அவதார் திருவிழா!



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’, சுருக்கமாக ‘அவதார் 2’.  ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மொழியில் பெரிய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்குமோ, அதே அளவிலான எதிர்பார்ப்பை உலகமெங்கும் கிளறியிருக்கிறது இந்தப் படம். 2009ல் வெளியாகி சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளி, உலகின் நம்பர் ஒன் வசூல் ராஜாவாகத் திகழும் ‘அவதார்’ படத்தின் அடுத்த பாகம்தான்  இது.

வருகின்ற டிசம்பர் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் உட்பட 160 மொழிகளில் வெளியாகிறது ‘அவதார் 2’. திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு மொழிகளில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுதான். ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், ஸ்கிரீன் எக்ஸ், 2டி, 3டி, எம்எக்ஸ்4டி3டி, ரியல்டி 3டி, டால்ஃபி சினிமா... என அதிக வடிவங்களில் வெளியாகும் முதல் திரைப்படமும் இதுவே. தவிர, அதிக ஸ்கிரீன்களில் வெளியாகப்போகும் திரைப்படமும் இதுதான்.

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான ‘அவதாரு’ம், வெளிவரப்போகிற ‘அவதார் 2’வும் சினிமா துறையில் மிகப்பெரிய புரட்சிகளை நிகழ்த்தியிருக்கின்றன. ஆம்; ‘அவதார்’-க்கு முன்பு 3டி தொழில்நுட்பத்தில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால், அந்தப் படங்கள் பார்வையாளர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மட்டுமல்ல, 3டியின் மீதும் பார்வையாளர்களுக்கு வசீகரமும் உண்டாகவில்லை. அதனால் அங்கு ஓன்றும் இங்கு ஒன்றுமாக எப்போதாவது 3டியில் படங்கள் வெளிவந்தன. தோல்வியடைந்த ஒரு தொழில்நுட்பமாகவே 3டி கருதப்பட்டது.

‘அவதாரின்’ வருகைக்குப் பிறகு 3டியில் பெரிய புரட்சியே நிகழ்ந்தது. ஆம் ; 3டி தொழில்நுட்பத்தின் முழுமையை, வசீகரத்தை, காட்சி விருந்தை பார்வையாளர்களுக்கு ஆழமாக உணர்த்தியது ‘அவதார்’.  கதையைத் தாண்டி காட்சி இன்பத்துக்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று திரைப்படம் பார்ப்பதையே பேரனுபவமாக மாற்றியது. மட்டுமல்ல,‘அவதார்’ கொடுத்த நம்பிக்கையால் 3டியில் வரிசையாகப் படங்கள் வெளிவர ஆரம்பித்தன. இது இன்றும் தொடர்கிறது.

ஆனால், ‘அவதார் 2’ வெளிவருவதற்கு முன்பே திரையரங்குகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ‘அவதார் 2’ படத்தை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் அதற்குரிய புரொஜக்‌ஷன் சிஸ்டம், அகண்ட திரை, சவுண்ட் சிஸ்டம் என எல்லாமே நவீனமாக வேண்டும். அதனால் உலகமெங்கும் பல இடங்கள் ஐமேக்ஸ் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
அந்த ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படும் முதல் படமே ‘அவதார் 2’தான். இதுபோக பல திரையரங்குகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்படுகின்றன. தவிர, படம் வெளிவர 25 நாட்கள் இருக்கும் முன்பே டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை டுவிட்டரில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கிவிட்டனர் ரசிகர்கள்.
முதல் பாகத்தில் இந்த உலகிலிருந்து அதியற்புதமான பண்டோரா எனும் உலகுக்கு அழைத்துச் சென்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரோன், ‘அவதார் 2’ல் நம்மைத் தண்ணீருக்கு அடியில் அழைத்துச் செல்லவிருக்கிறார்.

