கட்டபொம்மனுக்கு முன்பே எட்டயபுரம் ஆங்கிலேயருக்கு எதிராக பெரிய போராட்டம் நிகழ்த்தியது!
ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் வழியே பாளையங்களின் உண்மையான வரலாற்றைத் தேடி வருகிறார் இந்த முன்னாள் கலெக்டர்
வரலாற்று ஆர்வமுடையவர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் மு.ராஜேந்திரன். இந்திய ஆட்சிப் பணியாளராக கலெக்டர் முதல் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக இருந்த இவர், அந்த பரபரப்புக்கிடையேயும் வரலாற்றுத் துறையில் பல்வேறு படைப்புகளைப் படைத்து வாசகர்களை ஈர்த்து வருகிறார்.
 சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் கால செப்பேடுகளை முழுமையாக தனித்தனி புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் இவரது முயற்சியை வரலாற்றை நேசிக்கும் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள் என்றால்,இவர் எழுதிய ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’, ‘மதாம்’, ‘வெயில் தேசத்து வெள்ளையர்கள்’, ‘1801’, ‘காலாபாணி’ போன்ற வரலாற்று நாவல்கள் புனைவு வாசகர்கள் மத்தியில் பிரபலமாகத் திகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நாயக்க மன்னர்களின் ஒரு பகுதியாக இருந்த பாளையக்காரர்களின் வரலாறு குறித்த போதாமையையும் அதில் சொல்லப்படும் வரலாற்றுத் தகவல்கள் பிழையானது என்றும் ஆதாரங்களுடன் இப்பொழுது சுட்டிக்காட்டி வருகிறார்.
 ‘‘நான் அண்மையில் வெளியிட்ட ‘1801’, ‘காலாபாணி’ என்ற இரண்டு நாவல்களுமே பாளையக்காரர்கள் பற்றிதான் பேசுகின்றன. ‘1801’ நாவல் பாளையக்காரர்களின் எழுச்சியைப் பேசுகிறது என்றால், ‘காலாபாணி’ அவர்களது வீழ்ச்சியை விவரிக்கிறது. இவற்றை எழுதியபோதுதான் பாளையக்காரர்கள் பற்றி இன்னும் ஏராளமாக இருப்பதாகத் தோன்றியது.  அதிலும் பிரித்தானியர்கள் சென்னை மாகாணத்தில் ஜார்ஜ் கோட்டையைப் பிடித்த 1640களில் இருந்தே பாளையக்காரர்கள் பற்றி அவர்களது ஆவணங்களில் எக்கச்சக்கமாகவே தகவல்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். இவைதான் இதுவரை நமக்குத் தெரிந்த பாளையக்காரர்கள் பற்றிய பல தவறான செய்திகளுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857ல் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் 1801ல் தமிழ்நாட்டில் நடந்த பாளையக்காரர்களின் எழுச்சியைத்தான் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதவேண்டும்.
மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத் துரை,ெஜகன்னாத ஐயர்,சேக் உசேன், சிவத்தையா, விருப்பாச்சி கோபால் நாயக்கர் என்று ஆங்கிலேய அரசுக்கு எதிராக 1789, 1800 மற்றும் 1801 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த பாளையக்காரர்களின் போராட்டம்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.
இவர்கள் எல்லோருமே ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்பட்டவர்கள். இதுதான் ‘1801’ நாவலின் ஒரு களமாக இருக்கும். ‘காலாபாணி’யில் இந்த பாளையப் போரில் தூக்கிலிட முடியாதவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் என்ன செய்தது என்று விவரித்திருப்பேன். காலாபாணி என்றால் அந்தமான் சிறை என பலரும் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் காலாபாணி என்றால் கறுப்புத் தண்ணீர் என்று அர்த்தம்.
அதாவது இன்று தண்ணியில்லா காடு என்கிறோம் அல்லவா... அந்தமாதிரி அன்று ஒருவனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தாலே ‘என்ன... காலாபாணியா...’ என்று கேட்கும் வழக்கம் இருந்தது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் காலாபாணி என்றால் மிக மோசமான வாழ்க்கை என்று அர்த்தம்.
