காதலை சேர்த்து வைப்பாள் வடுகச்சி அம்மன்



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

       தடைபட்டுக்கொண்டே போகும் திருமணம், தள்ளிப்போகும் பிள்ளைப்பேறு, அலையாய் அலைந்தும் கிடைக்காத வேலை... இவையெல்லாம் சுமுகமாக முடிய ஏராளம் இருக்கின்றன பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள். அந்த வரிசையில் காடனேரி வடுகச்சி அம்மன், காதல் கைகூடத் துணை நிற்கிறாள்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் வருகிறது பாகனேரி. இங்கிருந்து பிரிகிற கிளைச்சாலை காடனேரிக்குள் அழைத்துச் செல்கிறது. ‘‘மருதையா, வடுகச்சியப் பாக்க வந்தீகளா, கீழக்கடைசிக்குப் போங்க’’ என வழிகாட்டினார்கள் அடிகுழாயில் குடத்துடன் நின்ற பெண்கள். இருபுறமும் வேலிக்கருவை மரங்கள் சூழ்ந்த ஒத்தையடிப் பாதையின் முடிவில் பரந்து விரிந்து கிடக்கிறது காடனேரி கண்மாய். ஓரளவு தண்ணீர் இருந்த கண்மாயின் கரையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் மருதுடைய அய்யனார். இச் சூழலே காதலர்களுக்கு உகந்ததாக இருக்க... ஆலயத்துக்குள் நுழைந்தோம். உள்ளே அய்யனாருக்கு வலப்புறத்தில் வடுகச்சிக்கு தனி சன்னதி.

‘‘அந்தப் புள்ள தென்திசையில இருந்து வந்த வடுகர் (நாயக்கரில் ஒரு பிரிவு) வீட்டுப்புள்ளயாம். ஏதோ கோபத்துல வீட்டைவிட்டு வெளியேறியிருக்கு. கால் போன போக்குல இந்தப் பக்கம் வந்திருக்கு. காட்டுப்பாதைல வந்த புள்ளையை சிலர் தப்பான நோக்கத்தோட அணுகியிருக்காங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்கறதுக்காக ஏதாச்சும் வீடுகள் தெரியுதான்னு ஓடிவந்திருக்கு. பின்னாடியே அவங்களும் விரட்டிட்டு வந்திருக்காங்க. இந்தக் கண்மாய் வரைக்கும்தான் அதால ஓட முடிஞ்சிருக்கு. கண்மாய்க்குள்ள கால் தடுக்கி விழுந்த புள்ள, உடனே சத்தம் போட்டு உதவி கேட்டிருக்கு. அந்த நேரம் அய்யனார் வேட்டைக்குக் கிளம்பிப் போனதால அவரால அந்தப் புள்ளையக் காப்பாத்த முடியலை. விரட்டிட்டு வந்தவங்களுக்கு தங்களோட நோக்கம் போயிருச்சுன்னாலும், ஊருக்குள்ள போய்ச் சொல்லிடுமோன்னு அந்த இடத்துலயே புள்ளைய வெட்டிப் போட்டுட்டாங்க. கன்னிப்பொண்ணாவே உயிரை விட்டிருக்கு.

வேட்டை முடிஞ்சு திரும்புன அய்யனாருக்கு விஷயம் தெரிஞ்சதும், அடைக்கலம் தேடி வந்த புள்ளையைக் காப்பாத்த முடியலை யேன்னு வருத்தப்பட்டார். அதுக்குப் பரிகாரமா அந்தப் புள்ளையை தன் பக்கத்துலயே பாதுகாப்பா வச்சி, அதோட விருப்பம் என்னென்னவோ அதை நிறைவேத்தித் தர்றதுன்னு முடிவு பண்ணியிருக்கார். அதனாலதான் கோயிலுக்குள் வடுகச்சிக்கு தனி சன்னதி. கண்மாய்க்குள் வடுகச்சி கொல்லப்பட்ட இடமும் இப்பவும் இருக்கு. தண்ணி இல்லாதப்போ அங்க போயும் கும்பிடுவாங்க ஜனங்க’’ என்கிறார் கோயில் பூசாரி ராஜேந்திரன்.

