அரண்மனை குடும்பம்-48
மஞ்சு ஒட்டுக் கேட்டபடி இருப்பதை ரத்தி அறியவில்லை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி உருளத் தொடங்கியது. அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தியாவும் அழ ஆரம்பித்தாள். அது கணேஷுக்குள் எரிச்சலை மூட்டியது.“இதோ பார் ரத்தி... அழுதெல்லாம் நீ என்னை எதுவும் செய்துட முடியாது. நான் மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்கற முடிவுக்கே வந்துட்டேன்! அவ எனக்காக காத்துக்கிட்டிருக்கறவ... வேற யாரா இருந்தாலும் நான் நடந்துகிட்டதுக்காக என் மூஞ்சியில காரித் துப்பிட்டு போயிருப்பாங்க.
 ஆனா, மஞ்சு அப்படி இல்லை. வாழ்ந்தா என்னோட வாழ்வேன், இல்லேன்னா கன்னியாவே இருப்பேன்னு இருக்கா. அப்படிப்பட்டவளை இனியும் நான் கைவிடத் தயாரா இல்லை. அதோட அவ ஒரு நோயாளி... அதுவும் உனக்கு நல்லா தெரியும். நான் கட்டப்போற தாலிதான் அந்த வியாதிக்கும் மருந்து...”கணேச ராஜா பேசப்பேச ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளாவுக்கு புதிதாய் சிறகு முளைத்து வானத்தில் பறப்பதைப் போல் இருந்தது. மிளகு சைஸிலான ஒரு வசிய மருந்து இப்படிக் கூடவா ஒருவன் மனதை மாற்றும் என்று பிரமிப்பாகவும் இருந்தது. மிகவேகமாய் தன் கைவசமிருந்த சொல்போனில் ரெக்கார்டரை ஆன் செய்து அவன் பேச்சை ரெக்கார்டும் செய்யத் தொடங்கினாள்.
 “ஜீ... நிஜமா சொல்றேன்... நீங்க பேசல ஜீ! உங்களுக்கு ஏதோ ஆகியிருக்கு. எனக்கு உங்கள நல்லா தெரியும். ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் நீங்க. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதா கல்யாணம் பண்றது சட்டப்படி குற்றம்னு உங்களுக்கு தெரியாதா? அப்படி இருக்க கல்யாணம் பண்ணிக்க போறேன்னா அது எப்படி ஜீ..?”“லுக்... ஒரு ஆண் இரண்டு இல்ல... சக்திக்கேற்ப மூணு நாலு கூட கல்யாணம் பண்ணிக்கலாம். கும்புட்ற சாமியான முருகனுக்கே இரண்டு பொண்டாட்டி... கிருஷ்ணனுக்கோ கணக்கே இல்லை.
நீதான் புரியாம பேசறே...” “அப்ப ஏன் சட்டம் தப்புன்னு சொல்லுது..?” “நீ சம்மதிச்சிட்டா அது சொல்லாதே...” “நான் சம்மதிச்சாதானே?”
“என் விருப்பத்துக்கு சம்மதிக்காத நீ என் கூடயும் இருக்காதே. இப்பவே வீட்டை விட்டு வெளிய போ...”“இப்படிச் சொல்ல எப்படி ஜி மனசு வருது... இந்த வீட்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு...”“மண்ணாங்கட்டி... அந்த உரிமையே என்னாலதான் வந்தது. அதை மறந்துடாதே...”
“ஐயோ... எப்படி பேசினாலும் தப்பாவே போகுதே... உங்கள நம்பி நான் மட்டுமில்ல ஜி... இதோ தியா... அப்புறம் இன்னொரு உயிர் வயித்துல... மொத்தம் மூணுபேர். எங்களுக்கு துரோகம் பண்ணிடாதீங்க ஜீ...”“இதோ பார்... பேசாம ஒரு மூலைல இரு! நானும் கண்டுக்கல. நீ கோர்ட்டுக்கு போவேன்னா நான் தாலியே கட்டாம கூட மஞ்சுவோட குடும்பம் நடத்துவேன். அதை உன்னால தடுக்க முடியாது. அப்ப யார் என்ன செய்ய முடியும்?” “ஜீ..?”
