இலக்கிய விழாவில் ரஜினிக்கு என்ன வேலை? சீறும் சாருநிவேதிதா



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

                ஜெய்ப்பூர் சர்வதேச இலக்கிய விழா ஆகியவற்றில் பங்கேற்ற சாரு, தமிழ் இலக்கிய மேடைகள் சினிமாமயமாகி வருவதையும், இலக்கியச்சூழலில் நிலவும் அரசியலையும் கடுமையாகச் சாடுகிறார்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழா அனுபவம் எப்படி?

தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நானும், பாமாவும் கலந்துக்கிட்டோம். உலகம் முழுக்க இருந்து 262 எழுத்தாளர்கள் வந்திருந்தாங்க. எழுத்தாளர்களை குதிரையில வச்சு அழைச்சுக்கிட்டுப் போய் ராஜ உபசாரம் செஞ்சாங்க. வந்திருந்த அனைவரும் மிகப்பெரும் ஆளுமைகள். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட வந்திருந்தாங்க. எனக்கு மட்டும்தான் மூன்று அரங்குகளில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தாங்க. ‘நான் ஒரு காலேஜ் டிராப் அவுட். இவ்வளவு பெரிய எழுத்தாளர்கள் மத்தியில பேசவே பயமாருக்கு’ன்னு சொன்னேன். ஒரு நார்த் இண்டியன் கேர்ள், திடீர்னு எழுந்திருச்சு ‘தட்ஸ் யூ. வி லவ் யூ சாரு’ன்னு கத்துறா. ‘தெஹல்கா’வில நான் எழுதின கதைகள்லாம் படிச்சிருக்காளாம். 

இங்க ஒரு சினிமா இயக்குனருக்கு பாத்ரூமூல ஒரு நாலு வரி கதை உதிச்சா அதுபத்தி நாலு பக்கம் எழுதுற மீடியாக்கள் எழுத்தாளர்களை கண்டுக்கறதில்லை. என்னென்னவோ சாதனைகள் நடந்திருக்கு. உதாரணத்துக்கு, நான் ஜெய்ப்பூர் விழாவுல கலந்துக்கிட்டது. தமிழ்ல சின்னதா ஒரு செய்தியுண்டா..? நம்மை நாம கொண்டாடினாதானே மத்தவங்க மதிப்பாங்க!

பாலியலை மூலதனமாக்கி செய்திக் குறிப்பு போல எழுதுகிறீர்கள் என்று உங்களைக் குற்றம் சாட்டுகிறார்களே..?

நான் செக்ஸை டீல் பண்ணி எழுதுறவன்தான். ஆனால் அதை மட்டுமே எழுதுறவனில்லை. 6 நாவல்கள் எழுதியிருக்கேன். எல்லாம் ஒவ்வொரு சமூகப் பிரச்னையை முன்னிறுத்தினதுதான். செக்சும் முக்கியமான சமூகப் பிரச்னை. படிக்க வேண்டிய வயசுல 5 மாணவர்களும், 2 மாணவிகளும் குரூப் செக்ஸ் பண்றப்போ ஒரு பையன் அதை மொபைல்ல எடுத்து இன்டர்நெட்ல போடுறான். அதைப் பாத்து அவமானப்பட்ட ஒரு மாணவியோட சித்தப்பா, அந்தப் பொண்ணை கொலை பண்றார். இது நடந்தது அமெரிக்காவில இல்லை... சென்னையை ஒட்டியிருக்கிற ஒரு குக்கிராமத்தில. இதைப் பத்தி நான் எழுதவா, வேண்டாமா..? எழுதுனா நான் செக்ஸ் ரைட்டர். இது எல்லா பேப்பர்கள்லயும் வந்த செய்தி. பேப்பர்கள்ல வந்தா அது செக்ஸ் எழுத்து இல்லை. நான் எழுதுனா செக்ஸ். 

மூன்று மந்திரிகள் கர்நாடக சட்டசபையில உக்காந்து புளூ ஃபிலிம் பாக்குறாங்க. அவங்களை ராஜினாமா பண்ணச் சொல்றாங்க. ஆனா ஊழல் குற்றச்சாட்டு உள்ள எத்தனை மந்திரிகள் ராஜினாமா பண்ணியிருக்காங்க? சட்டசபை மாண்பு கெடுதுங்கிறதைத் தவிர ப்ளூ ஃபிலிம் பாக்கிறதால யாருக்கு என்ன பாதிப்பு? இங்கேதான் ஊழலை விட கொடூரமான விஷயமா செக்ஸை பாக்குறோம். ‘பேடு, பேடுக்கு நீச்சோ’ன்னு இந்தியில ஒரு பழமொழி. வயிறும், வயிற்றுக்குக் கீழேயும்தான் உலகம்.

