ஊர் சுற்றும் தம்பதி
இந்தியர்களைப் பொறுத்தவரை நல்ல வேலை, கை நிறைய சம்பளம், வசதியான ஒரு வீடு, நவீனமான கார் போன்றவை வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அளவுகோல்களாக இருக்கின்றன. ஆனால், இளம் தம்பதியினரான சங்கீத் - காவ்யாவைப் பொறுத்தவரை இந்த அளவுகோல்கள் எல்லாம் அர்த்தமற்றவை. நமக்குப் பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, புதிய அனுபவங்களைத் தேடி பயணிப்பதும், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையும்தான் முக்கியமானது என்கின்றனர்.
கை நிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் கார்ப்பரேட் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு, கம்பீரமான நான்கு சக்கர வாகனத்தில் இந்தியாவைச் சுற்றி பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த தம்பதி. கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்திருக்கின்றனர். தங்களது பயணத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
‘‘பயணம் கற்றுத் தருவதைப் போல பிஹெச்.டியோ, மாஸ்டர் டிகிரிகளோ கற்றுக்கொடுக்க முடியாது. இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்பதை பயணத்தின் வழியாகத்தான் கற்றுக்கொண்டோம். எங்களைவிட வசதியில் பல மடங்கு குறைவானவர்களைச் சந்தித்தோம். நல்ல வீடு, வாகனம் என்று எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்க்கைதான் எங்களுக்குத் திருப்புமுனை...’’ என்கிறார் சங்கீத்.
கேரளாவில் உள்ள பட்டாம்பியைச் சேர்ந்தவர், சங்கீத். எம்பிஏ முடித்துவிட்டு விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பணியாற்றிவந்தார். காவ்யாவும் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலையில் இருந்தார். இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவருக்குமே பயணம் என்றால் பெருங்காதல். கல்லூரியில் படிக்கும்போது, ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் சங்கீத்தின் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது இத்தம்பதிகளின் வழ்க்கம்.
அப்போதே வருடத்துக்கு மூன்று முறை இரு சக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்களுக்குச் செல்வார்கள். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இருவருக்குமே பெங்களூருவில் வேலை கிடைத்தது. பெங்களூருவிலும் வார இறுதிப் பயணங்கள் தொடர்ந்தன.
இரண்டு நாள் பயணம் செய்தாலும், ஐந்து நாள் வேலை ஒரே மாதிரியாக செல்வது அவர்களுக்கு எதையோ தவறவிடுவதைப் போல தோன்றியது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களைத் தாண்டி பயணத்தையே வாழ்க்கையாக மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால், பொருளாதாரத் தேவை அவர்களின் முடிவுக்குத் தடை போட்டது.
முழு நேர வேலையை விட்டுவிட்டு, ஃப்ரீலான்சிங்காக வேலை செய்துகொண்டே பயணத்தில் ஈடுபட திட்டமிட்டனர். முன்பைவிட அதிக நேரம் கிடைக்க, ஒரு வருட பயணத்துக்குத் தயாரானார்கள். ஒரு வருடத்தில் இந்தியாவைச் சுற்றி வர வேண்டும் என்பது பயணத் திட்டம்.இதற்காக ‘ஃபோர்ஸ் குர்கா’ என்ற ஜீப் வடிவிலான நான்கு சக்கர வாகனத்தை வாங்கி, வாகனத்துக்குள்ளேயே வீடு போல வசதியை செய்தனர்.
சங்கீத் - காவ்யாவுடன் ட்ரோகோ என்ற செல்ல நாய்க்குட்டியும் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகின. இதற்கிடையில் சங்கீத்தும் காவ்யாவும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த 15 நாட்களில் அவர்களின் இந்தியப் பயணம் ஆரம்பமானது. அதிகாலையிலே பயணம் ஆரம்பித்துவிடும். 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிறகு, கிடைக்கும் நல்ல இடத்தில் கொட்டகை அமைத்து தங்கிக்கொள்வார்கள். ஹோட்டலில் சாப்பிட மாட்டார்கள். சமைப்பதற்கான அனைத்து வசதிகளும் வாகனத்துக்குள்ளேயே இருக்கின்றன. ‘‘தொலைதூர கிராமங்கள்,மலைப்பகுதிகள் என பெரிதாக யாருமே பயணிக்காத இடங்களுக்கு எல்லாம் பயணித்தோம்.
ஏதாவது ஒரு கிராமத்தை அடைந்ததும், அங்கே வசிக்கும் மக்களிடம் கொட்டகை அமைத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்ட பிறகே, தங்குவோம். பாத்ரூம் கொட்டகை முதல் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் கையோடு எடுத்துக்கொண்டே பயணத்தை ஆரம்பித்தோம்...’’ என்கிறார் சங்கீத்.
கடந்த இரண்டு வருடங்களாக சங்கீத், காவ்யா, ட்ரோகோ ஆகிய மூவரும் பயணத்திலே இருக்கின்றனர். அவர்கள் ஒரு நாள் கூட ஹோட்டலில் சாப்பிடவில்லை. தினமும் மூன்று வேளையும் சமைத்து சாப்பிட 200 முதல் 300 ரூபாய் வரையே செலவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக கொட்டகை அமைத்து தங்குமிடத்தில் உருவாகும் குப்பைகளைச் சேகரித்து, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டே அடுத்த இடத்துக்கான பயணத்தை மேற்கொள்கின்றனர். மட்டுமல்ல, செல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றனர். இதுவரை இந்த தம்பதியினர் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது அவர்களது லட்சியம். சங்கீத் - காவ்யாவின் பயணம் தொடர்கிறது.
த.சக்திவேல்
|