சேலம் to சாண்டல்வுட்!
ஒரு இயக்குனரின் மாஸ் பயணம்
கன்னடத்தில் இருந்து வெளியான படங்களில் இந்த வருடம் பார்க்கப்பட்ட படங்களை பட்டியல் எடுத்தால் அதில் ‘காந்தாரா’வுக்கு தனியிடம் இருக்கும்.அதே சமயம் இன்னொரு படமும் நிச்சயம் லிஸ்ட்டில் இருக்கும். அதுதான் ‘மேக்ஸ்’. ஓர் இரவில் நடக்கும் திரைப்படம், ஒரு போலீஸ் ஸ்டேஷன், விறுவிறுப்பாக பரபரப்பாக கொண்டு சென்றிருப்பார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா. அறிமுக இயக்குநரான இவரை நம்பி நடிக்க ஒப்புக் கொண்டவர், கன்னட டாப் நடிகரான கிச்சா சுதீப். இந்தக் கூட்டணி ஒரு படத்துடன் நிற்கவில்லை, தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் இப்போது ‘மார்க்’ வெளியாகிறது. இச்சூழலில் இயக்குநர் வியஜ் கார்த்திகேயாவை சந்தித்தோம்.
சேலம் டூ சாண்டல்வுட் எப்படி சாத்தியமானது?
அசிஸ்டென்ட் டைரக்டரா பல இயக்குநர்கள்கிட்ட வேலை செய்திருக்கேன். பார்த்திபன் சார், பேரரசு சார் கூட நிறையபடங்கள் வொர்க் பண்ணியிருக்கேன். அப்பா நடராஜ் கவர்மெண்ட் பணியாளர், 10 வருடங்கள் முன்பு இறந்துட்டார்.
அம்மா, நான், உடன் என் மனைவி கலைவாணி, மற்றும் பாப்பா ஆராதனா. இதுதான் என் குடும்பம்.என் மனைவி கொடுத்த முழு சப்போர்ட்லதான் இப்ப இங்க நிற்கிறேன். 10 வருடங்களா முதுகெலும்பா இருக்காங்க என் மனைவி. 20 வருடங்கள் காத்திருப்பு. நிறைய தேடல். அதற்குப் பலனா கிடைச்சதுதான் ‘மேக்ஸ்’ படம்.
‘மார்க்’..?
படத்தில் சுதீப் சார் பெயர் அஜய் மார்க்கண்டேயா. அவரை செல்லமா மார்க்னு கூப்பிடுவாங்க. அதனால் படத்துக்கு இந்த டைட்டில். நகரத்துல தொடர்ச்சியா குழந்தைகள் காணாமப் போறாங்க. நகரமே கலவரமாகுற அளவுக்கு தேடலும் விசாரணையும் நடக்குது. பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சதியும் இருக்கும்பட்சத்தில் காவல்துறை அதிகாரியான மார்க்கும் அவரது குழுவும் என்ன செய்யறாங்க என்பதுதான் கதை.
‘மேக்ஸ்’ ஓரிடத்துல ஆரம்பிச்சு அந்த இடத்தை மட்டுமே சுற்றி கதை நகரும். ஆனா, ‘மார்க்’ அப்படியில்ல. அதிரடி, கமர்ஷியல், ஆக்ஷன், பொதுமக்கள் துவங்கி அரசியல்வாதிகள் தலையீடு வரைனு படம் ஜனரஞ்சகமா போகும்.
இரண்டாவது முறையாக சுதீப்புடன் கூட்டணி... எப்படி சாத்தியமானது?
சுதீப் சார் கதை கேட்கும் ஸ்டைலே தனி. முதல்ல நம்மை முழுமையா கவனிப்பார். நாம எப்படி அவர்கிட்ட பேசறோம், நம் மேனரிசம் என்ன, இதையெல்லாம் வைச்சு நம்மை முழுமையா ஸ்கேன் செய்துடுவார்.அப்படி நான் கதை சொல்லப் போனப்ப கதையை கேட்டுகிட்டே என்னையும் ஆராய்ந்தார். என்னவோ தெரியல... அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிடுச்சு.
‘மேக்ஸ்’ கதை கேட்டுட்டு உடனே ஓகே சொன்னார். அவருக்கு முதலில் பிடிச்சது என்னுடைய ப்ரொடக்ஷன் மேனேஜ்மெண்ட். என்ன பட்ஜெட், என்ன கதை சொன்னேனோ அதை அப்படியே மெயின்டெயின் செய்தேன்.
சுதீப் சாருடன் சந்திப்பு தாணு சார் மூலமாதான் சாத்தியமானது. சுதீப் சார் வெறும் படம் மட்டும் நடிக்கிறதா இருந்தா பரவாயில்ல. அவர் ஒரு ரியாலிட்டி ஷோ ஹோஸ்ட். அவருக்கு நேரம் ரொம்ப முக்கியம்.
