தியேட்டர் ஓனரான நடிகர்கள்!
இந்தியாவில் ஒரு பக்கம் திரையரங்குகள் மூடப்பட்டு வந்தாலும், இன்னொரு பக்கம் நவீனமான திரையரங்குகள் திறக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பெரிய திரை, அதிர வைக்கும் சவுண்ட், சுத்தமான சூழல், சொகுசான இருக்கை, நல்ல தரமான ப்ரொஜக்ஷன் என அனைத்து வசதிகளும் உள்ள திரையரங்குகளை நோக்கித்தான் மக்கள் படையெடுக்கின்றனர். திரைப்படம் பார்ப்பதைத் தாண்டி, திரையரங்க அனுபவத்தை விரும்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
 அதனால்தான் பெரிய திரைகளைக் கொண்ட ஐமேக்ஸ், டால்பி சினிமா, எபிக், பிஎக்ஸ்எல் போன்ற திரையரங்குகள் அதிகமாக திறக்கப்படுகின்றன. இப்படியான நவீன திரையரங்குகள் இந்தியாவில் வருவதற்கு சில நடிகர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். தாங்கள் சினிமாவில் ஈட்டியதை திரையரங்க பிசினஸில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் முக்கியமான சில நடிகர்களுக்குச் சொந்தமான திரையரங்குகளைப் பற்றிய விவரங்கள் இதோ...
 ஆசீர்வாத் சினிபிளக்ஸ்
கேரளாவின் குறிப்பிடத்தக்க மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இதுவும் ஒன்று. கோழிக்கோடு, சொர்ணூர், பெரும்பாவூர், மூவாட்டுபுழா, தொடுபுழா, ஹரிபாத், கடப்ரா, கோட்டியம் ஆகிய இடங்களில் ஆசீர்வாத் சினிபிளக்ஸின் திரையரங்குகள் உள்ளன. இதில் மொத்தம் 27 திரைகள் உள்ளன. தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூருடன் இணைந்து, ஆசீர்வாத் சினிபிளக்ஸை நடத்தி வருகிறார், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால். 4K லேசர், டால்பி அட்மோஸ், 3டி என நவீன வசதிகள் அனைத்தும் இந்த திரையரங்குகளில் உள்ளன.
 ஏஎம்பி சினிமாஸ்
ஹைதராபாத்தில் உள்ள நவீனமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதன்மையானது, ஏஎம்பி சினிமாஸ். ஹைதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த மல்டிபிளக்ஸ். அதிநவீன பார்கோ ப்ளாக்ஷிப் லேசர் புரஜக்ஷன் கொண்ட தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் முதல் திரையரங்கமும் இதுதான். மட்டுமல்ல, சொகுசான ரெக்லைனர் இருக்கை வசதிகொண்ட இந்தியாவின் முக்கியமான திரையரங்குகளில் இதுவும் ஒன்று.
 இந்த ரெக்லைனர் இருக்கையிலிருந்தே வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்ய முடியும். இருக்கையிலேயே உணவு ஆர்டர் செய்வதற்கான நவீன வசதிகள் உள்ளன. இதுபோக 4k லேசர் ப்ரொஜக்ஷன், 3டி ஸ்கிரீன், டால்பி அட்மோஸ் என சகல வசதிகளும் கொண்ட ஏஎம்பி சினிமாஸில் ஏழு திரைகள் உள்ளன.
இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தின் சொந்தக்காரர்களில் ஒருவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு. ஏசியன் குரூப்ஸுடன் இணைந்து இந்த திரையரங்கத்தை நடத்தி வருகிறார் மகேஷ்.
இதன் அடுத்த கிளை பெங்களூருவில் திறக்கப்படுகிறது. பெங்களூரு ஏஎம்பி சினிமாஸில் தென்னிந்தியாவின் முதல் டால்பி சினிமா திரையரங்கம் வரப்போவதுதான் இதில் ஹைலைட். ‘அவதார் 3’ மாதிரியான விஷுவல் விருந்தைப் படைக்கும் சினிமாக்களைப் பார்ப்பதற்கு சிறந்த திரையரங்கம் டால்பி சினிமாதான் என்கின்றனர். அதனால் பெங்களூருவில் ஏஎம்பி சினிமாஸ் எப்போது திறக்கப்படும் என்ற ஆவலில் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தேவ்கன் சினிக்ஸ்
‘‘சினிமாவின் மீது எனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்துவதற்காகவும், எல்லா மக்களுக்கும் நவீனமான திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் திரையரங்க பிசினஸில் இறங்கினேன்...’’ என்கிற பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் திரையரங்கம் இது. தொழிலதிபர் சிவ்தத் தாஸுடன் இணைந்து ‘தேவ்கன் சினிக்ஸ்’ எனும் மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறார் அஜய். அஜய்யின் மனைவி கஜோலும் இந்த திரையரங்க பிசினஸில் முக்கியப்பங்கு வகிக்கின்றார்.
இந்தியா முழுவதும் இந்த மல்டிபிளக்ஸை விரிவாக்க வேண்டும் என்பது அஜயின் கனவு. இப்போது அகமதாபாத், ஆனந்த், காந்திநகர், காஷிப்பூர், மும்பை, மீரட், கான்பூர், ஹபூர், புஜ், குருகிராம், கவுகாத்தி, ரேபரேலி, ராஜ்நகர், சுரேந்திர நகர் ஆகிய இடங்களில் தேவ்கன் சினிக்ஸ் உள்ளன. விரைவில் ஹைதராபாத்தில் ஏழு திரைகளைக் கொண்ட பிரமாண்ட மல்டிபிளக்ஸைத் திறக்கவிருக்கிறது, தேவ்கன் சினிக்ஸ்.
ஏஏஏ சினிமாஸ்
ஏசியன் குரூப்புடன் இணைந்து, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனால் உருவாக்கப்பட்ட திரையரங்கம் இது. ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கில், நவீன வசதிகள் கொண்ட ஐந்து திரைகள் உள்ளன. எல்இடி ஸ்கிரீன், டால்பி அட்மோஸ், லேசர் புரஜக்ஷன் என்று நவீனமான அனைத்து வசதிகளும் உள்ளன.
ஹைதராபாத்திலேயே இன்னொரு கிளையை ஆரம்பிக்கவிருக்கிறது, ஏஏஏ சினிமாஸ். இதில் இந்தியாவிலேயே பெரிய திரையைக் கொண்ட டால்பி சினிமா வரப்போகிறது. இதுபோக புதிதாக திறக்கவிருக்கும் ஏஏஏ சினிமாஸில் பிரீமியம் திரைகளும் வரவிருக்கின்றன. இந்தியாவிலேயே டால்பி சினிமா, பிரீமியம் திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்கின்றனர். ஏவிடி சினிமாஸ்
மூன்று திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம் இது. ஏசியன் குரூப்ஸுடன் இணைந்து, இத்திரையரங்கத்தை நடத்தி வருகிறார் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா.
தெலங்கானாவில் உள்ள மெஹபூப்நகரில் அமைந்திருக்கிறது ஏவிடி சினிமாஸ். இங்கே தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், தமிழில் வெளியாகும் முக்கியமான படங்கள் எல்லாம் வெளியாகியிருக்கின்றன.
த.சக்திவேல்
|