Sundayனா Cleaning!



தால் ஏரியை வாரம்தோறும் சுத்தம் செய்யும் 14 வயது சிறுமி!

இவரது வாழ்க்கை தெலங்கானா பள்ளியில் பாடமாக உள்ளது!

பொதுவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் என்ன செய்வார்கள்? 

வீட்டுக்கு அருகிலிருக்கும் நண்பர்களுடன் விளையாடுவார்கள்; பெற்றோருடன் சேர்ந்து எங்கேயாவது வெளியில் செல்வார்கள்; வீட்டிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள் அல்லது ஸ்மார்ட்போனில் பொழுதைப் போக்குவார்கள். 
ஆனால், ஜன்னத் பட்லூ என்ற சிறுமியின் கதையே வேறு. ஆம்; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கையுறையை மாட்டிக்கொண்டும், ஒரு வலையை எடுத்துக்கொண்டும் படகு மூலமாக ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியை வலம் வருகிறார்; ஏரியைப் பாழ்படுத்தியிருக்கும் குப்பைகளை அகற்றுகிறார். 

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகரில் உள்ள லிண்டன் ஹால் பொதுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஜன்னத்தின் வயது 14.ஒரு காலத்தில் இயற்கையின் பொக்கிஷமாகவும், தூய்மையானதாகவும், சுற்றுச்சூழலின் அடையாளமாகவும் இருந்தது, தால் ஏரி. ஆனால், இன்று வேகமாக அதன் சூழல் சீரழிந்து வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், ஆக்கிரமிப்பு, அளவுக்கதிகமான வண்டல் படிவு போன்றவை ஏரியின் சூழலைப் பாதிக்கின்றன. 

மட்டுமல்ல, மக்களும் எந்தவித பொறுப்புமில்லாமல் ஏரியில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இப்படிக் கொட்டப்படும் குப்பைகளால் தால் ஏரியின் சூழலியல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பல தன்னார்வலர்கள் ஏரியைச் சுத்தம் செய்து வருகின்றனர். அந்த தன்னார்வலர்களில் ஒருவர், தாரிக் அகமது பட்லூ. சொந்தமாக படகு இல்லத்தை வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் தனியாக ஏரியைச் சுத்தம் செய்து வந்த தாரிக், சில வருடங்களாக தனது இளைய மகளுடன் சேர்ந்து ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றி வருகிறார். 

ஆம்; தாரிக்கின் மகள்தான் ஜன்னத்.‘‘என் அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அப்பா ஏரியைச் சுத்தம் செய்யப் போகும்போதெல்லாம் நானும் கூடப் போவேன். 

அவர் ஏரியில் மிதக்கும் வாட்டர் பாட்டில், பாலித்தீன் கவர், அட்டைகள் போன்ற குப்பைகளை அகற்றுவதைப் பார்ப்பேன். அப்பாவைப் போலவே நானும் ஏரியைச் சுத்தம் செய்யவேண்டும் என்று நினைப்பேன்...’’ என்கிற ஜன்னத், இன்றைய தலைமுறைக்கு ரோல் மாடலாகத் திகழ்கிறார். 

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தால் ஏரியில் தனது படகைச் செலுத்திக்கொண்டிருந்தார் தாரிக். அப்படகில் சில வெளிநாட்டுப் பயணிகளும் பயணித்தனர். 
படகு சென்றுகொண்டிருந்தபோது ஓர் இடத்தில் சிகரெட் துண்டு ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், படகில் அமர்ந்தபடி, கீழே குனிந்து தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த சிகரெட் துண்டை அகற்றினார். 

இதைப் பார்த்த தாரிக் குற்றஉணர்வுக்கு ஆளானார். தால் ஏரி மாதிரியான நம்முடைய வளங்களை மற்ற நாட்டினர் சொர்க்கம் போல பார்க்கின்றனர். 

