நட்பு




‘‘அந்த மைதிலிகிட்ட எதுக்கு அநாவசியமா பழகிட்டிருக்கே?’’ என்று யாமினி கேட்டதும் திக்கென அதிர்ந்தாள் ஆர்த்தி.

‘‘ஏன்... அவளுக்கென்ன?’’
‘‘அவளுக்கு என்னவா? அவ நம்பள மாதிரி எம்ப்ளாயிடா இருந்தா பரவாயில்லை. அவ சும்மா வீட்ல உக்கார்ந்து, எந்த நேரமும் சீரியல் பார்த்து வெட்டியா பொழுதுபோக்கற ஒரு ஹவுஸ் ஒய்ஃப்... அவகிட்ட நீ என்ன தெரிஞ்சிக்கப் போற? எந்த நட்பு வச்சாலும் அதுல ஒரு பிரயோஜனம் இருக்கணும். அநாவசியமா உன் டைமை வேஸ்ட் பண்ணாதே. தெரியுதா?’’
அதுவும் சரிதான் என்று தலையசைத்தாள் ஆர்த்தி. அதோடு மைதிலியின் நட்பை கட் செய்தாள். காலம் ஓடியது. தலை நரைத்த பிறகும் ஆர்த்தி - யாமினிக்கு இடையிலான ‘பிரயோஜனமான’ நட்பு தொடர்ந்தது.

ஒருநாள் ஆர்த்தியின் வீட்டுக்குச்  சென்ற யாமினி, உள்ளே பேச்சுக்குரல் கேட்டு வாசலிலேயே நின்றாள்.

‘‘அந்த யாமினிகிட்ட எதுக்கு அநாவசியமா இன்னும் பழகிட்டிருக்கே?’’ - ஆர்த்தியின் புதுத்தோழி புவனா கேட்க,
‘‘ஏன்... அவளுக்கென்ன?’’

‘‘அவளுக்கென்னவா? அவ நம்ப மாதிரி எம்ப்ளாயிடா இருந்தா பரவாயில்லை. இப்ப அவ ஒரு ரிடையர்டு கேஸ். இனி அவகிட்ட நீ என்ன தெரிஞ்சிக்க போற? எந்த நட்புலயும் ஒரு பிரயோஜனம் இருக்கணும். அநாவசியமா டைமை வேஸ்ட் பண்ணாதே... தெரியுதா?’’
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் யாமினி!