நடிக்க வரலனா போலீஸ் அதிகாரி ஆகியிருப்பேன்..!



சொல்கிறார் ஆனந்த ராகம் அனுஷா

‘ஆனந்த ராகம்’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அத்தனை பரிச்சயமாகிவிட்டார் அனுஷா ஹெக்டே. பேச்சில் துணிவும், தடைகளை உடைத்தெறியும் தைரியமும் கொண்ட பெண்ணாக வலம் வரும் அவரின் ஈஸ்வரி கேரக்டர் மக்கள் மனங்களில் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. சென்னை சிட்லபாக்கத்திலுள்ள ஷூட்டிங் ஹவுஸில் ஆனந்தமாக நடித்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

‘‘ஆரம்பிச்ச மூணு மாசத்திலேயே இந்த சீரியலுக்கும் என் கேரக்டருக்கும் இவ்வளவு ரீச் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இது தமிழ்ல என் முதல் சீரியல். நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் பொறுப்பாக நடிக்கணும்னு நினைக்கிறேன்...’’ என அழகு தமிழில் உற்சாகம்பொங்க பேசுகிறார் அனுஷா. ‘‘சொந்த ஊர் மங்களூர். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். என் தாய்மொழி துளு. எம்.காம் முடிச்சிருக்கேன். அப்புறம், டான்ஸ்ல எம்.ஏ. படிச்சிருக்கேன்.

அடிப்படையில் நான் கிளாசிக்கல் டான்சர். என் அப்பா உமேஷ் ஹெக்டே பிசினஸ்மேன். தவிர, விவசாயமும்  வீட்டுல பண்றோம். அம்மா ஸ்வர்ணலதா, பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையத்துல கவுன்சிலரா இருக்காங்க. கவுன்சிலிங் நிறைய பண்ணுவாங்க. அப்புறம் எனக்கு ஒரு தங்கச்சி, ஒரு தம்பி இருக்காங்க. கணவர் பிரதாப் தெலுங்கு சீரியல் ஆக்டர். இதுதான் என் குடும்பம்...’’ என எளிமையாக ஓர் அறிமுகம் கொடுத்தவரிடம் சின்னத்திரை பயணம் பற்றிக் கேட்டோம்.  

‘‘என் அப்பா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தார். டிராமா எல்லாம் பண்ணுவார். அதனால்தானோ என்னவோ என்னை மூணு வயசிலேயே பரதநாட்டியம் கத்துக்க அனுப்பிட்டார். நானும்  ஆர்வமாகி பல படிநிலைகளை படிச்சேன். இப்ப நடனத் தேர்வுக்கு ஜட்ஜ்ஜாக உட்கார அங்கீகாரத்தை அரசு எனக்கு தந்திருக்கு. நான் எம்.காம் முடிச்ச நேரம் நடிக்க ஒரு சான்ஸ் வந்தது. கிளாசிக்கல் டான்சர் என்பதால் என் ப்ரொஃபைலை முகநூல்ல பார்த்திட்டு கன்னட சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. எனக்கு மெசேஜ் செய்து இப்படி ஒரு ப்ராஜெக்ட் பண்றோம்னு சொன்னாங்க. அப்புறம், என் நம்பரை கலெக்ட் பண்ணி பேசினாங்க.

ஆனா, அப்போ என்னுடைய நோக்கமெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியாகவோ அல்லது சோஷியல் சர்வீஸ் பண்ற செக்டார்லயோ பணியாற்றணும்னு இருந்தது. கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதல்நிலை தேர்வுல பாஸாகியும் இருந்தேன். அதனால, நடிப்பு பத்தின சிந்தனையே இருக்கல.

ஆனா, விதி வலியதுனு சொல்வாங்கல்ல. அந்தமாதிரி அந்நேரம் என் கையில் ஒரு ஃப்ராக்சராகி மெயின் தேர்வு எழுதமுடியாமல் போயிடுச்சு. சரி அடுத்த தேர்வு வரை சும்மா இருக்கமுடியாதே... என்ன செய்யனு யோசிச்சேன். அந்த கேப்லதான் நடிக்க வாய்ப்பு வந்தது.
முதல்ல வேணுமா... வேண்டாமானு ஒரே குழப்பம். சரி பார்த்துக்கலாம்னு சில மாதங்கள் தள்ளிப்போட்டேன். பிறகு அப்பாகிட்ட கேட்டேன். அவர், ‘உன் இஷ்டம். உனக்கு பிடிச்சா செய்’னு நம்பிக்கை அளிச்சார். அம்மாவும் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க.

அப்போ ஒரு நிகழ்ச்சிக்காக பெங்களூர் போயிருந்தேன். அந்நேரம், அந்த சீரியல்ல இருந்து கால் பண்ணினாங்க. ‘இங்கதானே இருக்கீங்க. ஒருதடவை வந்து லுக் டெஸ்ட் கொடுத்திட்டு போங்க’னு சொன்னாங்க. சரி, போய் பார்ப்போம். கிடைச்சா பண்ணுவோம். இல்லனா, நம்ம வேலையை தொடர்வோம்னு ஜாலியா போனேன்.

ஆனா, உடனே ஓகே ஆகிடுச்சு. அது, ‘ராதா ரமணா’னு ஒரு தொடர். கன்னடத்துல செம ஹிட்டானது. அதுல செகண்ட் லீட் பண்ணினேன். நல்ல ரீச் கிடைச்சது. என் பெயரும் வெளியே தெரிஞ்சது. அங்கிருந்து தொடங்கி இப்ப வரை சின்னத்திரையில் பயணிச்சுக்கிட்டே இருக்கேன்...’’ என்கிறவர், சிரித்தபடி தொடர்ந்தார்.

