| கமலுக்கே சினிமா இன்னும் புரியாதப்ப என் போராட்டம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல...
 
 
 ‘‘‘அழகான குயில்கள் மட்டும்தான் குரல் எடுத்துப் பாட முடியும் என்றால், காடு நிசப்தமாகிவிடும். ஒரு காடு, காடாக இருக்க அங்கே இருக்கிற ஒவ்வொரு உயிரினமும் தன்னாலான செயல்பாடுகளைச் செய்துகொண்டே இருக்கும்.  அப்படித்தான் நாமும், நாம் இருக்கும் இந்தச் சினிமா உலகத்தில் நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்யணும்...’ இதுதான் என்னுடைய குருநாதர் பாலு மகேந்திரா சார் எனக்கு சொன்ன பாடம்...’’உற்சாகமாகப் பேசுகிறார் கண்ணா ரவி.  
 ‘கைதி’ அஜாஸ் அகமத், ‘மண்டேலா’ மதி, ‘சாணி காயிதம்’ மாரி, ‘ரத்த சாட்சி’ அப்பு, ‘லவ்வர்’ மதன்... என ஒவ்வொரு கட்டமாக தன்னுடைய நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்.இப்போது ‘கூலி’ அர்ஜுன் (நாகார்ஜுனாவின் மகன்) என ட்ரெண்டிங்கிலும் இருக்கிறார் கண்ணா ரவி. ‘காக்கி ஸ்குவாட்’, ‘வேடுவன்’ என அடுத்தடுத்து படங்களில் பிசி. வெப் சீரிஸ் மேல் அப்படி என்ன ஆர்வம்..?
 
 சினிமா, வெப் சீரிஸ் ரெண்டுக்குமே உழைப்பு ஒண்ணுதான். கால அளவுதான் மாறும். எனக்கு ஒரு மிகப்பெரிய அடையாளம் கொடுத்ததே வெப் சீரிஸ்தான். வெப் சீரிஸ் என்கிற வார்த்தை கூட பழக்கப்படாத காலத்தில் நான் ‘லிவின்’ சீரிஸ் செய்தேன். எனக்குத் தெரிந்து அப்போது சீரிஸ் என்கிற வார்த்தைகூட பெரிதாக வெகுஜனத்துக்குத் தெரியாது. ஆனாலும் எங்களுடைய ‘லிவின்’ வெப் சீரிஸ்க்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைச்சது.
 
  பொது இடங்களில் என்னை அடையாளம் கண்டுபிடித்து ‘நீங்க இந்த சீரியலில் நடிச்சவர்தானே’னு கேட்பாங்க. அதேபோல வெப் சீரிஸ் ஒரு கதையை விளக்கமா ஆழமா சொல்லும். அதனால் நமக்கான பாத்திரம் முழுமையா உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கொடுக்கும். ஒரு நடிகனா படமா அல்லது சீரிஸானு எல்லாம் பார்க்கக் கூடாது. நல்ல கதையா... நல்ல கேரக்டரா... இதை மட்டும்தான் பார்க்கறேன்.
 
 லோகேஷ் கனகராஜுடன் உங்கள் நட்பு எப்படி ஆரம்பிச்சது?
 
 
 நடிப்புக்காக தேடலில் ஓடிக்கொண்டிருக்கும் போது நம்ம கூடவே ஒரு குருப் ஃபிரண்ட்ஸ் அவங்களுடைய திறமையை மையமாக வைத்து ஓடிட்டு இருப்பாங்க. அப்படிதான் லோகேஷ் ப்ரோ.  அவருடைய ஆரம்ப கட்டத்தில் யாரெல்லாம் கூட இருந்தாங்களோ அவங்களை, தன் கூடவே கூட்டிகிட்டு போவார். அப்படி ‘கைதி’ல எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார். இதோ இப்ப நாகார்ஜுனன் சாரோட சைமன் கதாபாத்திரத்தின் மகனா என்னை ‘கூலி’ல நடிக்க வைச்சிருக்கார்.
 
 இப்படியொரு ப்ராஜெக்ட்டில் என்ன கேரக்டர்னு கேட்பது கூட தப்புதான். ஒரு ரோல் கிடைச்சுடாதானு வெளியே அத்தனை பேர் காத்திருக்காங்க. சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நாகார்ஜுன் சார்... இப்படி மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தில எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். இது நாம் போகிற பாதை சரியாதான் இருக்குனு காட்டுது.
 அந்த வகைல ‘கைதி’ல தொடங்கி ‘கூலி’ வரை என்னை அரவணைச்சு ஆதரிக்கிறார் லோகேஷ் ப்ரோ.
 
 குருநாதர் பாலு மகேந்திரா..?
 
