலீல்.

‘‘இன்டர்வியூவை அழகாக நேர்முகம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். வேலை வழங்கும் ஒருவருடன் நாம் நேர்முகமாகப் பேசும் வாய்ப்பு அது. ரெஸ்யூமில் பல்வேறு தகவல்களை நீங்கள் கொடுத்திருந்தாலும், அது உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தாது. நேர்முகம்தான் உங்கள் ஆளுமையை வெளிக்கொண்டு வரும்.

ஒரு நேர்முகத்தை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று, பட்டம் படித்து வெளிவரும் ஃபிரெஷ்ஷான மாணவர்களுக்கு! இரண்டாவது, வேலையில் ஏற்கனவே அனுபவமுள்ள இளைஞர்களுக்கானது. இந்த இரண்டு பிரிவினரிடமும் கேட்கப்படும் கேள்விகள் வேறுபட்டவை என்றாலும், நேர்முகத்துக்காக தயார்படுத்திக்கொள்ளும் சில அடிப்படையான விஷயங்கள் ஒரே மாதிரியானவைதான்.


முதலில் ‘க்ரூம்’ என்று சொல்லப்படும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம். க்ரூம் என்றால் நமது தோற்றம். இதில் நமது உடை, காஸ்மெடிக்ஸ் எனப்படும் அழகுபடுத்தல், மேனரிஸம் எல்லாம் அடங்கும். பொதுவாக இன்டர்வியூவுக்கு ஃபார்மல் உடையில்தான் செல்ல வேண்டும். ப்ளெயின் சட்டையில் சிறு கோடுகள் போட்டு இருக்கலாம். அதற்காக, கோடுகள் பெரிய சைஸில் இருப்பது நல்லதல்ல. நடிகர் கார்த்தி மாதிரி, கட்டம் போட்ட சட்டை எல்லாம் போடக் கூடாது. பூப்போட்ட சட்டை, ராமராஜன் நிற சட்டை எல்லாவற்றுக்கும் நோ சொல்லுங்கள்.

சட்டை லைட் கலராக இருந்தால் பேன்ட் டார்க் கலர்... சட்டை டார்க் கலரென்றால் பேன்ட் லைட் கலர் என்ற சம்பிரதாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஷூ போடுவது நல்லது. ஷூவின் சாக்ஸ் பேன்ட் நிறத்தில் இருக்க வேண்டும். இன்டர்வியூவில் குறிப்பிட்டிருப்பதற்கு அரை மணி நேரம் முன்பே போய்விடுவது நல்லது. இன்டர்வியூவுக்காக ரிசப்ஷனில் காத்திருக்கும்போது, அங்குள்ளவர்களிடம் சரளமாகப் பேசுவது டென்ஷனில் பாதியைக் குறைத்துவிடும். ஆனால், இன்டர்வியூ முடிந்து வெளியே வருபவர்களிடம் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கக் கூடாது. ஒருவரிடம் கேட்கும் கேள்விகள் இன்னொருவரிடம் கேட்கப்பட மாட்டாது என்பதே இன்டர்வியூவின் தாத்பரியம்.

உங்களுக்கான அழைப்பு வந்ததும் இன்டர்வியூ அறையை நெருங்கும்போது உங்கள் ஃபைலை இடது கையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே உங்களை வரவேற்கும் நபருக்கு ஹலோ சொல்வதற்கும் கை குலுக்குவதற்கும் வலது கை ஃப்ரீயாக இருக்கும். ஆனால், அவர்கள் கைகொடுத்தால் மட்டுமே நாமும் கைகொடுக்க வேண்டும். நீங்களாக கைகுலுக்கக் கூடாது; உட்காரவும் கூடாது. உட்காரச் சொன்னால் மட்டுமே உட்கார வேண்டும். நீங்கள் கொண்டு போயிருக்கும் ஃபைலை மடியில்தான் வைக்க வேண்டும். ஒருவேளை லேப்டாப்பாக இருந்தால், ‘டேபிளில் வைக்கலாமா?’ என்று அனுமதி கேட்டு வைக்கலாம். சேரில் ஆயாசமாக சாய்ந்து உட்காருவதும் சரியல்ல; நுனியில் பயந்து பயந்து அமர்வதும் சரியல்ல. சாயாமல் ஸ்டெடியாகவும் வசதியாகவும் உட்காருவதே நலம். அடுத்து, உங்களைப் பற்றி அவர்கள் கேட்கும் கேள்வி.

