56 வயதில் புடவையுடன் ஒர்க் அவுட்!



பெண்கள் தங்களது 56வது வயதில் என்ன செய்வார்கள்..?

படத்தில் இருக்கும் இவர், ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்கிறார் - அதுவும் தன் மருமகளுடன் சேர்ந்து! முக்கியமாக புடவை அணிந்தபடி!

Humans of Madras and Madras Barbell இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்ட இந்தப் பெண்மணியின் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் பவர் லிஃப்டிங் மற்றும் புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை சாதாரணமாகச் செய்கிறார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தி, அனைவருக்குமான ஊக்க மருந்து.
52 வயதில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததாகவும், ஆனால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல், வலியிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று, தான் ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்துதான் அவர் உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்தாராம். மெட்ராஸ் பார்பெல் என்ற பெயரில் அவரது மகன் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். முதலில் எளிமையான உடற்பயிற்சிகள், வாக்கிங் போன்றவற்றைப் பின்பற்றியவர், படிப்படியாக தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினாராம்.

“நான் ஏற்றுக்கொண்ட முயற்சிகளுக்கான பலன் எனக்கு உடனடியாக கிடைக்கவில்லை. ஆனால், என் மூட்டு வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நான் கவனித்தேன். வலி முழுவதுமாக குறைய எனக்கு ஐந்து மாதங்களானது...’’ என்கிறார். இப்போது தன் மருமகளுடன் சேர்ந்து தன் மகனின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

‘‘வலியும் தடைகளும் நம் முன் தோன்றும்போது அதை பெரிதுபடுத்தாமல், எப்படி எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும் என இந்தப் பயிற்சி எனக்கு உணர்த்தியது...’’ என்கிறார்.
சத்தியமான வார்த்தைகள்.சரி... இவரது பெயர் என்ன..? பெயரா முக்கியம்..? செயல் அல்லவா முக்கியம்..? இந்தச் செயலை நாமும் மேற்கொள்ளும்போது அவராக நாமும் மாறுவோம்.
ஆம். நாம்தான் அவர். அவர்தான் நாம்!

ஜான்சி