மெடிக்கல் ஃபீல்டுல நடக்கும் குற்றம்தான் படம்! சொல்கிறார் இயக்குநர் மணிபாரதி
சினிமா வட்டாரத்திலும் சரி, இலக்கிய வட்டாரத்திலும் சரி, பரிச்சயமான பெயர் மணிபாரதி. விட்டு விட்டு பெய்யும் மழை போல் சினிமா எடுப்பவர். ‘அன்பே அன்பே’, ‘அந்த நாள் ஞாபகம்’ படங்களுக்குப் பிறகு ஃபுல் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இவர் இயக்கியுள்ள படம் ‘பேட்டரி’.
 முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் ‘கலர் தாஜ்மகால்’ என்ற தொகுப்பு வாசகர் மத்தியில் அதிக கவனம் பெற்றது. ‘அன்பே அன்பே’ குடும்பக் கதை... ‘பேட்டரி’ கிரைம் சப்ஜெக்ட். டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி டிராக்கை மாற்றிக்கொண்டீர்களா? 
ஓர் இயக்குநருக்கு எல்லா விதமான சப்ஜெக்ட்டையும் ஹேண்டில் பண்ண தெரிந்திருக்கணும். மணிரத்னம் சார், ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’ன்னு வேற வேற ஜானரை தொட்டார். இப்ப ‘பொன்னியின் செல்வன்’னு சரித்திரக் கதைய தொட்டுள்ளார். எதை தொட்டாலும் அதுல முழுமையா செயல்படணும், அவ்வளவுதான்.
 அன்றைய காலகட்டத்துல ‘அன்பே அன்பே’ தேவைப்பட்டது. ஆனா, இன்னிக்கு சீரியல்கள்ல குடும்பக் கதைகள் வர ஆரம்பிச்சுடுச்சு. இன்னிக்கும் குடும்பக் கதைகள் எடுக்கலாம். ஆனா, அது வித்தியாசமான கதையா இருக்கணும்.
‘பேட்டரி’ல குடும்பம் இல்லன்னு சொல்ல முடியாது. இருக்கு. இன்னிக்கு ஆடியன்ஸும் ரொம்ப மாறிட்டாங்க. படம் அவங்க ரசனைக்குதான் எடுக்க வேண்டி இருக்குது. அதுதான் ‘பேட்டரி’. சினிமாவில் உங்களுடைய போராட்டம் அதிகமா தெரியுதே?
இங்க ஜெயிச்சாலும் வலிதான், தோத்தாலும் வலிதான். ஜெயிச்சா, அடுத்த படம் இதை விட பெருசா ஜெயிக்கணுமேங்கற வலி வந்துடும். அந்த வலி நம்பள நிம்மதியா இருக்கவிடாது. சாப்பிட விடாது. தூங்க விடாது. யாரு கூடவும் சந்தோஷமா பேச விடாது. சதா அதைப்பத்தியே யோசிச்சுகிட்டு இருக்குற மாதிரி ஆயிடும்.
தோத்தா ஒரு பய உங்கள மதிக்கமாட்டான். வாழ்க்கை பெரிய போராட்டமாவும், சுமையாவும் மாறிப் போயிடும். முக்கியமா, பொருளாதார சரிவு. நாம சினிமாவ விட்டுட்டு வேற தொழிலுக்கும் போக முடியாது. இதுலயேதான் இருந்தாகணும். இதுலயேதான் மீண்டு வரணும். இதுலயேதான் விட்ட இடத்தை புடிக்கணும்.
பணம் இல்லன்னா என்ன பண்ண முடியும். நம்ம கனவுகள ஓரங்கட்டி வச்சுட்டு, சினிமாக்குள்ளாறயே கிடைக்கிற வேலைய செஞ்சு சமாளிக்கணும். புடிக்காத வேலைய எப்படி செய்யமுடியும். அது எவ்வளவு பெரிய வலி. யோசிச்சு பாருங்க. இயக்குநர் மணிபாரதி, எழுத்தாளர் மணிபாரதி - என்ன வித்தியாசம்?
எழுத்தாளர் மணிபாரதிதான் இயக்குநர் மணிபாரதிக்கு அஸ்திவாரம். முதலில் தொட்டது பேனா. பிறகுதான் கேமராவைத் தொடும் வாய்ப்பு. எழுத்தாளர் மணிபாரதிக்கு தேவை ஒரு கம்ப்யூட்டர். அது இருந்தால் மனதில் பட்டதை மளமளவென்று எழுதி விடலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒரு கப்பலில் கதை நடக்கிறதா எழுதலாம். அமெரிக்காவில் கதை நடக்கிறதா எழுதலாம். ஆனால், இயக்குநர் மணிபாரதிக்கு அப்படி அல்ல. யார் ஹீரோ என்பதைப் பொறுத்துதான் கதையை எழுதமுடியும். கப்பலும், அமெரிக்காவும் தேவையா என்பதை பட்ஜெட்தான் தீர்மானிக்கும்.
