தென்றல் துளசி இப்ப தாலாட்டு’ இசை! நெகிழ்கிறார் ஸ்ருதி



‘தென்றல்’ சீரியலில் துளசியாக பலரின் மனங்களைக் கொள்ளையடித்தவர் ஸ்ருதி. இப்போது இசையாக இல்லத்தரசிகளின் மனதை ‘தாலாட்டி’க் கொண்டிருக்கிறார். இப்படியொரு மருமகள் நமக்கு வாய்க்கமாட்டாளா என மாமியார்கள் ஏங்கும் கேரக்டரில் பின்னியெடுத்து வருகிறார்.சமீபத்தில், ‘தென்றல்’ சீரியலுக்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதும் பெற்றுள்ளார் ஸ்ருதி. இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள கோயில் ஒன்றில் ‘தாலாட்டு’ ஷூட்டிங்கில் மும்முரமாக இருந்தவரை இடைவெளியில் சந்தித்தோம்.

‘‘மாநில அரசின் விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதவிர, ‘சன் குடும்ப விருது’கள்ல சிறந்த மருமகள் விருதினை கடந்த ரெண்டு ஆண்டுகளாகவே வாங்கிட்டு இருக்கேன். முன்னாடி ‘தென்றல்’ல சிறந்த ஜோடினு சன் விருது கிடைச்சது. ‘அழகு’ சீரியல்ல ரேவதி அம்மாவுக்காக போராடியதால சிறந்த மருமகள் விருது தந்தாங்க.
இங்கேயும் அந்தப் போராட்டம் தொடர்றதால இந்த ஆண்டும் சிறந்த மருமகள்னு இன்னொரு விருது கொடுத்திருக்காங்க...’’ என உற்சாகமாகச் சிரிக்கும் ஸ்ருதியிடம் சின்னத்திரைக்குள் வந்த கதையைக் கேட்டோம். ‘‘என் நிஜப்பெயர் ஸ்ருதிராஜ். பூர்வீகம் கேரளா மாநிலம் குருவாயூர் பக்கத்துல ஒரு கிராமம். பெரிய படிப்பெல்லாம் கிடையாது.

பள்ளியில் படிக்கிறப்பவே நடிக்க வந்துட்டேன். அதனால, படிப்பை தொடர முடியல. அப்பா பெயர் ராஜன். அவர் இறந்திட்டார். அம்மா சுலோச்சனா. அம்மாவுக்கு என்னை வெள்ளித்திரையில் பார்க்கணும்னு ஆசை இருந்திருக்கும்போல. அல்லது பொண்ணு நாலுபேர் மத்தியில் பேசப்படணும்னு நினைச்சாங்களானு தெரியல. நானும் அவங்ககிட்ட இதைப் பத்தி கேட்டதில்ல.

முதல்ல பத்திரிகை அட்டைப் படத்துல போட்டோ வரணும்னு ஆசைப்பட்டிருக்காங்க. ஒரு பத்திரிகைக்கு என் போட்டோஸ் கிடைச்சு அதை அட்டைப் படத்துல போட்டாங்க. அந்தப் போட்டோஸை பார்த்து விளம்பரத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அதேமாதிரி போட்டோஸ் பார்த்திட்டு ஒரு படத்துல நடிக்கவும் அழைப்பு வந்துச்சு. அப்ப நான் 7ம் வகுப்பு படிக்கிற சின்ன பொண்ணு. எனக்கு கனவுகள், குறிக்கோள்கள்னு சொல்றமாதிரி எதுவும் கிடையாது. அம்மாவின் ஆசையாலும், அவங்க முயற்சியாலும் வாய்ப்புகள் கிடைச்சு நடிக்க ஆரம்பிச்சேன்.

முதல்ல மலையாளப் படங்கள் பண்ணினேன். அப்புறம், தமிழ்ப் படங்கள்ல நடிச்சேன். தென்னிந்திய படங்கள்ல அடுத்தடுத்து பண்ணிட்டு இருந்தேன். அந்நேரம் எனக்கு, என்ன மாதிரி படங்கள்ல நடிச்சால் நல்லாயிருக்கும், எப்படியான புரொஜெக்ட்டை தேர்ந்தெடுக்கணும் என்கிற ஐடியா எதுவும் தெரியாது. ஜாலியா எல்லா மொழிப் படங்களும் பண்ணினேன். பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திட்டேன். என்னால் படிப்புல கவனம் செலுத்தமுடியல.

