சிறுகதை - ஒரு காதலின் கிளைமாக்ஸ்



கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த மனோஜ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு, இரண்டாவது மாடியில் அவனது அறைக்கு வந்தான். அரசியல் மாநாட்டு நெரிசலில் சிக்கித்  திரும்பியது போன்ற உடல் அலுப்பு.ஆடைகளை மொத்தமாக உருவிப் போட்டுவிட்டு குளித்தான்.வேறு உடைக்குள் புகுந்து கொண்டவன் தலை துவட்டிய டவலை உலர்த்த பால்கனி கொடியில் பிரித்து, கிளிப் மாட்டுகையில், எதிர்வீட்டு மொட்டை மாடியில் அவளைப் பார்த்தான்.

25 வயதின் இளமை. ரோஸ் நிறத்தில், அழகாய், நேர்த்தியாய் இருந்தாள். அணிந்திருந்த ‘பிங்க்’ நிற பூக்கள் சிதறிய சுடிதாரில், மழையில் நனைந்த மரமாய் பளிச்சென்று இருந்தாள்.   
மனோஜ் சென்னை வந்து இரண்டு மாதங்கள்தான் ஆயிற்று. நெய்வேலியில் ஊருக்கு நேர்ந்துவிட்டது போல் நண்பர்களுடன் ‘உர்ர்ர்ர்ம்ம்... உர்ர்ர்ம்ம்...’ என்று பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தவனை தாய்மாமாதான் சென்னைக்கு அனுப்பியது.

அவருக்கு கோயம்பேட்டில் தேங்காய் மொத்த வியாபாரக் கடை இருந்தது. லாரிகளில் வரும் தேங்காய்களை தரம் பிரித்து 50, 100 என கோணியில் கட்டி கடைகள், பேக்கரி, ஹோட்டல்களுக்கு சப்ளை பண்ணவேண்டும். அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இன்னாருக்கு இத்தனை என்று குறிப்பெடுத்து கம்ப்யூட்டரில் பதிந்து மாமாவுக்கு மனோஜ் அனுப்ப வேண்டும்.  
இரவு மூன்று மணிக்கு கோயம்பேடு சென்றால், காலை 8 மணிக்கு முடியும். மறுபடி இரவு அதே நேரம் சென்றால் போதும். இந்த இரண்டு மாதங்களில் ஒருநாளும் அவளை எதிர் மாடியில் பார்த்ததில்லை.

மனோஜை முன்னெப்போதோ பார்த்துவிட்டு, அவள் தன் இருப்பை பதிவு செய்ய, தான், டவல் உலர்த்த வருவதை கவனித்து மாடிக்கு வந்திருப்பாளோ..?

மனோஜும் ‘புரொடியூசர் கிடைத்தால் நீதான் ஹீரோ’ எனும் அளவுக்கு அழகன். அதனால், பெண்கள் விரும்புவது இயல்புதான்.முதலில் அவள் வீட்டு எதிரில் கடைகள் ஏதும் இருக்கிறதா..? பார்க்க வேண்டும். அவர்கள் நட்பு வேண்டும். அவள் பற்றிய விவரங்கள் சேகரிக்க உதவுவார்கள்.அன்று பணி முடிந்து ஃபிரெஷ்ஷாகி, அவள் வீடு இருந்த தெருவில் தேடினால், ஒரு கடையும் இல்லை. அமைதியான அந்த நீண்ட தெரு டெட் எண்ட் என்பதால் அந்நியர்கள் காரணமின்றி நுழைய வாய்ப்பில்லை.   

ஒரு வாரம் தெருவை கண்காணித்தும் அவள் கண்ணில் படவில்லை. வீட்டு மாடியில் மட்டும் அடிக்கடி தென்பட்டாள். சில மாலைகளில் ஒன்றிரண்டு குழந்தைகளோடு கண் கட்டிவிட்டு ஒளிந்து விளையாடுவதை ரசிக்கிறாள். அவளும் கட்டிக் கொண்டு துழாவுகிறாள்.பால்கனியில் அமர்ந்து அவளை ரசிப்பது மனோஜுக்கு பிடித்திருந்தது. அவளும் அவனைப் பார்க்கத்தான் வருகிறாள் என்பதை அவள் உற்சாகம் காட்டிக் கொடுத்தது.    

அன்றிரவு தூங்கும் முன் ஊர் நண்பன் சசிதரனை போனில் அழைத்தான்.‘‘என்னடா நைட்டுல கால் பண்ணா காலைல நேரமா போகணும்னு திட்டுவ. இப்ப நீயே பண்ணிருக்க... அதுவும் ரெண்டு வாரம் கழிச்சு..?” என்றான் சசி.

