அரண்மனை குடும்பம் - 47



மறுபுறம் குலசேகர ராஜா போனை கட் செய்திட, மாரப்ப வாத்தியும் அந்த செல்போனை அருகிலிருந்த போதிமுத்துவிடம் திரும்பித் தந்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.
ஜல்லியும் அருகில் வந்த நிலையில், “ஆசானே, என்னா யோசனை... மருந்து வேலை செய்யுதாமா?” என்று கேட்டான்.“நல்லா செய்யுதுடா... அது எப்படிடா செய்யாம போகும்? எத்தினி பேருக்கு கொடுத்துருப்பேன்... ஆனா, இந்த காசுக்காரன் அதப்பத்தியே பேசாம அந்த வடக்கத்திகாரிய கொல்றதுலயே குறியா இருக்கான்...”
“பாவம் அது... எங்கையோ பொறந்து இங்க வாக்கப்பட்டு இப்ப சாவவும் போவுதா ஆசானே?”

“அதுக்கு நல்ல விதிடா... அதெல்லாம் சுலபத்துல சாகாது...”
“அது சாகட்டும்... சாகாம போகட்டும்... நமக்கு பணம் வந்துடும்தானே?”
“அதுவும் சுலபமில்ல... வடக்கத்திகாரியயும் என் மூலமாவே கொல்லப் பாக்கறான்... அப்பதான் பணம் வரும்...”
“அப்ப அதுக்கும் ஒரு ரேட்ட போட்டு இறங்கிட வேண்டியதுதானே?”
“இறங்கறது பெருசில்ல... ஜெயிக்கணும்...”“ஏன் ஆசானே... உங்களால முடியாதா?”

“ஒரு பருந்தால கோழிக் குஞ்சுங்கள தூக்க முடியும். கிடாவைத் தூக்க முடியுமா?”
“அது எப்படி... பருந்த விடவே கிடா வலுத்ததாச்சே?”“என்னாலயும் எல்லாத்துலயும் இறங்கிட முடியாது. சாகற விதி உள்ளவனுக்குதான் நான் கத்தி. அதே மாதிரி கஷ்டப்பட்ற விதி உள்ளவனுக்கு நான் கருவி. மத்தவங்கள என்னால எதுவும் பண்ண முடியாது...”“என்ன ஆசானே இப்படிச் சொல்றீங்க... உங்களால ஆகாததே இல்லன்னுல்ல நினைச்சுகிட்டிருக்கோம்...”
“ஹூம்... உங்கள மாதிரி ஏப்ப சாப்பைய தாண்டா என்னால அப்படி நினைக்கவைக்க முடியும். எல்லாரையுமில்ல...”மாரப்ப வாத்தி அவர்களை ஏப்ப சாப்பை என்று சொல்லவும் இருவரிடையேயும் சற்று அதிர்ச்சி.

அதை சற்று கேவலமாகவும் உணர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதோடு, “ஆசானே... என்ன இப்படி சொல்லிட்டீங்க? மலைய பாக்கற மாதிரில்ல பாத்தோம். இப்ப நான் சாதாரண கூழாங்கல்லுங்கற மாதிரி பேசறீங்களே...”“போதுண்டா... பேச்ச நிறுத்துங்க! நான் அல்ப வித்தைக்காரன். இந்த வித்தைக்காரங்க யாரும் எப்பவும் பெருசா கௌரவமா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது. குப்பையைப் பொறுக்கி அதை காசாக்கி வாழறவங்க மாதிரிதான் நான்.

