சிறுகதை - ஆசை முகம் மறந்து போச்சே...



வேகமாய்த் தாண்டியவனைக் கழுத்து வலிக்கும் மட்டும் திரும்பிப் பார்த்தாள் மீனு. ப்ளூ சட்டைதான். எத்தனை வருட பழக்கம் இது? சாத்தியமற்றுப் போனதற்குப் பிறகும் நப்பாசையில் நெளிவுறும் ஆவல். ஒன்றிரண்டு முறை வேண்டுமானால் அரக்கப் பரக்க ஓடியதில் தவறவிட்டிருக்கலாம். ஆனால், உடலே அனிச்சைச் செயலாய்ப் பழகி விட்டிருந்தது.
உயரம், பைக், நீலச்சட்டை, அவனின் உடல்மொழி என மூளை மடிப்பில் கச்சிதமாக அமர்ந்திருக்கின்றன. தவற விட்டதேயில்லை.

அந்த ஊரில் இல்லை என்று தெரிந்தபின் எந்த ஊரிலாவது தெரிய மாட்டானா என ஆவல் மிகுந்துதான் போயிருந்தது. ப்ச்... எத்தனை முறை உருப்போட்டிருப்பாள்? பார்க்கப் போகும் நிமிடத்தையும் அதற்குப்பிறகுமான உரையாடலையும் உள்ளேயும் வெளியேயுமாக எத்தனை முறை நிகழ்த்திப் பார்த்திருப்பாள்?

சலிப்பாய் இருந்தது. மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. நனைந்தாலும் பரவாயில்லை என மறுபடியும் சன்னலருகே நெருக்கமாய் அமர்ந்துகொண்டாள். அந்த ஈரமும் குளிரும் வெம்மையை சிறிதேனும் போக்கக் கூடும்.சொட்டுச் சொட்டாய் இறங்கிய மழைத்துளிகளை விரல்களால் தட்டிக்கொண்டே இருந்தாள்.

முழங்கை வரை ஊடுருவி நனைத்ததில் சிலிர்த்துக் கொண்டே நனைந்த சாலையை வெறித்தாள். இன்னும் சிறிது தூரத்தில் இறங்க வேண்டும். மழை நிற்காதிருக்க வேண்டும் வீடு சேரும்வரை என வழக்கம்போல வேண்டிக் கொண்டாள். பாபு கத்துவான். ‘ரெண்டு நாளக்கி மூக்குறிஞ்சுட்டே கெடக்க... நின்னு வந்தா என்ன...’ என கடிந்துகொண்டே துண்டையும், துவட்டி முடிப்பதற்குள் டீயையும் நீட்டுவான்.

உரிமையும் காதலும் இல்லாத இடத்திலிருந்து பெறப்படும் அன்பு கொடுமையானது. திருப்பித் தர வேறெதுவும் வழி இல்லாமல் பொய் பிம்பமாகவே அந்த அன்பைத் தரவேண்டிய கட்டாயத்தை அவள் வெறுத்துக்கொண்டே அந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறாள். அதற்கான பதில்களாய் பலவற்றை மீனு, தானே சமைத்துக் கொண்டது உண்டு. தன் அதிகாரத் திமிர், சலித்துப்போன அவர்களது தாம்பத்யம், நாள்பட்ட இருவரின் முகம், ஒத்திசைவு இல்லாத ரசனைகள்... என அந்தக் கோடிட்ட இடங்களில் நிரப்பியவை எதுவும் அவளுக்கு உவப்பானதாயில்லை.

ஆனால், இந்த இடங்களில் கதிரவனின் பெயரை இட்டுக்கொள்ள அவளுக்கு வசதியாய்ப் பொருந்தியது. அது எல்லாக் கேள்விகளுக்குமான பதில் என அவளுக்குத் தெரியும். ஆனால், அவள் அதை விட்டுத்தரத் தயாராக இல்லை.அவ்வப்போது பிடிவாதமாய் பாபுவுடன் கதிரவனை ஒப்பு நோக்குவாள். பாபுதான் அத்தனையிலும் தேர்ந்தவன் என குரல் எழுப்பி தன்னையே மிரட்டிக் கொள்வாள். சிறிது நேரம் கழித்து மனதின் வெம்மை தாங்காமல் என் கதிர் எனக்கு ஸ்பெஷல்தான் என மூக்குநுனி பிடிவாதத்துடன் நகர்ந்து விடுவாள்.

