
துனீஷியா, எகிப்து, லிபியா என அரபு நாடுகளில் பற்றி எரியும் சுதந்திர நெருப்பு கடந்த சில மாதங்களாக சிரியாவில் மையம் கொண்டிருக்கிறது. ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தினம் தினம் நடக்கும் யுத்தத்தில், குழந்தைகளும் பெண்களும் அப்பாவிகளும் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். சிரியாவில் என்ன பிரச்னை? அந்த தேசத்தின் பாரம்பரியம் என்ன?
கல்யாண வீட்டுக் கலகலப்பை மிஞ்சுமளவுக்கு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தது அந்த ஹோட்டல். குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குட்டையான மேஜைகளின் முன் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருக்க, வகைவகையான அரேபிய உணவுகளை சுறுசுறுப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள்.
அழகுப்பதுமைகளாக அரேபியப்பெண்கள். சிலர் ஜீன்ஸ், டி ஷர்ட் என ஐரோப்பியர்களைப் போல உடையணிந்திருந்தாலும் பெரும்பாலான பெண்கள் கறுப்பு அபயா (பர்தா) அணிந்திருந்தார்கள். யாரும் முகத்தை மட்டும் மூடுவதில்லை. ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல சிவந்த நிறம்.
‘‘டமாஸ்கஸிலேயே சிரியன் வகை அரேபியச் சாப்பாடு இங்கேதான் சுவையாக இருக்கும்’’ என பக்கத்திலிருந்த நண்பர் ஹோம்ஸி அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னார். ‘பாபாகனுஜ்’ என்ற சுட்ட கத்திரிக்காய் மசியலை குப்ஸில் (நம்மூர் தந்தூரி ரொட்டி) நனைத்து சுவைத்தவாறே ‘‘பிரமாதம்’’ என்று சொன்னேன். சிதம்பரம் பக்கம் நடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள கொத்சு தருவார்கள். அதே போன்ற சுவை!
சிரியாவின் இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதற்கென்று தனி மார்க்கெட்டே இருக்கிறது. பாலாடையும், நெய்யில் வறுக்கப்பட்ட சேமியாவும், பாதாம், பிஸ்தாவும் கலந்து தயாரிக்கப்பட்ட ‘குனாபா’ மேல் சர்க்கரைப் பாகை ஊற்றி பாதையோரங்களிலும் மக்கள் சாப்பிடும்பொழுது நமக்கும் நாவில் நீரூறும்.

வெளியே இரும்புக்கூரை வேயப்பட்ட ஹமீதியா சூக் என்னும் கடைத்தெரு நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வகைவகையான துணிக்கடைகள், வாசனைத் திரவியங்கள், ஆலிவ், உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, சிரியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகள், ரத்தினக் கம்பளங்கள், தந்த வேலைப்பாட்டு நகைப்பெட்டிகள் என கடைகள் முழுவதும் பொருட்கள்.
‘‘விலையுயர்ந்த கம்பள விரிப்புகளிலிருந்து சிரியாவின் உயர்ந்த ரக பட்டுத்துணிகள் வரை இங்கே கிடைக்கும்’’ - அமெரிக்கப் படிப்பு முடித்து சிரியா வந்துவிட்ட பாத்திமா சரளமாக ஆங்கிலம் பேசியது எனக்கு உதவியாக இருந்தது. எங்கள் கம்பெனியின் சிரியன் கிளை பர்சனல் மேனேஜர். வெறும் அரபி மொழி மட்டுமே பேசும் சிரிய நாட்டு எஞ்சினியர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க நான் போயிருந்தேன். பாத்திமா மொழிபெயர்த்து உதவினார்.
அதைத் தாண்டி இருந்தது உமயத் மசூதி. கிழக்கு வாயிலில் இருந்த முகப்பு, சிதைந்து போன நமது செஞ்சிக் கோட்டையை நினைவுபடுத்தியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஜூபிடர் தெய்வத்திற்கு ரோமர்கள் கட்டிய கோயிலின் நுழைவு வாயிலாம் அது.