அந்த அரம்மணகாரன் முழிச்சிக்கிடுவாம் போல தெரியுது. அவன் முழிச்சிக்குமுன்ன காசக் கறந்துகிட்டு இந்த மலைய விட்டு பறந்துடணும்...”
“அப்ப இந்த மண்ணுல வாழ முடியாதா?”“காசு வேணும்னா வாழமுடியாது. வேண்டாம்னா வாழலாம். என்ன சொல்றீங்க..?”“காசுதான் வேணும்... இதுநா வரை பட்டதெல்லாம் போதும்...”“அப்ப இனி என்ன... கேள்வி கேக்காம அமைதியா நான் சொல்றத மட்டும் செய்யுங்க...”கட்டளைக் குரலில் சொல்லிவிட்டு ஒரு பீடியை பற்றவைத்துக் கொண்ட வாத்தி, செருமலோடு குகைக்கு வெளியே சென்று வனப்பரப்பைப் பார்த்து சோம்பல் முறித்தார்.

அப்போது குறிப்பிட்ட திசையில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் பூபால்தாஸ் சாமியார் தும்பை வெளுப்பான மாதிரி அங்கியில் நேராக மாரப்ப வாத்தியைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார்!
அவரைப் பார்க்கவும் வாத்திக்கு சுருக்கென்றது. பின்னாலேயே வந்த ஜல்லியும், போதிமுத்துவும்கூட அவரைப் பார்த்தனர். வாத்தி மெல்லப் பதற்றமடைந்தவராகி அப்படியே நேர் எதிர்த் திசையில் அங்கிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார். பூபால்தாஸ் சாமியார் முகத்தில் முதல் முறையாக ஒரு மென் சிரிப்பு.

போதிமுத்துவிடமும், ஜல்லியிடமும் மட்டும் குழப்பம்!“யாருவே இது... ஏன் நம்ம ஆசான் இப்படி ஓட்றாரு?” என்று போதி ஜல்லியிடம் கேட்க, ஜல்லியும், “இவரு ஏற்காட்ல சேட்டு எஸ்டேட்ல இருக்கற வடக்கத்தி சாமியார். ஆனா, இவரைப் பாத்து ஆசான் ஏன் ஓட்றார்னுதான் புரியல...” என்றான்.“சல்லி... நாம  கோடீஸ்வரனாகப் போறதா நினைச்சேன். ஆனா, இப்ப ஆசான் பேசினதையும், ஓட்னதையும் பாத்தா எல்லாமே தப்பா தெரியுது... நீ என்னா சொல்றே?”“இல்லடா... ஆசான் உட மாட்டாரு. நம்பிக்கையா இரு. நாம கோடீஸ்வரனாகறோம்...” என்றான் உறுதியான குரலில்!பங்களா போர்ட்டிகோவில் தேங்கி நின்ற காரில் இருந்து கணேசராஜாவும், மஞ்சுவும் சிரித்தபடியே இறங்கி உள்ளே வந்தனர்.

அந்தக் காட்சி வேலைக்காரர்களில் இருந்து சகலரையும் வியப்பில் புதைத்திருந்தது.முகம் கொள்ளாத சிரிப்போடு ஓடி வந்தாள் சுந்தரவல்லி. கூடவே குலசேகர ராஜா! தங்கள் அறைக்குள் இருந்து கைலாசராஜாவும் கஸ்தூரியும் கூட வந்தனர். கைலாசராஜா கணேச ராஜாவை மிக ஆழமாகப் பார்த்தார்.

“என்னப்பா பாக்கறீங்க?”
“எங்க போய்ட்டு வரீங்க..?”
“சும்மா ஜாலியா சினிமாக்கும், ஹோட்டலுக்கும்தாம்ப்பா...”
“என்ன திடீர்னு?”