கதிரின் காலம் என்பது பெரியம்மா முத்துப்பேட்டையில் சேர்மன் காம்பவுண்ட் மாடியில் குடியிருந்தபொழுது. கல்யாணி அக்கா கல்யாணத்தின்போது. மாடியில் போர்ஷன் போர்ஷனாய் நெருக்கித் தொடுக்கப்பட்ட கட்டடங்கள். குழம்பு கொடுத்து மருதாணிக் கிண்ணங்களை மொத்தமாய் பரிமாறிக்கொண்ட காலம். சுவரில் ஒட்டுக்காது வைத்து சண்டையைக் கேட்டு கிசுகிசுவென பகிர்ந்துகொண்ட சுகம். வீட்டில் எல்லாரும் மூத்தவர்கள். இவள் அப்போதுதான் செழித்திருந்தாள். திருமணத்திற்கு தாவணி வாங்கியிருந்ததில் பெரிய மனுஷத்தனமும் வந்து விட்டிருந்தது. அக்காக்களும், பெரியம்மா, சித்திகளும் இவளின் அழகுக்காக ஒரு ராஜகுமாரன் பொட்டுநகை கூட வாங்காமல் கவர்ந்து செல்லப்போவதாக கிளுக்கி சிரித்தார்கள்.

அக்கா, மாப்பிள்ளை பார்க்க போட்ட கண்டிஷன்களுக்கும் வந்து சேர்ந்த மாப்பிள்ளைக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து வீடு சிரிப்பில் அதிர்ந்தது. மீனு, தனக்கு எப்படி என ஒரு வடிவத்தில் உளைந்தாள். உயரமாய், அடர்த்தி மீசையாய், பைக்கில் வளைய ஒரு உருவம் மனதில் நின்றது.அப்போதுதான் கதிர் பூக்களைச் சுமந்தபடி வந்து சேர்ந்தான். அடுத்த போர்ஷனில்தான். கல்யாண காண்டிராக்டரின் மகன். மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்பா தொழிலிலும் எடுபிடியாய் அலைந்தான்.

அவனது உயரத்துக்கு மீனுஅண்ணாந்து பார்த்தெல்லாம் பேச முற்படவேயில்லை. மழையில் நனைந்து அகண்ட பாதங்களில் நுனிச் சிவப்புடன் ஈரச்சுருக்கங்களுடன் நகத்துக்குக் கீழே லேசாய் சுருண்ட முடிகளுடன் பார்வையில் பதிந்தது. அவனும் தன்னைப் பார்ப்பதும் பாராமலே புரிந்தது.அவ்வளவுதான். பற்றிக்கொண்டு விட்டது. வீட்டின் இரும்புக்கிராதியைத் திறப்பதுதான் சிக்னல். ஓடிச் சென்று வாசலை நோக்கிய சன்னலில் நிற்பாள். அவனால் திரும்பிப் பார்க்க இயலாது. அவள் அவனது முகம் பார்க்க முடியாதெனினும் டிப்டாப்பான சட்டை, பைக்கைத் திருப்பும் அழகு என முழுவதும் பார்த்துவிட்டு நகருவாள்.

அப்புறம் கேட் சிக்னல் புரிந்து கோலம் போட, மொட்டைமாடியில் துணி உலர்த்த, எடுக்க, பட்சணக் கூடை எடுக்கப் போக, கடைக்குப் போக துப்பட்டாவை எடுத்துப் போட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் முழுங்கியது... என காதல்செடி வளர்ந்தது. லேசாய் பேசினார்கள். உரசினார்கள். தனியே பூச்சரத்தை வைத்து அர்த்தத்துடன் பார்த்தாள். மீனுவுக்கு வெட்கமெல்லாமில்லை. நாட்கள் போய்க்கொண்டே இருக்கிறதே என அவஸ்தைதான்.

வாடகை நகை வாங்க ஒருநாள் பைக்கில் முதுகில் அழுந்த உட்காருகையில் அதிக சந்தர்ப்பத்தில் அத்தனை ஈரமாய் ஒரு முத்தம் கூட கன்னத்தில் விட்டுப்போனான்.  
கல்யாணத்தின் 48 மணிநேரமும் இத்தனை வருடம் நிலைக்கும்வரை அத்தனை நினைவுத் துணுக்குகள். முழுக்க முழுக்க அவனின் அசைவுகள், விரல்கள், பாதங்கள் என அசைபோடுதலில் ஒரு லயிப்பு.

வேகமாய் நெருங்கியபோது கூட குனிந்து அவன் பாதங்களையே பார்த்துக் கொண்டிருப்பாள். கண்ணோடு நேரிடக் கூட முயலாமல் அவன் பாதங்களில் நிலைத்துக் கிடந்த காலம்.
ஊருக்கு வந்து ஆறு மாதங்கள் வரை உருகி உருகி எழுதிக் கொண்டார்கள். பெரியம்மா வீடு மாற்றிப்போனாள். திடீரென மறு கடிதம் வரும்வரை பதில் போட வேண்டாமென எழுதியவன் காணாமல் போனான். யாரிடமும் கேட்க முடியவில்லை.

எல்லாம் வயதுக் கவர்ச்சி மட்டுமே; அவ்வளவு தீவிரமில்லை போல என எண்ணி சமாதானம் பண்ணிக் கொண்டாள். படுக்கையில் சில நாட்கள் அழுது தீர்த்து நிறுத்திக் கொண்டாள்.
காலேஜ் முடிக்குமுன் வேலை கிடைக்க, பாபுவை கொண்டு வந்து அப்பா நிறுத்தியவுடன் அவ்வளவு பிடித்திருந்தது. ஒரு நொடி நினைவில் வந்து போன கதிரை சுலபமாய் ஒதுக்கி, பார்த்துப் பார்த்து வாங்கிய புடவைகளுடன் ஆர்ப்பாட்டமாய் பாபுவை மணந்து கொண்டாள்.

பாபு அழகிலும் உயரத்திலும் சற்று குறைவே தவிர ஒரு வார்த்தை சொல்ல முடியாது. அது ஒரு பெரிய விஷயம் இல்லையென கருதுமளவு அவளும் குழந்தைப் பருவத்தை தாண்டியிருந்தாள்.
ஆனால், அன்று இரவு படுக்கை நெருக்கத்தில் கவிழ்ந்திருந்த அவனைப் பார்த்தபொழுது என்றைக்கும் அவளுக்கானவனாய் அவனை உணர முடியப் போவதில்லை என மீனுவுக்குப் புரிந்துபோனது. கதிரைத்தவிர வேறெதுவும் தன்னைக் கிளர்த்துவது இல்லையெனவும்.

முதலில் எரிச்சலாய் இருந்தாலும் புரிந்துகொண்டு மூன்று வேளை உணவைப்போல பழகிக் கொண்டாள். அந்த நெருக்கம் கூட இல்லாததால்தான் ராகுல் பிறக்கக் கூட ஐந்து வருடம் தாமதம் என நினைத்துக் கொள்வாள்.

எல்லோரும் பேசிப்பேசி ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகே பிறந்தான். ஆனால், கதிர் முன்னெப்போதும் விட சிம்மாசனமிட்டு உட்கார்ந்து விட்டான். கைகளை மடிக்காமல் நேராக நீட்டிக்கொண்டு கதிர் பைக்கை ஒரு ஸ்டைலாக ஓட்டுவான். அந்த மாதிரி  ஓட்டிக் கூட யாரையும் இதுவரை பார்க்கவில்லை. பைக்கில் பயணிக்கும் அவன் சாயலுடைய அனைவரிலும் தேடிக் கொண்டுதானிருக்கிறாள் இத்தனை வருடங்களாய்.