“மூச்... வாய மூடிகிட்டு இரு! இங்க இருக்க பிடிக்கலேன்னா ஏற்காட்டுக்கு போய் அங்க இரு. அங்கையே பர்மனன்டா கூட இருந்துக்கோ. உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்கு நீ சாகற வரை உனக்கு சோறு போட்டுட்றேன். மத்தபடி என் எந்த ஆசைலயும் நீ குறுக்கிடக் கூடாது. என் வாழ்க்கை இனி எப்பவும் மஞ்சுவோடதான். வரேன்...”
பேசிவிட்டு வேகமாய் திரும்பிச் செல்லத் தொடங்கினான். ரத்தியிடம் ஸ்தம்பிப்பு!செல் ரெக்கார்டர் ஓடத்தொடங்கியது.
கணேச ராஜா பேசியதைக் கேட்டு குலசேகர ராஜாவும், சுந்தரவல்லியும் தங்கள் முகங்களை மெர்க்குரி விளக்காக்கிக் கொண்டனர்.
“அப்பா... சும்மா சொல்லக் கூடாதுப்பா இந்த மருந்தை... இவ்வளவு வேகமா, இவ்வளவு ஆழமா இது இப்படி வேலை செய்யும்னு நான் கனவுல கூட நினைக்கல...” “ஆமாங்க... நாம இந்த வீட்ல ஒட்டிகிட்டிருந்தது வீண் போகலங்க...”
“உண்மைதான் சுந்தரம்... பழம் நழுவி பாலில் விழுந்திடிச்சு! பாலும் பழமும் இப்ப வாயில விழ வேண்டியதுதான் பாக்கி...” “அதுல என்னங்க சந்தேகம். அதான், தான் தாலியே கட்டாம கூட வாழ்வேன்னு சொல்லிட்டாளேங்க...” “பைத்தியக்காரி... அப்படி வாழ்ந்தா அவனுக்கு சந்தோஷம் கிடைக்கும். நம்ம பொண்ணுக்கும் நமக்கும் சொத்துல பங்கு கிடைக்குமா?” “ஆமால்ல... பொண்டாட்டியானாதான் சட்டப்படி எல்லாம் சாத்யம்...”
“ஆனா, அவ நான் சம்மதிக்க மாட்டேன், கோர்ட்டுக்கு போவேன்னு சொல்றாளேப்பா...” “பின்ன... வேடிக்கையா பார்ப்பா?” “என்னப்பா... திடீர்னு அவ பக்கம் சாயறீங்க?”
“சாயல... அவ அப்படித்தான் நடப்பாங்கறத புரிஞ்சிக்க சொல்றேன். அவ அப்படி கோர்ட்டுக்கு போனா அவ்வளவுதான்... இங்க அத்தானும் ஏற்கனவே குடும்ப கௌரவம் அது இதுன்னு நிறையவே என்கிட்ட பேசிட்டாரு. அதனால விஷயம் கோர்ட்டுக்கு போனா ஒரு முடிவு தெரியற வரை நாமளும் காத்திருக்கணும். கோர்ட்ல கணேசன் எனக்கு இவகூட வாழப் பிடிக்கலேன்னு சொல்லி விவாகரத்து கேட்பான். அதுவும் நமக்கு ஆபத்துதான். அப்ப சொத்துல பங்கு, அப்புறம் ஜீவனாம்சம்னு அது எங்கெங்கோ போயிடும்...”
“ஒரு நஷ்ட ஈடா ஏதாவது கொடுத்து சமாளிக்க முடியாதாங்க?”
“குழந்தை இருக்கே... அதை நீ மறந்துட்டே பேசிகிட்டிருக்கே. முழுவாரிசு அவ... எந்த பருப்பும் வேகாது...’’‘‘அப்ப என்னதாங்க தீர்வு..?’’“ரத்தியும் அந்த குட்டியும் தற்கொலை செய்துக்கணும்! அதைத்தவிர இந்த விஷயத்துல தீர்வே கிடையாது...” “இப்படிப் பேசறவ எப்படிங்க செய்துக்குவா?” “அது தெரியாது... ஆனா, அதுதான் தீர்வு...”
