| நிம்மதியை கெடுக்கும் சதி கோட்பாடுகளை எப்படி தடுக்கலாம்..?
 
 
அரசியல் சதி வலைகள், சூழ்ச்சித் திட்டங்களுக்கு சுமாராக 500 வயதிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். உதாரணமாக ‘பிரின்ஸ்’ எனும் அரசியல் நூலை எழுதிய மாக்கியவல்லி மத்திய காலத்தில் வாழ்ந்தவர். அவர், ஒரு மன்னர் நாட்டில் உலவும் அரசியல் சதிகளை எப்படி முறியடிக்கலாம் என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் ஆலோசனை சொல்லியிருப்பார். 
  சரி. அரசியல் சதியை அல்லது சூழ்ச்சியை நம்பலாமா, வேண்டாமா?
 
 
 அரசியல் சதியில் முழு உண்மையும் இல்லை. முழுப் பொய்யும் இல்லை. ஆனாலும் ஒரு சதியை வைத்து விளையாடும் விளையாட்டுகளில் பாதிக்கப்படுவது முழு உண்மை மட்டுமல்ல. பொதுமக்களும்தான் என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள்.  எடுத்துக்காட்டாக, ‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது’ என இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக ஒரு சதி பிரசாரத்தை மேற்கொள்வதை சொல்லலாம்.இந்த பிரசாரத்தில் உண்மையில்லை என்பதை இந்திய சமூக ஆய்வாளர்கள் புள்ளிவிபரத்துடன் நிரூபித்திருக்கிறார்கள்.   இப்படி ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு மதத்திலும் சதி கோட்பாடுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பல அறிஞர்கள் புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அரசியல் சதிக்கான தோற்றம், சதியின் வகைகள், சதியின் விளைவுகள்... என இந்த ஆய்வுகள் பல்வேறு கோணத்தில் விரிகின்றன. பெரும்பாலும் குறிப்பிட்ட அந்த நாட்டில் நிலவும் குழப்பம் அல்லது ஓர் அரிய நிகழ்வே அங்கு அரசியல் சதியின் தோற்றத்துக்கு காரணமாக அமைகின்றன என்கிறார்கள்.  
 போலவே சூழ்ச்சியின் தன்மையாக உணர்ச்சி, பயம், ஆதாரமில்லாத நிலை... ஆகியவற்றை சுட்டிக் காட்டுகிறார்கள்.அதேபோல அதிகாரமிக்க, அடக்குமுறையுள்ள, ஆதிக்கமுள்ள நாடுகளே சதிக்கான பிறப்பிடம் என அந்தப் புத்தகங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த வகையில் உலகெங்கும் நிலவிய - புகழ்பெற்ற - சில அரசியல் சதிகளைப் பற்றிப் பார்ப்போம். கென்னடி கொலை
 
 
 அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி 1963ல் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு காரணம் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவர்தான் என விசாரணையில் தெரிய வந்தாலும் கென்னடியின் கொலை பற்றி சுமார் 2000 புத்தகங்களாவது எழுதப்பட்டிருக்கின்றன.எல்லாமே கென்னடி எப்படி சதி செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கோணத்திலேயே அலசப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில், ‘ஜே.எஃப்.கே’ எனும் படம்கூட எடுக்கப்பட்டது.  
 அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ ஆட்களால்தான் கொன்னடி கொல்லப்பட்டார்... அமெரிக்க மாஃபியாவால் கொல்லப்பட்டார்... துணை அதிபர் லிண்டன் ஜான்சனால் கொல்லப்பட்டார்... க்யூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் திட்டம் இது... ரஷிய உளவு அமைப்பான ‘கே.ஜி.பி’யால் கொல்லப்பட்டார்... என்றெல்லாம் சதி கோட்பாட்டை கென்னடி கொலை தொடர்பாக முன்வைக்கிறார்கள்! இவற்றில் ஒன்று கூட விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் முக்கியம். மட்டுமல்ல... எந்த இழையும் சந்தேகத்துக்குரிய வகையில் விசாரணையில் வெளிப்படவில்லை.இருந்தபோதும் கான்ஸ்பிரசி தியரிக்கு மட்டும் இன்று வரை பஞ்சமில்லை.
 
