வீட்டு பால்கனியில் ரோஜா தொட்டி வைக்க வேண்டுமென தீராத ஆசை. எத்தனையோ முறை தொட்டி வாங்கி வைத்துப் பார்த்துவிட்டேன். ஒன்றிரண்டு பூக்கள் பூப்பதோடு சரி. செடி செத்து விடுகிறது. ரோஜாவெல்லாம் நம்மூர் சீதோஷ்ணத்துக்கு வராது என்கிறார்களே, நிஜமா?
ம.அனிதா, சென்னை-91.
பதில் சொல்கிறார் ‘அன்னை கார்டன்ஸ்’ ஆனந்தன்ரோஜா செடியைப் பராமரிப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பராமரிப்பதற்குச் சமம். செடியைத் தேர்ந்தெடுப்பதில் இருந்தே கவனமும் அக்கறையும் அவசியம். நாட்டு ரோஜாவும் பன்னீர் ரோஜாவும் நம்மூருக்கு மிக நன்றாகவே வரும். பெங்களூர் ரோஜாவுக்குக் கூடுதல் பராமரிப்பு தேவை. செடியை வாங்கும்போது, அதில் இருக்கிற பூவைப் பார்த்துத் தேர்வு செய்யக்கூடாது. தண்டு அழுத்தமாக இருக்க வேண்டும். வேர்ப்பகுதியில் வேறு செடியின் வேருடன் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஏற்கனவே ஏதோ செடியை வைத்திருந்த அதே தொட்டியில், அதே மண்ணில் புதுச்செடியை நடக்கூடாது. அந்த மண்ணில் எந்தச் சத்தும் இருக்காது. பழைய தொட்டியை நன்கு சுத்தம் செய்து, செம்மண், ஆட்டுச் சாணம், எருவெல்லாம் கலந்து, பிறகே புதிய செடியை நட வேண்டும். ஆர்வக்கோளாறில் வெங்காயத்தோல் போல கண்டதையும் தொட்டியில் போடக் கூடாது.
அதெல்லாம் செடிக்குத் தண்ணீர் போகாமல், மேலோட்டமாகத் தேங்க வைத்து, செடியை அழுகச் செய்து விடும். தனியே மண்ணில் பள்ளம் தோண்டி, அதில் இலை, காய்கறித்தோல் எல்லாம் போட்டு உரமாக்கிப் பயன்படுத்தலாம். மண்புழு உரம் மிக நல்லது.பூ பூத்ததும் அதை அப்படியே செடியிலேயே விட்டு வைக்க வேண்டாம். வெட்டினால்தான், புதிய பூக்கள் வரும். ரோஜாவை ஒருபோதும் நகத்தால் கிள்ளக்கூடாது. கத்தரிக்கோல் வைத்துத்தான் வெட்ட வேண்டும். அதுவும் காம்போடு ஒட்டி வெட்டாமல், 2, 3 இலைகள் விட்டு இறக்கியே வெட்ட வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை ட்ரிம் செய்ய வேண்டும். ரோஜா செடி வாங்கி வைத்ததும், அதிலிருந்தே கொடி மாதிரி கிளம்பும். அதை ஆரம்பத்திலேயே வெட்டி விட வேண்டும். சாதாரணமாக தண்ணீர் விட்டு, வெயிலும், நிழலும் அளவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே, உங்கள் வீட்டில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்!
நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு ஐ.ஏ.எஸ். ஆவதே லட்சியம். நான் படிப்பதோ தமிழ் மீடியம். தமிழிலும் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் எழுதலாம் என்கிற செய்தி நம்பிக்கை தந்த அதே வேளையில், ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ். பாடத்திட்டமுமே மாறப் போவதாகவும், இனி ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும் என்றும் கேள்விப்படுகிறேன். உண்மையா? ஆர்.ராஜகோபாலன், திருச்சி-4.
பதில் சொல்கிறார் ‘கணேஷ் ஐ.ஏ.எஸ். அகடமி’ கணேஷ் சுப்ரமணியம்நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இதுவரை ப்ரிலிமினரி தேர்வுப்பிரிவில் விருப்பப்பாடங்களை எடுத்துப் படிக்கிற வாய்ப்பு இருந்தது. இனி அது இருக்கப் போவதில்லை. ‘சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்’ என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். இது கிட்டத்தட்ட எம்.பி.ஏ மற்றும் வங்கித் தேர்வுகளில் வரக்கூடிய நுண்ணறிவுத்திறன் சோதனைப் பிரிவுக்குச் சமம். விருப்பப்பாடங்கள் நீக்கப்பட்டதற்குப் பதிலாக முதல் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பேப்பர்கள். முன்பு 450 மதிப்பெண்களாக இருந்த தேர்வு, இப்போது முதல் தாளுக்கு 200, 2&ம் தாளுக்கு 200 என மொத்தமே 400 மதிப்பெண்களுக்குத்தான். முன்பு ஆங்கிலம் கிடையாது. இப்போது ஆங்கிலமும் உண்டு. மெயின் தேர்வுகளைத் தமிழில் எழுதலாம் என்கிற அதே நேரத்தில், ஆரம்பகட்ட தேர்வுகளிலேயே ஆங்கிலப்புலமை சோதிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் பாதிக்கப்படபபோவது நிச்சயம். இந்த மாற்றம் குறித்து ஐ.ஏ.எஸ். பாடத்திட்டங்களை உருவாக்கும் நிபுணர்களிடம் நிறைய கேள்விகள் எழுப்பியும் இதுவரை சாதகமான பதில் இல்லை. 2011&ல் ப்ரிலிமினரி எழுதப் போகிறவர்கள், இந்தப் புதிய முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இந்த மாற்றம் நகரத்து மற்றும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேண்டுமானால் பலன் தரலாம். கிராமத்துச் சூழலிலிருந்து வருகிற, ஆங்கிலப் புலமை இல்லாதவர்களுக்குக் கஷ்டம்தான்...