ஃபிரெஷ்ஷர்ஸ் என்றால் படிப்பு தொடர்பாக கேள்விகள் இருக்கும். அனுபவமுள்ளவர்களாக இருந்தால், அனுபவம் தொடர்பான கேள்விகள் இருக்கும். உதாரணமாக, ஃபிரெஷ்ஷரிடம் ‘அவர்கள் செய்த கல்லூரி ப்ராஜெக்ட்’ பற்றிக் கேட்கலாம். அதைப் பற்றி ஃபிரெஷ்ஷாகப் படித்தேனும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. வேலை அனுபவம் உள்ளவர்களிடம், ‘‘ஏன் முந்தைய வேலையை விட்டீர்கள்?’’ என்று கேட்கலாம். ‘‘சம்பளம் பத்தலை’’ என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லக் கூடாது. ‘‘இந்தத் துறையில் மேலும் வளர விரும்புகிறேன். அதற்கு இந்த வேலை சரியான இடமாக இருக்கும்’’ என்று நாசூக்காகத் தெரிவிக்கலாம்.

மேலும், ‘‘உங்களைப் பற்றி சொல்லுங்கள்...’’, ‘‘வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்?’’, ‘‘குழுவாக வேலை செய்வீர்களா?’’, ‘‘இதுவரை என்ன சாதித்தீர்கள்?’’, ‘‘நான் உங்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?’’, ‘‘உங்கள் பலம் மற்றும் பலவீனம்...’’, ‘‘உங்களைப் பற்றி பிறர் ஒரு வார்த்தையில் சொல்கிறார்கள் என்றால், அது என்னவாக இருக்கும்?’’ போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்படலாம்.

உங்கள் பலம் என்ற கேள்வியில் உற்சாகமாகி, ஒரு பெரிய லிஸ்ட்டை அடுக்காதீர்கள். மூன்று, நான்கு ப்ளஸ் பாயின்ட்டுகளைச் சொன்னால் போதும். அதே போல பலவீனம் என்றதும், ‘‘ஒன்றும் இல்லை’’ என்று கையை விரித்துவிடாதீர்கள். பலவீனம் இல்லாத மனிதனே இல்லை. ‘‘கொஞ்சம் டென்ஷன் ஆவேன்’’ என்று சொல்லலாம். இந்த பலவீனத்தைப் போக்க பயிற்சிகளை செய்வதாகவும் குறிப்பிடலாம்.

பொதுவாக இந்த நேர்முகக் கேள்விகளை எதிர்கொள்ளும் நபர் ‘ரிமிஷிஷி’ என்ற தத்துவத்தை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ‘Keep It Smile and Short’ என்பதன் சுருக்கம்தான் அது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சிரித்தபடி சுருக்கமாக பதில் சொன்னால் அந்த வேலை உங்களுக்கே. இந்த விதிகள் தவிர, தொடர்ந்து நாமே கண்ணாடி முன்னால் பேசிப் பார்த்தும் ரெக்கார்டரில் பேசிப் பார்த்தும் பயிற்சி எடுத்துக் கொள்வது முக்கியம். இன்டர்வியூவின் 80 சதவீத வெற்றி, இந்தப் பயிற்சியில் உள்ளது; மீதி 20 சதவீத வெற்றி, பயிற்சி தாண்டிய சில பர்சனல் தகுதிகளில் உள்ளது!’’ என்றார் கலீல்.என்ன... பயிற்சி செய்யக் கிளம்பி விட்டீர்களா?
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்


பெண்களின் உடை எப்படி?


‘பெண்கள் இன்டர்வியூவுக்கு எப்படி உடை உடுத்த வேண்டும்’ என்று அதே நிறுவனத்தின் இன்னொரு இயக்குனரான வித்யாவிடம் கேட்டோம்...

‘‘பொதுவாக காட்டன் புடவை கட்டுவது சிறந்தது. அல்லது, காட்டன் கலந்த புடவைகள் நிறைய உள்ளன. அதைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போது சல்வார் கமீஸ், பேன்ட் ஷர்ட்டுக்கும் ஒரு மதிப்பு உள்ளதால், இந்த உடைகளிலும் போகலாம். நிறைய ஜரிகை மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த ‘ஜிகுஜிகு’ உடைகளைத் தவிர்க்க வேண்டும். சிம்பிளாக, அதே சமயம் டீசன்ட்டாகவும் உடைகள் இருக்கவேண்டும். தலைமுடியை ஃபேஷன் ஷோ போல விரித்துப் போடக் கூடாது. சிம்பிளாக ஒரு பின்னல் போதும். நகங்களை சரியானபடி வெட்டிச் செல்வது நல்லது. காலில் கொலுசு, கையில் ஊர்ப்பட்ட கண்ணாடி வளையல்கள் போன்ற ‘ஜல்ஜல்’ மோகினி கெட்டப் வேண்டாம். சிம்பிளாக கழுத்தில் ஒரு செயின் போடலாம். பர்ஃபியூமை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தலையில் பூ எல்லாம் வேண்டாம்’’ என்றார் அவர்.