Pan India ரேசிலிருந்து தமிழ் சினிமா விலகுவது ஏன்?
சொற்ப பட்ஜெட்டில் படம் எடுத்துக் கொண்டிருந்த மலையாள சினிமா உலகம் கூட தற்போது ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘குரூப்’, ‘மின்னல் முரளி’, ‘த கோட் லைஃப்’, ‘பாரோஸ்’ எனத் தன்னை பான் இந்தியா ரேசில் இணைத்துக்கொண்டிருக்கும் தருவாயில் தமிழ் சினிமா பின்வாங்குவது ஏன்?
‘பாகுபலி’யில் துவங்கிய இந்த பான் இந்தியா பயணம்தான் தென்னிந்திய படங்களின் அருமையை இந்தியா முழுமைக்கும் பரப்பியது. ‘கே ஜி எஃப்’, ‘சீதா ராமம்’, ‘காந்தாரா’, ‘புஷ்பா’, துவங்கி சமீபத்திய ‘கல்கி’, ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வரையிலும் இந்தப் பான் இந்தியா ஒரு மாயை போல இருப்பினும் மார்க்கெட்டை பெரிதாக்கிய மேஜிக் இதனால்தான் நடந்தது.
ஆனால், இந்த பான் இந்தியா மார்க்கெட் பயணத்தில் இன்னமும் தமிழ் சினிமா தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
‘பொன்னியின் செல்வன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட இரு படங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக பான் இந்தியா திரைப்படம் என பரப்புரையுடன் வெளியானது. மற்றவை குறைந்தபட்சம் பன்மொழிப் படமாகக் கூட விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. ஏன் இந்தத் தயக்கம்... இதன் பின்னணி என்ன... ஒரு விவரமான அலசல்.
பொதுவாகவே தயாரிப்பாளர்களும், சினிமா பிரதிநிதிகளும் நடிகர்கள் மேலேதான் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.‘‘இந்தப் படத்தை பான் இந்தியா படமாக அறிவிக்கலாம் சார்...’’‘‘எதற்கு... பான் இந்தியா என அறிவித்துவிட்டு என்னை ரோடு ரோடாக புரமோஷன் என்கிற பெயரில் அலையவிட்டு வேடிக்கை பார்க்கவா..?’’இப்படி ஒரு பிரபல நடிகர் கேட்டதாக பதிவு செய்கிறார் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளர். பொதுவாகவே மற்ற மொழிகளில் ஒரு திரைப்படம் வெளியாகிறது எனில் ஆர்வமாக நடிகர்களே முன்வந்து பேட்டிகள் கொடுப்பது, புரமோஷன் டூர் செல்வது, படத்தைக் குறித்து எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கே எல்லாம் பேசி ட்ரெண்டாக்குவது என ஈடுபடுவார்கள். ஆனால், இங்கே அப்படியான சம்பவம் நடக்க வாய்ப்பே கிடையாது. மற்ற மொழியில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களைக் கூட சுலபமாக இங்கே இருக்கும் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்து விட முடியும்.
ஆனால், உள்ளூரில் இருக்கும் பெரிய நடிகர்களை அதிகபட்சம் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே பார்க்க முடியும் என்கிற நிலைதான் இதற்கு முக்கிய காரணம். பேட்டிகள் மற்றும் புரமோஷன்கள் பற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் இப்படிச் சொல்கையில், சினிமா செய்தி தொடர்பாளர்கள் என்னும் பிஆர்ஓ-க்கள் மற்றும் மேனேஜர்கள் இது குறித்து சொல்லும் கருத்துகள் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.
மக்கள் தொடர்பாளர்களின் வாதம் இதுதான்...
‘முற்றிலுமாக பத்திரிகையாளர்களைக் குறை சொல்லி விட முடியாது. ஆனால், குறை சொல்ல வேண்டிய சூழல் இங்கே நிலவுகிறது. அதாவது மற்ற மொழிகளில் ஒரு புரமோஷன் அல்லது சினிமா நிகழ்ச்சி என்றால் குறைந்தபட்சம் 20 முதல் 40 பத்திரிகையாளர்கள் மட்டுமே வருகிறார்கள்; அதிகமாக 100 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கே அப்படி கிடையாது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெரிய மீடியாக்களே சுமார் 30 முதல் 40; மேலும் வெப்சைட், யூடியூப் சேனல்கள் என 300க்கும் மேற்பட்டோர் அரங்கத்தை நிறைத்து விடுகிறார்கள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டால்கூட இதன் செலவே பல லட்சங்களில் செல்கிறது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் சம்பந்தப்பட்ட நடிகர் குறித்தோ அல்லது படத்தைக் குறித்தோ எதிர்மறையான கருத்துக்களையும், படம் நன்றாகவே இருந்தாலும் கூட தவறான விமர்சனங்களையும் தங்களது யூடியூப் சேனல்களில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் தைரியமாக கேள்வி - பதில் சந்திப்பில் அமரும் கலைஞர்களையும் தர்மசங்கடமான கேள்விகளை சில பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். இதனாலேயே எவ்வளவு பேர் வந்தாலும் எங்களால் அனுமதிக்காமலும் இருக்க முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஒருவேளை மரியாதை நிமித்தமாக பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என முயற்சி செய்தாலும் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் சச்சரவில்தான் முடிகின்றன. இதற்கு பயந்தே பலரும் மீடியாக்களை சந்திக்கவும் மறுக்கின்றனர்...’இது பிஆர்ஓ-க்கள் முன்வைக்கும் கருத்து எனில் நடிகர்கள் தரப்பு வேறொன்றைச் சொல்கிறது. ‘நம்பி ஒரு சேனலுக்கு புரமோஷன் என செல்ல முடியவில்லை. அங்கே சென்றதும்தான் அவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் விளையாட்டுகள், உணவுப் பதார்த்தங்கள், நேரடி லைவில் டான்ஸ், ரீல்ஸ், ஷார்ட்ஸ் உட்பட அனைத்தும் கேட்டு ஒருவித சங்கட நிலைக்கு ஆளாக்குகிறார்கள். அதேபோல் பெரும்பாலும் டிஆர்பி, வியூஸ், மார்க்கெட் இதைக் குறிவைத்து எங்களின் சொந்த வாழ்க்கையை எதிர் நோக்கிய கேள்விகள்தான் அதிகம் மீடியாக்களிடம் சந்திக்க நேர்கிறது.
ஒருவேளை அதற்கு பதில் அளிக்காமல் சென்றால் அடுத்த வீடியோவிலேயே அல்லது செய்தியிலேயே எங்களின் சொந்த வாழ்க்கை குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்து தனி வீடியோக்களாகவும் வெளியிடுகிறார்கள். இப்படிச் செய்வதில் யூடியூப் சேனல்கள்தான் பிரதானமாகத் திகழ்கின்றன. மேலும் எங்கள் மேல் குற்றம் சுமத்தும் தயாரிப்பாளர்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மற்ற மொழிகளில் புரமோஷன்களுக்கும் சேர்த்து நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இங்கே அப்படி கிடையாது...’ என்கிறது நடிகர், நடிகையர் தரப்பு. தயாரிப்பாளர்களிடம் இதற்கு பதில் இருக்கிறது.‘நமக்கு அண்டை மாநிலமான தெலுங்கு சினிமாவை எடுத்துக் கொள்வோம். அங்கே சம்பளம் என்கிற கான்செப்ட் கிடையாது. அனைத்தும் பங்கு வர்த்தக முறைதான்.
எந்த நடிகரும் படம் வெளியாகி தியேட்டரில் ஓடி முடியும் வரை சம்பளம் என எதுவும் கேட்பதில்லை. வரும் வருமானத்தில் இவர்களுக்கு இத்தனை சதவீதம் பங்கு என்கிற முறையில்தான் அங்கே நடிகர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மூர் நடிகர் தரப்பு சொல்வதுபோல் நடிகைகளுக்கு தெலுங்கில் புரமோஷனுக்காக சம்பளம் கொடுக்கப்படுகிறது சரிதான். ஒரு தயாரிப்பாளராக புரமோஷன்களுக்கு நடிகைகளுக்கு அதிகபட்சம் சம்பளம் கொடுக்கலாம்.
ஆனால், நடிகர்களின் சம்பளத்தை புரமோஷன் என தனியாக சம்பளத்துடன் இணைத்தால் அதுவே மேலும் பல லட்சங்களை எங்களுக்கு பட்ஜெட்டில் விழுங்கும், இடிக்கும். ஒருசில நடிகர்கள் தாமாகவே முன்வந்து அனைத்து சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடமும், எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரிடமும் முகம் மலர பேசிச் செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
எல்லா நடிகர்களையும் இதில் குறை கூறிவிட முடியாது. ஆனால், இது போதாது என்பதுதான் இங்கே பிரச்னை. இதனாலேயே பான் இந்தியா திரைப்படங்கள் எடுப்பதில் தயாரிப்பாளர்களான நாங்கள் தயக்கம் காட்டுகிறோம்...’ என பெருமூச்சு விடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
கேப்டன் ஆஃப் த ஷிப் எனப்படும் இயக்குநர்கள் தரப்பும் தங்கள் பங்குக்கு இது தொடர்பாக கருத்துகளை முன்வைக்கிறார்கள். ‘இந்திய மார்க்கெட்டைப் பொறுத்தவரை எந்தப் படம், எந்த நேரத்தில் ஓடும் எனத் தெரிந்துவிட்டால் இன்று வெளியாகும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்களாகத்தான் ரிலீசாகும்.
நாம் ஒன்று நினைத்து ஒரு படத்தை உருவாக்குகிறோம்... இந்தப் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் என நினைத்தால் நினைத்ததற்கு மாறாக அப்படம் வசூலில் தொய்வடைந்து விடுகிறது. இதைத்தான் ‘விக்ரம்’ பட நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார்.