நிறுத்தத்தில் இறங்கி  இரண்டடி வைக்கு முன்னே பாபுவின் கார் நின்றது. ராகுலின் ஸ்கூல் பஸ் வருகிற நேரம்.‘‘நனைஞ்சிட்டு வருவனு தெரியும். ஏறு...’’‘‘காபி சாப்பிட்டு போலாம்...’’‘‘அப்படியே ராகுலையும் கூட்டிக்கிட்டு போயிடலாம். இன்னும் பஸ் வர 15 நிமிஷம்தான் இருக்கு...’’காபி ஆர்டர் பண்ணும்போதே பாபுவின்  நண்பர்கள் சூழ ஆரம்பித்து விட்டனர். எல்லோரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். கபிலேஷின் அம்மா மீனுவை நெருங்கினாள்.‘‘என்ன... சீக்கிரம் வந்துட்டீங்க போல...’’மீனுவுக்கு ஏனோ அவளைப் பிடிப்பதேயில்லை. ‘ம்...’ என தலையசைத்து விட்டு பேசாமல் காபியைக் குடிப்பதில் முனைந்தாள்.

பின்னாலிருந்து அவளது கணவனும் வர பாபுவும் சேர்ந்து மூவருமாய் ஸ்கூலைப்பற்றி ஒரே சளசள...  தலை நிமிராமலிருந்ததில் அவர்களின் குட்டிப்பாப்பா பாவமாய் நின்றிருந்தது பார்வை வட்டத்தில் பதிந்தது. ‘வா’ என அழைத்தாள். வரவில்லை. கைப்பையைத் திறந்து சாவிக்கொத்தையும் சாக்லேட்டையும் காட்ட, தயக்கமாய் அடக்கமுடியாத ஆசையுமாய் வந்தது.
சின்னச் சின்னதாய் விளையாட, நெருங்கிக் கொண்டது. அவர்கள் பேச்சு முடியவேயில்லை. மீனு குழந்தையின் விரலைப் பற்றியபடி மழையிடம் கூட்டிப் போனாள். கூரையின் விளிம்பிலிருந்து சொட்டிய துளிகளை கையால் சிதறியடித்த படி இரண்டு பேரும் இழைந்து கொண்டார்கள்.  

பேச்சு நின்று மூவரும் இவர்களைக் கவனித்ததைக் கண்டு மீனு விளையாட்டை நிறுத்திக் கொண்டாள்.நாளைக்கு குழந்தைக்கு சளி பிடித்தால் கஷ்டம். போதும். ஸ்கூல் பஸ் வளைவில் திரும்பியது. கபிலேஷ் அம்மா நெருங்கி, ‘‘லோச்சுக்குட்டி... வா... போலாம்...’’ என்றாள்.

மீனு கன்னத்தைக் காட்டி ‘‘கிஸ்...’’ என்றாள். மழையின் ஈரத்துடன் பாப்பா கன்னத்தில் பதித்தது. குளிர்ந்து போனது மீனுவுக்கு. பெண்குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்டிருக்கலாமோ? வாழ்வு இவ்வளவு வெறுமையாய் இருந்திருக்காதோ?

‘‘பாப்பா பேரென்ன..?’’‘‘னீன... னோசனி...’’புரிபடவில்லை. கடைசிநேர பரபரப்பு. திசைக்கொன்றாய் பிரிந்து போயினர். பஸ்ஸில் இறங்கிய அழுக்கு ராகுலை ஏற்றிக் கொண்டு கிளம்பியது
மீனலோசனியின் கார்.கபிலேஷ் அம்மா ‘னீன னோசனி’யை காருக்குள் மடியில் அமர்த்தியபடி கபிலேஷ் அப்பாவைப் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘அவ இன்னிக்கும் உங்களைக் கண்டுக்கவேயில்லல..?’’

கபிலேஷ் அப்பா என்கிற கதிரவன் தன் ஷூவைக் கழற்றி விட்டு வேதனை பொதிந்த முகத்துடன் ஆக்சிலேட்டரை அழுந்த மிதித்தான். மீனலோசனி மறுபடியும் தன்னைக் கடந்த அந்த யாரோ நீலசட்டை அணிந்தவனின் பைக்கை கழுத்து வலிக்குமட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு அமர்ந்தாள்.

 - சவிதா