“என்னமோ தோணிச்சு... ஏம்ப்பா... என் மாமன் மகளோட நான் போகக் கூடாதா..?”“இல்ல... உன் பொண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு எப்படி போனேன்னுதான் கேக்க வந்தேன்...”
“அவதான் கர்ப்பமா இருக்காளேப்பா... அவளக் கூட அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுடலாம்னு இருக்கேன்...”கணேச ராஜா அப்படிச் சொல்லும்போது கச்சிதமாக ரத்தியும் தியாவுடன் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு அங்கே வந்தாள்.அவளுக்கும் அவன் பதில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“என்னப்பா சொல்றே... இத்தன நாளா இல்லாம இப்ப எங்க இருந்து வந்ததுப்பா அவளுக்கு வீடு?”கைலாசராஜா கண்ணாடியை கழற்றி துடைத்துக் கொண்டே கேட்டார்.“ஏன்பா இல்லை... காலைல கூட அவ அத்தை கூட பேசினோம். அம்மாதான் இறந்துட்டாங்க. மத்தபடி உறவுக்காரங்கல்லாம் இருக்காங்கப்பா...”“அப்ப இரண்டாவது பிரசவம் இங்க இல்லங்கறியா?”
“முதல் பிரசவம்தான் தாய்வீட்ல நடக்கல - இதாவது நடக்கட்டுமே?”
“உன் பொண்ணு?”

“அவளும் அவ கூடவே போய் இருக்கட்டும்...”“படிப்பு?”
“நாக்பூர் நம்ம சேலத்த விடவே பெரிய சிட்டிப்பா... அங்க பெரிய பெரிய ஸ்கூல் எல்லாம் இருக்கு.சேர்ந்து படிக்கட்டும்...”
“நல்லா யோசிச்சுதான் சொல்றியா?”“இதுல யோசிக்க என்ன இருக்குப்பா... நான் முடிவெடுத்துட்டேன். அவ்ளோதான்...”
அவன் அழுத்தமாய் சொல்லும் போது ரத்தியின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. குலசேகர ராஜாவும் சுந்தரவல்லியும் சற்று பிரமிப்பில் இருந்தனர். மஞ்சு சற்று தெனாவட்டாக தெரிந்தாள்.
இடையே ரத்தி கண்ணீரைத் துடைத்தபடியே “ஜீ... கொஞ்சம் வாங்க...” என்று தன் அறை நோக்கி தியாவோடு நடந்தாள். அறைக்குள், “ஜீ... என்னாச்சு உங்களுக்கு? நீங்க... நீங்கதானா?” என்றாள்.

“என்ன ரத்தி... நான் நான்தான்... உனக்கு அதுல என்ன சந்தேகம்?”“இல்ல... நிச்சயமா இல்ல... நாம ஏற்காடு போகப் போறதா சொல்லிட்டு இப்ப என்ன நாக்பூருக்கு அனுப்பப் போறதா சொல்றீங்களே... எப்படி ஜீ..?”“அதுவா... கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன். நீயும் இங்க ஒட்டாம ஒரு பயத்தோடதானே இருக்கே? யாரோ உன்னையும், என்னையும் கொல்லப் பாக்கறதாவும் சந்தேகப்பட்றே! இப்படி ஒரு நிலைல நீ பயத்தோட எதுக்கு இங்க இருக்கணும்னு தோணிச்சு... அதான்!”

“இப்பவும் எனக்கு அந்த பயம் இருக்கு ஜீ... சொல்லப்போனா அது அதிகமாயிருக்கு. இந்த நிலைல நீங்க என் கூட இருக்கறதுதானே எனக்கு பலம்?”
“சரி ரத்தி... நீ உன்னையும் குழப்பிகிட்டு என்னையும் குழப்பறே. கொலை அது இதுன்னு என்னையும் பயமுறுத்தறே... அதனால நீ கொஞ்ச நாள் விலகித்தான் இரேன்... என்ன இப்ப?”
“நான் விலகறது இருக்கட்டும்... என்ன ஜீ திடீர்னு மஞ்சு மேல பாசம்?”

“பாசமா... நோ நோ... காதல்னு சொல்!”
அவன் வார்த்தைகள் ரத்தியைக் கீறி அறுத்தது.“ஜீ... என்ன சொல்றீங்க?”
“அதான் சொன்னேனே காதல்னு... காதல்னா தெரியாதா உனக்கு?”
“ஜீ... என்னாச்சு ஜீ... நீங்களா இப்படி எல்லாம் பேசறீங்க?”“நானேதான்... எனக்கு எதையும் மூடி மறைக்கத் தெரியாதுன்னுதான் உனக்குத் தெரியுமே... அதான் போட்டு உடைச்சிட்டேன்...”
“அப்ப நேத்து பேசினதெல்லாம்..?“என்ன பேசினேன்?”