“அப்ப அதுக்கு ஏதாவது மருந்து இருக்குமாங்க... அவன் கிட்ட கேட்டுப் பாருங்களேன்...” “கேக்கதான் போறேன்... இன்னிக்கு எட்டு மணிக்கு அவனை சந்திக்க போறேன்...” “பணம் கேப்பானேங்க...”“கணேசன் மனம் மாறியதை விடவே பெரிய விஷயம் ரத்தியும் அந்த குட்டியும் ஒழியறதுதான். அவங்கள ஒழிச்சுக் கட்டிட்டு பணத்தை வாங்கிக்கோன்னு சொல்லப் போறேன்...”“அவன் அதுக்கு சம்மதிப்பானாங்க..?”
“சம்மதிச்சா காசு... இல்லேன்னா...” குலசேகர ராஜா வார்த்தைகளை முடிக்காமல் தனக்குள் ஒரு பெரிய திட்டம் இருப்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.“என்னங்க இல்லேன்னான்னு சொல்லிட்டு முடிக்காம விட்டுட்டீங்க?”“எல்லாத்தையும் வெளிப்படையா பேச முடியாது சுந்தரம். நடக்க நடக்க பார்த்து தெரிஞ்சிக்கோ.ஒண்ணு மட்டும் நிச்சயம்.
அதிக பட்சம் 15 நாள்தான் இந்த ரத்தியும் குட்டியும் உயிரோட இருப்பாங்க. அடுத்து மூணு மாசத்துல... அதாவது சரியா இன்னிக்கு தொடங்கி நூறு நாளைக்குள்ள கணேசன் மஞ்சு கழுத்துல தாலிய கட்டிடுவான். இதை நான் சாதிச்சுக் காட்டுவேன். நீங்க போய் அமைதியா அடுத்து நடக்கப் போறத வேடிக்கை மட்டும் பாருங்க...” என்ற குலசேகர ராஜா அப்போதே மூர்த்தியை போனில் தொடர்பு கொண்டார். “எங்க இருக்கே மூர்த்தி?” “இங்கதான் சார் ஆபீஸ்ல...” “எட்டு மணிக்கு வழுக்குப் பாறைக்கு போகணும். ரெடியாயிரு. எதுக்கும் லோட் பண்ண துப்பாக்கிய எடுத்துக்கோ...”
“சரிங்க பாஸ்...” என்ற மூர்த்தியிடம் - “மூர்த்தி, கூடவே கடப்பாரை, மண்வெட்டியையும் எடுத்து
வெச்சுக்க...” என்றார்.
மறு முனையில் மூர்த்தி முகத்தில் பலத்த திகைப்பு! டி.வி யில் நியூஸ் பார்த்துக் கொண்டே புகைத்துக் கொண்டிருந்தார் எம்.பி.யான அருணாசலம்.
வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இப்போதே கூட்டணி அமைப்பது குறித்து எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டதை செய்தியாகக் கேட்டபோது முகத்தில் பலத்த மாறு தல்கள். செய்தியின் தொடர்ச்சியில் “சேலம் பாராளுமன்றத் தொகுதிக்கு பிரபல தொழிலதிபரும், அரண்மனையார் குடும்பத்தைச் சேர்ந்தவருமான கணேசராஜா போட்டியிடப் போவதாகவும் அதற்காக இப்போதே அவரது ஆதரவாளர்கள் களப்பணியை த் தொடங்க இருப்பதாகவும் தெரிய வருகின்றன...” என்கிற செய்தி அருணாசலத்தின் முதுகெலும்பில் யாரோ ஊசியைச் செருகியது போல அவரை நிமிர்த்தியது.
மிகச்சரியாக அவர் மனைவி அருந்ததியும் அப்போது அதைக் கேட்டபடியே அவரருகில் வந்து அமர்ந்தவளாய் அவரை ஒரு மாதிரி பார்த்தாள்.“என்னம்மா... அதிர்ச்சியா இருக்கா..?”“ஏங்க... உங்களுக்கில்லையா..?”“இந்த விஷயம் ரொம்ப நாளாவே ஓடிகிட்டிருக்கு அருந்ததி. எனக்கு வேண்டாதவங்க பண்ற வேலை...”
“அரசியல்னா நாலுபேர் அப்படி நாலுபேர் இப்படின்னுதான் இருப்பாங்க. ஆனா, அரண்மனையார் குடும்பம் நமக்கு அனுசரணையான குடும்பங்களாச்சே..?”