நண்பர்களையே சமயங்களில் எழுதிக் கிழிக்கிறீர்கள்..?

‘ஞானபீடம்’ யாருக்குக் கொடுக்கலாம்னு கேட்டப்போ எஸ்.ராவையும், மனுஷ்ய புத்திரனையும் தான் நான் பரிந்துரைச்சேன். மத்தவங்க அப்படி இல்லைங்கிறது தான் பிரச்னை. ‘எக்ஸைல்’ விமர்சனக் கூட்டத்துக்கு ஞானியைக் கூப்பிட்டேன். மேடையிலேயே திட்டினார். முதுகுக்குப் பின்னாடி பேசுறதில்லை. மிஷ்கின் என் நாவலை ‘போர்னோ புத்தகம்’னாரு. புத்தகத்தையே படிக்காம எப்படி சொல்லலாம்னு கேட்டேன். இதே மிஷ்கின், ஒரு குப்பைப் படத்தை மேடையில போய் காவியம்னு பேசுவாரு.

‘தேகம்’ வெளியீட்டு விழாவுக்கு குஷ்புவை அழைத்தீர்கள். பல நடிகர்கள் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ரஜினியை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் ஏன் இந்த ஆவேசம்?

நடிகர்களை அழைப்பது தவறுன்னு நான் எப்ப சொன்னேன்? ஆனா ஒரு வரைமுறை இருக்கு. அண்மையில ‘துக்ளக்’ கூட்டத்துக்கு ரஜினி போனார். நூறு பேரோட நூத்தி ஒண்ணா போய் உக்காந்தாரு. அங்கே ரஜினி படத்தைப் பெரிசா போட்டு சோ படத்தை சின்னதா போடலே. போடவும் முடியாது.

இங்கே ராமகிருஷ்ணன் படத்தைவிட ரஜினி படத்தை பெரிசா போட்டா, நடந்தது ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழாவா... ரஜினிக்கு பாராட்டு விழாவா? ஒரு எழுத்தாளனா என்னை இது பாதிக்குது. இதை ரஜினி மேடையில சுட்டிக் காட்டியிருக்கணும். பொதுவா பாராட்டு விழாக்கள்ல ஏற்புரை நிகழ்த்துறவர்தானே கடைசியில பேசணும். இங்கே ரஜினி ஏன் கடைசியில பேசினாரு? நான் சவாலாவே கேக்குறேன்... இன்னொரு கூட்டம் போட்டு ரஜினியை முதல்ல பேசவிட்டு ராமகிருஷ்ணனை கடைசியா பேசவைங்க.

ஹால்ல ஒருத்தர் இருக்க மாட்டாங்க. கூட்டம் பூரா ரஜினிக்கு வந்தது. இதுதான் தவறுங்கிறேன். என் விழாவுக்குக்கூட நிறைய நடிகர்கள், நடிகைகள் வர்றாங்க. ‘ராஜலீலா’ விழாவுக்கு ஜோதிர்மயி வந்து பேசுனாங்க. நாளைக்கே நான் பிரியங்கா சோப்ரா, கல்கி கோஷ்லினை வச்சுக்கூட விழா நடத்துவேன். என் ‘ஜீரோ டிகிரி’ ஆங்கில நாவலைப் படிச்சுட்டு என்கிட்ட பேசினாங்க. ஆனா அவங்க படத்தை அழைப்பிதழ்ல போடமாட்டேன்.

‘ஆன்மிகம் படியுங்கள்’னு ரஜினி பேசுறார். இது மிகத் தவறான கருத்து. இங்கே டிக்ஷனரி, ஆன்மிகப் புத்தகம், சமையல் புத்தகம் வாங்குறதை எல்லாம் புத்தகம் வாங்குறதா நினைக்கிறாங்க. இலக்கிய புத்தகங்களை வாங்கவே ஆள் கிடையாது. இலக்கிய வாசிப்புக்கும், மற்ற வாசிப்புகளுக்கும் வித்தியாசம் தெரியாத ரஜினியை ஏன் இலக்கிய விழாவுக்கு அழைக்க வேண்டும்? ‘ரஜினி மிகப்பெரிய எழுத்தாளர்’னு ராமகிருஷ்ணன் சொல்லும்போது, ‘நான் எழுத்தாளன் இல்லைங்க, சாதாரண நடிகர்’னு ரஜினி சொல்லிருக்கணும். நல்லவேளை, பதிலுக்கு ரஜினியும் ‘ராமகிருஷ்ணன் மிகச்சிறந்த நடிகர்’னு சொல்லாம விட்டாரே! 
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்