அத்துடன் எழுத்தாளர் மணிபாரதிக்கு அவர் மட்டுமே எஜமானர். இயக்குநர் மணிபாரதிக்கு தயாரிப்பாளர் என்கிற வேறொரு எஜமானர். அவர் சொல்வதையும் கேட்டுதான் படம் எடுக்க முடியும். அதே சமயம் நம்முடைய சுயத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினிமாவில் கதைத் திருட்டு, ரீமேக் படங்கள் எடுப்பது தொடர்கிறதே?
பஞ்சம் இல்லை. நாம்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். சிலர்தான் கதை திருடுகிறார்கள். சிலது ஒரேமாதிரி யோசித்ததாகவும் இருக்கும். ரீமேக் எல்லோரும் செய்வதில்லை. கலைக்கு மொழி எப்போதும் தடையில்லை. நல்ல விஷயமாக இருந்தால், மக்களுக்குத் தேவையான விஷயமாக இருந்தால் கட்டாயம் ரீமேக் செய்யலாம். அப்போதுதான் ஒரு உலகத்தில் உள்ளவர்கள் இன்னொரு உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
இப்போது ரீமேக் படங்களுக்கான சூழ்நிலை குறைந்து வருகிறது. காரணம், பேன் இந்தியா படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மொழியில் தயாரிக்கப்படும் ஒரு படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது. ‘பாகுபலி’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்கள் அதை சாத்தியமாக்கியுள்ளது.
‘பேட்டரி’ உருவான விதம் பற்றி சொல்லுங்களேன்?
இருநூறு கதைகளைக் கேட்டு அலுத்துப் போன தயாரிப்பாளருக்கு இருநூற்றி ஒண்ணாவது ஆளா நான் போய் கதை சொன்னேன். கேட்டதுமே அவருக்கு கதை புடிச்சு உடனே ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாரு. மெடிக்கல் ஃபீல்டுல எவ்வளவோ குற்றங்கள் நடக்குது. அதுல இதுவரைக்கும் தொடாத ஒரு பிரச்னைய தொட்டிருக்கோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற ஒரு படமா ‘பேட்டரி’ இருக்கும். திரைக்கதையும் சுவாரஸ்யமா வந்துருக்கு. எந்த காம்ப்ரமைஸும் இல்லாம எடுத்துருக்கோம்.
இது காலத்தின் கட்டாயமும் கூட. படத்துல நடிச்சிருக்குற செங்குட்டுவன், அம்மு அபிராமி, பேபி மோனிகா, ராஜ் தீபக் ஷெட்டி, யோக் ஜப்பி, நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர்னு எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க. அந்தந்த கேரக்டராவே வாழ்ந்திருக்காங்க. படத்த பார்த்த சில பிரபலங்கள், படம் ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க.
சினிமாவில் உங்களுக்கு நண்பர்கள் உண்டா?
இயக்குநர் ஹரி என்னுடைய நல்ல நண்பர். ரஜினி சாரின் ‘வள்ளி’ படத்தில் இருவரும் உதவி இயக்குநர்கள். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு. அவருடைய ‘சாமி’யும் என்னுடைய ‘அன்பே அன்பே’ படமும் ஒரே நாளில் வெளியானது. ‘தமிழ்’ படத்திலிருந்து ‘சாமி 2’ வரை ஹரியின் கதை விவாதத்தில் கலந்து கொள்வேன். ‘கதை விவாதம்’ மணிபாரதி என்று டைட்டிலில் நேம் கிரெடிட் தருவார். எங்கள் நட்பு இப்போதும் தொடர்கிறது.
பெரிய இயக்குநராக இருந்தாலும் பந்தா இல்லாமல் பழகுவார். என்னுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவருடைய வெற்றிக்குக் காரணமா அவருடைய கடுமையான உழைப்பை சொல்வேன். காலையில் 7 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 11 வரை வேலை செய்வார். அவருடன் பழகியதால் நானும் அதே ஸ்டைலுக்கு பழகிவிட்டேன்.
ஹீரோக்கள் கையில் சினிமா மாறிவிட்ட நிலையில் படைப்பாளிகளுக்கு மரியாதை இருக்கிறதா?
இல்லை என்று சொல்ல முடியாது. லோகேஷ் கனகராஜ் கமல் சாரை வைத்துப் பண்ணினாலும் மரியாதை கிடைக்கிறது. ஒரு படத்தில் புதுமுகம் இருந்தாலும் இயக்குநருக்கு மரியாதை
உண்டு. சினிமா இப்போது ஹீரோக்கள் கையில் இருப்பதை மறுக்க முடியாது. அவர்கள்தான் இயக்குநர், தயாரிப்பாளர்களை ஃபிக்ஸ் செய்கிறார்கள்.
ஏவிஎம், நாகிரெட்டி போன்றவர்கள் படம் எடுக்கும்போது சினிமா தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி காலத்துல ஹீரோக்கள் கைக்கு மாறியது. கே.பாலசந்தர், பாரதிராஜா வந்த பிறகு இயக்குநர்கள் கைக்கு மாறியது. இப்போ மீண்டும் ஹீரோக்கள் கையில் சினிமா இருக்கு. ஹீரோ யார் என்று தெரிந்தபிறகுதான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள்.
எஸ்.ராஜா
|