இன்ஸ்டா இளவரசனும் ரீல்ஸ் ரீட்டாவும்...
தனியே... தன்னந்தனியே ஓர் உருவம் அமர்ந்திருக்கிறது. அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். அருகில் ஒருவர்கூட இல்லை. யாருடனும் பேசவில்லை. இருந்தாலும் அந்த உருவம் சிரிக்கிறது. கொஞ்சம் அமைதியாகப் பார்க்கிறது. அதிகபட்சம் ஆட்காட்டி விரல் மட்டும் வெற்றிலை மீது சுண்ணாம்பைத் தடவுவது போல, ஸ்மார்ட்போனைத் தடவிக்கொண்டிருக்கிறது. காதில் வழக்கம்போல செயற்கை உறுப்பாய் ஒரு ஹெட்போன். ‘‘யோவ்... என்னத்தயா பாத்து இப்படி சிரிக்கிறாங்க...’ என அவரது போனை எட்டிப் பார்த்தால்... அங்கே அவர் பார்த்துக் கொண்டிருப்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. ரீல்ஸ்..!  காலச் சக்கர முள்ளைக் கொஞ்சம் முன்னோக்கி நகர்த்திப் பாருங்கள். திரையங்குகளுக்குச் சென்று தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். இதைத்தாண்டி வீட்டில் உள்ள வானொலியில் செய்திகள், திரையிசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். காலம் மாறியது. காற்றில் கேட்டது கண்களுக்கு விருந்தாக அமைந்தது தொலைக்காட்சி வடிவத்தில். கருப்பு - வெள்ளையில் பார்த்ததே வண்ணமயமாய் மனதில் நிறைந்திருக்க... வண்ணத் தொலைக்காட்சியும் வந்து கலக்கத் தொடங்கியது.
அலைக்கம்பத்தை ஆட்டி, ஆட்டி அலைவரிசையை சரி செய்த காலத்தை மறக்க முடியாது. வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், வாடகைக்கு டெக், வீடியோ கேசட் வாங்கி, பிடித்த திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். இன்று தமிழ் ராக்கர்ஸில் பதிவிறக்கம் செய்து பார்த்து, கேமரா பிரின்ட், ஒரிஜினல் பிரின்ட் என்று சொல்லும் விஷயமெல்லாம் அன்றே கிடைத்த அற்புதங்கள்.
வீட்டில் அனைவரும் வெளியே சென்ற நேரத்தில், தெரு உறங்கியதும், டெக், கேசட் வாங்கி பூனையை விட மெல்லிய சத்தத்தில் நண்பர்களோடு வீட்டுக்குள் சென்று ‘அந்த படம்’ பார்த்த நாட்களையும் மறக்க முடியாது.
காலச் சக்கர முள்ளை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருவோம். தொண்ணூறுகளில் கம்ப்யூட்டர் வந்ததே ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உள்ளங்கையில் ஒரு ஆண்ட்ராய்டு போன் அழகாய் அமர்ந்து கொண்டு, உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதை அப்போது யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.
அன்று பயாஸ்கோப்பை உருட்டி, உருட்டி ரீல்ஸ் பார்த்து மகிழ்ந்தோம். இன்று இணையதளங்களில் ரீல்ஸ் என்ற மாய வலையில் சிக்கிக்கொண்டு, பலர் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். வியூஸ் (Views) எனும் பார்வைகளை மையப்படுத்தி வரும் ரீல்ஸ், பலபேரின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.
அதேநேரம் ரீல்ஸைப் பார்த்துக்கொண்டே பொழுதைக் கழித்துக்கொண்டு, கல்வி, வாழ்வின் அடுத்த நிலை, குடும்பம், குழந்தைகளைக் கவனிக்காமல் பலர் வாழ்ந்து கொண்டிருப்பது கவலை யளிக்கும் விஷயம்.இன்ஸ்டாகிராமின் ஓர் அங்கம்தான் இந்த ரீல்ஸ். அதிகபட்சமாக 60 நொடிகள் வரையிலான வீடியோக்களை ரீல்ஸாக பதிவிடலாம்.
ஓட்டலில் உணவு, புதிய திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள், கோயில், அருவி என செல்லும் ஒருவர், அங்கு பல நிமிடங்களில் செங்குத்தான முறையில் எடுக்கும் வீடியோக்களை, ஒரே நிமிடத்தில் சினிமா எடிட்டரை விட படு ஸ்பீடாய் எடிட் செய்கிறார். அதன்பின் அவரே டப்பிங் பேசுகிறார்.
