நீரின்றி அமையாது உலகு...



14. நடுங்கச் செய்யும் நீர் மாசுபாடு

‘கரும்பு தரும் சாறோ தம்பி, காவேரியின் ஆறு!’ என்று பாரதிதாசன் பாடிய காவேரி இன்று இல்லை என்பதை கடந்த இதழில் பார்த்தோம். காவேரி ஆறு மட்டுமல்ல; பவானி, நொய்யல், அமராவதி, காலிங்கராயன் என்ற துணை ஆறுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பவானி ஆற்றிலிருந்து ஓர் ஆலை 4 கோடி லிட்டர் நீரை எடுத்து பயன்படுத்தி, அதே அளவு கழிவுநீரை சுத்தம் செய்யாது ஆற்றில் கலந்து விட்டதால் 16 கிமீ தொலைவில் உள்ள பவானி நகர் நீர்த் தேக்கம் வரை வேதிப்பொருட்களின் பாதிப்பு இருந்தது. பொது மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அந்த ஆலை மூடப்பட்டது. 600 ஆண்டு பழமைவாய்ந்த காலிங்கராயன் கால்வாய் ஈரோடு நகருக்குள் காவேரியை ஒட்டிச் செல்கிறது.

இதில் 300 சாயப் பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் தூய்மை செய்யப்படாத கழிவுநீரை இதில் கலக்கின்றன. இந்த ஆறு இப்போது ஈரோட்டின் கூவமாக மாறியுள்ளது.
நொய்யல் ஆற்றின் கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைகள் அமைத்து 300 அடி ஆழத்துக்கு நீரை மாசுபடுத்தி விட்டனர். இன்று இந்த ஆற்றின் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. காவேரி மட்டுமல்ல: தமிழகத்தில் ஓடும் பல ஆறுகளின் நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

கரூரைச் சுற்றியுள்ள 600க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை, பிளீச்சிங் ஆலைகளால் அமராவதி ஆறு பாழாகியுள்ளது. திண்டுக்கல் நகரை ஒட்டி ஓடும் காவேரியின் துணை ஆறுகளில் கொடகனாறு, ஒன்று. இதன் கரையில் உள்ள 80 தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளும் இறுதியாக காவேரியில் கலக்கின்றன. இப்பொழுது காவேரி நோய்களின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது.

தமிழக தோல் தொழிற்சாலைகளில் ஏறக்குறைய 75 சதவீதம் பாலாற்றுப் படுகையில் உள்ளன. நாள் ஒன்றுக்கு 11 லட்சம் கிலோ தோல் பதனிடப்பட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து கோடி லிட்டர் கழிவு நீர் வெளியாகிறது.   

இந்தக் கழிவுகளில் குரோமியம், தாமிரம், சல்பைடு ஆகிய ரசாயனக் கழிவுகள் உள்ளன. இதனால், தமிழ்நாடு குடிநீர் வாரியம் குடிமல்லூரில் அமைத்திருந்த குடிநீர் கிணற்றை மூடி விட்டது. 

குரோமியம் நிறைந்த கசடு மற்றொரு அச்சுறுத்தல். இது காலி நிலங்கள், சாலையோரங்கள், புறம்போக்குகளில் கொட்டப்பட்டு மழை நீர் வழியாக நீர் நிலைகளில் கலந்து மாசுபாடு அடைகிறது. உலகின் மாசுபட்ட 30 முக்கிய இடங்களில் ராணிப்பேட்டையும் உண்டு என்று 2007ம் ஆண்டிலேயே ஐக்கிய அமெரிக்காவின் பிளாக்ஸ்மித் நிறுவனம் அறிவித்தது.

மதுரையில் ஓடும் வைகை ஆறு, கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறியுள்ளது. வைகை ஆற்றின் மொத்த நீளம் 252 கிலோமீட்டர். மதுரை நகருக்குள் ஓடும் 8 கிலோமீட்டர் தொலைவுக்குள், அத்தனை சீர்கேடுகளையும் அது சந்திக்கிறது. நாளொன்றுக்கு 8.7 கோடி லிட்டர் கழிவு நீர் வைகையில் கலக்கிறது.  இதனால் ஆரப்பாளையம் நீரேற்று நிலையம் மூடப்பட்டு விட்டது.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை வைகை ஆற்றை நம்பி குடிநீருக்கான நாற்பத்தி மூன்று நீரேற்று நிலையங்கள் உள்ளன. அதன் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

மதுரை நகருக்குள் ஓடும் கிருதுமால் நதியில் முன்னொரு காலத்தில் தூய நீர் ஓடியது. இன்று இது முழு சாக்கடை நீர் நிரம்பிச்செல்லும் ஆறு. சென்னைக்கு ஒரு கூவம் போல, மதுரைக்கு கிருதுமால் நதி இருப்பது மனிதன் செய்யும் படுபாதகச் செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலைகள் உலகம் முழுவதும் 155 நாடுகளில் இயங்கி வருகின்றன. மொத்தம் 12 ஆயிரத்து 300 ஆலைகள் உள்ளன.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் அமில மழை பொழிந்து நிலம், நீர் இரண்டுக்கும் பாதிப்பை உருவாக்குவதுடன் பசுமை இல்ல வளிகளை அதிகரிக்கும் என்றும்; இந்த ஆலைகள் உள்ள இடங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஜான் ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான குடிநீரைப் பெறுவது உலக மக்களின் அடிப்படை உரிமை என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அறிவிக்கிறது. ஆனால், அந்த பாதுகாப்பான குடிநீரைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு நாளும் நீர்நிலைகளில் பல ரசாயன விஷங்கள் கலக்கப்படுகின்றன.

