ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸ் ஆகலை... காமெடியனா சாதிக்க வாய்ப்புக்காக காத்திருக்கேன்!



காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் ஜெகன். கதாநாயகனின் நண்பனாக, குணச்சித்திர பாத்திரத்தில் டைமிங் காமெடியில் எல்லோரையுமே ரசிக்க வைப்பவர். 
விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே சினிமாவில் கோலோச்சிய ஜெகன், கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் முழு நேர நடிகராக மாறியிருக்கிறார். நீங்க விளம்பர நிறுவனத்தில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். எப்படியிருக்கு இந்தப் பயணம்? 

ரொம்ப சந்தோஷமா போயிட்டிருக்கு. திரைத்துறைக்குள் வந்து பதினைந்து ஆண்டுகளாகிடுச்சு. 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் விளம்பர நிறுவன வேலையை விட்டுட்டு முழுநேர நடிகனாக மாறினேன். அதுக்கு முன்னாடி நான் பார்ட் டைம் ஆக்டர்.முதன்முதலில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் ராதாமோகன் சார். அவர் நடிகர் ரவிகிருஷ்ணா வை வச்சு, ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுத்தார். அதில் வாய்ப்பு வழங்கினார்.  

பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ‘அயன்’ படத்திற்காக 65 நாட்கள் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வந்து நடிச்சேன். அப்புறம், ‘பையா’ படத்திற்கு 15 நாட்கள் லீவு போட வேண்டியதானது. ‘கோ’ படத்திற்கும் நிறைய நாட்கள் லீவு எடுத்தேன். 

பிறகு எதுக்குடா இவ்வளவு நாட்கள் லீவு போடணும்னு முழுநேரமா சினிமாவுக்குள் வந்திட்டேன்.பெரிய  பெரிய லெஜெண்ட்ஸ் இருக்கிற இந்தத் தமிழ்த் திரைத்துறைக்குள் என்னுடைய பயணமெல்லாம் ரொம்ப சின்னது. இதில் நான் நாகேஷ் சார், கமல் சார் மாதிரி ஏதாவது பண்ணணும்னு ஆசைப்படுறேன். அவ்வளவுதான்.  

உங்க டைரக்டர் கே.வி.ஆனந்த் சாரை மிஸ் பண்றீங்களா? 

ரொம்பவே மிஸ் பண்றேன். ‘அயன்’, ‘கோ’, ‘அனேகன்’, ‘கவன்’னு அவர் இயக்கத்தில் நான்கு படங்கள்ல நடிச்சேன். நான்கிலுமே எனக்கு நல்ல ரோல் கொடுத்தார்.அவர் கதைக்காகவே நடிகர்களைத் தேர்வு செய்வார். நடிகர்களுக்காக கதையை உருவாக்கமாட்டார். அப்படியாகத்தான் சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி சாரெல்லாம் அவரின் படத்தில் நடிச்சாங்க. 

எனக்கும் அந்தவகையில்தான் கேரக்டர்கள் தந்தார். அது எனக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.இப்ப கே.வி.ஆனந்த் சார் இல்லாத குறையை தீர்த்து வச்ச மாதிரி அந்த இடத்துல 
இயக்குநர் ஷங்கர் சாரை ‘இந்தியன் 2’ படத்தில் நடிச்சப்ப பார்த்தேன். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். அந்த அனுபவங்கள் எனக்கு பல இடங்களில்உறுதுணையாக இருக்கு.   

ஹீரோவாக ஒரு படத்தில் நடிச்சீங்க இல்லையா?  

என்னை ஹீரோவாக நடிங்கனு யாரும் கூப்பிட்டு கதை சொல்லல. ஆனா, ஒரு முயற்சியா சில வருஷங்களுக்கு முன்னால், ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’னு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிச்சேன். ஆனா, அந்தப் படம் ரிலீஸ் ஆகல. 

 நடிகர் நாகேஷ் மேல் ஏன் இவ்வளவு கிரேஸ்..? 

சின்ன வயசுல நடிகர் நாகேஷின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை விசிஆர் கேசட்டில் எங்க மாமா ரிக்கார்டு பண்ணி வச்சிருந்தார். அந்தப் படத்தை நிறைய தடவை பார்த்தேன். ஒருகட்டத்துல மனப்பாடமாகவே ஆகிடுச்சு. அப்படியாக நடிகர் நாகேஷ் என்னுள் இம்ப்ரஸானார். அவர் மாதிரி வரணும்னு ஆசைப்பட்டேன். 