ஆனால், நாம் அதில் குப்பைகளைப் போடுகிறோம்; ஏரியில் கிடக்கும் குப்பைகளைப் பார்த்தாலும், அப்படியே கடந்து போகிறோம். இது சரியில்லை என்று தாரிக்குக்குத் தோன்ற, அவரே ஏரியில் கிடக்கும் குப்பைகளை அகற்ற ஆரம்பித்துவிட்டார். 

ஐந்து வயதிலேயே தனது அப்பாவுடன் சேர்ந்து தால் ஏரியில் மிதந்துகொண்டிருக்கும் தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் கவர், களைகளை அகற்றத் தொடங்கிவிட்டார், ஜன்னத். 
குறிப்பாக கொரோனா லாக்டவுனில், அதாவது 2020ல் அப்பா- மகளின் சேவை புதிய வடிவத்தை எட்டியது. 

ஆம்; தனது படகை ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மிதக்கும் ஆம்புலன்ஸாக மாற்றிவிட்டார் தாரிக். ஏரியின் உட்பகுதியில் அமைந்திருந்த குக்கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்களுக்குத் தேவையான மருந்துப்பொருட்களை எடுத்து வரவும், யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் படகு ஆம்புலன்ஸைப் பயன்படுத்தினார். 

தால் ஏரியை மட்டுமல்லாமல், அதைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கும் பாதுகாப்பளித்தார் தாரிக். இதுபோக கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தினார். தாரிக்கின் சேவையைப் பிரதமர் உட்பட பல பிரபலங்களும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு அப்பாவும், மகளும் முழுமூச்சாக ஏரியைச் சுத்தம் செய்து வருகின்றனர். ‘‘என்னுடைய அப்பாவைப் போல ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சேவையை அளித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த ஏரி பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

ஏரி குப்பைகளால் அடைத்துக்கொள்வதற்கு முன்பு நாம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்...’’ என்கிற ஜன்னத், நான்கைந்து வருடங்களுக்கு முன்பு தால் ஏரியின் ரெய்னாவரி என்ற பகுதிக்குச் சென்றிருந்தார். 

அங்கே குவிந்திருந்த குப்பைகளால் அந்த இடத்தில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. சுற்றுலாப் பயணிகள் யாருமே ரெய்னாவரிக்குச் செல்வதே இல்லை. தினமும் ரெய்னாவரிக்குப் படகில் சென்று, அங்கிருந்த குப்பைகளை அகற்றியிருக்கிறார் ஜன்னத். 

இன்று சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லும் ஓர் இடமாக மாறிவிட்டது ரெய்னாவரி. ஜன்னத்தின் சேவையைப் பாராட்டும் விதமாகவும், ஜன்னத்தைக் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் தெலங்கானா பள்ளிக் கல்வித்துறையின் மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், ‘தந்தையுடன் சேர்ந்து ஏரியைச் சுத்தம் செய்த சிறுமி’ என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜன்னத்துக்கு ஏரியின் மீது இருந்த நேசமும், சுற்றுச்சூழல் பற்றிய ஜன்னத்தின் கருத்துகளும், சூழலைக் காப்பாற்ற குழந்தைகளை ஜன்னத் அழைப்பது போலவும் அந்தப் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘‘அரசாங்கமே நேரடியாக களத்தில் இறங்கி தினமும் ஏரியைச் சுத்தம் செய்தால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். இதற்காகவே நவீன கருவிகளைகளையும், தொழில்நுட்பங்களையும் அரசாங்கம் உருவாக்கலாம். ஏரியைச் சுத்தம் செய்வதற்காக ஆட்களை நியமிக்கலாம். ஏரியை மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். 

ஏரியின் பலவீனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பெரும்பாலும் அலட்சியம் தான் செய்கின்றனர். இதையெல்லாம் அரசாங்கம்தான் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் ஏரியைத் தக்கவைக்க முடியும். சூழலையும் பாதுகாக்க முடியும்...’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் ஜன்னத்.

த.சக்திவேல்