‘‘இந்த மசூதிக்கு நிறைய வரலாறுகள் உண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஹதாத் என்ற தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட கோயிலாக இருந்து, பின்னர் ரோமர்கள் ஆட்சியில் ஜூபிடர் தேவதையின் கோயிலாக விரிவுபடுத்தப்பட்டது. சிரியாவுக்கு கிறிஸ்தவம் வந்தபோது செயின்ட் ஜானின் சர்ச்சாக மாற்றப்பட்டது. பின்னர் அரேபியாவில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட சமயம், உமயத் இஸ்லாமியப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிரியாவைக் கைப்பற்றி, செயின்ட் ஜான் சர்ச்சை, உமயத் மசூதியாக மிகப் பிரமாண்டமாக மாற்றியமைத்தது. அப்பொழுது கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அருகருகே தொழுது வந்தார்களாம். இந்த மசூதி கட்டப்படும்பொழுது எழுதப்பட்ட கணக்கு வழக்குகளைச் சுமக்க மட்டும் சுமார் ஐம்பது ஒட்டகங்கள் தேவைப்பட்டதாம்...’’ - ஹோம்ஸி சொன்னார்.

உலகின் மிகப்பெரும் மதங்களாகக் கருதப்படும் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் யூத மதம் மூன்றுமே சொந்தம் கொண்டாடும் இறைவனால் வாக்களிக்கப்பட்ட புனித பூமியாகக் கருதப்படும் பாலஸ்தீனம், அருகிலுள்ள லெபனான், இஸ்ரேல், ஜோர்டான் எல்லாமே ஒரு காலத்தில் சிரியப் பேரரசின் ஆட்சியில் இருந்தவை. ‘ஷாம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிரியாவின் பெரும் பகுதி பாலைவனமாகவும், மணற்குன்றுகளாகவுமே இருக்கிறது.
இறைத்தூதர்களான ஆபிரகாம், மோஸஸ், ஏசு கிறிஸ்து, ஜோஸப், சாலமன் - அனைவரும் வாழ்ந்து ஏக இறைவனின் நம்பிக்கையை போதித்த பகுதி சிரியா. இறைத்தூதர் முகமது நபி மெக்காவிலிருந்து வியாபாரம் செய்ய ஒட்டகங்களில் பயணம் செய்த இடமும் சிரியாதான். எனவே ஷாமென்ற சிரியா எல்லா இறைத்தூதர்களின் காலடிகள் பட்ட புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.
‘‘இதோ மசூதியின் இந்தக் கம்பத்தைப் பார்த்தீர்களா... இதற்குப் பெயர் ஏசுவின் மினாரா. உலகத்தின் இறுதி நாளன்று ஏசு பிரான் இந்த மினாரா வழியாக மீண்டும் தோன்றுவாரென்பது நம்பிக்கை’’ என ஹோம்ஸி சொல்ல, நான் அந்த மினாராவைப் பார்த்தேன். ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற பெயரில் சந்தேகமும் வன்முறையுமாக மோதிக் கொண்டு மடியும் உலகில், மத ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக அது என் கண்களுக்குத் தெரிந்தது. ஏசு மீண்டும் இந்த மினாரா மூலம் இறங்கிவரும் வரை இந்த மோதல்களும் ரத்த ஆறும் தொடரத்தான் வேண்டுமா?