இந்தியாவில் காலாபாணிச் சிறை என்பது 1700களிலேயே தொடங்கிவிட்டது...’’ என்று சொல்லும் ராஜேந்திரன் அந்த வரலாற்றையும் கூறினார்.‘‘அந்தமான் சிறை 1850களில் உருவானது. முதல் பிரித்தானிய சிறை என்பது 1700களில் இந்தோனேஷியாவின் சுமாத்ராதீவில் உருவாகிய பென்கூலன் (pencoolan) சிறை என்பதுதான் சரி. அடுத்து மலேசியா பினாங்கில் உருவாகிய சிறை. இதனையடுத்துதான் அந்தமான் சிறை வருகிறது. பாளையக்காரர்களில் பலர் இந்த பென்கூலன் சிறைக்குத்தான் நாடு கடத்தப்பட்டார்கள். உதாரணமாக சிவகங்கை பாளையத்தின் அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவர் அங்குதான் சிறைவைக்கப்பட்டார். பிறகு அடைக்கப்பட்ட 4 மாதங்களில் தன் 35ஆம் வயதில் அங்கேேய மரணமடைந்தார். சின்ன மருதுவின் மகன் துரைசாமி எனும் சிறுவன் 70 பேருடன் பினாங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
உண்மையில் வயதானவர்கள், சிறார் குற்றவாளிகள், ஆபத்தில்லா சிறு குற்றவாளிகளைத்தான் நாடு கடத்தினார்கள். வெளியூரில் ஆங்கில அரசாங்கத்துக்காகக் கட்டப்படும் கோட்டைகள், கொத்தளங்கள், மற்றும் கட்டடப் பணிக்கு இவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் இந்த நாடுகடத்தலின் பின்னால் இருக்கும் நிஜம். நாயக்கர் காலத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனையாக மூக்கை அறுக்கும் முறை இருந்தது என்றால் பிரிட்டிஷ் ஆட்சியில் காதை அறுக்கும் வழக்கம்.ஒருவரின் மூக்கை அறுத்தால் முகம் மட்டுமே அவலட்சணமாக மாறும். வாசனைகளை எல்லாம் எப்போதும்போல் நுகரலாம்.
ஆனால், காது என்பது ஒரு நபரின் உடலை பேலன்சாக வைத்திருக்கும் ஒரு முக்கியமான சுரப்பை சுரப்பது. காது அறுந்த மனிதனால் ஓர் இடத்தில் சீராக நிற்க முடியாது. திண்டாடுவான். அதனால்தான் ஆங்கிலேயர்கள் காதுகளை அறுத்தார்கள்...’’ என்று சொல்லும் ராஜேந்திரன், பாளையக்காரர்களின் ஆட்சி பற்றி விவரித்தார்.‘‘மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் உருவாக்கியதுதான் இந்த பாளையக் கட்டமைப்பு. தஞ்சையை ஆண்ட அல்லது செஞ்சியில் இருந்து ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் பாளைய முறையை அங்கே உருவாக்கவில்லை.
மதுரை என்பது பெரிய ஏரியா. ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி... என்று பரந்துபட்ட பிரதேசம். ஆகவே, மதுரையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்வது சரிப்பட்டு வராது. இதனால் மதுரை நாயக்க மன்னரின் தளபதியாக இருந்த புகழ்பெற்ற அரியநாத முதலியாரால் இந்த பாளைய ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்படி மதுரையைச் சுற்றிலும் சுமார் 73 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சுமார் 40க்கும் மேல் தெலுங்கு பேசும் பாளைய ராஜாக்கள். சுமார் 10 மறவர் பாளையங்கள். மீதி கன்னடம். நாயக்க மன்னர்களின் கடைசிக் காலத்தில் தென்னிந்தியா முழுக்க முகலாயர்கள் அல்லது சுல்தான்களின் ஆட்சியில் இருந்தது. இத்தோடு தமிழகத்திலும் சில மைல்கள் தூரத்தில் ஃபிரஞ்சு, பிரித்தானியர், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், நவாபுகளின் ஆட்சி பரந்துபட்டதாக இருந்தது.
அதாவது பல்வேறு ஆட்சிகளின் மத்தியில் ஒரு சிறு பொறி ஏற்பட்டாலும் பல கலகங்கள் உருவாகும்... அடுத்தடுத்து பரவும் என்ற நிலை. அதே நேரத்தில் பாளையங்களுக்கு உள்ளும் சில பிரச்னைகள் இருந்தன. திருமண உறவுக்கு மறுத்தல், வரி வசூலிப்பதில் பகைமை, வாரிசு இல்லாமை போன்ற பிரச்னைகள் தவிர நில எல்லைத் தகராறுகளும் அவர்களுக்குள் நிலவின. இந்தப் பிரச்னைகளை ஊதி பெரிதாக்கி தங்கள் ஆட்சியை விரிவாக்கியதுதான் பிரிட்டிஷார்களின் வெற்றியாக இருந்தது...’’ என்று சொல்லும் ராஜேந்திரன், தமிழக வாசகர்களிடையே பாளையக்காரர்கள் குறித்த சில தவறான பிம்பங்கள் இருப்பதாக வருத்தப்படுகிறார்.