சில நேரங்களில் திரையிசைப் பாடல்களையும் பின்னணியில் ஒலிக்க விடுவதுண்டு. அவ்வளவுதான், அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிடுகிறார். இதையே சிலர் யூடியூப் களில் வீடியோக்களாக பதிவிடுவதும் உண்டு. சப்ஸ்கிரைபர்கள், ஃபாலோயர்ஸைப் பொறுத்து பார்வைகள் கூடிக்கொண்டே போகும்.
யூடியூப்பில் பிடித்த வீடியோ என்றால் சப்ஸ்கிரைப் செய்வார்கள். நிறைய பேருக்கு பிடித்துவிட்டால் டிரெண்டாக்கிவிடுவார்கள். பிறகு நினைத்ததை எல்லாம் ரீல்ஸ் ஆக்கலாம். பார்வைகளைப் பொறுத்து உங்கள் கணக்கில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். ஒரு நிமிட வீடியோவில் ஒரு கோடி சம்பாதிக்கும் வித்தையைக்கற்றுத் தருகிறது ரீல்ஸ். குடும்பங்களைக் கெடுக்கிறது என்று தடை செய்யப்பட்ட டிக்டாக்தான், மரு வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் ரீல்ஸாக உலா வருகிறது. புரொபஷனலாக ரீல்ஸ் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் என்றால், பொழுதுபோக்குக்காக, பிரபலம் ஆவதற்காக சிலர் தங்கள் பங்குக்கு வீடியோவைப் போட்டு மிரட்டுகின்றனர். ‘சுடுதண்ணீர் காய்ச்சுவது எப்படி’ என்றுதான் ரீல்ஸ் போடவில்லை.
வீட்டில் வகை வகையாக பலகாரம் செய்தாலும் ரீல்ஸ்... விசேஷம் நடந்தாலும் ரீல்ஸ்... வழுக்கி விழுந்தாலும் ரீல்ஸ்... என பேக்கிரவுண்டில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் இவர்களின் பாடலை ஓடவிட்டு சம்பந்தா சம்பந்தமில்லா ரீல்ஸ் போடத் தொடங்கி விட்டனர். ‘அய்யய்யோ... இதெல்லாமா ரீல்ஸ்.. தடுக்க இல்லையா சார் ரூல்ஸ்...’ என கேட்குமளவிற்குப் போட்டுத் தாக்குகின்றனர்.
உதாரணத்துக்கு, 1957ல் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்துல வந்த ஒரு பாடல் ‘மணப்பாறை மாடு கட்டி’. மருதகாசி எழுதிய இந்த பாடல் அந்தக் காலத்ைத விட இப்போதுதான் ரீல்ஸில் ஏக பிரபலம்.
அதுல வரும் வரிகளான ‘பொதியை ஏத்தி வண்டியிலே... பொள்ளாச்சி சந்தையிலே... விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு... நீயும் வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு...’
என்ற வரிகளுக்கு, மாட்டுவண்டியை ஓட விட்டு வாயசைப்பதாகட்டும்... கண்மாய் ஓரம், தோட்டம் என காணுமிடங்களில் எல்லாம் புடவை, தாவணி, வேட்டி, சட்டையுடன் ரீல்ஸைப் போட்டு தெறிக்க விடுகின்றனர். ‘‘பேசாம விருதுநகர் வியாபாரிக்கு நாமளே வித்துக் கொடுத்துடலாம் போல... ரொம்ப கஷ்டப்படுறாங்களேப்பா...’’ என பின்னூட்டங்களும் குவிகின்றன. 50ல வந்த படம் முதல் ‘ஜெயிலர்’ படத்துல வரும், ‘சின்ன வயசுல எனக்கொரு ஆசை இருந்தது...’ என வில்லன் விநாயகன் பேசும் வசனம் வரை எதையும் விடுவதில்லை இன்ஸ்டா பயனாளிகள்.
பொழுதுபோக்காக ரீல்ஸ் பார்ப்பது எல்லாம் சரிதான். ஆனால், இளைஞர் படை ஒன்று ரீல்ஸை பயன்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களுக்கு வலை விரித்து வருகிறது. இப்போதெல்லாம் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் வகை போன்களில் வீடியோக்களை, வித்தியாசமான முறையில் எடுக்கலாம். முகத்தை அழகாகக் காட்டுவதற்காக நிறைய அம்சங்களும் அதில் இருக்கின்றன.
அத்துடன் சினிமா போன்றும் காட்சிப்படுத்தலாம். உதாரணத்துக்கு, ‘நிலவு எங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய்....’
என வாயசைத்து ரீல்ஸை பதிய விடுகின்றனர். இப்பாடலில் நிஜமாகவே நடித்த நடிகர்களைக் காட்டிலும், ரீல்ஸில் காட்டும் முகபாவங்கள் மிரள வைக்கிறது. ‘எப்புடிரா...’ என வியக்க வைக்கிறது. இதுபோன்ற பல பாடல்களை ஓட விட்டு, ரொமான்ஸ்களைச் சிதறவிடுகிறது இளைஞர் படை. இதைப் பாராட்டும் பெண்களே இவர்களுக்கு இலக்கு.