“யாரும் நம்பள பிரிக்க முடியாது... நான் எப்பவும் உன் கணேஷ்தான்னு சொன்னீங்களே..?”
“இப்பவும் சொல்றேன். நான் உன் கணேஷ்தான்! அதே சமயம் மஞ்சுவையும் ஏத்துக்கறதா முடிவு செய்துட்டேன்...”
“இரண்டாம் தாரமாவா?”
“ஆமாம்...”
“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்...”

“அப்ப இப்பவே வீட்டை விட்டு வெளியேறிடு... கோர்ட்டுக்கு போ. கேஸ் ஃபைல் பண்ணு... போராடு... நீயா நானான்னு
பாத்துடுவோம்...”“எனக்கு யாருமில்லங்கற தைரியத்துல பேசறீங்களா ஜீ?”
“ரத்தி... ஒரு கூட்டமே உன் பின்னால இருந்தாலும் இதுதான் என் பதில். நான் மஞ்சுவை முதல்லயே கல்யாணம் பண்ணியிருக்கணும். விதி உன்னை என் கண்ணுல காட்டி நீ வந்துட்டே... இப்ப அதே விதிதான் மஞ்சுவுக்கு வாழ்வு கொடுங்குது. இந்த முறை நான் விட்றதா இல்லை...”
அவன் பேச்சு ரத்தியை மூர்ச்சை அடையவே செய்து விட்டது. யாருக்கும் தெரியாதபடி ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சு முகத்திலோ வெற்றிப் புன்னகை!

(தொடரும்)

மண்ணாங்கட்டியார் அசோகமித்திரன் தலைமேல் ஒரு காலை வைத்த நிலையில், மற்றொரு காலால் அவர் தரைமேல் நின்ற விதம் ஒரு குரு தன் சீடனுக்கு தன் அருளைக் கடத்தும் ஒரு அரிய செயலாக ஆகியது!ஆதிசங்கரரிடம் பல சீடர்கள். அதில் தோடகர் என்று ஒரு சீடர். மற்ற சீடர்கள் போல் இல்லாமல் மந்த புத்தி உடையவராய், கரித்துண்டாய்த்தான் விளங்கினார். மற்ற சீடர்களின் கேலிக்கும் ஆளானார்.

ஒரு நல்ல குரு என்பவர் கருணையும் இதுபோன்ற சீடர்கள் மீதே இருக்கும். ஆதிசங்கரரும் ஒரு நாள் தோடகரை அழைத்து அவர் சிரம் மேல் பாதம் வைத்து உருக்கமாய் ஆசீர்வதித்தார்.
அதன்பின் தோடகரிடம் பெரும் மாற்றம். அது ‘தோடகாஷ்டகம்’ என்கிற ஒரு தோத்திரத்தையே அவர் படைக்குமளவு அவரை ஞானியாக்கிற்று. இன்றும் அது எல்லோராலும் துதிக்கப்படுகிறது. ஒரு குரு நினைத்தால் துரும்புகளைத் துணாக்க முடியும் என்பதற்கு தோடகர் மகா சாட்சி! இன்று மண்ணாங்கட்டியாரும் அசோகமித்திரனை அதுபோல ஆக்கிட விரும்பியே சிரசின் மேல் பாதத்தை வைத்து, அசோகமித்திரனின் சிரசிலுள்ள சகஸ்ராரத்தில் தன் பாதம் வழியே ஒரு தூண்டலை நிகழ்த்தியதில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு சிலிர்ப்பு அசோகமித்திரனிடம்.
மண்ணாங்கட்டியார் பாதத்தை விலக்கவும் நிமிர்ந்தார் அசோகமித்திரன்.