“அவங்களுக்கும் அதிகாரத்து மேல நாட்டம் வந்திடுச்சி அருந்ததி. ஒரு இருபது வருஷத்துல சொத்து மதிப்பெல்லாம் ரொம்பவே கூடிப் போச்சு. முன்னல்லாம் லட்சமே ரொம்ப பெருசு. இப்ப கோடி கூட சிறுசு. சொந்த வீடு வெச்சிருக்கறவங்கள்ல பாதிப்பேருக்கு மேல கோடீஸ்வரங்கதான்!
அதுலயும் அரண்மனைக் குடும்பத்துக்கு மட்டுமே இந்த சேலத்துலயும், சேலத்தைச் சுத்தியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமிருக்கு. இதுல கஞ்சமலை அடிவாரத்துல மட்டுமே பல நூறு ஏக்கர் இருக்கு. அங்க ஒரு தொழிற்சாலை போட்டா அது இந்தியாவுலயே பெரிய தொழிற்சாலையாயிடும். காரணம் அங்க கிடைக்கிற இரும்பு...”
“இருக்கட்டுங்க... நீங்க அவங்களுக்கு சப்போர்ட்டாதானே இருக்கீங்க?”“நான் சம்பாதிக்கறது அந்த கணேசராஜாவுக்கு பிடிக்கல அருந்ததி. எப்பவும் ஓட்டாண்டியா அவங்ககிட்ட கை கட்டி இருக்கணும்னே நினைக்கறான் அவன். எங்க நான் அவங்களுக்கு சமமா வந்துடுவேனோங்கற பயமும் வந்திருச்சி...”“ஓ... உள்ளுக்குள்ள இவ்வளவு இருக்குதா..? சரி நீங்க என்னங்க பண்ணப் போறீங்க..?’’
‘‘எனக்கு நிச்சயம் சீட் கிடைக்காது. அது எனக்கே தெரியும். அதுக்காக கணேசராஜா நின்னு ஜெயிக்கவும் நான் விடமாட்டேன்...”
“அவங்கள உங்களால எதுக்க முடியுங்களா?”“நேரா முடியாது... ஆனா, மறைமுகமா நிறையவே முடியும். இப்ப அந்த குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய குழப்பம் உருவாகியிருக்கு. கணேசராஜாவோட பொண்டாட்டி புள்ளைய கொல்லவே முயற்சி நடந்திருக்கு...”“ஐயோடா... நெசமாவாங்க...”
“ஆமா. கணேச ராஜாவோட பொண்டாட்டி ஒரு வடநாட்டுக்காரி. தொழில் விஷயமா வடக்க போன இடத்துல ஒரு வேலைக்காரியா அறையை கூட்டி அள்ள வந்தவகிட்ட மயங்கிட்டான் இந்த கணேசராஜா. அது அவ கர்ப்பம் வரை போயிடிச்சு. அந்த பொண்ணோட குடும்பத்தவங்க சும்மா இருப்பாங்களா? பிடிச்சு தாலிய கட்ட வெச்சிட்டாங்க... இதுதான் நடந்திச்சு...” “இல்லையே... அவரு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால்ல கேள்விப்பட்டேன்...” “அது நமக்கு சொல்லப்பட்ட கதை... ஆனா, நான் இப்ப சொன்னதுதான் உண்மை...” “சரிங்க... இப்ப அந்த பொண்ணை யாருங்க கொல்லப் பாத்தாங்க...”
“கணேசராஜாவுக்கு ஒரு மாமன் இருக்கான். குலசேகர ராஜா! மாட்டு கழுத்து ஒட்டுண்ணியும் அவனும் ஒண்ணு அருந்ததி. அவனுக்கு ஒரு மக... அவளை கணேசனுக்கு கட்டி வெச்சிட்றதுதான் அவன் திட்டம். அப்பதானே சொத்தும் கைய விட்டு போகாம ஒரு குடும்பத்துக்குள்ளேயே இருக்கும்...”“அதனால..?”“கொல முயற்சிய செய்தது அவன்... ஆனா, அது சரியா நடக்காம செஞ்சவங்க செத்ததுதான் மிச்சம்...”