அவர் கிரேட் ஆர்ட்டிஸ்ட்! காமெடி, ஹீரோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு விதவிதமாக முத்திரை பதித்தவர். அதனால்தான் என்னுடைய இன்ஸ்டா பக்கத்துலகூட நாகேஷ் போல ஆவதே என் நோக்கம்னு போட்டிருப்பேன். என்னுடைய லட்சியமும் இந்தத் தலைமுறையினரின் நாகேஷாக நான் இருக்கணும் என்பதே. அதுக்காக உழைக்கத் தயாரா இருக்கேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கணும். அதை எதிர்பார்த்துக் காத்துட்டிருக் கேன்.

இயக்குநராக எப்படி ஆனீங்க? 

அது எதிர்பாராமல் நடந்த விஷயம். எனக்கு இயக்குநராகணும்னு எல்லாம் ஆசை கிடையாது. ஒரு ஓடிடி நிறுவனம் குட்டியாக மைக்ரோ சீரிஸ் எழுதணும்னு சொன்னாங்க. நான் கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்தேன். என்னைப் போல இன்னும் சிலரும் எழுதினாங்க. ஆனா, என்னுடைய கதை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு.

அதை இயக்குவதற்கு என்னிடமே கொடுப்பாங்கனு அப்ப நான் எதிர்பார்க்கல. என் மேல் நம்பிக்கை வச்சு கொடுத்தாங்க. என் வாழ்க்கையில் நான் எந்த வாய்ப்பு வந்தாலும் வேண்டாம்னு சொல்லமாட்டேன். நான் நடிகனானதுகூட அப்படிதான். அதனால் ஏத்துக்கிட்டு செய்தேன்.

அது ஒரு மைக்ரோ சீரிஸ். ஒவ்வொரு எபிசோடும் நான்கு  நிமிஷம் இருக்கும். மொத்தம் 8 எபிசோடுகள். அது மிகப்பெரிய ஹிட்டடிச்சது. பாராட்டுகளையும் வாங்கித் தந்தது. 
இப்ப என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க? 

‘காட்சில்லா’னு ஒரு ஃபேன்டசி படத்துல மன்மதனாக நடிச்சிட்டிருக்கேன். இன்ட்ரஸ்டிங் ரோல். கதையும் இன்ட்ரஸ்டிங்கானது. அடுத்து இயக்குநர் ஆர்.கண்ணனின், ‘இவன் தந்திரம்-2’ படத்திற்கு பூஜை போட்டிருக்கோம். சீக்கிரமே ஷூட்டிங் இருக்கும்.

அப்புறம், ‘கிளியோபாட்ரா’னு ஒரு படம். இதுல நடிகர் காளி வெங்கட்டின் கிளியை மையமாகக் கொண்டு கதை நகரும். அடுத்து, ‘இந்தியன் 3’ வரணும்னு ஆசைப்படுறேன். வருமானு தெரியல. வரணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

உங்க குடும்பம் பத்தி? 

நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். என் மனைவி பெயர் வான்மதி. இரண்டு ஆண்டுகளாகக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணமாகி பதிமூணு ஆண்டுகளாகிடுச்சு. ரெண்டு பசங்க இருக்காங்க. பெரியவன் கவினுக்கு பதினொரு வயசு. சின்னவன் யாசாவுக்கு எட்டு வயசு. சின்ன ஃபேமிலி. என்னோட வாழ்க்கையே இந்த மூணு பேரை சுத்திதான். 

இதுதவிர, என்னுடைய பொழுதுபோக்கு புத்தகங்கள் படிக்கிறதும், ‘Urban Sketching’ வரையிறதும்தான். இந்த அர்பன் ஸ்கெட்ச்சிங்கை கடந்த ஏழு வருஷமாக பண்ணிட்டு இருக்கேன். போன மாசம்கூட கோவாவில் அர்பன் ஸ்கெட்ச் ட்ராயிங் கண்காட்சி நடந்தது. அதில் கலந்துகிட்டது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு.

 ஆர்.சந்திரசேகர்