என்னது... ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடந்ததா..? 9 பெண் சுயேச்சைகள் உணர்த்தும் பாடம்



“இங்கே தேர்தல் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லையே..?” இப்படிச் சொன்னவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்று வாக்களித்திருக்கும் நண்பர் ஒருவர்.

அவர் இப்படி சொன்னதில் ஆச்சரியமில்லை. இதுவே பிற ஆசிய நாடுகளில் பிறந்து அங்கு நடக்கும் தேர்தல்களை காணப்பெற்ற அனைவரின் எண்ணமாகவும் இருந்திருக்கும் .
ஆஸி அரசியல் வரலாற்றில் நெடுங்காலமாக இரண்டு கட்சி ஆட்சியே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. லிபரல் கட்சி வலதுசாரி தரப்பு என்றால் லேபர் கட்சியை இடதுசாரி தரப்பு என்று சொல்லலாம். வேறு சில கட்சிகள் களத்தில் இருந்தாலும் அவை மிகச்சிறிய உதிரிக் கட்சிகளே.

கூட்டணியில் பங்கு வகிப்பதைத் தவிர தனித்த ஓர் அரசியல் மாற்றாக உருவாகி வரமுடியாதவை. எனவே இங்கு வாக்கு அரசியல் என்பது இந்த இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் போட்டி என்ற அளவிலேயே முடிந்துபோய்விடும் நிலை இருந்தது.1950 - 60கள் வரை ஆங்காங்கே சுயேச்சைகளும் ஓரிரு தொகுதியில் வென்று வந்தார்கள். ஆனால், அதன் பின்னான காலகட்டத்தில் பெரும் அரசியல் ஒருங்கிணைவு நிகழ்ந்து இந்த இரண்டு கட்சிகளுமே தத்தமது அரசியல் பலத்தை விரிவாக்கி நிலை நிறுத்திக்கொண்ட காலம்.

இந்தக் காலகட்டத்தில்தான் எந்த தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகிவிட்டது. மேலும் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் நிகழாத காலமானதால் ஒரு தொகுதியின் வாக்காளர்கள் என்ற அளவில் அதிக மாற்றங்கள் நிகழவில்லை.தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது ஒரு 10 - 15 தொகுதிகளில் யார் வெல்வார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் சூழல் உருவாகிவிட்டது. இந்த ‘ஊசலாடும் தொகுதிகள்’ ( marginal seats) எந்தப் பக்கமும் சாயக்கூடியவை. இரண்டு கட்சிக்கும் கிட்டத்தட்ட சம ஆதரவைக் கொண்ட தொகுதிகள்.

மாறாக பெரும்பாலான பிற தொகுதிகள் ‘உறுதியான தொகுதிகள்’ (safe seats). அதாவது போன தேர்தலில் வென்ற கட்சியே இந்த முறையும் வெல்லும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் .
எனவே தீவிரமான தேர்தல் செயல்பாடு, பிரசாரம் என்பதெல்லாம் அந்த 10 - 15 தொகுதிகளை மட்டுமே குறிவைத்து நடக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கதவைத் தட்டி வாக்கு சேகரிப்பதெல்லாம் இங்குதான். மற்றபடி பிற தொகுதிகளில் யார் வெல்வார்கள் என்று ஓரளவு ஊகிக்க முடிவதால் தேர்தல் என்பது கிட்டத்தட்ட ஒரு சடங்கு மட்டுமே என்பதாக இருக்கும்.

வியாபார மேலாண்மையில் இரட்டைப்படை போட்டி (Duopoly ) என்று சொல்வார்கள். ஒரு தொழில் அல்லது சேவையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே போட்டி போடும் நிலை.
உதாரணமாக சூப்பர் மார்க்கெட் தொழிலில் ஆல்டி நிறுவனம் வருவதற்கு முன்னர் வுல்வோர்த்ஸ் மற்றும் கோல்ஸ் கடைகளே கோலோச்சின. இந்த இரண்டு கடைகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுபவை என்றாலும் காலப்போக்கில் அவர்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.

சில சமயம் அவர்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வு இருக்கும் - ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையை ஓர் அளவுக்கு மேல் இருவருமே குறைக்கக் கூடாது என்று. அரசியலிலும் அப்படியான ஒரு சூழ்நிலைதான் நிலவிற்று. காலப்போக்கில் லிபரல், லேபர் என்று இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.
ஆனால், இந்த முறை தேர்தல் முடிவுகள் இந்த அடிப்படையைக் கலைத்துப் போட்டிருக்கின்றன. அந்த விதத்தில் இது கடந்த 30 - 40 ஆண்டுகளில் நடந்த முக்கியமான தேர்தல் என்று சொல்ல வேண்டும்.