“நெசமாவாங்க... இதெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும்?”
“இப்படி எல்லாம் சராசரி பொம்பள மாதிரி கேக்காதே அருந்ததி. போலீஸ்ல இருந்து கலெக்டர் ஆபீஸ், கட்சி ஆபீஸ்... என அந்த அரண்மனை குடும்ப பங்களாக்குள்ளயே எனக்கு ஆளுங்க இருக்காங்க. அப்பப்ப தகவல் வந்துகிட்டே இருக்குது...”அருணாசலம் கெத்தாக சொன்ன அந்த விநாடிகளில் டிடெக்டிவ் ஏஜென்ட் வின்சென்ட்டுடன், அருணாசலத்தின் பி.ஏ.வான செங்கோடன் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவர்கள் வரவும் அருந்ததியும் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டாள்.
“வாய்யா வின்சென்ட்டு... என்ன... நேர்லயே வந்துட்டே. ஏதாவது முக்கியமான விஷயமா?” “கரண்ட்டுங்க நீங்க... அதேதான்!” “நல்ல விஷயமா சொல்லு... இப்ப இங்கேயும் அரம்மண காரன் மேட்டர்தான் ஓடிக்கிட்டிருக்கு...”
“அதுக்காகதாங்க நானும் வந்துருக்கேன். எத போன்ல சொல்லணும், எத நேர்ல சொல்லணும்னு எங்களுக்கொரு கணக்கிருக்குங்க...” என்ற வின்சென்ட் அந்த அறையை நாலாப்புறமும் ஒரு பார்வை பார்த்தார்.“என்ன வின்சென்ட்டு... சிசிடிவி கேமரா இருக்கான்னு பாக்கறியாக்கும்..?”“ஆமாங்க... இருந்தா சொல்லிடுங்க... இப்பவே போய் என் காருக்குள்ள உக்காந்து பேசுவோம்...” “அதெல்லாம் எதுவுமில்லை... நீ தைரியமா சொல்லு...” வின்சென்ட்டும் சொல்லத் தொடங்கினார்.
“சார்... கணேசராஜா தன் மனைவி ரத்தியை பிரியப் போறாருங்க. புருஷன் பொண்டாட்டிக் குள்ள பெரிய வாக்குவாதம் நடந்து அது விவாகரத்து வரை போயிடிச்சு! அதே சமயம் கணேசராஜா அவர் மாமா பொண்ணான மஞ்சுளாவை கல்யாணம் பண்ணிக்க போறாரு. கணேசராஜா மனைவி ரத்திய சம்மதிக்க வைக்க கடும் முயற்சி நடந்துகிட்டிருக்கு... அவங்க சம்மதிக்காட்டி ஒரு செட்டில்மென்ட் பண்ணி வெட்டி விட்டாலும் வெட்டி விடலாம். எல்லாமே போகப் போகத் தெரியும்.
உள்ள கார்ப்பென்ட்டரா வேல பாக்கற என் ஆள்தான் எல்லாம் சொன்னான்.மொத்தத்துல அரண்மனை குடும்பம் பெரிய பரபரப்புல இருக்குது சார்...” வின்சென்ட் சொல்லி முடிக்கவும் அருணாசலம் முகத்தில் ஒரு புது பிரகாசம்!“சபாஷ் வின்சென்ட்! சரியான நேரத்துல சரியான விசயத்தை சொல்லியிருக்கே. குடும்பத்துக்குள்ள இவ்வளவு குழப்பமிருக்க இவரு பார்லிமெண்ட் எலெக்ஷன்ல நிப்பாராமா? இது போதாது எனக்கு, அரண்மனைக் குடும்ப பேரைக் கெடுக்க..?” என்று தொடைதட்டினார் அருணாசலம்!
(தொடரும்)
அசோகமித்திரனுக்கும் மண்ணாங்கட்டி சித்தருக்கும் இடையே ஒரு புது உறவும் உருவாகி விட்டிருந்தது. மண்ணாங்கட்டியாரும் ‘இனி நீ கேட்க வேண்டியதை எல்லாம் கேட்கலாம்’ என்று கூறவும் அசோகமித்திரனிடம் ஒரு பிரத்யேக உற்சாகம்; கூடுதலாய் ஒரு நேர்மறை எண்ணம். முன்பு கேள்விகள் எழும்பியபோது அக்கேள்விகள் எதிர்மறை தளத்திலும், எதிராளியை மடக்கிவிட வேண்டும் என்கிற நோக்கமும் கொண்டதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. விளங்கிக் கொள்ளும் ஒரு நோக்கம் மட்டுமே இருந்தது.இப்படி ஒரு மாற்றம் எப்படி தன்னுள் ஏற்பட்டது என்பதே கூட ஒரு கேள்வியாகி கேட்கத் தூண்டியது.
“குரு... எனக்குள்ள இப்ப ஒரு லேசான மனநிலை. எதிர் மறை எண்ணங்களே இப்ப எனக்குள்ள இல்லை. எல்லாமே நீங்க எனக்கு திருவடி தீட்சைன்னு ஒண்ணு கொடுத்த பிறகுதான். இதை ஒரு அதிசயமா நான் உணர்றேன். என் மன வெளிய எப்படி உங்களால இப்படி மாற்ற முடிந்தது?”“நல்ல கேள்வி கேட்டுருக்கே... நான் என் தலசக்திய உனக்கு சஹஸ்ராரம் வழியா கடத்தியிருக்கேன். மின்சாரம் மாதிரி அதுவும் கண்களுக்கு புலனாகாத ஒன்று.
அப்படி நான் பாய்ச்சிய சக்திதான் உன் ஏழு சக்க ரங்களான ‘மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம்’ அப்படிங்கற இந்த ஏழு சக்கரங்கள். அதாவது ஏழு இயக்க சக்திகள் உன் வாழ்வியல் முறைகளால ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இல்லாம, தன்னிச்சையாவும், ஒவ்வொண்ணும் ஒரு வேகத்துலயும் இருந்தது. நான் இப்ப தொடர்பு உண்டாக்கி எல்லா சக்கரமும் ஒரே வேகத்துல செயல்படும்படி செய்தேன். ஒரு யோகியால மட்டுமே இதைச் செய்ய முடியும். இம்மட்டுல ஒரு காரை ரிப்பேர் பண்ற மெக்கானிக் மாதிரிதான் நான்.
நான் அப்படிச் செய்யவுமே உனக்குள்ள ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு, ரத்த ஓட்டத்திலும் உணர முடியாத ஒரு மாற்றம் உண்டாகி, அதனால எண்ணங்களின் மூலக் கூடான மூளைலயும் தாக்கம் உருவாகி, அதனால குழப்பம், பதட்டம்கற எண்ணங்களுக்கு காரணமான செல்லெல்லாம் சக்தி இழந்தது; நம்பிக்கை, அமைதிக்கு காரணமான செல் பலம் பெற்றது. நீயும் என்கிட்ட அதுகுறித்தே கேள்வி கேட்டுகிட்டிருக்கே... இதை இப்படித்தான் நான் விளக்க முடியும்?”
“புரியுது குருவே... இதை விஞ்ஞானபூர்வமா நிரூபிக்க முடியுமா?”“நான் உணர்ந்து சொன்னதே ஒரு விதத்துல விஞ்ஞான பூர்வம்தான். உன்னுள் மாற்றம் ஏற்பட்டதை நீ உணர்ந்ததே அதுக்கு சாட்சி...”“எல்லாருக்கும் இப்படி செய்ய முடியுமா?”“ஒரு தேடல், குருபக்தி, நேர்மை, அறவழியில் நம்பிக்கை இது உள்ளவர்களுக்கே இதை செய்யமுடியும். குறிப்பா என்னைப் போன்ற குருவை சந்திக்கற விதி அவர்களுக்கு இருக்கணும்.
அதற்கு அவர்களின் முன்கர்மம் இடமளிக்கணும். இதெல்லாம் இல்லாம உனக்கேற்பட்ட இந்த அனுபவம் எல்லாருக்கும் சாத்தியம் இல்லை...”“புரியுது... பஞ்ச பூதங்களைப் போல இது பொதுவா எல்லாருக்குமானதா இருந்தா இந்த பூமியில எதிர்க்கருத்து கொண்டவங்களே இருக்க மாட்டாங்கதானே குரு?”அசோகமித்திரன் விடுவதாக இல்லை...
- இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|