சாட்டிங்கில் ஆரம்பிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. யார்?, எவர்? என்று தெரியாமல் காதல் வலையில் விழுந்து விடும் பெண்கள், பின்னால் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது.ஆண்கள் மட்டும்தான் ரீல்ஸ் போடுவாங்களா... நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென பெண்களும் களமிறங்கி மிரள வைக்கின்றனர். ‘ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேல் ஒரு போர் தொடுக்க...’
என ரீல்ஸில் ஒரு பெண் கொடுக்கும் முகபாவங்களைப் பார்த்தால் அடுத்த ரீல்ஸ்க்கு செல்வதற்கு மனமே வராது. அதையெல்லாம் தாண்டி ஆண்கள் குரலுக்கு வாயசைக்கும் பெண்கள் வீடியோவும் வைரலாவதுதான் பெரும் ஆச்சரியம். இதில், மாணவிகள், குடும்பப் பெண்கள் என ஒவ்வொருவரும் காமெடி, பாடல், சமையல் என சகட்டு மேனிக்கு வீடியோக்களை அள்ளித் தெளிக்கின்றனர்.
ஒரு நிமிடம் ஓடும் வீடியோதானே என நாம் சொன்னாலும், ஸ்க்ரோல் பண்ணப் பண்ண நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வந்துகொண்டே இருக்கும். இதனால் வீட்டில் உள்ள நான்கு பேரிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்தால், ரீல்ஸை பார்த்து சிரிப்பது, ரசிப்பது என்றே பொழுதைப் போக்குகின்றனர். குடும்ப அரட்டையே இதில் காணாமல் போய்விடுகிறது. இதில் இளைஞர்கள், பெரியவர்கள் என யாருமே விதிவிலக்கல்ல. பெரியவர்களுக்குப் பிரச்னையில்லை. இளைஞர்களின் கல்விதான் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
புதிய விஷயங்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல், ரீல்ஸ்... ரீல்ஸ் என பார்த்துக் கொண்டே நேரத்தை வீணாக்குகின்றனர். இது சிந்தனையை மழுங்கடிக் கிறது. இந்த இணையதள அடிமைத்தனத்தால் வாசிப்புத்திறன் அடியோடு பாதிக்கப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்தான். அதை அளவாகப் பயன்படுத்தும்போது பிரச்னையில்லை. அளவுக்கு மீறினால் அதுவே நம் எதிர்காலத்தைப் பாழாக்கி விடும்.
இன்ஸ்டா உலகம் எச்சரிக்கை!
‘‘இண்டர்நெட் வராத காலகட்டங்களில் இளைய தலைமுறையினர் பள்ளி, கல்லூரிக்குச் செல்வது, பாடங்களைப் படிப்பது, தெருக்களில் விளையாடுவது, நண்பர்களோடு பேசுவது என நேரம் ஒதுக்கி செயல்பட்டனர். இதனால் அவர்கள் யதார்த்தமாக இருந்தனர். இண்டர்நெட் வந்த பிறகு எதற்குமே கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போய் விட்டது. வெளிநாடுகளில் கூட சில கட்டுப்பாடு உண்டு. நம் நாட்டில் அது கிடையாது. எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
நம்மை யாருமே கட்டுப்படுத்த முடியாது என ஒரு தனியுலகில் இன்றைய இளைய தலைமுறையினர் வாழத்தொடங்கிவிட்டனர். ஒரு அளவுக்கு மேல் தேவையற்ற விஷயங்களை நம் மூளையில் திணிக்க முடியாது. நேரடி பேச்சை விட, காட்சிகள் நம்மைக் கவரும். அதனை மொபைலில் பார்க்கும்போது, தேவையற்ற சிந்தனைகள் கூடுதலாகும். இதனால் கவனச்சிதறல் அதிகரிக்கும். மன அழுத்தம், அதீத கோபம், தேவையற்ற பதற்றம் உருவாகும்.
தொடர்ந்து பார்க்கும்போது கண்ணின் ஈரத்தன்மை குறைந்து, வறண்டு போகும். இதனால் பார்வைக்கோளாறு உண்டாகலாம். ஸ்மார்ட்போனை கைகளிலே வைத்து பார்ப்பதால் நரம்புத் தளர்ச்சி வரும். விரல்களின் செயல்பாடு பாதிக்கும். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்...’’ என்று எச்சரிக்கிறார் மதுரை மனநல மருத்துவர் குமணன்.
எஸ்.அறிவழகன்
|