 யூதர்கள் பற்றி சதி கோட்பாடு
 
 முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது யூதர்கள் பற்றிய சதி கோட்பாடுகள் உச்சத்தை தொட்டன. ‘யூதர்கள் உலகை ஆள நினைக்கிறார்கள். இதற்காக சதி எல்லாம் செய்கிறார்கள்...’ என உலகம் முழுக்க பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. புத்தகங்களும் புற்றீசலாக வரத் தொடங்கின.அதில் முக்கியமானது, ‘ப்ரோட்டோகால் ஆஃப் த எல்டர்ஸ் ஆஃப் சியோன்’ எனும் புத்தகம். இந்தப் புத்தகத்துக்கு பல பிரதிகள் உண்டு என்பதுதான் ஹைலைட்.
 
 புரியவில்லையா? நிஜமான புத்தகத்துக்குதான் ஒரேயொரு பிரதி இருக்கும். இது ‘கப்சா’ புத்தகம் என்பதால் பல்வேறு பிரதிகள் உலா வருகின்றன. அனைத்திலுமே யூதர்களின் பிரதிநிதிகள், ஓரிடத்தில் கூடி உலகத்தை எப்படி தங்கள் கைக்குள் கொண்டுவரலாம் என ஆலோசனை செய்வதாகவே அமைந்திருப்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.
 
 இதை நகைச்சுவையாகக் கையாண்டு இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான உம்பர்ட்டோ எக்கோ, ‘ப்ரேக் சிமெட்ரி’ என்ற நாவலையே எழுதியிருக்கிறார்.
 ஹிட்லருக்கு ‘ப்ரோட்டோகால் ஆஃப் த எல்டர்ஸ் ஆஃப் சியோன்’ ஒரு புரட்டு என்று தெரியும். ஆனாலும் இதை உண்மை என்றே ஜெர்மனியில் பிரசாரம் செய்து, யூதர்களுக்கு எதிரான மனநிலையை - வெறுப்பை - உருவாக்கினான். இதன் விளைவாக கொத்துக் கொத்தாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டது வரலாறு.
 
 சாவில் மர்மம்
 
 
 பிரபலமானவர்கள் அல்லது உலகத் தலைவர்கள் அகால மரணமடைந்தாலோ அல்லது இயற்கையாகவே காலமானாலோ உடனே சதி கோட்பாடு இறக்கை கட்டிப் பறப்பது வாடிக்கை. இதற்கு உதாரணமாக ஒரு பட்டியலையே சமர்ப்பிக்கலாம். மார்ட்டின் லூதர் கிங், துருக்கி அதிபர் முஸ்தபா கமால் அட்டாதுர்க், இஸ்ரேல் அதிபர் யிட்சாக் ராபின், இங்கிலாந்து இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் கனவுக் கன்னி மர்லின் மன்றோ, இசை மேதை மொசார்ட், ஹிப்பி பாடகர் ஜான் லெனான், பாடகர் ஜிமி ஹெண்ரிக்ஸ், முதலாம் போப் ஜான் பால், இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
 