‘‘மருது சகோதர்கள் தூக்கிலிடப்படும் தருவாயில், தான் இறந்த 100 வருடம் கழித்து தன் சொத்துக்களை வாரிசுகள் அனுபவிக்கவேண்டும் என்று கத்தியை தரையில் போட்டு சத்தியம் செய்ததாக ஒரு வழக்கு 1931ல் நீதிமன்றத்துக்கு வந்தது.
இது தவறான தகவல் என்ற தீர்ப்பும் அதே வழக்கில் வழங்கப்பட்டது. இதுபோல் எண்ணற்ற சம்பவங்களை ஆங்கிலேயர்களின் ஆவணங்களைக் கொண்டு விவரிக்க முடியும். இவை எல்லாமே போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் அனைவரும் எந்தச் சூழலிலும் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்டதில்லை என்பதையே காட்டுகிறது.
முக்கியமான ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது எட்டப்பனும், புதுக்கோட்டை ராஜாவும் என்கிறார்கள்.
உண்மையில் கட்டபொம்மனுக்கு முன்பே எட்டயபுரம், புலித்தேவனின் நெல்கட்டும்செவல் பாளையங்கள் ஆங்கிலேயருக்கு எதிராக பெரிய போராட்டம் நிகழ்த்தின. ஆனாலும் எந்தப் போராட்டமும் ஏன் வெற்றி பெறவில்லை? காரணம் எளிமையானது. ஒரு பாளையம் போராடும்போது மற்ற பாளையங்கள் அந்த பாளையத்துக்கு உதவியாக வருவதில்லை. இதனால்தான் சில பாளையங்கள் பிரித்தானியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.
இந்த சூழ்நிலையிலும் கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரையைப் பிடித்துத் தரும்படி சின்ன மருதுவிடம் ஆங்கிலேயர்கள் கேட்டபோது அந்தக் கோரிக்கையை அவர் மறுத்துவிட்டார். இது மருதுவை தூக்குக்கே கொண்டு சென்றது. இதேபோல் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்ததாக புதுக்கோட்டை ராஜாவை சொல்லமுடியாது. ஏனெனில் புதுக்கோட்டைக் காட்டில் கட்டபொம்மன் எங்கு இருக்கிறான், அவனோடு யாரெல்லாம் இருக்கிறார்கள்... என அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய கடிதத்தை புதுக்கோட்டை ராஜாவுக்கு ஆங்கிலேயர்கள் எழுதினார்கள்.
இதன் பிறகும் ஆங்கிலேயருக்கு உதவ புதுக்கோட்டை ராஜா மறுத்தால், அடுத்ததாக புதுக்கோட்டை மீதுதான் ஆங்கிலேயர்கள் கைவைப்பார்கள். இந்த கையறு நிலையில்தான் புதுக்கோட்டை அப்படி செய்தது. அதேபோல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் வருவதுபோல ‘எங்கள் ஊர் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா, கழனியில் இறங்கி வேலை செய்தாயா...’ என்றெல்லாம் நிஜத்தில் ஆங்கிலேய அதிகாரியிடம் கட்டபொம்மன் வசனம் பேசவில்லை.
கட்டபொம்மனைப் பிடித்தது முதல் தூக்கிலிடும் வரையிலான சுமார் 10 நாட்களில் என்ன நடந்தது என விலாவாரியாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அவை கிரிக்கெட் ரன்னிங் கமெண்டரி மாதிரியே இருக்கின்றன. தூக்குக்கு கொண்டு செல்லும் வழியில் அங்கே ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்ட மற்ற பாளையக்காரர்கள் மீது கட்டபொம்மன் எப்படி ஓர் வெறுப்புப் பார்வையை வீசினான் என்று கூட பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி ஏராளமான விவரங்களைச் சேகரித்து வருகிறேன். அவை எப்படி திரண்டு வருகிறது என்பதை வைத்துதான் அதை வைத்து வரலாற்று நூல் எழுதப் போகிறேனா அல்லது வரலாற்று நாவல் படைக்கப் போகிறேனா என்ற முடிவுக்கு வரமுடியும்...’’ என்றபடி புன்னகைக்கிறார் ராஜேந்திரன்.
டி.ரஞ்சித்
|