பன்றியின் கல்லீரலை மனிதருக்குப் பொருத்தலாம்!



ஆமாம். உலகில் முதல்முறையாக சீனாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் கல்லீரல் ஒருவருக்குப் பொருத்தப்பட்டு, அவர் 171 நாட்கள் உயிருடன் வாழ்ந்த அதிசயம் மருத்துவத் துறையில் பேசுபொருளாகி இருக்கிறது.இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக உலக மருத்துவர்கள் மெச்சுகின்றனர். 
சீனாவின் அன்ஹுய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அந்த நபருக்கு வயது 71. அவருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் பெரிய கல்லீரல் கட்டி இருந்துள்ளது. இதனால் உறுப்பு மாற்று சிகிச்சையைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

ஆனால், வழக்கமான மனித மாற்று அறுவை சிகிச்சையும் சாத்தியமற்றதாக இருந்துள்ளது. அத்துடன் பொருத்தமான நன்கொடையாளர்களும் யாரும் கிடைக்கவில்லை. 
இதனால், 11 மாத வயதுடைய பன்றியிலிருந்து மரபணு மாற்றப்பட்ட கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகங்கள் மற்றும் இதயங்களை மனிதர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் விஞ்ஞானிகள் ஆரம்பகால வெற்றியைப் பெற்றுள்ளனர். பின்னர் மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் கல்லீரலை பொருத்தி சோதித்துள்ளனர். 

இருந்தும்கூட விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்தி இப்படி ஜீனோட்ரான்ஸ்பிளான்டேஷன் செய்யப்படும் செயல்முறைக்கு கல்லீரல் பொருத்தமானதாக இருக்குமா என்ற கேள்விகள் இருந்து வந்தன. இப்போது முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலை 71 வயது நோயாளி ஒருவருக்கு பொருத்தி முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளனர். 

அதென்ன மரபணு மாற்றப்பட்ட பன்றி கல்லீரல்? 

பன்றியின் கல்லீரல் மனித உடலுடன் பொருந்தக்கூடிய தன்மையை அதிகரிக்க மரபணு ரீதியாக வடிவமைக்கப்படுவதே மரபணு மாற்றப்பட்ட கல்லீரல். முதலில் ஜீன் எடிட்டிங் மூலம் மனித நோய் எதிர்ப்பு மறுமொழியைத் தூண்டும் பன்றியின் மரபணுக்கள் அகற்றப்படுகின்றன. 

பிறகு மனிதனின் மரபணு, பன்றியின் மரபணுவுடன் சேர்க்கப்படுகிறது.இந்த 71 வயது நோயாளியின் அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் நோயெதிர்ப்பு நிராகரிப்பு மற்றும் தொற்று அபாயங்களைக் குறைக்க பத்து மரபணு திருத்தங்களுடன் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலைத் தேர்ந்தெடுத்தனர். 

பிறகு அவரின் உடலுக்கு, வெளி உறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலான நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. மருத்துவர்களும் நோயாளியின் கல்லீரலில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். தொடர்ந்து நோயாளியின் மீதமுள்ள கல்லீரல் பகுதியுடன் பன்றியின் கல்லீரலை இணைத்தனர்.

உடனே பித்தநீர் ஓட்டமும், கல்லீரல் செயல்பாடும் மேம்பட்டு இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் உற்சாகமடைந்தனர். ஆரம்பத்தில் பன்றியின் கல்லீரலின் செயல்பாடு நன்றாக இருந்ததுடன் வீக்கத்தின் அறிகுறிகளோ, கடுமையான நிராகரிப்பு அறிகுறிகளோ இருக்கவில்லை.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளும் இயல்பான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தின. இருப்பினும் 25வது நாளில் நோயாளியின் இதய அழுத்தத்தில் மாறுபாடுகள் உண்டாகின. சில சிக்கல்களும் ஏற்பட்டன. 

இந்நிலையில் 38 நாட்கள் வரை பன்றியின் கல்லீரலுடன் உயிர் வாழ்ந்தார் அந்த நோயாளி. இந்நேரம் நோயாளியின் சொந்த கல்லீரல் போதுமான அளவு செயல்பாட்டைப் பெற்றிருந்தது. இதனால், பன்றியின் கல்லீரல் 38வது நாளில் அகற்றப்பட்டது. பிறகு 171 நாட்கள் கழித்து அந்த நோயாளி இரைப்பை குடல் ரத்தப்போக்கு காரணமாக இறந்துபோனார்.  

என்றாலும் தற்போது இதன்மூலம் மருத்துவர்கள் பன்றியின் கல்லீரலால் தற்காலிக ஆதரவை நோயாளிக்கு வழங்கமுடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.அதாவது ஒரு நோயாளிக்கு மாற்று கல்லீரல் கிடைக்கும் வரையோ அல்லது அவரின் சொந்த கல்லீரல் மீளுருவாக்கம் அடையும் வரையோ தற்காலிகமாக பன்றியின் கல்லீரலை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தலாம் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

கல்லீரல்... 

மனித உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். ரத்தத்தில் இருந்து நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுகளை வடிகட்டி நீக்கும் வேலையைச் செய்வது கல்லீரல்தான். அத்துடன் செரிமானத்திற்கும் உதவுகிறது. தவிர கிளைகோஜன், வைட்டமின்கள் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. 

அந்த வகையில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், மனிதத் தவறுகளால் கல்லீரல் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறது. இது ஒருகட்டத்தில் கல்லீரல் செயலிழந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

இந்த மாற்று அறுவை சிகிச்சையும் அவ்வளவு எளிதானதல்ல. சிக்கலானது. அத்துடன் ரொம்பவே காஸ்ட்லியானதும்கூட. தற்போது உலக அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருக்கின்றனர். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை அதிகம். இந்நிலையில்தான் இப்படி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரல் மூலம் மனிதர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்யமுடியும் என மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

ஹரிகுகன்