யாரையாவது திட்ட வேண்டுமென்றால் களி மண்ணை வம்புக்கிழுத்து கண்டமேனிக்கு வசைபாடுகிறவர்கள் நம்மில் பலர். ‘தலையில களிமண்ணா இருக்கு’, ‘ஒண்ணுக்கும் உதவாத களிமண்’ என்றெல்லாம் வாட்டி எடுக்கிற அந்த டைப் ஆட்களை வாயடைக்கச் செய்து விடுகிறார் மாலினி கல்யாணம். வாட்ச், கம்மல், மூக்குத்தி, பொக்கே, டேபிள் வெயிட், தட்டு, தம்ளர் என களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கில் அவர் வீட்டை அலங்கரிக்கின்றன. இன்னொருபுறம் உடல் சூட்டைத் தணிக்கவும் முகப்பொலிவுக்கும்கூட மாலினியிடம் கிடைக்கிறது களிமண் ட்ரீட்மென்ட்!
‘‘எங்களுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம். ஆனா நான் பொறந்தப்ப குடும்பம் சென்னையில இருந்துச்சு. லீவுக்கு பாட்டி ஊருக்குப் போன நாட்கள்ல களிமண் எனக்கு அறிமுகமாச்சு’’ என்கிற மாலினி, காந்தியின் கடைசி கால உதவியாளரான கல்யாணத்தின் மகள் என்பது கூடுதல் செய்தி.
‘‘ஊர்ல மண்பானை செய்றவங்க நிறைய இருந்தாங்க. சக்கரத்துல அவங்க சட்டி, பானை செய்றதையும் அதுக்காக மண்ணைப் பக்குவப்படுத்தறதையும் மணிக்கணக்குல வேடிக்கை பார்த்துட்டிருப்பேன். சில நேரம், நானே பானை செய்றேன்னு இறங்கியும் களேபரம் பண்ணுவேன். அவங்களும் வேடிக்கை பார்க்கப் போற என்னை வெறுங்கையோட அனுப்ப மாட்டாங்க. மிச்சமிருக்கற களிமண்ணுல சின்னச் சின்ன பொம்மைகள் செஞ்சு தருவாங்க. அடுத்த லீவுக்கு வர்ற வரைக்கும் அந்த பொம்மைகளைப் பத்திரப்படுத்தி வச்சிருப்பேன்’’ - பால்ய பருவத்தை அப்படியே மனதில் பதித்து வைத்திருக்கிறார் மாலினி.

‘‘படிப்பு, திருமணம், குடும்பம்னு வாழ்க்கை ஓடினப்ப, களிமண்ணுக்கும் எனக்கும் டச் விட்டுப் போச்சு. வேலையில இருந்தபோது பெங்களூருல ஒரு சுற்றுச்சூழல் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஹாலுக்குள்ள நுழைஞ்சதுமே, தொலைஞ்சு போன பழைய சிநேகிதியைப் பார்த்த மாதிரி ஃபீலிங். ஏன்னா, கண்காட்சி முழுக்கவே விதவிதமான வேலைப்பாடுகள்ல களிமண் பொருட்கள்.
அந்தக் கண்காட்சியை நடத்தின அமைப்புலயே சேர்ந்து, களிமண் படைப்புகளுக்காக கிளாஸ் போக ஆரம்பிச்சேன். இதுக்காக சென்னையில இருந்து வாரா வாரம் பெங்களூருக்குப் போய் வந்தேன். ஒரு கட்டத்துல ஆர்வம் அதிகரிக்க, பார்த்துட்டிருந்த வேலையைக் கூட விட்டுட்டேன். விதவித மான பொருட்களை நானே பண்ணுனேன். வீடு நிறைய குவிச்சு வைச்சது போக, நண்பர்கள், தெரிஞ்சவங்கன்னு விரும்புனவங்களுக்கு செஞ்சு கொடுத்தேன். சமீபமாதான் இதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாமேனு தோணிச்சு. இப்ப அதையும் பண்ணிட்டிருக்கேன்!’’ என்கிற மாலினி, தன் படைப்புகளுக்குத் தேவையான களிமண்ணை ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகாவிலிருந்தும் வரவழைக்கிறார். லோடு ரூ.15,000 வரை விலையாம்.
‘‘கலைப் பொருட்களைத் தாண்டி, தெரபிக்கும் இதைப் பயன்படுத்தலாம்னு அப்புறம்தான் தெரிஞ்சது. ‘காந்திஜி தினமும் களிமண்ணைப் பூசிக் குளிப்பார்’னு அப்பா சொன்னாங்க. தொடர்ந்து களிமண் பத்தி நிறைய ரிசர்ச் பண்ணுனேன். மத்த எந்த மண்ணை விடவும் களிமண்ணுக்கு குளிர்ச்சி அதிகம். அது ஈரப்பதத்தை ரொம்ப நேரம் உள்ளுக்குள்ள தக்க வச்சிருக்கும். அந்தக் குளிர்ச்சியை உடலுக்குத் தர்றதுதான் ‘மட்பேக் தெரபி’ என்கிற சிகிச்சை’’ என்கிற மாலினி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையோடு இணைந்து இந்தத் தெரபியையும் தருகிறார்.
‘‘அதிகபட்ச உடல் சூட்டுக்கும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைக்குமான ட்ரீட்மென்ட் இது. சுத்தமான களிமண்ணை மையா கரைச்சு அரை மணி நேரம் அடிவயித்துல பூசிட்டு, பிறகு வெந்நீரால குளிச்சிடணும். இதுதான் ட்ரீட்மென்ட். வயித்துக்குள்ள இருக்கற அசுத்தங்களை தோல்ல உள்ள துளைகள் மூலமா வெளிய இழுத்துடுது களிமண்’’ என்கிற மாலினியின் மூன்றாவது ரோல், அழகுக் கலை நிபுணர்.
‘‘முகத்துலயும் அதே குளிர்ச்சிக்காகத்தான் களிமண். கூடவே பரு மாதிரியான தொல்லைகளை நீக்கி முகத்தைப் பளபளப்பாக்கவும் செய்யுது. களிமண் கூடவே துளசி, மஞ்சள்னு சில ஹெர்பல் அயிட்டங்களையும் சேர்த்துக்கறது கூடுதல் பலன் தருது!’’ என்கிறார் உற்சாகத்தோடு.
இத்தனை நாளா இது தெரியாம களிமண்ணாட்டம் இருந்திருக்கோம் பாருங்க!
- அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்