தமிழில் ரவுண்டு கட்டும் கஷ்மீர்!



வசந்த முல்லை சைக்கலாஜிக்கல் திரில்லர் படம்.

கஷ்மீரா பர்தேஷி... 2018ல் சினிமாவில் கால் பதித்த மும்பை புயல். ஆரம்பமே ஐந்து மொழிகளில் அறிமுகம். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மூலம் தமிழில் என்ட்ரியானவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நம்மை நின்று கவனிக்கச் செய்தார். இதோ இப்போது 2022ல் ஆரம்பமே ‘அன்பறிவு’ ரிலீஸ்.
தொடர்ந்து ‘வசந்த முல்லை’, ‘வரலாறு முக்கியம்’ என கஷ்மீரா கிராஃப் ஜெட் வேகத்தில் எகிறத் தொடங்கியிருக்கிறது. ‘‘ஹேய்ய்ய்… ஹேப்பி நியூ இயர்! எத்தனை மொழில நடிச்சாலும் எனக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்து என்னை பிஸியாவே வெச்சிருக்கறது தமிழ் சினிமாதான். செம பாஸிட்டிவ்வா ஆரம்பிச்சிருக்கு இந்த 2022...’’ உற்சாகமாக ஆரம்பித்தார் காஷ்மீரா  உங்க பெயரே குளுகுளுன்னு இருக்கே... என்ன அர்த்தம்?

கஷ்மீரான்னா அழகுன்னு அர்த்தம். இந்தப் பேரு எனக்கு பொருத்தமா இருக்கா! இந்த வருஷத்தோட முதல் படமே என் படம்தான். செம ஃபீல். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மூலம் என்ட்ரீ ஆனேன். அந்தப் பட ரிலீஸ் சில வாய்ப்புகளைக் கொண்டு வந்துச்சு. அப்படி அமைஞ்சதுதான் ‘அன்பறிவு’. 2020 லாக்டவுன்ல மாட்டிக்கிட்டேன். குடும்பப் படம் மூலமா தமிழுக்கு வரணும்னு நினைச்சேன். முதல் படமும் சரி ‘அன்பறிவு’ படமும் சரி அப்படியான படங்களாதான் அமைஞ்சது. இதிலே ‘அன்பறிவு’ படம் பெரிய பேனரான சத்யஜோதி ஃபிலிம்ஸ். அப்புறமென்ன... மீ செம ஹேப்பி.

காமர்ஸ் ஸ்டூடண்ட் , ஃபேஷன் டிசைனிங் எல்லாம் படிச்சிருக்கீங்களே... எப்படி சினிமா?

சினிமாவுக்குள்ளே வரலைன்னா என் பாதை டிசைனிங்லதான் இருந்திருக்கும். காமர்ஸ் கூடவே ஃபேஷன் டிசைனிங், பிஸினஸ் மைண்ட்லதான் காம்போவா படிச்சேன். ஆனா, ஆசை சினிமா மேல. ஒரு முயற்சி கொடுப்போமேன்னு கொடுத்தேன். முதல்ல மாடலிங், அப்பறம் நிறைய விளம்பரங்கள்.
அப்படியே முதல் படம் தெலுங்கிலே ‘நர்த்தனசாலா’ அமைஞ்சது. அடுத்தடுத்து மராத்தில ‘ராம்பாட்’, கனவு மாதிரி இந்தில ‘மிஷன் மங்கல்’. அடுத்து தமிழ்ல ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. தொடர்ந்து கன்னடத்துல ‘ரைடர்’ படம். இப்ப தமிழ்ல பிஸியோ பிஸி.
இன்னொரு விஷயம், ‘வொர்த்’னு ஒரு பிராண்ட் ஆரம்பிச்சு படிச்ச படிப்பை வேஸ்ட்டாக்காம சைட்ல டிசைனிங்கும் விடாம செய்துட்டு இருக்கேன்.

அப்பா, அம்மா ரியாக்‌ஷன் என்ன?

அப்பா மஹேந்திரா பர்தேஷி, ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றார். அம்மா ஸ்வாதி பர்தேஷி. அப்பா ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். ‘உனக்கு ஒரு வருஷம் டைம். அதுக்குள்ள ஆக்டிங்ல ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கலைன்னா பிஸினஸ்க்குள்ள வந்துடணும்’னு சொல்லிட்டார். வெறித்தனமா இறங்கி மாடலிங், சினிமா ஆடிஷன்ஸ்னு செய்தேன். இப்ப அப்பா ஹேப்பி. ஃபிரண்ட்ஸ் கிட்டல்லாம் என் பொண்ணு என் பொண்ணுன்னு சீன்ஸ் வரும்போது காட்டிட்டு இருக்கார்.

‘வரலாறு முக்கியம்’, ‘வசந்த முல்லை’ படங்கள்ல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க?

‘வரலாறு முக்கியம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தீங்களா... செம கலர்ஃபுல்லா, ஜாலியா இருக்குல... அப்படித்தான் படமும். நான் இந்தப் படத்துல கேரள பொண்ணா நடிச்சிருக்கேன். ‘அன்பறிவு’ படம் பொள்ளாச்சியிலே ஷூட், ‘வரலாறு முக்கியம்’ படம் கோயமுத்துர்ல ஷூட். பக்கத்துப் பக்கத்துல ஒரே டைம்ல வேலை செய்தேன்.‘வசந்த முல்லை’ சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். நான் அதுல பாபி சிம்ஹாவுக்கு எல்லா வகைலயும் சப்போர்ட் செய்யற மனைவியா நடிச்சிருக்கேன். கார் டிராவல், ஹைவே சேஸிங்னு நிறைய பரபர தருணங்கள் இருக்கு.  

பிடிச்ச ஹீரோ மற்றும் கிரஷ் யாரு..?

பிடிச்ச ஹீரோ, கிரஷ் எல்லாமே ‘இளையதளபதி’ விஜய் சார்தான். அவர் கூட நடிக்க ஒரு சான்ஸ் கிடைச்சா அவ்ளோதான்... டாப்ல மிதப்பேன். எனக்குத் தென்னிந்திய படங்கள்ல நடிக்க ரொம்ப பிடிச்சிருக்கு. குறிப்பா தமிழ். இங்க இன்னும் நிறைய படங்கள் நடிக்கணும், நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும், பெரிய பெரிய பேனர், நல்ல நல்ல கேரக்டர்கள் செய்யணும்... இதுதான் இந்த வருஷ டார்கெட்.

ஷாலினி நியூட்டன்