உலகில் வேதியியல் ஆய்வுகளுக்காக மட்டும் 84 பில்லியன் லிட்டர் சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுமார் 830 மில்லியன் பவுண்டு அளவுக்கு ரசாயனங்களும், வேதியியல் கழிவுகளும் உருவாக்கப்படுகின்றன. 7.8 பில்லியன் பவுண்டுகள் அளவிற்கு கார்பன்டை ஆக்ஸைடு உருவாகி காற்றில் கலக்கிறது.

சென்னையில் அரும்பாக்கம், வில்லிவாக்கம், மாதவரம்,கொரட்டூர் அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி, முகப்பேர், போரூர் போன்ற பகுதிளில் நீர்நிலைகள் முழுமையாகவோ பகுதியாகவோ மேடாக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இதனால் மீதம் உள்ள நீர்நிலைகளில் மாசுபாடு அதிகரித்து வருகிறது.

மும்பையில் மூன்று பெரிய ஏரிகள் பாதுகாக்கப்பட்டன. அதன் காரணமாக மேக்சிமம் சிட்டி என்று அழைக்கப்படும் மும்பையில் இதுவரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை. அதேநேரத்தில் 124 ஏரிகள் இருந்த சென்னையில், ஒவ்வொரு கோடையின் போதும் தண்ணீருக்கு ஆலாய் பறக்கவேண்டியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சென்னையில் உள்ள குப்பை கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் இருந்து ஆர்சனிக், கேட்மியம், குரோமியம், மெர்க்குரி, ஈயம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்கள் மண்ணுக்குள் புதைந்து மழை பெய்யும் பொழுது நீர் நிலைகளைச் சென்று சேருகிறது.

 சென்னையில் மாதவரம், எண்ணூர் ஆகிய இடங்களிலும் சதுப்பு நிலங்கள் உள்ளன. மாதவரம் பால் பண்ணையின் கழிவுகள் இங்கு கலக்கப்படுகின்றன. அனல்மின் நிலையக் கழிவுகளால் எண்ணூர் சதுப்பு நிலம் சீர்கேடடைந்துள்ளது.  இப்படி சென்னையைச் சுற்றி நீர் மாசுபாடு விரிவடைந்து செல்கிறது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றுநீரும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், இன்று தாமிரபரணி ஆற்றிலும் கழிவுகள் சேர்கின்றன.சேரன்மாதேவி என்ற இடத்தின் அருகே லட்சம் லிட்டர் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்தில் துணி ஆலைக் கழிவுகளைக் கலக்கின்றனர்.

அடுத்து திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் திடக்கழிவை ஆற்றில் கொட்டுகின்றனர். இது போகநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தமாக 700க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர்க்கால்வாய்கள் உள்ளன. இவை சென்று சேரும் இடம் தாமிரபரணி ஆறு.இப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆறுகளிலும் மாசுகள் கலந்து கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு நோய்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

கடலில் ஆற்று நீர் சேர்வதால்தான் அங்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. கடலில் கலக்கும் தண்ணீரின் அளவைப் பொருத்தே பருவ கால மாற்றங்கள் ஏற்படும். இது கடலோரத்தில் மட்டுமல்லாது, கரையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆறுகள் வழியே கடலில் சேரும் பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுக்கள் கடல்வாழ் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. நாம் மூச்சு விட ஆக்சிஜனை உருவாக்கித் தருவது தாவரங்கள் மட்டுமல்ல. தாவரங்கள் வெறும் இருபத்தி எட்டு சதவீதமே ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. சுமார் 70 சதவீத பங்கை கடலிலுள்ள ஆல்கே என்று அழைக்கப்படும் பச்சைப் பாசிகளே உற்பத்தி செய்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.

மாசு அடைந்த ஆற்றுநீர் கடலில் கலக்கும்போது பல்வேறு பிரச்னைகள் கடலில் ஏற்படுகின்றன. அது நம் சூழலியலில் பல்வேறு மாறுபாடுகளைக் கொண்டு வருகிறது.
இப்போதைய மதிப்பீட்டின்படி உலகில் 25 சதவீத ஆறுகளின் நீர், கடலில் கலப்பதற்கு முன்பே வறண்டு விடுகின்றன.

இதனால் கடல்நீர்வளத்தில் பல மாறுதல்கள் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.நீர் மாசுபாடு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரச்னை. தீபாவளிக்குப்பிறகு வடஇந்தியாவில் சாத்பூஜை கொண்டாப்படும். இது குறிப்பாக தில்லி, உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நீர்நிலைகளில் நின்றுகொண்டு சூரியனுக்கு பூஜை செய்து நன்றி தெரிவிப்பார்கள்.

இந்த முறை தில்லி யமுனை நதியில் இறங்கி பூஜை செய்த பெண்களைச் சுற்றி வெள்ளை நுரைகள் சூழ்ந்திருந்தன. இது தில்லியைச் சுற்றியுள்ள ஆலைகளில் இருந்து வெளியான
ராசயனக் கழிவுகளின் விளைவு. மனிதன் ஏற்படுத்தி வரும் இந்த சுற்றுச்சூழல் மாசுபாடு திரும்பத் தாக்கும்போது அதன் வீரியம் அதிகம் என்பதை உணரவேண்டும்.  
நீர் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து நிற்கிறது. இந்த நீரைப் பாதுகாக்காமல் நாம் பாழடித்து வருகிறோம். இனிமேலாவது விழித்துக்கொண்டால் மனித சமூகம் பிழைத்துக்
கொள்ளும்.

(தொடரும்)  

- பா.ஸ்ரீகுமார்