உள்நாட்டுக் கலவரங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சிரியாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது பயனாக இருக்கும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 5000 ஆண்டுகளின் வரலாற்றுச் சுவடுகளை இன்னமும் தாங்கிக்கொண்டு உயிர்த்துடிப்புடன் இருக்கக்கூடிய ஒரே நகரம், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ். மிருக வேட்டையிலிருந்து கற்கால மனிதன் விவசாயத்திற்கு மாறிய காலகட்டத்தில் (கி.மு.9000) பரதா என்ற சிரியாவின் ஆற்றுப்படுகையும், பக்கத்திலுள்ள யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிக்கரைகளும்தான் மனிதனின் நாகரிகத் தொட்டில்களாக வர்ணிக்கப்படுகின்றன. பரதா என்ற நதிக்கும் பரதம் என்ற நமது நாட்டிற்கும் ஏதாவது தொடர்புண்டா என்று வரலாற்று மாணவர்கள் ஆய்வு செய்யலாம். முதன்முதலாக கி.மு. 1200லேயே உலகிற்கு எழுத்துருவத்தைக் கொடுத்ததும் சிரியா நாகரிகம்தான். இயற்கையான அரண்களில்லாததால் சிரியாவும் அதன் தலைநகரமான டமாஸ்கஸும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சாம்ராஜ்ஜியப் படையெடுப்புகளால் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டன. காலிப் அலியின் காலத்திற்குப் பிறகு இஸ்லாமியத் தலைநகரை மதினாவிலிருந்து டமாஸ்கஸிற்கு மாற்றியவர்கள் உமயத் பேரரசர்கள்.

துருக்கியர்களின் ஒத்தமான் பேரரசு, பிறகு ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என வரிசையாக ஆதிக்க அரசுகளின் கைப்பிடியில் சிக்கிய பிறகு 1946ல் சிரியா சுதந்திரம் பெற்றது. மக்களாட்சிக்கு மாறாக சோவியத் யூனியனின் ஆதரவுடன் அடக்குமுறை அதிபர்களின் கைகளில் அதிகாரம் மாறியது. அரபு நாடுகளின் மக்களெழுச்சி சிரியாவிற்கும் பரவி, அதிபர் சதாத்திற்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
உமயத் மசூதிக்குள்ளே இரண்டு முக்கிய கல்லறைத் தலங்கள் இருந்தன. கிழக்கு மூலையில் இறுதி இறைத்தூதரான முகமது நபி (ஸல்) அவர்களின் பேரரும், இன்றைய ஈராக்கிலுள்ள கர்பலா மைதானத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவருமான ஹஜ்ரத் ஹுசைன் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இருக்கிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் புனிதமான திருத்தலம். உமயத் மசூதியின் இந்தக் கல்லறைக்கருகே உடல் முழுக்க பர்தா அணிந்த ஈரான், ஈராக்கைச் சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் கையேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மசூதியின் நடுவில் பச்சை நிறத்தில் தங்க அலங்காரங்களோடு இருந்த இன்னொரு கல்லறையின் வரலாற்றை அறிந்தபொழுது ஆச்சர்யமாக இருந்தது. இயேசுநாதருக்கே முதன்முறையாக ஞானஸ்நானம் செய்து வைத்தவரும், இயேசுவாலேயே இறைவனின் நேசப்பிரியர் என்று மதிக்கப்பட்டவருமான ஜான் தி பாப்டிஸ்டின் கல்லறைதான் அது என்ற தகவல் வியப்பைக் கொடுத்தது.
இரண்டு மதங்களின் பிரார்த்தனைக் குரல்களையும் இணைக்கும் புனிதமான இடம் உமயத்.
எளிமையான, குடும்பப்பாங்கான, கலகலப்பான மக்களிடையே வெடித்திருக்கும் உள்நாட்டுப் புரட்சியைப் பயன்படுத்தி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த மனித நாகரிகத் தொட்டிலின் மேல் ஏவுகணைகளை வீசத் தயாராவதைக் கற்பனை செய்தாலே நெஞ்சில் ரத்தம் கசிகிறது. நண்பர் அப்துல் ரசாக் என் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
‘‘சோவியத் ஆதரவிலேயே இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் இங்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஈராக்கை ஆண்ட சதாம் உசேனின் பழைய பாத் கட்சிதான் இங்கேயும் ஆட்சி நடத்துகிறது. இது ஒருவகை ராணுவ ஆட்சிதான். மதத் தீவிரவாத இயக்கங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மக்கள் பொதுவாகவே அமைதியானவர்கள். ஆட்சி புரிபவர்களின் தவறுகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பாவத்தை மேலை நாடுகளும் இந்தத் தற்கொலைவாதத் தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தொடங்கி இப்பொழுது சிரியாவிற்கும் வந்துவிட்டார்களே என்பதுதான் எங்கள் கவலை!’