மனதில் ஓர் இனம்புரியாத ஆனந்த உணர்ச்சி. குழப்பம், சலிப்பு, தேடல் என்கிற பலப்பல உணர்வுகளும் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. உடம்பிலும் ஒரு மிக லேசான நிலை.
“அசோகமித்திரா... உன் பெயருக்கு பொருள் தெரியுமா உனக்கு?”  நிமிர்ந்தவரைப் பார்த்துக் கேட்டார் மண்ணாங்கட்டியார்.“சோகமில்லாதவன்னு சொல்வாங்க குரு...”“ஆமாம்... நீ இப்ப துளியும் சோகமில்லாதவன்... மட்டுமல்ல; எல்லாருக்கும் மித்திரன்... அதாவது நண்பன்! சொல்லப் போனா உன் பெயருக்கேற்ற ஒரு நிலை இன்னிக்குதான் உனக்கு கிடைச்சிருக்கு. ஆமாம்தானே?”
“ஆமாம் குரு... இப்படி ஒரு லேசான, குழப்பமில்லாத, தெளிவான, திட மனநிலைல நான் இதற்குமுன்பு இருந்ததே இல்லை..!”
“காரணம் என் திருவடி தீட்சை... எனக்கு காராளசித்தர்ங்கறவர் கொடுத்தார். உனக்கு இப்ப நான் கொடுத்திருக்கேன்...”

“நான் பாக்யசாலி. கொடுத்து வெச்சவன் குரு...”“அதுதான் உண்மை. நமக்கு கிடைக்கற எல்லாமே எப்பவோ யாருக்கோ நாம கொடுத்ததுதான்! உன் பூர்வபுண்ணியம்தான் உன்னை சர்ப்ப ஆராய்ச்சி செய்யத் தூண்டியது. அதனாலதான் சந்திரமௌலீஸ்வர கனபாடிகளையும் சந்திச்சே... அவரால இந்த நாகேந்திர நல்லூருக்கும் வந்தே. என்னையும் பார்த்தே. இப்ப நீ ஒரு யோகியாவும் ஆயிட்டே...இனி நீ எந்த கேள்வியும் கேட்கத் தேவையில்லை.

உனக்கே எல்லா விடையும் தெரியும். அதுக்கு சாட்சியா நான் இப்ப உன்ன கேள்வி கேட்கப் போறேன். நீ பதில் சொல்லப் போறே! கேட்கட்டுமா?”“இப்படி ஒரு பரிசோதனை தேவையா குரு?”“இது பரிசோதனை இல்லை... பாட்டு கத்துக்கொடுத்த ஒரு குரு பாடச் சொல்லி கேட்பது போன்றது இது. சந்தோஷத்துக்காக மட்டுமில்ல... இது ஒரு பயிற்சி...”“ஆமாம் குரு. பயிற்சி என்பது எல்லா விஷயத்துலயும் மிக முக்கியமானது. தியானப் பயிற்சி, தவப் பயிற்சி... ஏன், தினமும் தூங்கறது கூட மரணத்துக்கான பயிற்சிதான். பயிற்சிதான் மெருகேற்றும்...”“பயிற்சிக்கு சரியான பொருள் உனக்கு தெரிஞ்சிருக்கு. சரி, நான் கேள்விகளைக் கேட்கட்டுமா?”“கேளுங்க. தெரிஞ்ச விடையை சொல்றேன். பிழை இருந்தா திருத்துங்க...”“உன் தன்னடக்கம் வாழ்க... நான் காலால உன் சிரசை மிதிச்சு அதை திருவடி தீட்சைன்னு சொன்னேனில்லியா?”
“ஆமாம்...”“அது சரியா?”