‘‘அடுத்து ரெண்டாவதாக தெலுங்கு ப்ராஜெக்ட் வந்தது. அதுக்கு முன்னாடி கன்னடத்துல ஒரு புராணக் கதையில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஆனா, கன்னடத்துல ஒரு சேனல்ல நடிச்சிட்டு இருந்ததால இன்னொரு கன்னட ப்ராஜெக்ட் பண்ணக்கூடாதுனு சொன்னாங்க. அதனால, தெலுங்கு ஆஃபரை ஏத்துக்கிட்டு ஹைதராபாத் போனேன். ‘நின்னே பெல்லடதா’னு ஒரு சீரியல். இதுல லீட் பண்ணினேன். அப்புறம், அங்கே ‘சூர்யகாந்தம்’னு இன்னொரு ப்ராஜெக்ட்டும் கிடைச்சது. அதிலும் லீட் ரோல். இந்த இரண்டும் நல்ல பெயர் வாங்கித் தந்தது. அப்படியே எனக்கான திருமண வாழ்க்கையையும் அமைச்சுக் கொடுத்தது.

என் கணவர் பிரதாப்பும் நடிகர்தான். இப்ப அவங்க ஜெமினி டிவிக்கும், இன்னொரு சேனலுக்கும் ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்காங்க. கூட நடிக்கும்போது பழக்கமானாங்க. பிறகு, அவங்க நேரடியா என்னை அப்ரோச் பண்ணினாங்க. நான், ‘என் அப்பா, அம்மா முதல்ல சம்மதிக்கணும். அவங்க ஓகே சொன்னால் திருமணம் பண்ணிக்கலாம்’னு சொன்னேன்.
உடனே, குடும்பத்துடன் என் வீட்டுக்கு நேரடியா வந்து பேசினாங்க. பிறகே திருமணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணமாகி ஓராண்டு ஆகிடுச்சு...’’ என வெட்கப் புன்னகையை உதிர்க்கிறார் அனுஷா.  

‘‘‘சூர்யகாந்தம்’ தெலுங்கு ப்ராஜெக்ட்டை பார்த்துதான், ‘ஆனந்த ராகம்’ வாய்ப்பு கிடைச்சது. நல்ல தைரியமான, உயரமான பெண்ணா தேடியிருக்காங்க. அதுக்கு நான் சூட்டானேன்.
நான் காேலஜ் படிக்கிறப்ப அத்லெட்டிக்கா இருந்தேன். நல்லா ஓடுவேன். யோகாவும் படிச்சிருந்தேன். அதெல்லாம் இங்க எனக்கு கைகொடுத்தது. இப்ப மக்கள் ஈஸ்வரியாகவே என்னை ரசிக்கிறாங்க. இன்னும் சிறப்பா நடிக்கணும்னு ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கு.

அப்புறம், சீரியல் பண்ணும்போதே நிறைய சினிமா வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, தேதிகள் சரிவர அமையல. ஒரு நல்ல புராஜெக்ட் வந்து நேரமும் கிடைச்சா படங்கள்ல நடிக்கலாம்னு
இருக்கேன்...’’ என இயல்பாகச் சொல்கிறவரிடம் எதிர்காலக் கனவு பற்றி கேட்டால் எதுவுமில்லை என்கிறார்.

‘‘நான் ட்ரீமி கேர்ள் இல்ல. இந்த நிகழ்கால வாழ்க்கையை சிறப்பா வாழணும்னு நினைக்கிற ஆள் நான். போகிற இடங்கள்ல நல்லா வொர்க் பண்ணணும். நல்ல பெயர் வாங்கணும். இந்தத் தயாரிப்பை விட்டு போனாலும், அவங்க கூட மறுபடியும் ப்ராஜெக்ட் பண்ணாமல் இருந்தாலும், ‘அந்தப் பொண்ணு முதல்நாள்ல இருந்து கடைசி நாள் வரை டெடிகேட்டா, சின்சியரா வொர்க் பண்ணினாப்பா’னு சொல்லணும். அதுதான் என்னுடைய சக்சஸ்னு நான் நினைக்கிறேன்...’’ என அழகாகச் சொல்கிறார் அனுஷா.  

பர்சனல் பக்கம்

பிடிச்ச ஊர்: ஹோம் டவுன் மங்களூர்.
பிடிச்ச உடை: சேலை.
பிடிச்ச உணவு: வீட்டுச்
சாப்பாடுனா கொள்ளை பிரியம். அதிலும் அம்மா செய்ற சமையல் ரொம்பப் பிடிக்கும்.
பிடிச்ச நடிகர்: எல்லா நடிகர்
களையும் பிடிக்கும். ஏன்னா, எல்லோர்கிட்ட இருந்தும் கத்துக்க ஏதாவது இருக்கும்.
பிடிச்ச நடிகை: எல்லா நடிகைகளையும் பிடிக்கும்.
பிடித்த விஷயம்: எனக்கு வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும். சும்மா உட்காரமாட்டேன்
பிடிக்காத விஷயம்: டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது. நேரத்தை சரியா கடைப்பிடிப்பேன்
பிடிச்ச நடனக்கலைஞர்: கிளாசிக்கல் டான்ஸ் பண்ற எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும்.
முணுமுணுக்கிற பாடல்: ‘அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்...’ பாடலை தொடர்ந்து ஹம்மிங் பண்ணிட்டு இருக்கேன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்