‘த கோட்’ல கிடைச்ச ஏமாற்றத்தை சன் நெக்ஸ்ட் போக்கியிருக்கு!



சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள படம் ‘உன் பார்வையில்’. நாயகிக்கு முக்கியத்துவமுள்ள இதில் இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் பார்வதி நாயர். 
டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தீங்க. அந்த அனுபவம் எப்படி?

முதன் முறையாக டபுள் ஆக்‌ஷனில் நடித்தது எனக்கே புது அனுபவம். இரண்டு சகோதரிகளும் டிவின்ஸ். இருவருமே நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி என்று சொல்லமுடியாது. எப்படியென்றால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு கண் பார்வையில் பிரச்னை இருக்கும்.
பவ்யா, திவ்யா ஆகிய இருவரில் பவ்யா கேரக்டருக்குதான் ஸ்கோப் அதிகமாக இருந்துச்சு. மர்மமான முறையில் இறந்த  திவ்யாவின் மரணத்தை இன்வஸ்டிகேஷன் பண்ணும் ரோல். திவ்யா சாஃப்ட் கேரக்டர். பவ்யா தொழிலபதிர். அப்படி இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் காண்பிச்சு நடித்தது சிறந்த அனுபவம்.

கேரக்டருக்காக என்ன சவால்கள் இருந்துச்சு?

என்னுடைய சினிமா பயணத்தில் மிகப் பெரிய சவால் என்று சொல்லலாம். கண் பார்வையற்றவராக நடிக்க வேண்டும் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் டேபிள், கதவு மீது முட்டி மோதி நடிக்க வேண்டும்.இயக்குநர் கபீர் லால் சார், ஆர்ட்டிஸ்ட்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற நுணுக்கம் தெரிந்தவர். அதனால் என்னால் எளிதாக வேலை செய்ய முடிந்தது.
மலையாளத்தில் மோகன்லால் சாருடன் ‘நீராலி’ என்ற படத்தில் சைக்கோ கேரக்டர் பண்ணியிருந்தேன். அந்தப் படத்துக்காக 10 நாட்கள் ஒர்க் ஷாப் நடந்துச்சு. என்னுடைய ஆக்டிங் நேச்சுரலாக இருந்ததாக சொன்னார்கள். இந்தப் படத்துக்கு அப்படி ஹோம் ஒர்க் தேவைப்படவில்லை. ஹாலிவுட் படமான ‘ஜூலியாஸ் ஐஸ்’ மட்டும் பார்க்கச் சொன்னார்கள். 

டபுள் ரோல் என்பது சவால். முழுமையாக பார்வையற்றவராகவும், மங்கலாக பார்க்கும் திறன் உள்ளவராகவும் நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. பவ்யா கேரக்டருக்கு எல்லாமே நெகடிவ்வாக நடக்கும். எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பவர். ஷூட்டிங் முடிந்தபிறகு ஒரு மாதம் டிப்ரஷனுடன் இருந்தேன். படப்பிடிப்பில் கணேஷ் வெங்கட்ராமன் சப்போர்ட்டிவ்வாக இருந்தார். 

அஜித், விஜய், மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த அனுபவம் எப்படி? 

‘த கோட்’ படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தார்கள். ஸ்பேஸ் இருக்குமா என்று யோசித்தேன். நிறைய காட்சிகள் எடுத்தார்கள். இடைவேளை காட்சி என் மீது இருந்துச்சு.
படம் வெளியான பிறகு என்னுடைய பல காட்சிகளை நீக்கியிருந்தார்கள். அது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அந்தப் படத்தில் நடித்தபிறகு ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்தது மகிழ்ச்சி. 

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்தது மறக்க முடியாது. அஜித் சார் ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். மோகன்லால் சார் ஏராளமான படங்கள் செய்தவர். ஆனால், அவருடைய அர்ப்பணிப்பு, ஈடுபாடு ஆச்சர்யத்தை கொடுக்கும். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் செய்கிறீர்கள். 

எந்த மொழியில் உங்களால் எளிதாக நடிக்க முடிகிறது? 

ஒரு மொழியை மட்டும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. டீம் பொறுத்து அது மாறும். ‘உன் பார்வையில்’ எனக்கு செளகரியமாக இருந்துச்சு. ‘என்னை அறிந்தால்’ படத்தில் வேலை செய்யும்போது டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. 

மலையாளம் என்னுடைய தாய்மொழியாக இருந்தாலும் எளிதாக வேலை செய்ய முடியும் என்று சொல்லிவிட முடியாது. மொழியை வைத்து இப்போது சினிமாவைப் பிரிக்க முடியாது. கன்னடத்திலும் சில படங்கள் செய்துள்ளேன். அங்கும் என்னால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. 

உங்கள் கதை தேர்வு பற்றி சொல்லுங்களேன்?

ஒரே மாதிரி கேரக்டர் வந்தால் தவிர்த்துவிடுவேன். இதுவரை நடிக்காத புது வேடங்களில் நடிக்க வேண்டும். சில படங்களில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு இந்த வேடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதை உடைக்கும் விதமாக என்னால் எந்த கேரக்டரும் பண்ண முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  

விஷ் லிஸ்ட்டில் உள்ள கேரக்டர், கதை எது?

‘பாகுபலி’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பீரியட் படங்கள் பண்ண ஆர்வமாக இருக்கிறேன். பயோபிக் கதைகளில் ஸ்ரீதேவியாக நடிக்க ஆசை.பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாக்காரர்களையும் 8 மணி நேரம் மட்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். 

அதுபற்றி?

நடிகர், நடிகைகளின் சூழ்நிலையைப் பொறுத்து அது மாறலாம். சிலர் பெற்றோராக இருப்பதால் குழந்தை, குடும்பம் என பல பொறுப்புகள் இருக்கும். அதைக் கவனிக்க டைம் தேவைப்படும். ஒருவேளை எட்டு மணி நேரம் வேலை என்று வரும்போது சம்பளமும் குறிப்பிட்ட வரம்புக்குள் ஃபிக்ஸ் பண்ணவேண்டிய சூழ்நிலை வரும்.

எஸ்.ராஜா