கன்னடத்துல சிவராஜ்குமார் சாருக்கு ஜோடியா ஒரு படத்துல நடிச்சேன். அப்புறம், சின்னச் சின்ன கேரக்டர்ஸ் பண்ணினேன். ஒருகட்டத்துல படங்கள்ல நடிக்காமல் ரொம்ப நாட்கள் வீட்டுல சும்மா வெட்டியா உட்கார்ந்திருந்தேன்.அப்புறம், என் அப்பா சென்னை பல்கலைக்கழகத்துல இங்கிலீஷ் லிட்ரேச்சர் கோர்ஸை வீட்டுல இருந்தே கரஸ்ல படிக்கிற மாதிரி புக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. எனக்கு அந்த புத்தகங்களின் முதல் பக்கத்தை புரட்டும்போதே தூக்கம் வந்திடுச்சு. என்னால் கவனம் செலுத்த முடியல.

பள்ளியில் படிக்கும்போது நான் முதல் ரேங்க் மாணவியா இருந்தேன். ஒரு கேப் விழுந்ததும் மறுபடியும் படிக்க முடியல. என்ன பண்றதுனும் தெரியல.அப்புறம்தான் குமரன் சார் இயக்கத்துல ‘தென்றல்’ல நடிக்க வாய்ப்பு அமைஞ்சது. யாரோ என்னைப் பத்தி, ‘இந்தமாதிரி ஒரு ஹீரோயின் இருக்காங்க. படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. சும்மா வீட்டுல இருக்காங்க’னு சொல்லியிருக்காங்க. பிறகு சார் போட்டோ கேட்டிருக்கார். அப்படியாக ‘தென்றல்’ சீரியல் ஓகே ஆச்சு.

அந்த சீரியல் செம ரீச். பட்டிதொட்டியெல்லாம் துளசி கேரக்டர் பாப்புலராச்சு. ஒரு சம்பவம் சொல்றேன். ‘தென்றல்’ல நடிச்சிட்டு இருந்த சமயம் நானும் அம்மாவும் டிரஸ் வாங்க ஒரு துணிக்கடைக்குப் போயிருந்தோம். அங்க திருமணத்திற்காக துணிகள் எடுக்க ஒரு ஊர்க்காரங்க கூட்டமா வந்திருந்தாங்க. என்னைப் பார்த்திட்டு அந்தக் கூட்டம் என்னைச் சுத்தி நின்னு ‘என் தங்கமே, ராசாத்தி, பட்டுக்குட்டி’னு கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பதான் துளசி கேரக்டர் எவ்வளவு ரீச்சாகியிருக்குனு தெரிஞ்சுகிட்டேன். அது ஒரு ஜாலியான அனுபவம். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்பவும் நிறைய பேர் துளசினுதான் பார்க்கிறப்ப கூப்பிடுறாங்க. துளசிதான் அவங்களுக்கு கனெக்ட் ஆகியிருக்கு. அவங்க வீட்டுப் பொண்ணுனு சொல்வோம்ல அதுமாதிரி என்னை நினைக்கிறாங்க.

அப்புறம், ‘ஆபீஸ்’, ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’னு வெவ்வேறு சேனல்கள்ல நடிச்சேன். பிறகு மறுபடியும் ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் சன் டிவி சீரியல் பண்ணினேன். அடுத்து
‘அழகு’ சீரியல்ல நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது. ரேவதி மேடம், தலைவாசல் விஜய் சார்னு செம டீம்.

இப்ப ‘தாலாட்டு’ இன்னும் ரீச்சாகியிருக்கு. தொடர்ந்து சன் டிவிக்காக வேலைகள் செய்றப்ப அடுத்தடுத்து வாய்ப்பை கொடுத்திட்டே இருப்பாங்க. அப்படியாக ‘தாலாட்டு’ கிடைச்சது. இந்த ‘தாலாட்டை’ நான் ரொம்ப என்ஜாய் பண்ணி பண்றேன்.செட்டும் ரொம்ப ஃபேமிலியா ஃப்ரண்ட்லியா இருக்கும். நாம் ஒரு இடத்துல வேலை செய்யும்போது அதை சுற்றி இருக்கிற சூழலும் நமக்கு பிடிச்சிருந்தால் அந்த வேலை நமக்கு எளிதாகவும் இருக்கும். பிடிக்கவும் செய்யும். அப்படியான செட் இது. வேலை அழுத்தம் இருந்தால்கூட வீட்டுக்குப் போகும்போது ஜாலியா சிரிச்சிட்டே போவோம்.

இதுல இசையா சிறந்த மருமகள்னு எல்லோர்கிட்டயும் போய்ச் சேர்ந்திருக்கேன். இந்த சீரியலைப் பொறுத்தவரை என்னுடைய மாமியாருக்காக நான் ரொம்பப் போராடுறேன். அதனால மாமியார்கள் பலரும் பாராட்டுறாங்க.சமீபத்துல வேளச்சேரியில் ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். அங்க ஒருத்தங்க, ‘இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ம ஆத்துக்கு வந்தால் அவ்வளவு நல்லாயிருக்கும்டா’னு சொன்னதைக் கேட்டேன். சந்தோஷமா இருந்துச்சு. அதனாலதான் இந்த ஆண்டும் சன் குடும்ப விருதுகள்ல சிறந்த மருமகள் விருது கிடைச்சிருக்கு...’’ என நெகிழ்ந்து சிரிக்கும் ஸ்ருதியிடம் வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்குமான வித்தியாசம் எப்படியிருக்கு என்றோம்.

‘‘சினிமானா நாம் ரிலாக்ஸாக ஒருநாளைக்கு ஒரு சீன் பண்ணலாம். டயலாக்கும் குறைவாகவே இருக்கும். ஆனா, இங்க நம்மள வச்சு செய்வாங்க. காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஷூட்டிங் போகும். ஒருசில நாட்கள்ல பத்து சீன்ஸ் கூட எடுப்பாங்க. வீட்டுக்குப் போறதுக்குள்ள வாய் வலிக்கும். அவ்வளவு டயலாக் பேசுவோம். ஆனா, சினிமாவைவிட சீரியல்ல ரீச் அதிகம். சினிமா பண்ணினப்ப ரோட்டுல போகும்போது என்னையெல்லாம் யாரும் கண்டுக்கிட்டது கூட இல்ல.

பொதுவா, சினிமா நடிகைகள்னா மக்கள் தூரமா இருந்தே ரசிப்பாங்க. ஆனா, சீரியல் நடிகைகள்னா அப்படியில்ல. பக்கத்துல வந்து பேசுவாங்க. அவங்க வீட்டுப் பொண்ணு
மாதிரி நினைச்சுப்பாங்க. அவ்வளவுதான். என் லைஃப்ல நான் குறிக்கோள்னு எதையும் வச்சுக்கிட்டதில்ல. ஏன்னா, நான் நினைச்சமாதிரி ஒரு விஷயம் கூட இதுவரை நடந்தது கிடையாது. அதனால, கடவுள் நமக்காக நிறைய வச்சிருப்பார்.

அந்த வழியில் நடக்கணும், நிம்மதியா வாழ்க்கையில் இருக்கணும்னு நினைக்கிறேன். இப்ப சினிமாவுல நடிக்க வாய்ப்புகள் வருது. ஆனா, சின்னத்திரையே எனக்கு ஓகேவா இருக்கு. காலையில் வந்தோமா... வீட்டுக்குப் போனோமானு இருக்கேன். இப்ப நான் மட்டுமல்ல, அம்மாவும் ரொம்ப ஹேப்பியா இருக்காங்க...’’ மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் ஸ்ருதிராஜ்.   

ஸ்ருதிக்கு பிடிச்சது...

ஊர்: எந்த ஊர்ல நிறைய ஷாப்பிங் மால்ஸ் இருக்கோ அந்த ஊர்.

நாடு: இந்தியாதான்.

உணவு: ஐஸ்கிரீம் உணவுல வருமா? வந்தால் அதுதான். அப்புறம், பிரியாணியும், ஐஸ்கிரீமும், சாக்லேட்டும் நிறைய சாப்பிடுவேன்.

சமையல்: அம்மா சமையல். அவங்க பண்ற எல்லா ஐட்டங்களுமே ரொம்பப் பிடிக்கும். தயிர் சாதம் செய்து கொடுத்தால் கூட சாப்பிடுவேன்.

சீரியல்: ‘தாலாட்டு’.

பிடிச்ச விஷயம்: சீக்கிரமா பேக்அப் பண்ணி வீட்டுக்குப் போக ரொம்பப் பிடிக்கும்

பிடிக்காத விஷயம்: லேட் நைட் ஷூட்டிங்.

ஃப்ரீ டைம் இருந்தால்...: நிறைய ஷாப்பிங் பண்ணுவேன். பாட்டு கேட்பேன். அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்...: லேட்டஸ்ட்டா ஹிட் அடிக்கிற பாடல்கள்.  

நடிகை: ஸ்ரீதேவி.

நடிகர்: ஷாரூக்கான்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்