14 வயதில் திருமணம்... 15 வயதில் குழந்தையுடன் தனித்து வாழும் அவலம்...



இன்று ஐநாவால் கவுரவிக்கப்பட்ட பீகாரின் குழந்தை திருமணப் போராளி இவர்தான்!

இந்தியாவில் தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. வருடத்துக்கு சுமார் 16 லட்சம் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதில் 58 சதவீத திருமணங்களில் மணமகனின் வயது 21ஐ விட அதிகம். மணமகளின் வயது 18க்கும் குறைவு. மீதி 42 சதவீத திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகளின் வயது 18க்கும் குறைவு. 
சட்ட ரீதியாகவே குழந்தை திருமணத்துக்கு தடையிருந்தாலும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய சூழலில் குழந்தை திருமண ஒழிப்புக்காக தொடர்ந்து போராடி வருகிறார் ரோஸ்னி பர்வீன். இவரும் குழந்தை திருமணத்துக்குப் பலிகடாவாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ரோஸ்னி?

பீகாரில் உள்ள சிமல்வரி எனும் கிராமத்தில் பிறந்தவர், ரோஸ்னி. மற்ற பெண் குழந்தைகளைப் போலவே ரோஸ்னியின் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஒன்பதாவது படிக்கும்போது எல்லாமே தலைகீழாக மாறியது. ‘உங்கள் மகளைத் திருமணம் செய்துகொடுங்கள்’ என்று பத்துக்கும் மேற்பட்ட மாப்பிள்ளை வீட்டினர் ரோஸ்னியின் குடும்பத்தை மொய்க்க ஆரம்பித்தனர்.

பீகாரில் உள்ள கிராமங்களில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பது வழக்கம். சமீபத்தில் தேசிய குடும்ப சுகாதார அமைப்பு ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது.
அதாவது 20 முதல் 24 வயதுடைய திருமணமான பெண்களிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பெண்களில் ஐந்தில் இரண்டு பேர் 18 வயது நிரம்புவதற்குள்ளேயே திருமணமானவர்கள். பலரும் ரோஸ்னியைப் பெண் கேட்பது அவருக்கும் தெரிந்துவிட, அதிர்ச்சியில் மூழ்கினார்.

நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் ரோஸ்னி. ஒன்பதாம் வகுப்பின் முழு ஆண்டுத் தேர்வு வந்தது. அந்த நேரத்தில் வசதியான ஒருவருக்கு ரோஸ்னியைத் திருமணம் செய்து வைத்துவிட்டனர் அவரது பெற்றோர். 

தேர்வு எழுதாமல், படிப்பை அப்படியே விட்டுவிட்டு, ஊரையும், நண்பர்களையும் பிரிந்து கணவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கே சென்றபிறகுதான் கணவருக்கு 45 வயது என்பது ரோஸ்னிக்குத் தெரியவந்தது. அதாவது, ரோஸ்னியைவிட, அவரது கணவர் 31 வயது மூத்தவர். ஆம்; ரோஸ்னிக்கு 14 வயதிலேயே திருமணமாகிவிட்டது.

‘‘நான் ரொம்ப சின்னப் பொண்ணு. கல்யாணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்னு எனக்கு எதுவுமே தெரியாது. கணவர் வலுக்கட்டாயமாக என்னிடம் நடந்துகொண்டார். நான் அப்படியே அதிர்ந்துபோய்விட்டேன்...’’ என்று ஆரம்ப கால திருமண நாட்களைக் குறித்து அசை போடுகிறார் ரோஸ்னி.திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவரின் வீட்டைவிட்டு வெளியேறி, பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார். அரை மனதுடன் ரோஸ்னியை பெற்றோர் சேர்த்துக்கொண்டனர்.

பிறந்த வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களிலேயே, தான் கர்ப்பமடைந்திருப்பது ரோஸ்னிக்குத் தெரிய வந்தது. சில மாதங்களில் ரோஸ்னிக்கு மகன் பிறந்தான். ஆனாலும், கணவரின் வீட்டுக்குச் செல்ல ரோஸ்னிக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. இருந்தாலும் அவரது அப்பாவே ரோஸ்னியைக் கணவரது வீட்டுக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினார். அதனால் கணவரது வீட்டுக்குக் குழந்தையுடன் சென்றார் ரோஸ்னி.

கணவர் ரோஸ்னியை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகம் என்ன நினைக்கும் என்று பிறந்த வீட்டிலும் அவரை வரவேற்கவில்லை. 15 வயதிலேயே நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல கடினங்களை அனுபவித்தார். அதுவும் கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு. கடினங்களும், ஏமாற்றங்களும், நிராகரிப்புகளும் ரோஸ்னியைத் துவண்டுபோக விடவில்லை. மகனை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு மட்டுமே அவருக்கு முக்கியமாக இருந்தது.

பொருளாதார ரீதியாக யாருமே ஆதரவு தராததால், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு ஷோரூமில் வேலைக்குச் சேர்ந்தார். இன்று ரோஸ்னிக்கு வயது 24. பீகாரில் குக்கிராமத்தில் வாழும் லட்சக்கணக்கான சிறுமிகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார் ரோஸ்னி. 

தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த துயரங்களைக் கண்டு முடங்கிவிடாமல், தொடர்ந்து போராடி மகனை வளர்த்தார். மட்டுமல்ல, தன்னைப் போலவே யாரும் குழந்தை திருமணத்தால் பாதித்துவிடக்கூடாது என்று குழந்தை திருமணத்தை ஒழிக்கும் போராட்டங்களில் இறங்கினார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு தன்னைப் போலவே குழந்தை திருமணத்தால்  பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்தார். அவர்களைச் சந்தித்த பிறகே, தான் மட்டுமே தனியாக இல்லை என்ற எண்ணம் அவருக்குள் உண்டானது. தவிர, தன்னைப் போலவே இன்னொரு பெண் குழந்தை திருமணத்தால் பாதிப்படையக்கூடாது; அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ரோஸ்னிக்குள் உருவானது.

சிமல்வரி, பகல்வரி, மகேஷ்பட்னா, திகல்பேங்க் என பல கிராமங்களுக்குச் சென்று குழந்தை திருமணத்தில் உள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லியதோடு, பதின்பருவத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களைத் தடுத்தி நிறுத்தியிருக்கிறது. ரோஸ்னியின் சேவையை ஐ நா சபையும் கௌரவித்திருக்கிறது. குழந்தை திருமணம் இல்லாத இந்தியா என்ற கனவுடன் பயணித்து வருகிறார் ரோஸ்னி.  

த.சக்திவேல்