காதல் தோல்வி காரணமாகவே வடுகச்சி வீட்டில் கோபித்துக்கொண்டு வந்ததாகவும், உறவினர்கள் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காகவே, பெயரைச் சொல்லாமல் ‘வடுகச்சி’ என்றே தன்னைச் சொல்லிக் கொண்டதாகவும்கூட காடனேரி மக்கள் மத்தியில் தகவல்கள் விரிகின்றன. காதல் நிறைவேறாமல் மறைந்த வடுகச்சியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, காதல் ஜோடிகள் இங்கு வந்து வேண்டினால், அவர்களது காதலைக் கைகூட வைக்கிறார் மருதுடைய அய்யனார் என்றும் சொல்கிறார்கள்.

‘‘வடுகச்சியோட ஆசையை அய்யனார் நிறைவேத்துறார்னு மக்கள் நம்புறாங்க. புள்ளைக ஜோடி ஜோடியா வருவாங்க. கம்மாக்கரை சந்திச்சுப் பேச நல்ல இடம்னு வரலாம். கோயில் முன்னால இருக்கற மரத்துல பேப்பர் மாலை ஒண்ணு ஒருநாள் கிடந்துச்சு. பூட்டிக் கிடந்த நேரத்துல வந்தவங்க யாரோ போட்டுட்டுப் போயிருப்பாங்கன்னு நினைச்சு அதை சாமிக்குச் சாத்தலாம்னு எடுத்தேன்.

 பேப்பர் முழுக்க ‘எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம கல்யாணம் முடியணும்’னு எழுதியிருந்திச்சு. கோரிக்கைய சாமிகிட்டயும் வச்சிட்டேன். கோயிலுக்குள்ள சுவர்லயும் இதே மாதிரி எழுதிட்டிருந்தாங்க. ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதுக்கு நன்றி’ங்கிற வாசகம்கூட கொஞ்ச நாளைக்கு முன்னால் இருந்திச்சு. கோயில் உடையதாரிகள் வந்து, ‘இப்படி எழுதி சுவத்தை அசிங்கப்படுத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டதால இப்ப ‘சுவர் வேண்டுதல்’ குறைஞ்சிருக்கு.

கோயிலுக்குன்னு வர்ற யாரையும் எதுவும் சொல்றதில்லை. ‘சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கறான்’னு வந்திடக்கூடாதே. எந்தப் பிரச்னைன்னாலும் கடைசியா கோயிலைத் தேடித்தான் வருவாங்க ஜனங்க. அவங்ககிட்ட போய் இன்ன கோரிக்கைதான் வைக்கணும்னு சொல்ல நாம யாரு?’’ என்கிறார் ராஜேந்திரன்.

நாம் சென்றிருந்த நேரம் உச்சி வெயில் என்பதாலோ என்னவோ, காதலர்கள் யாரையும் காணவில்லை. அந்தப் பக்கமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நடராஜனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘இந்த அய்யனாரு எங்க குலதெய்வம்தான். வடுகச்சியும் எங்கிருந்தோ வந்த புள்ளதான். மத்த கதையெல்லாம் எனக்குத் தெரியலை. சின்னஞ்சிறுசுகள் இந்தப் பக்கமா வந்து பொழுது சாயற வரைக்கும்கூட இருப்பாங்க. அதுங்க தொந்தரவா நினைக்குங்களா தெரியாது... நானே சிலநாள் ‘அதுங்க கிளம்பிடுச்சுங்களா’ன்னு பார்த்துட்டுத்தான் வீட்டுக்குக் கிளம்புவேன். காலங் கெட்டுக் கிடக்குதுல்ல, வாழ வேண்டிய புள்ளங்க இல்லையா?’’ என்கிறார் நடராஜன்.
- அய்யனார் ராஜன்
படங்கள்: குழந்தை