‘‘அன்பே சிவம்’ படம் ஏன் ஓடவில்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ‘விக்ரம்’ படம் ஏன் இப்போது ஓடுகிறது என்பதும் எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு படம் எடுக்கும்போதே ஓடும், ஓடாது என இத்தனை வருடங்கள் ஆகியும்கூட என்னால் கணிக்க முடியவில்லை...’ என்றார்.
இத்தனை வருடங்கள் சினிமாவில் கோலோச்சியிருக்கும் கமல்ஹாசன், மணிரத்தினம் போன்றவர்களே இந்தக் கணிப்பில் தவறும்பொழுது இப்போதைய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எப்படி கணித்துச் சொல்ல முடியும்’ என இயக்குநர்கள் தரப்பு கேட்கிறார்கள்.
இப்படி ஆளாளுக்கு தங்கள் தரப்பை முன்வைத்து புலம்புகிறார்களே தவிர, தீர்வாக எதையும் முன்வைப்பதில்லை. இதற்கு மாறாக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சிலர், பெயர் குறிப்பிட விரும்பாமல் ஒருசில விஷயங்களைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். ‘இவ்வளவு படங்கள் நடித்து விட்டோம்... இத்தனை அனுபவம் கிடைத்துவிட்டது... இனி நான் ஏன் ரசிகர்களை சந்திக்க வேண்டும்? இனி நான் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்... என்கிற நிலை மாறினால் மட்டும்தான் டிரெண்டில் படங்கள் எடுத்து ஓட வைக்க முடியும்.
டிஜிட்டல் யுகம் பெரிதாகிவிட்டது. இங்கே கடைக்கோடியில் இருக்கும் மனிதன்கூட தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொண்டு டிஜிட்டலில் தனக்கென தனிக்கூட்டத்தை உருவாக்கி வரும் நிலையில் நடிகர்கள் இப்படி அமைதி காப்பது அவர்கள் கரியர்க்கும் சரியாக இருக்காது. போலவே ஒரு நடிகர் வெளியில் வரத் தயாராக இருக்கிறார் எனில் அதற்கான மரியாதையை ரசிகர்கள் கொடுப்பதும் இங்கே தேவையாக இருக்கிறது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வரும் வருமானத்தை வெளிப்படையாக குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட படக்குழுவுக்குக் காண்பித்தாலே நடிகர்களும் பாக்ஸ் ஆபீஸ் ஷேர் முறையில் சம்பளம் பெற முன்வருவார்கள். அதேசமயம் மற்ற மொழி நடிகர்கள் தங்களை ரசிகர்கள் கொண்டாடுவதையே கொண்டாட்டமாக்கி அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும் நிகழ்வுகளையும் பதிவு செய்து அதையும் புரமோஷன் யுக்திகளாக பயன்படுத்துகிறார்கள்.
நமக்கே தெரியும், தெலுங்கு ரசிகர்களை ஒப்பிடுகையில் தமிழ் ரசிகர்கள் அந்த அளவிற்கு நடிகர்களை பொது இடத்தில் சங்கடத்திற்கு ஆளாக்குவதில்லை. காரணம், தெலுங்கில்தான் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். அப்படிப்பட்ட ரசிகர்கள் மத்தியிலேயே நடிகர்கள் செல்வதற்கு அங்கே தயங்குவதில்லை.
எனில் நடிகர்கள்தான் இனி வரப் போகும் டிஜிட்டல் ட்ரெண்டிற்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இனி ஒரு படம் வெளியாகிறது என்றாலே குறைந்தபட்சம் இப்படி ஒரு படம் வெளியாகிறது என அறிவிக்கவாவது இவர்கள் புரமோஷன்களில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். இதுதான் பான் இந்தியா திரைப்பட ரேசில் தன்னையும் தமிழ் சினிமா இணைக்க ஒரே வழி.
ஷாருக்கான் போன்ற இந்திய மார்க்கெட் நடிகர்களே ஊர் ஊராகச் சென்று நடனமே ஆடுகிறார்கள். லைம் லைட், ஸ்டார் டாம், பப்ளிசிட்டி, புகழ் இதெல்லாம் விரும்பித்தானே நடிகர் நடிகையர் சினிமாவிற்கு வருகிறார்கள்? எனில் அதற்கான விலையையும் இங்கே கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
இல்லையேல் பல வருடங்கள் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அதே புகழைவிட ஒரு 30 விநாடி முதல் 15 நிமிட வீடியோவில் பெற்ற டிஜிட்டல் பிரபலங்களை மக்கள் கொண்டாடத் துவங்கி விடுவார்கள். ஏற்கனவே அவர்கள் அந்த இடத்திற்கு வந்து ஸ்டார்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை...’ என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பினர். விழித்துக் கொள்ளுமா தமிழ் சினிமா?
ஷாலினி நியூட்டன்
|