லேபர் கட்சிதான் இந்த முறை ஆட்சியைப் பிடித்தது என்றாலும் லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்த பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்று அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர். அப்படி வென்ற 10 சுயேச்சை வேட்பாளர்களில் 9 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் என்ன கொள்கைகளை முன்வைத்து வென்றார்கள் என்பது இன்னுமே முக்கியமானது - காலநிலை மாற்றம் மற்றும் அரசியல் ஊழல் கண்காணிப்பு அமைப்பு நிறுவுதல் (ICAC)!

இந்தக் கொள்கைகள் குறித்து இரண்டு பெரிய கட்சிகளும் தொடர்ந்து சுணக்கம் காட்டி வந்த சூழலில், நாங்களே இதை முன்வைத்து கொள்கை உருவாக்கும் இடத்துக்கு வருவோம் என்று தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள் இந்த சுயேச்சை வேட்பாளர்கள். இவர்கள் எல்லோரும் தனித்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என்றாலும் இவர்களைக் கூட்டாக டீல் (Teal) வேட்பாளர்கள் என்கிறார்கள்.

டீல் என்பது இங்கு வண்ணத்தைக் குறிக்கும் சொல். பச்சையும் நீலமும் கலந்தால் கிடைக்கும் வண்ணம். அதாவது லிபரல் கட்சியின் நீல வண்ணமும், கிரீன்ஸ் கட்சியின் பச்சை வண்ணமும் கலந்தால் கிடைப்பது. இவர்கள் பெற்ற பெரும்பாலான வாக்குகள் லிபரல் கட்சிக்கு போயிருக்க வேண்டிய வாக்குகள். அத்தோடு இவர்கள் கிரீன்ஸ் கட்சி போலவே காலநிலை மாற்றத்தை முக்கிய கொள்கையாகக் கொண்டவர்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் இவ்வளவு சுயேச்சை வேட்பாளர்கள் எந்த தேர்தலிலும் வென்று வந்ததில்லை .இதுவரை ஆஸி அரசியல் என்பது ஒரு திருவிழா தேரைப் போல மெல்ல அசைந்து வந்திருக்கிறது . அவ்வப்போது இடது வலது என்று சாய்ந்தாலும் அது போகும் தெருவும் திசையும் ஒன்றாகவே இருந்திருக்கிறது . ஆனால் இந்தத் தேர்தல், அதில் உருவாகிய சுயேச்சை வேட்பாளர்களின் எழுச்சி அந்த தேரை சட்டென்று திருப்பி வேறொரு தெருவில், வேறொரு திசை நோக்கி இறக்கி விட்டிருக்கிறது. இனி காலநிலை மாற்றம் என்பது வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே யாரும் பேசிக்கொண்டிருக்க முடியாது.

அதே போல ICAC உருவாக்குவது குறித்தும் மக்கள் கறாராக இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.ஒன்பது வருட இடைவெளிக்குப்பின் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும் இது அவர்களுக்கு மெச்சத்தகுந்த வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவதற்கில்லை. இந்த வெற்றி அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்றுதான் நாம் கொள்ள வேண்டும். ஆஸி மக்களின் எதிர்பார்ப்பையும் கோரிக்கைகளையும் மனதில் கொண்டு நடந்தால் மட்டுமே அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான எச்சரிக்கை என்றும் இதைச் சொல்லலாம்.பொதுவாழ்வில், குறிப்பாக அரசியலில்  பெண்கள் ஆர்வமாக  ஈடுபடவும் இந்த தேர்தல் ஒரு நல்ல சமிக்ைஞயை அளித்திருக்கிறது.

அதேபோல் பல இன கலாசாரப் பின்னணியில் இருந்தும் இம்முறை பலர் பாராளுமன்றத்துக்கு வரவிருக்கிறார்கள். இலங்கையில் பிறந்த தமிழ் ஆஸ்திரேலியரான டாக்டர் மிஷல் ஆனந்த  ராஜா வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.லேபர் கட்சித் தலைவர் ஆந்தனி அல்பனீசி பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ளும்போது கடவுளையோ, இங்கிலாந்து அரசியையோ குறிப்பிடாமல் விட்டது ஒரு உறுதியான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், அவர் வரும் மாதங்களில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் அவ்வளவு எளிதானவை அல்ல. புதிய நிலக்கரிச் சுரங்கங்களை அனுமதிப்பது, கார்பன் வெளியேற்றத்தை விரைவாகக் குறைப்பதற்கான அழுத்தம், சீனாவுடனும் பசிபிக் நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்துவது... என்று பல சவால்கள் காத்திருக்கின்றன.தேர் தடம் மாறியிருக்கலாம். ஆனால், அதன் முன் இன்னும் பல தடைகள் இருக்கவே செய்கின்றன .  

ஆஸ்திரேலியாவில் இருந்து கார்த்திக் வேலு