தமிழ் இசை திருடுபோய்விட்டது!





மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது தமிழிசை. செழுமையான பண்களும், கம்பீரமான சுரங்களும் கொண்ட நம் இசையின் கூறுகள், ‘கர்நாடக இசை’ என்ற பெயரில் இன்று அந்நியமாகி விட்டன. காரணம், தமிழிசையை வளர்த்தெடுக்கப் போதுமான கருவி நூல்கள் இல்லாததே. 500 ஆண்டுகள் சரித்திரமே கொண்ட ஆங்கில இசைக்கு பாகம் பாகமாக அகராதிகளும் வரலாறுகளும் என்சைக்ளோபீடியாக்களும் குவிந்து கிடக்கின்றன. தமிழிசைக்கோ அப்படியான எந்த விரிவுநூல்களும், கருவி நூல்களும் இல்லை. பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்தக் குறையை கடும் உழைப்பின் மூலம் போக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த இசையறிஞர் மம்மது!

அமெரிக்க புரவலர் பால்.சி. பாண்டியனின் உதவியோடு, பேராசிரியர்கள் தொ.பரமசிவம், கு.ஞானசம்பந்தம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், தமிழிசையோடு தொடர்புடைய 5000 சொற்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பொருள் விளக்கம் எழுதி, ‘தமிழிசைப் பேரகராதி’ ஒன்றை வெளியிட்டுள்ளார் மம்மது. திருநெல்வேலி மாவட்டம், இடைகால் கிராமத்தைச் சேர்ந்த மம்மது, நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘முகமது இப்ராஹீம்’ என்ற தனது பெயரை தமிழ்நடை விரும்பி, ‘மம்மது’ என்று மாற்றிக்கொண்டவர். காமராஜர் பல்கலைக்கழகத்தில் ‘சூபி இசை’ பற்றி ஆய்வு செய்து ‘எம்.பில்’ பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழிசை தளிர்கள் (தமிழோசை பதிப்பகம், கோவை), தமிழிசை வேர்கள் (எதிர் வெளியீடு, பொள்ளாச்சி), இழை இழையாய் இசைத்தமிழாய்... (கே.கே.புக்ஸ், சென்னை) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இசையாசிரியர் வீ.ப.க.சுந்தரத்திடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவர். இசை பற்றி பேசினால் குழந்தைக்குரிய உற்சாகம் தொற்றிக் கொள்கிறது இவருக்கு. நிதானம் ததும்ப, அவரிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள் இசை பற்றிய பல மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிகின்றன.

‘‘இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று சொல்லப்படுவது முழுக்க முழுக்க தமிழிசைதான். ‘கர்நாடகம்’ என்ற சொல்லாடலே 300 வருடங்களுக்கு முன் வந்ததுதான். ஆனால், தமிழிசை 3 ஆயிரம் வருடங்கள் பழமையானது. கர்நாடகம் என்றால், ‘பழமையானது’ என்று ஒரு பொருள் உண்டு. ‘சுத்த கர்நாடகமா இருக்கியே...’ என்று பழமை விரும்பிகளைத் திட்டுவார்கள்.விந்திய மலைக்குத் தெற்கே உள்ளே பகுதிகள் அனைத்துக்கும் ‘கர்நாடகம்’ என்று ஒரு பெயர் உண்டு. திருமறைக்காடு வேதாரண்யமாக ஆனதுபோல, குரங்காடுதுறை கபிஸ்தலமாக மாறினதுபோல, நம்முடைய இசை திருடு போய்விட்டது. கர்நாடக இசைங்கிறது, தமிழிசைக்குத் தொடர்பில்லாததுன்னு சொல்லி ஒரு இசை அரசியலே இங்கே நடக்குது. அது முற்றிலும் பொய். அதை தகர்க்கிறதுக்கான நீண்ட போராட்டம் தேவை. அதற்கான ஒரு ஆயுதம்தான் இந்த இசைப் பேரகராதி’’ என்கிறார் மம்மது. (தமிழிசைப் பேரகராதி கிடைக்குமிடம்: இன்னிசை அறக்கட்டளை, இன்னிசை இல்லம், 7&12/28, பனையடியான் கோவில் தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை&625014. விலை ரூ.500.)‘‘ஐரோப்பியர்கள் இன்னைக்கு உலகத்தோட முன்மாதிரி மனிதர்களா இருக்கக் காரணம், அவங்க கண்டுபிடிச்ச கருவிகள், அடுத்து, அவங்க எழுதின கருவி நூல்கள். ஒரு துறையை வளர்த்தெடுக்க கருவி நூல்கள் அவசியம். ‘முத்தமிழ்’னு வாய்நிறைய பேசுறோம்.

இயல்தமிழுக்கு இருக்கிற அளவுக்கு நிகண்டுகள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள் இசைக்கும் நாடகத்துக்கும் இல்லை. இந்தத்துறைகளில் புலமை பெற்ற பேராசிரியர்கள் குறைவு. நிறைய அறிஞர்கள், இயல்தமிழில் மட்டும்தான் புலமையோட இருக்காங்க. இதனால ஆய்வு மாணவர்கள் தமிழிசையை கத்துக்க முடியல. இலக்கியங்கள்ல உள்ள பழைய தமிழ்ச்சொற்களை சொல்லிக்கொடுக்கவும் ஆளில்லை. இப்பகூட, சிலப்பதிகாரத்தை கல்லூரிகள்ல உண்மையான புரிதலோட நடத்துறதுக்கு தகுந்த பேராசிரியர்கள் இல்லை. இந்தக் குறைகள் நீக்கப்படணும்.தமிழிசைங்கிறது அற்புதமான புதையல். அதை இளம் தலைமுறைகிட்டே கொண்டு போகணும்’’ என்கிற மம்மது, ‘பண் களஞ்சியம்’ என்ற தமிழ் ராகங்களைப் பற்றிய தொகுப்பையும், ‘கருவிக் களஞ்சியம்’ என்ற இசைக்கருவிகளைப் பற்றிய தொகுப்பையும் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்!

வெ.நீலகண்டன்