‘‘ஒரு பொண்ணப் பார்த்தேன்டா... செமையா இருக்கா...”
‘‘அப்டின்னா அவ வீட்ல பொண்ணு கேட்டு கட்டிக்க...”
‘‘ஆனா, அவகிட்ட இன்னும் ஒரு வார்த்தையும் பேசல...”  
‘‘அப்றம் எதுக்குடா கால் பண்ணி தூக்கத்த கெடுக்கிற..?”
‘‘ஆனா, அவளத்தான் மேரேஜ் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்...”
‘‘இங்க ஊர்ல யாரு மாதிரி இருப்பா..?”  

‘‘ஒருத்தியும் அங்க இல்ல... இவ தனியா தெரியுறா...”
‘‘சரி பேரை சொல்லு... ஓரளவு அழகை கெஸ் பண்ணிக்கிறேன்...”
‘‘அதுவும் தெரியாது. ஒன் வீக் டைம் கொடு. கேட்டு சொல்றேன்...”
‘‘ஓ... பேரு தெரிஞ்சுக்கவே ஒரு வாரம் ஆகுமா..? செட்டாகாது. போத்திக்கிட்டுப் படு...”
‘‘இல்லடா. அவதான் என் லைஃப்னு உறுதியா இருக்கேன்...” வைத்து விட்டான்.

முதலில் அவளின் தூரத்தைக் குறைத்து, இருவரும் கைக்கெட்டும் தூரத்தில் சந்திக்க வேண்டும். மனதில் உள்ள விருப்பத்தைச் சொல்ல வேண்டும்.

இப்போதைக்கு திருமணம் வேண்டாமென்றவன் தற்போது ‘இவள்தான்’ என்று நேரில் கொண்டு  நிறுத்தினால், சொந்தபந்தம் ‘அழகு... அழகு...’ என்று அவள் கன்னம் தடவி தலையில் நெட்டி முறித்து திருஷ்டி கழிப்பார்கள்.

பார்க், பீச், ஷாப்பிங்மால் என சந்திக்காவிட்டாலும், பால்கனியில் மனோஜ் நிற்பதும், காத்திருந்தபடி அவளும் மாடிக்கு வருவதுமாக இருந்தார்கள். புன்னகைத்தாள். இங்கிருந்து ‘ஹாய்’ என்றதுக்கு... பதிலுக்கு ‘ஹாய்’ சொன்னாள்.சைகையில் அங்கிருந்து ‘சாப்ட்டாச்சா..?’ எனவும், இங்கிருந்து ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் குவித்து ‘டிரஸ் சூப்பர்’ என காட்டுவதும், கன்னத்தில் கை வைத்து ‘தூங்கப் போறேன்’ போன்ற சைகைகளும்தொடர்ந்தன. அப்புறமென்ன... அவள் பெயர், மொபைல் எண் தெரிந்து கொண்டால் போதும்.

அதற்கு இரண்டாவது நாளே கிரிக்கெட் உதவிற்று. அவள் வீசிய பந்தை சிறுவன் பலம் கூட்டி ராக்கெட்டாய் பறக்க விட்டான். அது குறி தப்பாமல் குண்டு பல்பை சிதறவிட்டு மனோஜ் வீட்டு பால்கனியில் விழுந்தது.பந்து தேடி வந்த சிறுமி ‘‘அந்த அக்கா பேரு ஸ்ருதி...’’ என்றாள். ‘மொபைல் எண்..?’ கேட்க, இடுப்பில் கை வைத்து முறைத்து ‘‘கேர்ள்ஸ் நம்பர் எதுக்கு கேக்குறிங்க..? போங்க...” என்றபடி மனோஜ் கையிலிருந்த பந்தை பிடுங்கிக் கொண்டு ஓடினாள்.

அன்று அருகிருந்த மொபைல் சர்வீஸ் சென்டரில் தனது செல்லுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டும் வரை மனோஜ் காத்திருக்க, ஸ்ருதியும் அங்கு வந்தாள். கையில் பட்டன் செல் இருந்தது.
புன்னகைத்தாள். புன்னகைத்தான். ‘‘என்னங்க இன்னும் பாட்டி மாதிரி பட்டன் மொபைல் யூஸ் பண்றிங்களா..?”

‘‘இது பாட்டியோடது... சவுண்ட் வரலை. சரிபண்ண வந்தேன்...”
“ஓ... ஸாரி... நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...”
வெட்கினாள். ‘‘ஸேம் டு யூ...’’

