ஒவ்வொரு முறை குளியல் சோப் வாங்கும்போதும், எந்த சோப் வாங்குவது என்கிற குழப்பம் வருகிறது. ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப்? சி.சங்கீதா, சென்னை-97.
பதில் சொல்கிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்சருமத்தின் தன்மைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.
சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது. அதுவே சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
இலங்கை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அனுபவத்தின் அடிப்படையில் யோகா, அக்குபங்சர், அகுபிரஷர் உள்ளிட்ட சில பிரிவுகளில் பிஹெச்.டி, எம்.டி பட்டங்களை வழங்குகின்றன. இந்தப் பட்டங்கள் தகுதியானவையா? இவற்றைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறமுடியுமா? எஸ்.ரகுநாதன், காஞ்சிபுரம்.
பதில் சொல்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜெயலால்இந்தியாவில் மருத்துவராக பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்றால், ‘மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா’வால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பட்டம் பெறாதவர்கள் பிராக்டீஸ் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம். ஸ்ரீலங்கா பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் பட்டங்கள் கௌரவப் பட்டங்களே. அவற்றைக் கொண்டு வேலைவாய்ப்பு பெறவோ, மருத்துவராக பிராக்டீஸ் செய்யவோ முடியாது.
காஸ்ட்லியான மொபைல் (ஸ்மார்ட்போன்) வாங்கியிருக்கிறேன். வைரஸ், மால்வேர் பிரச்னைகள் வரும் என நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். இப்படிப்பட்ட கோளாறுகளில் சிக்காமல் மொபைலை பாதுகாப்பது எப்படி?ஆர்.ராஜேஷ், பெங்களூரு&12.
பதில் சொல்கின்றனர் சாம்சங் சர்வீஸ் மையத்தினர்அங்கீகாரம் பெற்ற டீலரிடமோ, கம்பெனி ஸ்டோரிலோ மொபைல் வாங்கியிருந்தால் இதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த நொடி வரை உங்கள் மொபைல் பாதுகாப்பாகவே
இருக்கிறது. இனி...
ஓசியில் கிடைக்கிறது என்ற காரணத்துக்காக இணையத்திலிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ அஃபிஷியல் வெர்ஷன் அல்லாத சாஃப்ட்வேர்களை மொபைலுக்குள் புகுத்தாதீர்கள். கேம்ஸ் மற்றும் அப்ளிகேஷன்களிலும் இந்தக் கவனம் இருக்கட்டும். பைரேட்டட் சாஃப்ட்வேர்கள் மூலமாகவே வைரஸ்களும் மால்வேர்களும் ஸ்பைவேர்களும் பெருமளவு பரவுகின்றன.
ஸ்மார்ட்போனின் ஆபரேடிங் சிஸ்டம் சாஃப்ட்வேரை எப்போதும் அப்டேட்டாக வைத்திருங்கள். இது உங்கள் மொபைலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.
வை&ஃபி மற்றும் ப்ளூடூத் இணைப்புகளை பயன்படுத்தாத வேளைகளில் ஆஃப் செய்து விடுங்கள். இதன் வழியாகவும் ஊடுருவலுக்கு வழியுண்டு.
மிகமுக்கிய தகவல்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்குமானால் ‘போன்கார்ட் மொபைல் செக்யூரிட்டி’ போன்ற ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர்களை பணம் செலுத்தி (சுமார் ரூ.2200) இன்ஸ்டால் செய்யலாம்.
<