பொதுவா எல்லா பெரிய ஸ்டார் படங்களையும் குறைந்தது ஒரு வருடம் எடுப்பாங்க. ஆனா, நாங்க வெறும் நான்கு மாதங்கள்ல படத்தை முடிச்சிட்டோம். இந்த டைம் மேனேஜ்மெண்டை சார் ரொம்ப விரும்பினார். அதனால்தான் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்காரோனு தோணுது.
நவீன் சந்திரா, சைன் டாம் சாக்கோ, குரு சோமசுந்தரம்... நடிப்பு அரக்கர்களாக தேர்வு செய்திருக்கீங்களே?
கூடவே யோகி பாபு சார், ‘வணங்கான்’ ரோஷினி, தீப்ஷிகா, டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரையும் சேர்த்துக்குங்க.குரு சோமசுந்தரம் சார் கேரக்டரும், நவீன் சந்திராவின் பத்ரா கேரக்டரும் அதிகமா பேசப்படும்னு நம்பறேன். இதுவரையிலும் பார்க்காத குரு சோமசுந்தரம் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
நவீன் சந்திரா மற்றும் குரு சோமசுந்தரம் சார்ஸ் இந்தப் படம் வழியா கன்னடத்துல அறிமுகமாகறாங்க. யோகி பாபு சாருக்கும் முக்கியமான கதாபாத்திரம். பல இடங்களில் யோகி பாபு சாருக்காக சுதீப் சார் காத்திருந்தார். அந்த அளவுக்கு யோகி பாபு சார் பயங்கர பிஸி. அந்தளவுக்கு கலைஞர்கள் திறமையை மதிக்கக் கூடியவர் சுதீப் சார்.
டெக்னிக்கல் டீம்ல நான் யாரையும் மாற்றவே இல்லை. தயாரிப்பு சத்ய ஜோதி ஃபிலிம்ஸ். இவங்க பேனர்ல இரண்டாவது படம். அதுவே பெருமையா இருக்கு. ‘மேக்ஸ்’ல இருந்த அத்தனை பேரும் இந்தப் படத்திலும் இருக்காங்க. இசை, அஜினீஸ் சந்திரசேகர். ‘காந்தாரா’வுக்கு மியூசிக்கும் இவர்தான்.
‘மேக்ஸ்’ போலவே ‘மார்க்’குக்கும் இவர் இசை பலம். இந்தப்படத்திலும் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி இருக்கு. பேக்ரவுண்ட் ஸ்கோர் மாஸா கொடுத்திருக்கார். சினிமாட்டோகிராபி சேகர் சந்துரு. ‘மேக்ஸ்’ படத்திற்கு கொடுத்ததை விட பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கார். எடிட்டர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு. நீண்ட நாள் நண்பரான இவர், ‘மேக்ஸ்’ல அறிமுகமானார். ‘மார்க்’லயும் கைகோர்த்திருக்கார். ‘மேக்ஸ் 2’ எப்போது..?
திரும்ப சேர்ந்து படம் பண்ணலாம்னு உட்காரும்போதே சுதீப் சாரும் நானும் ‘மேக்ஸ் 2’ வேண்டாம்னுதான் பேசவே ஆரம்பிச்சோம். ஆனா, ‘மேக்ஸ் 2’ எடுக்கும் எல்லா வாய்ப்பும், கதையும் இருக்கு. பட், இப்ப கிடையாது.
அடுத்த படம்..?
ஏன் தமிழ் நடிகருக்கு படம் இயக்கலைனு கேட்கிறாங்க. உண்மையாவே எல்லா நடிகர்களுடனும் மொழி கடந்து வேலை செய்யணும் என்பதுதான் ஒரு படைப்பாளியாக என்னுடைய கனவு.
ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சா போதும்னு தேடலில் இருந்தப்ப, தானாக வந்து கதவை தட்டிய வாய்ப்புதான் ‘மேக்ஸ்’. எப்படி அப்படி ஒரு வாய்ப்பை என்னால் இழக்க முடியும்? இப்ப ‘மார்க்’. இந்தப் படம் வெளியானபிறகுதான் அடுத்த படம் பற்றி யோசிக்க முடியும்.
‘மார்க்’ அதிரடி ஆக்ஷன் மட்டுமில்லாம குடும்பங்களுக்கான உணர்வு சூழ்ந்த பொழுதுபோக்கு கதை. தியேட்டருக்கு வரும் சுதீப் சாரின் ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திப்படுத்தும். படம் பார்த்துட்டு சொல்லுங்க.
ஷாலினி நியூட்டன்
|