படிப்பு முக்கியம் பிகிலு!



கல்வி, கேள்வி, ஞானம் என அனைத்தும் பெற்று அக்மார்க் சான்றிதழுடன்தான் ஹவுஸ் ஒயிஃப் வேலைக்கே வருகிறார்கள் இக்காலப் பெண்கள். எனவேதான் பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா முதலிடம் பெற்றிருக்கிறது.
இதோ அடுத்த ஆராய்ச்சியை நம் தமிழ் சினிமாவின் புதுமுக நாயகிகளிடம் மேற்கொண்டோம். ஒருகாலத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு 15, 16 வயதில் சினிமாவிற்கு நடிக்க வந்துகொண்டிருந்த ஹீரோயின்கள் சமீபகாலமாக குறைந்தது 23 வயதிற்குப் பின்னர்தான் நடிப்புத் துறைக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர்.

காரணம், அத்தனை புதுமுக நாயகிகளும் குறைந்தபட்சம் மாஸ்டர் டிகிரியேனும் படித்து முடித்து நடிக்க வந்தவர்கள். அத்தனை நாயகிகளும் சொல்லும் ஒரே பதில் ‘‘படிப்பு எங்களுக்கு புகழுடன்  கௌரவத்தைத் தேடித் தருகிறது. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு  என்பது போல் எங்கள் சினிமா கேரியரையும் எங்களுக்கு ஏற்றாற்போல் தேர்வு  செய்து அமைத்துக்கொள்ளவும் படிப்புதான் உதவுகிறது...’’ என்கிறார்கள். பிடித்ததை செய்யுங்கள்... ஆனால் படித்துவிட்டு செய்யுங்கள் என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம்.  
ரைட்... இதோ இந்த வருடம் டிரெண்டான சில நாயகிகளின் ஷார்ட் & ஸ்வீட் படிப்ஸ் பயோடேட்டா.

சிவானி ராஜசேகர் மற்றும் சிவாத்மிகா ராஜசேகர்:

இவ்விரு நாயகிகளும்தான் தமிழ் சினிமாவின் 2022 அறிமுக நாயகிகளின் பயணத்தை ஆரம்பித்து வைத்தவர்கள். ‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதாவின் செல்ல மகள்கள். கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் மூலம் சிவாத்மிகா ராஜசேகர், மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ‘அன்பறிவு’ படம் மூலம் சிவானி ராஜசேகர் என இருவரும் என்ட்ரி கொடுத்தவர்கள்.இருவருமே அப்பா வழியில் எம்.பி.பி.எஸ் படித்தே தீருவோம் என ஒரு பக்கம் படிப்பையும் ஒரு கை பார்க்கிறார்கள். ‘‘பிடிச்சதை செய்ங்க... படிச்சிட்டு செய்ங்க... இதுதான் எங்க அப்பா எங்களுக்குச் சொன்ன அட்வைஸ்’’ என்கின்றனர் இருவரும்.

பவித்ரா லட்சுமி

‘மாடலிங் ஃபேஸ் ஆஃப் சென்னை’ உள்ளிட்ட பல டைட்டில்களுடன் ‘நாய் சேகர்’ படத்தில் அறிமுகமானவர். சென்னை NIFT இல் ஃபேஷன் டிசைனிங் முடித்திருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் ஒரு கை பார்க்கும் திறன் படைத்தவர் பவி.

பவித்ரா மாரிமுத்து:

மலேசியாவிலே பிறந்த மங்கை. அருள் நிதியின் ‘டைரி’ படம் மூலம் அறிமுகம். ‘பீட்சா 3’ படத்திலும் நாயகி. இப்படம் ரிலீஸுக்குத் தயார். இந்தியாவிலேயே மருத்துவம் படித்தால் மதிப்பு கூடும் என படிப்பதற்காகவே இந்தியா வந்த டாக்டர். டாக்டர் கனவு பூர்த்தியாக உடன் காஸ்மெட்டிக் துறையிலேயும் பெரிய அளவில் சாதிக்கும் கனவுடன் சென்னை விசிட். அப்போது தமிழ் சினிமா இவரை லபக்கென கவ்விக் கொண்டது.

பவ்யா த்ரிகா

‘குங்குமம்’ பத்திரிகையின் ‘புதுசு கண்ணா புதுசு’ விளம்பரத்தில் சுட்டிக் குட்டிப் பெண்ணாக வந்தவர். படிப்பெல்லாம் முடித்து இந்த வருடம் ‘கதிர்’ படம் மூலம் தமிழில் கால் தடம் பதித்துள்ளார்.சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியிலே பட்டப்படிப்பு முடித்து அத்துடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முடித்தவர்.

அபர்ணா தாஸ்

‘பீஸ்ட்’ படத்தின் இன்னொரு நாயகி. படத்தின் 100வது நாள் போஸ்டரில் யார் இந்த அம்சமான பொண்ணு எனத் தேடவைத்த அபர்ணா தாஸ் ஏற்கனவே மலையாள உலகில் ‘ஞான் பிரகாசன்’ படம் மூலம் என்ட்ரியானவர். நென்மாராவில் இங்லீஷ் மீடியம் படிப்பு. கோவை  கிருஷ்ணா ஆர்ட்ஸ் & சைன்ஸ் கல்லூரியில் எம்பிஏ படித்தவர்.

நந்தினி ராய்:

இந்த வருடம் வெளியான ‘அஷ்டகர்மா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நந்தினி முன்னதாக இந்தி, தெலுங்கு, மலையாளம் என பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ‘மிஸ் ஹைதராபாத் 2008’. ஹைதராபாத்தில் பி.காம் முடித்தவர், அப்படியே அசால்ட்டாகக் கிளம்பி லண்டன் சென்று அங்கே எம்பிஏ முடித்திருக்கிறார். உடன் ஐந்துக்கும் மேலான மொழிகளையும் சரளமாக கற்றுத் தேர்ந்தவர்.

அவந்திகா மிஸ்ரா:

அருள்நிதியின் ‘டி-ப்ளாக்’ படம் மூலம் என்ட்ரி ஆன அவந்திகா தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் ‘என்ன சொல்லப் போகிறாய்’ படம் மூலம் நல்ல நடிப்பிற்காக பேசப்பட்டார். இப்போது அஷோக் செல்வன் நடிப்பில் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ படத்தில் நடித்து வருகிறார். தில்லி பொண்ணு. ஆனால், பெங்களூரு கோல்டன் ஜூப்ளி இன்ஸ்டிடியூட்டில் ஏர் ஃபோர்ஸ் படித்தவர்.

அதிதி ஷங்கர்:

கார்த்தி நடிப்பில் ‘விருமன்’ படம் மூலம் அறிமுகம் ஆன பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள். மைக்கைக் கொடுத்தாலே கடி ஜோக்கில் களேபரம் செய்து கதிகலங்கச் செய்துவிடுவதில் கள்ளி. மருத்துவம் படித்துவிட்டு நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்தவர். அப்பாவுக்காக படிப்பு, தனக்காக நடிப்பு என்கிறார் அதிதி.

மீதா ரகுநாத்:

அப்பாவி லுக்கில் ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் மூன்று கெட்டப்களில் அசத்தியவர். இப்போது படிப்புடன் நடிப்புக்கான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
 கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் மெக்கட்ரானிக்ஸ் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி. படிப்பை முழுமையாக முடித்தபின்தான் நடிப்பு என, பல வாய்ப்புகள் கதவைத் தட்டியும் அமைதியாகக் காத்திருக்கிறார்.

அகன்ஷா சிங்:

ஆதி நடிப்பில் ‘கிளாப்’ படத்தில் அறிமுகம். தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ‘வீரபாண்டியபுரம்’ படம் மூலம் பிரபலம். முன்னதாக இந்தியில் வருண் தவானுடன் ‘பத்ரிநாத் கி துல்ஹானியா’, தெலுங்கில் நாகார்ஜுனா, நானியுடன் ‘தேவதாஸ்’ உட்பட இந்தி, தெலுங்கு என பத்துக்கும் மேலான படங்களில் நடித்திருக்கிறார். ஜெய்ப்பூர் பெண்ணான அகன்ஷா சிங் பேசிக்கலி பிஸியோதெரபிஸ்ட் டாக்டர். எனவேதான், தான் ஃபிட்டாக இருப்பதாகவும் கண்சிமிட்டுகிறார்.  

ஷாலினி நியூட்டன்