 
 அரசியல் சதிகளின் வரலாற்றுக்கு வாயும் இல்லை. காதும் இல்லை. கொஞ்சம் கங்கு இருந்தால் போதும். தெம்பு இருக்கிறவன் ஊதி தீயைப் பெரிதாக்கலாம். உதாரணமாக காலநிலை மாற்றத்தில் கூட சதி இருப்பதாக அண்மையில் செய்திகள் வருகின்றன.  
 ஒருகாலத்தில் எய்ட்ஸ் நோய் பரவியபோது அமெரிக்கா தன்பால் ஈர்ப்பாளர்களை கொல்வதற்காகத்தான் எய்ட்ஸை கண்டுபிடித்தது... பாதுகாப்பான உறவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களை விற்பனை செய்வதற்காக மருத்துவ மாஃபியா அந்த கொடிய நோயைப் பரப்பியது... என்றெல்லாம் இது குறித்த சதி கோட்பாடுகள் பரப்பப்பட்டன. 1970களில் மெக்கார்த்தி என்ற அரசு நிர்வாகி, ‘அமெரிக்காவில் சிகப்பு அபாயம்’ என பீதி கிளப்பினார். அதாவது அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகள் ஊடுருவிவிட்டார்கள் என்றார்.
 
 இதன் விளைவாக திரைப்படத்துறையில் இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த கலைஞர்கள் எல்லாம் விசாரணை என துன்புறுத்தப்பட்டனர். 
 இன்று ஆங்கில வெகுஜன நாவல்களில் நட்சத்திர எழுத்தாளராக மின்னுபவர் டான் பிரவுன். இவரது நாவல்கள் அனைத்துமே சதி கோட்பாடுகளின் விரிவாக்கம்தான். ஃப்ரீமேசன், இலுமினாட்டிகள் என்ற ரகசிய அமைப்பு... என்றெல்லாம் சுவாரஸ்யமாக அவரது புதினங்கள் நகரும். ஆனால், இதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். சரி. சதியை எப்படி கண்டுபிடிப்பது... எப்படி தவிர்ப்பது... சதியில் எது உண்மை... எது பொய்... அல்லது பாதி உண்மை என்ன... பாதி பொய் என்ன..?
 
 ‘‘முதலில் சதியை அடையாளம் காண்பது முக்கியமானது. அடையாளம் கண்டால்தான் அதை தடுக்கமுடியும்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சைபர் நிபுணரான முரளி கிருஷ்ணன்.
 ‘‘பொதுவாக இன்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்தான் அதிகம் சதிகள் பரப்பப்படுகின்றன. கிராமத்து ஆட்களும் இன்று வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் சேர்ந்து விட்டார்கள். ஆதாரமில்லாத செய்திகள்தான் சதியாக அதிகம் பரவுகின்றன.
 
 
 ஆகவே ஆதாரத்தை தேடுவதுதான் நமது முதல் வேலையாக இருக்கவேண்டும்...’’ என்று சொல்லும் முரளி, ஆதாரத்துக்கு முன் நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒரு செய்தியை விளக்கினார். ‘‘முதலில் ஒரு செய்தி அல்லது தகவல் நம்மை அழ வைத்தால், சோகப்படுத்தினால், கோபமடைய வைத்தால் அல்லது உணர்ச்சிகளைத் தூண்டினால் அந்த செய்தியை ஃபார்வேட் செய்வதை நிறுத்த வேண்டும். இதைச் செய்தாலே சதியின் பாதி விளைவுகளை தடுத்து விடலாம்.
 
 
 அடுத்து தகவல்களை, இமேஜ்களை சரிபார்ப்பதற்காக ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்தியாவிலேகூட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஃபேக்ட் செக் apps வந்துவிட்டன.  
 முதலில் மேற்சொன்ன எண்ணங்கள் வந்துட்டால் அந்தச் செய்தியை கூகுள் உள்ளிட்ட சர்ச் என்ஜினில் அந்த நியூஸின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். ஒரு இமேஜ் என்றால் ‘ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ என்ற தளத்தில் செக் செய்துகொள்ளலாம். அடுத்து தகவல்களை ‘ஃபேக்ட் செக் எக்ஸ்ப்ளோரர்’ எனும் தளத்துக்குப் போய் சரி பார்க்கலாம். இதையெல்லாம் செய்தாலே சதி கோட்பாடு பரவாமல் தடுக்கலாம்...’’ என்கிறார் முரளி.
 
 
 டி.ரஞ்சித் 
 
 |