‘‘உங்க மொபைல் நம்பர் கெடைக்குமா..? விருது மாதிரி வெச்சுக்குவேன்...”
பரிசாகப் புன்னகைத்தாள். சொன்னாள். குறித்துக்கொண்டான்.

மனோஜ் வேலை முடித்து பால்கனியிலும், ஸ்ருதி மாடியிலும் நின்றபடி ஏதேதோ போனில் பேசிக் கொண்டார்கள். சிரித்துக் கொண்டார்கள்.
ஸ்ருதியிடம் மேரேஜ் பற்றி பேச வேண்டும். ‘‘முக்கியமா பேசணும் ஸ்ருதி... சந்திக்கலாமா..?” போனில் ஒருநாள் மனோஜ் கேட்டான்.‘‘சண்டே ஃபோரம் மால் வாங்க...” என்றாள்.

ஞாயிறு மாலை இருவரும் ஃபோரம் மாலில் சந்தித்தார்கள். ஆர்டர் செய்ததை சின்ன சின்னதாய் கொறித்தபடி வெகு நேரம் பேசினார்கள். விடை பெற்றார்கள்.  
அன்றிரவு சசிதரன் போன் பண்ணினான். ‘‘அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண சென்னை வரணும். வீட்டுக்கு வரவா..?”
‘‘கேட்கணுமா... வாடா. அப்றம் நேத்து ஒரு ஷார்ட் ஃபிலிம் பாத்தேன். மிரண்டுட்டேன். பிரமாதமான கிளைமாக்ஸ்...”

‘‘அப்டியா... லிங்க் அனுப்பு...”‘‘அனுப்புறேன். ஒரு பையன் ஒரு பொண்ணை சின்ஸியரா லவ் பண்றான். பொண்ணும் விரும்புறா. ஒரு நாள் ரெண்டு பேரும் சந்திக்கிறப்போ மிலிட்டரில இருக்கிற அவளோட மாமன் அவ மேல உசுரையே வெச்சிருக்கிறதாவும், அவளுக்கும் மாமனைப் பிடிச்சுப்போய் மேரேஜ் பண்ணிக்கிற எண்ணத்துல இருந்ததாகவும், இப்ப லவ் வந்துட்டதால மனசு மாறி மாமனை வேண்டாம்னு சொல்லப் போறதாவும் காதலன்கிட்ட சொல்றா...”  “பொண்ணோட விருப்பம்தான எல்லாம். ஆசைப்பட்டவனை மேரேஜ் பண்ணிக்க நினைக்கிறது தப்பில்லையே..?” சசிதரன் கேட்டான்.

சில நிமிட அமைதிக்குப் பின் மனோஜ் சொன்னான்... ‘‘ஆனா, லவ் பண்ற பையனை சந்திக்கலன்னா அவ மிலிட்டரி மாமனைத்தானே திருமணம் பண்ணிருப்பா..? அப்ப, அவங்க ரெண்டு பேருக்கும் குறுக்கே  போனது அந்தப் பையன்தானே?

எல்லைல பசி, தூக்கம், மழை, வெயில்னு எவ்ளோ கஷ்டங்களைத் தாங்கிகிட்டு நம்ம நாட்டையே பாதுகாத்துட்டு இருக்கிற ஒரு ராணுவ வீரனுக்கு, அவன் ஆசைப்படுற ஒரு பொண்ணை நாம பாதுகாத்து அவன் கையில ஒப்படைக்க வேணாமா..? இப்படி ஒரு இந்தியக் குடிமகனா யோசிச்சவன் அந்தப் பொண்ணுகிட்ட ‘ஸாரி’ சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம வந்துடுறான்...”

“எனக்கு கிளைமாக்ஸ் புடிக்கல...”
‘‘எனக்கு காதலன் பண்ணினதுதான் சரின்னு இருந்துச்சி...”
‘‘சரி அது இருக்கட்டும்... உன் லவ் எப்டி போயிட்டு இருக்கு..?”  
சற்று நேர அமைதிக்குப் பின், “பிரே..க்..கப்...” என்றான் நா தழுதழுக்க.

‘‘பிரேக்கப்பா... என்னாச்சுடா... டேய்.. மனோஜ்...”
சசிதரன் கேட்கக் கேட்க அழைப்பைத் துண்டித்த மனோஜ் முதல் காரியமாக பால்கனி கதவை நிரந்தரமாக மூடவேண்டும் என எண்ணிக் கொண்டான்.  

 - எம்.ஜி.கன்னியப்பன்