“மிக சரி... உடல் உறுப்புகள்லயே பிரதான உறுப்பு கால்கள்தான். அதுல மகா பிரதானமானது பாதம்! எப்போதும் அதுதான் பூமியோட தொடர்புல இருக்கு. உடம்பு சுமையைத் தாங்குவதும் அதுதான். மிக மிருதுவும் அதுதான். வலிமையானதும் அதுதான்! எவ்வளவு நடந்தாலும் பாதம் தேய்வதேயில்லை.இந்த பாதங்களால்தான் மனிதன் நகர முடிந்தவனாகிறான். இல்லேன்னா இவனும் விருட்சமும் ஒண்ணாயிடும். நகர்றதுங்கற அசைவுதான் வாழ்வு! அந்த வகையில் மனிதனின் வாழ்வுக்கு முதலும் முடிவுமானதே கால்களும், பாதங்களும்தான்!

கண் இல்லாமல், காது கேட்காமல் கூட வாழ்ந்திடலாம். கைகள் இல்லாமல் கூட கால்களையே கைகளாக்கி வாழ்ந்துடலாம். ஆனால், கால்கள் முடமானாலோ இல்லை வெட்டுண்டாலோ ஒரு மனிதனின் நிலை அவ்வளவுதான். பிறர் தயவில்லாமல் அவனால் வாழவே முடியாது.அதனால் உறுப்புகளில் அதுவே மேலானது. இந்த உண்மை தெரியறதுக்காகத்தான் காலைத் தொட்டு வணங்குவது. காலில் விழுந்து வணங்குவதுங்கற பழக்க வழக்கம் உருவானது.

அதுலயும் குருவின் கால்கள் மேலுக்கும் மேலானது. அந்த கால்கள் இந்த பூமி எங்கும் நடந்த கால்கள். ேத்திரங்களை மிதித்த கால்கள். நதிகளிலும், குளங்களிலும் திளைத்த கால்கள்! பணிவைப் போதிக்கும் கால்கள்! இறைவனுடைய கால்களை விடவே மேலான கால்கள்! அப்படி ஒரு மேலானதால்தானே மேலான அருட்தீட்சையை வழங்க முடியும்...”
அசோகமித்திரன் திருவடி தீட்சை நிமித்தம் கால்களைப் பற்றி சொன்ன கருத்தால் மண்ணாங்கட்டியார் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.

“சபாஷ்... இது மிக மேலானதாலதான் இதைக் கொண்டு மிதிக்கறது, உதைக்கறது பெரிய தவறாயிடுது. கால்களால் ஆன பயணங்களால்தான் அறிவே பிரகாசமாகுது. ஆக, கால்களை தூய்மையாவும், வலிமையாவும் வெச்சிருக்கறவன்தான் ஞானி. நம் வருணத்துல் நிலத்துல நடந்து திரிஞ்சு பாடுபட்ற சூத்ரன்கறவன் காலோட அம்சம்! சூத்ரன்கறது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு கணிதச் சொல்! சூத்திரமறிந்தவன்கற பொருளில் வரும் வார்த்தை!

‘நிலத்தை பகுத்தல், பிரித்தல், பாத்தி கட்டல், நீர் நிறைத்தல், காலமறிந்து விதைத்தல்’னு நிலம் சார்ந்த எல்லாமே கணக்கு தான். அந்த கணக்கன்தான் சூத்ரன். அந்த சூத்ரன்தான் பூமியில பெரியவன்.சூத்ரனையும் ஞானியையும் பெரியவனாக்குவதே கால்கள்தான். தமிழ் மொழியிலயும் கால் வாங்கும் எழுத்து, தான் சார்ந்த சொல்லோட பொருளை அப்படியே தூக்கி நிறுத்திட்றத பார்க்கலாம்.உதாரணமா வனம். அதுக்கு கால் முளைச்சா வானம். இப்படி  சிந்திச்சிகிட்டே போகலாம். சுகமா இருக்குல்ல..?’’மண்ணாங்கட்டியாரும் தன் பங்குக்கு காலுக்கான விளக்கத்தைத் தந்த நிலையில் அங்கே ஒரு ஞான வேள்வி நடந்தது போல் இருந்தது. அந்த வேள்வி தொடரவும் செய்தது.

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி