தாத்தாவும் பாட்டியும் இந்திப் படங்கள்ல நடிச்சிருக்காங்க... அப்பா ரஜினி, சிரஞ்சீவி கூட நடிச்சிருக்கார்... நான் இப்ப சீரியல்ல நடிக்கறேன்!
சொல்கிறார் இலக்கியா ஹீமா பிந்து
 அத்தனை அழகாக நடிக்கிறார் ஹீமா பிந்து. ‘இலக்கியா’ சீரியலில் இலக்கியாவாக நம் மனங்களைக் கொள்ளை கொண்டு வருபவர். இரண்டே சீரியல்களின் வழியே தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். ‘இலக்கியா’ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவரை இடைவெளியில் சந்தித்தோம். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு சீக்கிரம் இந்தளவுக்கு ரீச் வரும்னு நான் எதிர்பார்க்கல. நடிக்கணும்னு ஆர்வம் சின்ன வயசுலயே இருந்தது. ஆனா, வாய்ப்பு வருமா, வராதானு தெரியாது. நடிப்போம்ன்னும் நினைக்கல. வந்த வாய்ப்பை சிறப்பா செய்றேன். அவ்வளவுதான்...’’ என இயல்பாகப் பேசுகிறார் ஹீமா பிந்து.
 ‘‘சொந்த ஊர் விஜயவாடா பக்கத்துல பீமவரம். அங்கதான் பிறந்தேன். பாட்டியிடம் வளர்ந்தேன். அப்பாவும் அம்மாவும் சென்னையில் இருந்தாங்க. பிறகு பள்ளிப் படிப்பெல்லாம் கூடூர். அங்க எட்டு ஆண்டுகள் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். அப்புறம், சென்னை அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல பி.காம் பண்ணினேன். பிறகு, ஓராண்டு ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சேன். இதுக்கு நடுவுலதான் ‘இதயத்தைத் திருடாதே’ சீரியல் வாய்ப்பு வந்தது. அதுல லீட் ரோல்ல நடிச்சேன்.
 என் அப்பாவின் குடும்பத்துல எல்லோருமே சினி ஃபீல்டுல இருக்காங்க. அப்பா பெயர் கோவிந்த். அவர் 35 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கார். சில படங்கள்ல நடிச்சிருக்கார். சின்னச் சின்ன கேரக்டர்ஸ்தான். ஆனா, முக்கியமான சீன்கள்ல வருவார். தெலுங்குல சிரஞ்சீவி சார், மோகன்பாபு சார், சோபன்பாபு சார் கூட எல்லாம் நடிச்சிருக்கார். தமிழ்ல கூட ரஜினி சார் படத்துல நடிச்சிருக்கார். அப்பாவின் அப்பாவும் அம்மாவும், அதாவது என் தாத்தாவும் பாட்டியுமே கணவன் மனைவியாகவே பல பெரிய படங்கள்ல நடிச்சிருக்காங்க. இந்திப் படங்கள் நிறைய பண்ணியிருக்காங்க. அதை நான் பார்த்திருக்கேன்.

இப்ப அப்பா நடிக்கிறதில்ல. அவர் ஷூட்டிங்கிற்கு தேவைப்படும் ஆர்ட்டிஸ்ட்ஸ், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியை செய்றார். அம்மா மாதுரி, ஹவுஸ் வொய்ஃப்.
அதனால, எனக்குள்ளும் அந்த ஜீன் இருக்குனு நினைக்கிறேன். அதனாலதான் இந்தத்துறை என்னை ஈர்த்திருக்குது. ஆனா, வாய்ப்புகள் எதுவும் அப்பா வழியாக வரல. எனக்கு ஆர்வம் இருந்ததால அப்பப்ப நானே ஆடிஷன் போய் அட்டெண்ட் பண்ணினேன்.
 அப்படி அட்டெண்ட் பண்ணும்போது ஒரு கான்டெக்ட் கிடைச்சு வாய்ப்பு வந்தது. முதல்ல நான் சினிமாவுல நடிக்கதான் முயற்சி எடுத்தேன். ஆனா, அது கொஞ்சம் ரிஸ்க்கா இருந்தது. வீட்டுலயும் சப்போர்ட் பண்ணல. அப்பாவுக்கு நான் நடிக்கிறதுல விருப்பமில்ல. வேண்டாம்னுதான் சொன்னார். அப்புறம், ‘இதயத்தைத் திருடாதே’ சீரியல் தயாரிப்பாளர் பெண் என்பதால் அவங்க நேரடியாக வந்து அப்பா, அம்மாகிட்ட பேசினாங்க. பிறகே அப்பாவும் அம்மாவும் சப்போர்ட் பண்ணினாங்க. அப்புறம் அப்பாவே, நான் நடிக்கிறதைப் பார்த்திட்டு ‘நல்லா நடிக்கிறீயேடா’னு பாராட்டினார்...’’ என உற்சாகம்பொங்கச் சொல்கிறார் ஹீமா.
‘‘‘இதயத்தைத் திருடாதே’ பண்றதுக்கு முன்னாடி ஒரு குறும்படத்திலும், திரைப்படத்திலும் நடிச்சேன். காலேஜ் படிக்கும்போது, ‘ஐ ஆர் 8’னு ஒரு மூவி வாய்ப்பு வந்தது. இதை அம்மாவுக்கு தெரிஞ்சவங்க எடுத்தாங்க. அதனால, நடிச்சேன். சிறிய பட்ஜெட் படம்தான். ஆனாலும் அதுல நல்லதொரு அனுபவம் கிடைச்சது. நிறைய கத்துக்கவும் முடிஞ்சது.
அப்புறம், ‘இதயத்தைத் திருடாதே’ சீரியல் முடிஞ்சதும் கொஞ்ச நாட்கள் கேப் விட்டேன். பிறகு, சன் டிவியில் இருந்து வாய்ப்பு வந்தது. இதுல என்னைவிட என் அம்மாவுக்குதான் ரொம்ப சந்தோஷம். ஏன்னா, தன் பொண்ணு சன்டிவியில் நடிக்கணும்னு அவங்களுக்கு அவ்வளவு ஆசை. அவங்க தோழிகளும், சன் டிவியில் ஏன் முயற்சி செய்யலனு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதனால, ‘இலக்கியா’வில் நடிக்க அழைப்பு வந்ததும் சந்தோஷமாகிட்டாங்க. எனக்கு சினிமாவுல போகணும்னு எண்ணம். ஆனா, அம்மா, ‘டைம் வேஸ்ட் பண்ணாதே. அதுல நிறைய ப்ராசஸ் இருக்கு. இதுதான் நல்லது’னு சொன்னாங்க. அப்படியாக சீரியல் வாய்ப்பை ஏத்துக்கிட்டேன். இப்ப நல்லபடியா சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு.
என் முதல் சீரியல் கேரக்டரும் நல்லா ரீச்சாச்சு. நான் கவனம் பெற்றேன்தான். ஆனா, சன் டிவி ரீச் என்பது வேற லெவல்னு சொல்லணும். இப்ப ஆடியன்ஸ் ‘இலக் கியா’ சீரியலுக்கு அப்படியொரு சப்போர்ட் கொடுத்திருக்காங்க. புரமோ தொடங்கினப்பவே பலரும் இலக்கியானு கூப்பிட்டாங்க. புரமோவுக்கே இவ்வளவு ரெஸ்பான்ஸானு ஆச்சரியப்பட்டேன். இப்ப சீரியலுக்கு அதைவிட இன்னும் அதிக வரவேற்பு கிடைச்சிருப்பது சந்தோஷமா இருக்கு.
இப்ப அம்மாவின் தோழிகள் சீரியல்ல பார்த்திட்டு ரொம்பப் பாராட்டுறாங்க. அம்மாவிடம், ‘நீ கஷ்டப்பட்டதுக்கு இப்ப உங்க பொண்ணு நல்லபடியா கொண்டு போறா. எல்லாவற்றிலும் சாதிக்கிறா. இன்னும் அவ நிறைய சாதிப்பா’னு வாழ்த்தியிருக்காங்க. ஏன்னா அப்பாவும், அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாங்கனு அவங்க நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் மட்டுமே தெரியும்.
அப்புறம், இலக்கியா செட்டைப் பத்தியும் சொல்லணும். இந்த செட் அவ்வளவு ஜாலியானது. என்னை ஒரு குழந்தை மாதிரி ரொம்பப் பாசமா பார்த்துக்கிறாங்க. அதேநேரம் நல்ல மரியாதையும் கொடுப்பாங்க. எதுவா இருந்தாலும் அதைப்புரிஞ்சுகிட்டு வேலை செய்ற நல்ல டீம் இது. வேலைனு வரும்போது எல்லோரும் சீரியஸா மெனக்கெடுவாங்க. ஆர்ட்டிஸ்ட்ஸ், டெக்னீசியன்ஸ், இயக்குநர் எல்லோர்கிட்ட இருந்தும் நிறைய கத்துக்க முடியுது...’’ என்கிறவரிடம், ’நடிகர் விஜய் கைக்குழந்தையுடன் உங்களைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானதே...’ என்றோம்.