தண்ணீருக்கு அடியிலான காட்சிகள் நம்பகத்தன்மையுடன் வர வேண்டும் என்பதற்காக உலகின் மிக ஆழமான, ஆபத்தான கடற்பகுதியான மரியானா டிரெஞ்ச்சிற்கு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயணம் செய்திருக்கிறார் ஜேம்ஸ். அங்கே அவருக்குப் பிடித்த இடங்களைப் புகைப்படம் எடுத்து வந்து, அதை மாதிரியாக வைத்து ‘அவதார் 2’வை உருவாக்கியிருக்கிறார். 

மரியானா டிரெஞ்சுக்கு பயணம் செய்யாமலே கிராபிக்ஸ் முறையில் அவர் தண்ணீருக்கு அடியிலான பகுதிகளை உருவாக்கியிருந்தாலும் அதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. கிராபிக்ஸே என்றாலும் அதில் ஒரு உண்மை வேண்டும் என்பதற்காக மரியானா டிரெஞ்ச் வரை பயணித்த ஜேம்ஸ் கேமரோனின் சினிமாவின் மீதான காதல் திரைப்படம் இயக்கப்போகும் ஒவ்வொருவருக்கும் பாடம்.  

இவ்வளவு அர்ப்பணிப்புடன் இயங்குவதால்தான் ஜேம்ஸின் படங்கள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன. 1994லேயே ‘அவதார்’ படத்துக்கான திரைக்கதையை எழுதிவிட்டார் ஜேம்ஸ். ஆனால், அவரது கற்பனைகளைக் காட்சிகளாக்க அப்போதைய தொழில்நுட்பம் போதுமானதாக இல்லை. அவர் எதிர்பார்த்த தொழில்நுட்பம் கைக்குக் கிடைத்த பிறகே ‘அவதார்’ உருவானது. இதே மாதிரிதான் ‘அவதார் 2’க்கும் நிகழ்ந்திருக்கிறது.

நடிகர்களின் உடல் அசைவுகளை, நடிப்பை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு மாற்றும் முறைக்கு ‘மோசன் கேப்சர்’  என்று பெயர்.
‘அவதார் 2’வின் பெரும்பாலான காட்சிகள் தண்ணீருக்குள் அரங்கேறுகிறது. மோசன் கேப்சர் முறையில் தண்ணீருக்கு அடியில் ஷூட்டிங் செய்வதற்கான சரியான தொழில்நுட்பத்துக்காக ஜேம்ஸ் கேமரோன் காத்திருந்ததால்தான் இந்தப் படமும் தாமதமானது. இல்லையென்றால் 2014 லேயே ‘அவதார் 2’வை எடுத்து வெளியிட்டிருப்பார் ஜேம்ஸ்.

தவிர, ஜேம்ஸ் கேமரோனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘சோனி’ நிறுவனம் ‘வெனிஸ்’ என்கிற கேமராவைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. இந்த கேமரா மூலம்தான் ‘அவதார் 2’ மற்றும் ‘அவதார் 3’-ஐ ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஸல் கார்பென்டர். ‘டைட்டானிக்’ படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் ரஸல் என்பது குறிப்பிடத்தக்கது.

2800 முதல் 3200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘அவதார் 2’ உருவாகியிருப்பதாக இணையத் தகவல்கள் சொல்கின்றன.  ஆனால், இவ்வளவுதான் பட்ஜெட் என்று ஜேம்ஸ் கேமரோன் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்தப் படம் இதுவரை வெளியான படங்களின் வசூல் பட்டியலில் நான்காவது, ஐந்தாவது இடத்தைப் பிடித்தால் கூட பொருளாதார ரீதியாக தோல்வி என்று சொல்லியிருக்கிறார் ஜேம்ஸ்.

மட்டுமல்ல, ஒருவேளை எதிர்பார்த்த அளவுக்கு ‘அவதார் 2’ வசூலை ஈட்டவில்லை என்றால் ஏற்கனவே எடுத்து முடித்து 2024ல் வெளியாகவிருக்கும் ‘அவதார் 3’ உடன் நிறுத்திவிடுவார்.
அவரது கற்பனையில் சூல் கொண்டிருக்கும் ‘அவதார் 4’, ‘அவதார் 5’ வராது.

த.சக்திவேல்