காற்று மாசுபாட்டில் இந்தியாவுக்கு 5-ம் இடம்



ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

‘‘கடந்த வருடம் உலகளவில் செய்த ஆய்வின்படி, காற்று மாசுபாட்டில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா...’’ என்ற செய்தி பலருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக காற்றில் மாசு கலப்பதால் இந்திய துணைக்கண்டத்தை, ஆப்பிரிக்க கண்டமாகவே மாற்றிவிடலாமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று மாசு பற்றிய ஒரு தொழில்நுட்ப நிறுவனம்தான் இந்த ஆய்வைச் செய்திருந்தது.

இதன் ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியானது. இது 2024-ம் வருடத்துக்கான அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சுமார் 138 நாடுகள், 8,954 இடங்கள், 40 ஆயிரம் காற்று மாசு கண்டுபிடிக்கும் நிலையங்களிலிருந்து இந்த அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்த ஆய்வறிக்கை உலகளவில் முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கை என்ன சொல்கிறது, அதற்கு முன்பு காற்று மாசுபாட்டை எப்படி அளவீடு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

காற்றில் இருக்கும் மாசை, அதன் நீள- அகலம் மற்றும் எடையை வைத்து கணக்கிடுகிறார்கள். நீள- அகலத்தை ‘பிஎம்’ (Pm) என்கிறார்கள். பிஎம் என்றால் ‘பார்டிகுலேட் மேட்டர்’ (Particulate Matter) என்று பொருள். எடையை மைக்ரோகிராம் கணக்கில் அளக்கிறார்கள். இதன்படி காற்று மாசின் நீள- அகலம் பிஎம் 2.5 இருந்தால் பெரிய பிரச்னையில்லை. ஆனால், பிஎம் 2.5க்கு கீழே போனால் ஆபத்து.  தூசு சிறிதாக போகப்போக காற்று மாசை நாம் சுவாசிப்பதும் இலகுவாகிடும்.

பிறகு பிரச்னைதான். இது மூச்சு தொடர்பான நோய்கள் முதல் பல்வேறு பிணிகளை ஏற்படுத்தலாம். எடையைப் பொறுத்தளவில் 5க்குள் இருக்கவேண்டும். 5க்கு மேலே போனால் ஆபத்து. இதுவும் அதே பிரச்னைகளைத்தான் கொண்டுவரும். இந்த அளவுகோல்களை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. சரி, இந்தியாவும் மற்ற நாடுகளும் இந்த அளவுகோலில் எப்படி இருக்கிறது, இந்த அறிக்கை பேசும் காற்று மாசு எல்லாமே பிஎம் 2.5 தொடர்பானவை என்பதால் எடை விஷயத்தில் உலகநாடுகள்  எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

‘‘2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் காற்று மாசின் மைக்ரோகிராம் அளவு உலக சுகாதார நிறுவனம் சொன்னதைவிட, 10 மடங்கு உயர்ந்திருந்தது. அதாவது, இந்தியாவில் அந்த ஆண்டு சராசரியான காற்று மாசின் எடை, 50.6 மைக்ரோகிராம். உலகின் மோசமான காற்று மாசில் சிக்கியிருக்கும் 100 நகரங்களைக் கணக்கிட்டால், அதில் 74 நகரங்களாவது இந்தியாவில் இருக்கும். இந்த 100 நகரங்களிலும் டாப் 3 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன...’’ என்று அதிர்ச்சியளிக்கும் அறிக்கை, மேலும் இந்தியாவைப் பற்றிய பயமுறுத்தும் விஷயங்களையும் பகிர்ந்தது.

‘‘இந்தியாவின் காற்று மாசில் முதல் இடத்தைப் பிடித்திருத்திருக்கிறது, மேகாலயாவில் உள்ள பிர்னியாட் (byrnihat) நகரம்.

இரண்டாவது இடம் டெல்லி. பிர்னியாட்டைப் பொறுத்தளவில் அதன் காற்று மாசு, 125 மைக்ரோகிராம் அளவில் இருந்தது என்றால் டெல்லியில் அது 100 மைக்ரோகிராமைத் தொட்டது. உலகளவிலான காற்று மாசுபாட்டில் ஆப்பிரிக்க நாடான சாட் (chad) முதலிடத்திலும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாம் இடத்திலும், காங்கோ நான்காம் இடத்திலும், இந்தியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன...’’ எனச் சொல்லும் அறிக்கை, உலகநாடுகளின் நிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

‘‘காற்று மாசில் தொல்லை இல்லாத இடங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பார்படோஸ், எஸ்தோனியா, ஐஸ்லாந்து,  நியூசிலாந்து போன்ற நாடுகள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன...’’ எனச் சொல்லும் அறிக்கை, இந்தப் பிரச்சனை தீர மீண்டும் பழைய தீர்வுகளையே பரிந்துரைக்கிறது.

‘‘கட்டுமானம், தொழிற்சாலைகள், காடு அழிப்பு மற்றும் எரிபொருட்கள்தான் அதிக காற்று மாசை உண்டாக்குகிறது. இந்தப் பிரச்னைகளால் 2021ல் சுமார் 80 லட்சம் மக்கள் இறந்தார்கள். இதில் சுமார் 58 சதவீதத்தினர் பிஎம் 2.5 காற்று மாசால் இறந்தனர்...’’ என்கிறது அந்த ஆய்வறிக்கை.

டி.ரஞ்சித்