‘‘ஆமாம். அப்பாவின் ஷூட்டிங் எப்பவாவது பக்கத்துல நடந்தால் நானும் அம்மாவும் பார்க்கப் போவோம். விஜய் சார்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் குழந்தைகள்னா உயிர். எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஜாலியா விளையாடுவார். என்னிடம் அப்படி விளையாடியிருக்கார். அது எனக்கு ஞாபகம் இல்ல. அம்மா சொல்லிதான் தெரியும். அந்நேரத்துல என்னைத் தூக்கி வச்சி போட்டோ எடுத்திருக்காங்க. அந்தப் படம் என் இன்ஸ்டாவில் இருக்கு. அது வைரலாகிடுச்சு.
இதுமாதிரி நிறைய பேர் விஜய் சார்கூட சேர்ந்து போட்டோ எடுத்திருப்பாங்க. ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட் கூட சேர்ந்து எடுக்கிற போட்டோஸ் எப்பவும் ஸ்பெஷல் மொமெண்ட்தான். அந்த ஸ்பெஷல் மொமெண்ட் எல்லோருக்கும் பிடிச்சுப் போய் அதைக் கொண்டாடுறாங்க. என்னுடன் சேர்ந்து எல்லோரும் ஹேப்பியா ஃபீல் பண்றது ரொம்பப் பெரிய விஷயம்னு நான் நினைக்கிறேன்...’’ என்கிறவரின் ட்ரீம் பற்றிக் கேட்டோம்.
‘‘முதல்ல எனக்கு பொட்டிக் வைக்கிறதுதான் கனவு. ஒரு தொழில் முனைவோரா, பிசினஸ்வுமனாக வரணும்னு நினைக்கிறேன். ஆனா, அதேநேரம், எனக்கு பிடிச்சுப் போச்சுனா அதற்கு நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் உழைக்கணும்னு நினைப்பேன். அது எந்தப் பணியாக இருந்தாலும் சரி.
இப்ப நடிப்பு ப்ளஸ் தொழில்முனைவோர் என ரெண்டு விஷயங்களிலும் ஜொலிக்கணும்னு ஆசைப்படுறேன். முதல்ல வெள்ளித்திரையில் ஹீரோயினாகணும். நல்ல ரீச் வர்ற அளவுக்கு அர்ப்பணிப்புடன் பணிகள் செய்யணும். அதனால, மூவிக்கான ஆடிஷன் நிறைய அட்டெண்ட் பண்றேன். ஏதோ ஒருநாள் மூவி வாய்ப்பு வரும் என்கிற நம்பிக்கையில் முயற்சி செய்துகிட்டே இருக்கேன். அப்புறம், பொட்டிக்...’’ கண்களில் நம்பிக்கை மிளிர சொல்கிறார் ‘இலக்கியா’ ஹீமா பிந்து.
பர்சனல் பக்கங்கள்…
பிடிச்ச ஊர்: சென்னைதான். வாழவைத்த ஊர் இல்லையா?
பிடிச்ச உணவு: பிரான் பிடிக்கும். அப்புறம், மோமோஸ் பிடிக்கும். அம்மா சமையல்ல பிரிஞ்சு சாதம், சீரா சாதம், இஞ்சி சாதம் எல்லாம் அவ்வளவு இஷ்டம். பிடிச்ச உடை: நான் ஃபேஷன் டிசைனர் என்கிறதால எல்லா உடையும் ரொம்பப் பிடிக்கும். பிடிச்ச நடிகர்: விஜய் சாரும் அஜித் சாரும் ரெண்டு கண்கள். ரெண்டையும் விட்டுத்தர முடியாது.
பிடிச்ச நடிகை: அனுஷ்கா. பிடிக்காத விஷயம்: நாம் என்ன சொல்றோம்னு காதுகொடுத்து கேட்காமல் உடனே ரியாக்ட்டாகி டென்ஷன் ஆகுற நபர்களைப் பிடிக்காது. பார்த்து நிதானமாக பேசணும். ஏன்னா, அது என்கிட்டயே இல்ல. அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்: அன்னைக்கு காலையில் கேட்கிற பாடல் வாயில் ஓடிட்டே இருக்கும். ஃப்ரீ டைம் இருந்தால்: ஃபேஷன் டிசைனிங் ஸ்கெட்சிங் பண்ணுவேன். ஆனா, இப்ப நேரமே இல்ல.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|