 
 எல்லாத்திலும் ஓர் அழகு இருக்கு. அதை நாம் எப்படிப் பார்த்து வெளிய கொண்டு வர்றோம் என்பதில்தான் ஒரு கலைஞனுடைய திறமை அடங்கியிருக்கு.  ஒருவருடைய குறையைக் கூட அழகாக மாற்றக்கூடிய இயக்குநர் அவர். என்னுடைய வாழ்க்கையையே பாலுமகேந்திரா சாருக்கு முன் - பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.  
 அவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தபிறகு மொத்தமாகவே லைஃப் மாறிடுச்சு. ஒருசில சீனியர்களைப் பார்த்துதான் நாம ஒரு துறையையே தேர்வு செய்வோம். சொல்லப்போனா ஒரு துறை மீதான ஆர்வத்தை உண்டாக்கும் உந்து சக்தியே அவங்கதான்.  அப்படி எனக்கு பாலுமகேந்திரா சாருடைய படங்கள் அவ்வளவு பிடிக்கும். ஆனா, ஏதோ ஓர் ஆசீர்வாதம் என்னை அவர்கிட்டயே போய் சேர்த்தது. அவருடைய ஆக்டிங் பட்டறைல சேர்ந்து அவர் கூடவே பல காலங்கள் பயணிச்சிருக்கேன். கலைஞனா மட்டுமில்லாம வாழ்வியலாகவே அவருடைய பார்வையும் சிந்தனையும் வித்தியாசப்படும். படிச்சு முடிச்சதுமே என் வாழ்க்கை சினிமாதான்னு முடிவு செய்துட்டேன். அதற்கு விதை போட்டவர் என்னுடைய குருநாதர் பாலுமகேந்திரா சார்தான்.
 
 சினிமா எவ்வளவு கடினமா இருக்கு?
 
 
 சொல்லிக் கொள்கிற மாதிரி, என்னை அடையாளப்படுத்துகிற மாதிரி எத்தனையோ கதாபாத்திரம் செய்தாச்சு. கதாநாயகனாகக் கூட ‘ரத்த சாட்சி’ உள்ளிட்ட படங்களில் நடிச்சிட்டேன். ஆனாலும் இன்னமும் ஏதோ ஒரு தடை இருக்கு. எடுத்த எடுப்பில் பண அடிப்படையில் நான் ஸ்ட்ராங்கா இருக்கேனா என்கிற கேள்வி இருக்கு. இன்னமும் யாருடைய பரிந்துரையோ தேவைப்பட்டுகிட்டே இருக்கு.  
 கமல் சார் மாதிரியான கலைஞர்களே ‘சினிமா மற்றும் சினிமா ரசிகர்கள் மனநிலை புரியலை’னு இப்பவும் சொல்றாங்க. அதாவது இவ்வளவு ஆண்டுகளா கலைத்துறைல இருக்கும் அவருக்கே பிடிபடலை. அப்படியிருக்கிறப்ப நானெல்லாம் எம்மாத்திரம்! உண்மையாகவே இன்னமும் சினிமா எனக்குப் புரியலை. நடிப்பு புரியுது. ஆனா, இந்த சினிமா வேலை... எந்த வழியில் எந்தப் பாதையைப் பிடித்து ஓடணும் என்பதெல்லாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரிதான் இருக்கு. ஆனா, சினிமா நல்ல திறமையுள்ள இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக கதவைத் திறக்கலாம். இதை ஆதங்கம், வேண்டுகோள்னு வைச்சுக்கலாம்.
 
 ‘வேடுவன்’..?
 
 காவல்துறை சார்ந்த திரில்லர் கதை. இந்த வெப் சீரிஸ்ல நானில்லாத காட்சியே கிடையாது. என் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்னு நம்பறேன். சஞ்சீவ் அண்ணா, வினுஷா, லாவண்யானு எல்லோருக்கும் மிகப்பெரிய ஸ்கோப் கொடுக்கக்கூடிய கேரக்டர்கள். பவன் ப்ரோ டைரக்ஷன். அருமையான ஸ்கிரீன் பிளே.
 
 உங்க அடுத்தடுத்த படங்கள்..?
 
 
 எந்தப் படமா இருந்தாலும் என்னை புதுசா ஆடியன்ஸ் பார்க்கணும். இதை நோக்கிதான் என் தேடல் இருக்கு. அதே சமயம் இந்தக் கதை வேண்டாம்னு சாய்ஸ் வைக்கிற அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. நான் இதுவரை கத்துக்கிட்டதை வைச்சு கேரக்டர்களை தேர்வு செய்கிறேன்.  
 ‘உறுமீன்’, ‘அலங்கு’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்களை டைரக்ட் செய்த சக்திவேல் பெருமாள்சாமி சாருடைய ‘காக்கி ஸ்குவாட்’ படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். இன்னும் சில பெரிய ப்ராஜெக்ட்ஸ் ஷூட் போகுது. முறைப்படி பட டைட்டிலோட அறிவிப்புகள் வரும். 
 செய்தி:ஷாலினி நியூட்டன்
 படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
 
 
 |