Bio Data-பட்டாயா



முகவரி : பாங்காக்கின் தென்கிழக்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்நகரம்.

பெயர் : முன்பு டப்பாயா. சமீப காலமாக பட்டாயா.

நாடு : தாய்லாந்தில் வீற்றிருக்கிறது பட்டாயா.

அடையாளம் :  பட்டாயா என்றாலே பாலியல் தொழில்தான். உலகின் பாலியல் தலைநகரம், பாவ நகரம் என்று பட்டாயாவை அழைக்கின்றனர்.

மக்கள் தொகை : 2019ம் வருடத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 1.2 லட்சம். ஆனால், எப்போது போய் கணக்கெடுத்தாலும் 3 முதல் 6 லட்சம் பேர் வரை  பட்டாயாவில் இருப்பார்கள். ஆம்; தினமும் லட்சக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகள் பல நாட்கள்பட்டாயாவிலே தங்கிவிடுகின்றனர்.

பரப்பளவு : 53.4 சதுர கிலோமீட்டர்.

வரலாறு : 1960க்கு முன்பு வரை மீன் பிடிக்கும் கிராமமாக இருந்தது பட்டாயா. அப்போது ஒருவர்கூட பட்டாயாவைச் சுற்றிப்பார்க்க வரவே இல்லை.
1955 முதல் 1975 வரை நடந்த வியட்நாம் போரின்போது அமெரிக்க இராணுவ வீரர்கள் ஓய்வெடுக்கவும், ஆசுவாசத்திற்காகவும் பட்டாயாவுக்கு வருகை புரிந்தனர். பட்டாயாவின் அமைதியான சூழல் அவர்களை அங்கேயே தங்க வைத்தது.

அப்படி தங்கியவர்கள் பட்டாயாவின் சிறப்பைத் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்தனர். பட்டாயாவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் உடனே பட்டாயாவை நோக்கிப் படையெடுத்தனர்.
இப்படி பட்டாயாவுக்கு வருகை புரிந்தவர்களின் வாய்மொழி வழியாக அதன் புகழ் பரவ ஆரம்பித்தது. அங்கே எல்லா வசதிகளும் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
இன்று உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக மிளிர்கிறது.

பீர் பார் : இரவு நேரத்தில் பட்டாயாவில் எங்கு பார்த்தாலும் பீருக்கு என்று பிரத்யேகமாக உள்ள  பார்கள் திறந்திருக்கும். 1500 முதல் 2000 பீர் பார்கள் பட்டாயாவை அலங்கரிக்கின்றன.

சுற்றுலா : 2019 ம் வருடம் மட்டும் சுமார் 94.4 லட்சம் பேர் பட்டாயாவுக்கு வருகை புரிந்திருக்கின்றனர். கொரோனா லாக்டவுனால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டாயாவின் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டது. இப்போது மீண்டும் மக்கள் வருகை புரிய ஆரம்பித்துள்ளனர்.
விருந்து, மசாஜ், நைட் லைஃப், பாலியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் அழகான கடற்கரைகளை ரசிக்க, கோல்ஃப் விளையாடுவதற்கு, கடலுக்கடியில் டைவிங் அடிக்க, விதவிதமான கடல் உணவுகளைச் சாப்பிட, தண்ணீரில் மிதக்கும் சந்தையில் ஷாப்பிங் செய்ய, புத்த (விஹாரை) கோயில்களுக்கு விசிட் அடிக்க... என பல காரணங்களுக்காகவும் பட்டாயாவுக்கு மக்கள் வருகின்றனர்.

மொழி : தாய்.

பாலியல் தொழில்: தாய்லாந்தில் பாலியல் தொழில் செய்வது சட்டப்படி குற்றம். இருந்தாலும் தாய்லாந்தில் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. குறிப்பாக பட்டாயாவில் மட்டும் 2017ம் வருடக் கணக்கின்படி 27 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது இந்த எண்ணிக்கை அதிகம்.

இரவு வாழ்க்கை : பட்டாயாவின் சிவப்பு விளக்குப் பகுதி ‘வாக்கிங் ஸ்ட்ரீட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாகனங்களுக்கு அனுமதியில்லை. இங்கே உணவகங்களும், மசாஜ் சென்டர்களும், கிளப்களும், பப்புகளும், பார்களும் அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கும். பாலியல் தொழிலும், செக்ஸ் ஷோக்களும் அரங்கேறும் இடமும் இதுதான். பட்டாயாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைத் தவறவிடுவதில்லை.

தங்கும் விடுதிகள் : அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகள், விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள் என விதவிதமான தங்கும் விடுதிகள் சூழ்ந்த ஒரு நகரம் பட்டாயா.
ஆயிரம் ரூபாய்க்கும் தங்கும் அறை கிடைக்கும். பல ஆயிரங்களிலும் சொகுசு அறைகள் இருக்கின்றன.

2015ம் வருடத்தின் கணக்குப்படி அங்கே 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஹோட்டல்கள் இருக்கின்றன. இதில் 1.36 லட்சம் அறைகள் உள்ளன. பட்டாயாவின் மக்கள் தொகையைவிட தங்கும் அறைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வளவு அறைகள் இருந்தாலும் முன்பதிவு செய்யவில்லை என்றால் தங்க இடம் கிடைப்பது கடினம். அந்தளவுக்கு அறைகள் விரைவாக நிரம்பிவிடும்.

நாணயம் : தாய் பக்த். மே 3, 2022ம் தேதியன்று ஒரு தாய் பக்த்தின் இந்திய மதிப்பு ரூ.2.23.

சிறப்பம்சங்கள்: தெற்கு பட்டாயாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக சில உணவகங்களும், கடைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். குறைந்த விலையில் டூவீலர், கார் வாடகைக்குக் கிடைக்கும்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வங்கிகள் செயல்படும். சுற்றுலாப் பயணிகளின் பணப் பரிவர்த்தனைக்காக சில வங்கிக் கிளைகள் இரவு 10 மணி வரைக்கும்கூட இயங்குகின்றன.

திருவிழாக்கள் : ஜனவரியின் இறுதியில் அல்லது பிப்ரவரியின் ஆரம்பத்தில் வரும் சீனப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் இடம், பட்டாயா. மார்ச் மாதத்தில் பட்டாயா சர்வதேச இசைத் திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. கடற்கரைச் சாலைகளில் மேடைகள் அமைக்கப்பட்டு இத்திருவிழா அமர்க்களப்படுத்தப்படும். தாய்லாந்து மற்றும் சர்வதேச புகழ்பெற்ற பல இசைக்கலைஞர்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.

ஏப்ரல் மத்தியில் ‘வான் லாய்’ என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை, தண்ணீர் விளையாட்டுப்போட்டிகள் என களைகட்டும் ‘வான் லாய்’.
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் பட்டாயா மாரத்தான் போட்டிகள் நடக்கும். அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பட்டாயா கிளாசிக்கல் கிதார் திருவிழா கொண்டாடப்படும்.
இதுபோக வருடம் முழுவதும் பட்டாயாவில் ஏராளமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

த.சக்திவேல்