பலூன்



காத்தாயி அம்மன் கோயில் வளாகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கடைகள். வளையல் கடைகள்... பொம்மைக் கடைகள்... வறுகடலை கடைகள்... பலகாரக் கடைகள்.ஒருபக்கம் குடை ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் பொய்க்கால் குதிரையாட்டம்.
செடிபவுனுவின் கையை கெட்டியாகப் பற்றியிருந்தாள் முத்துப்பேச்சி. ஏழு வயசு. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.செம்பட்டை படிந்த கேசத்தை இரட்டை சடை பின்னி... வெளுத்துப்போன ரிப்பனை வைத்துக் கட்டியிருந்தாள். கிழிசலான அழுக்கு கவுனு... அதுகூட மணியக்காரர் மனைவி கொடுத்தது. மணியக்காரர் பேத்தியின் கவுன். ஆசைதீர உடுத்தி பழசாகிப்போன கவுன்.

இன்றைக்குத்தான் அந்த கவுனை முதல் தடவையாய் உடுத்தியிருந்தாள். என்னமோ நேற்றைக்குத்தான் கடையிலிருந்து புதுசாய் வாங்கி வந்ததைப்போல முத்துப்பேச்சியின் முகத்தில் அப்படியொரு குதூகலம். உற்சாக வெள்ளம். பரவசப் பெருமிதம்.முத்துப்பேச்சியின் கண்கள் ஓர் இடத்திலும் நிற்காமல் அலைபாய்ந்தன. கருவண்டுகளாய் வட்டமிட்டன. பம்பரமாய்ச் சுழன்றன. பலகாரக்கடைகளில் அடுக்கடுக்காய் அழகுணர்ச்சியோடு அடுக்கப்பட்டிருந்த மைசூர்பாகுகளும், ஜாங்கிரிகளும், லட்டு உருண்டைகளும், வண்ண வண்ண மைதா கேக்குகளும் நாக்கில் உமிழ்நீரைச் சுரக்க வைத்தன.

ஏக்கம் மிளிர எச்சிலை விழுங்கினாள். இதெல்லாம் கிடைக்காது. அழுதாலும் நடக்காது. தலைகீழாய் நின்றாலும் விழுந்து புரண்டாலும் கைக்கு வரவே வராது. இவைகளையெல்லாம் கற்பனையிலேயோ, கனவிலேயோதான் திகட்டத் திகட்ட தின்னு பார்க்க வேண்டும்.“ஏ... புள்ள... அங்க என்னத்த பார்க்கற... வெரசா வா... காவடிக்காரங்க வர்றதுக்குள்ள மாவிளக்கைப் போட்டுட்டு வூட்டுக்குப் போயிடலாம்...”இடுப்பில் வைத்திருந்த மாவிளக்குச் சட்டியோடு கூட்டத்திற்குள் புகுந்து திணறலாய் முன்னேறினாள் செடிபவுனு.தோளில் துவண்டுகிடந்த மூன்றரை வயசு வடிவு... கோயில் வளாகத்தில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வாத்தியக் கருவிகளின் இரைச்சலில் திடுக்கிட்டு விழித்து வீறிட்டுக் கத்தினாள்.

“ச்சூ... சும்மா இரு... அழுதின்னா... சாமி... கண்ணைக் குத்திடும்...”
வடிவை மிரட்டுவது போல் எச்சரித்துவிட்டு... கோயிலின் முன்மண்டபத்திற்குள் வந்திருந்தாள் செடிபவுனு.அத்தனை கூட்டத்திலும் செடிபவுனு தனித்து தெரிந்தாள். கிழிசலான சேலையைக் கட்டியிருந்தாள். மூக்கிலும் கழுத்திலும் ஈர்க்குச்சி. உழைத்து உழைத்து ஓடாகிப்போன கைகளில் நெளிந்த ரப்பர் வளையல்கள். கழுத்தில் மட்டும் புதுசாய் பளிச்சென்று மஞ்சள் கயிறு. நெற்றியில் இருப்பதே தெரியாத விதமாய் சின்ன பொட்டு.

செடிபவுனுக்கு வயசு என்னமோ இருபத்தியேழுதான். தோற்றமோ நடுத்தர வயசுக்காரிபோல இருந்தது. குடிகார புருஷன் ராசப்பன்... அதுவும் மொடாக் குடிகாரன். செங்கல் சூளைக்கு வேலைக்குப் போவான். கூரை வீடுகளுக்கு கீற்று வேயப் போவான். வீடு கட்டுமான வேலை கூடத் தெரியும். ஒரு நாளைக்கு அறுநூறு, எழுநூறு சம்பளம். அப்படியே குடித்து விடுவான்.
செடிபவுனு கேட்டால் அடி உதைதான். மிதிமிதியென்று மிதிப்பான். ராசப்பன் மனிதனில்லை. மிருகம். வேஷ்டி கட்டிய மிருகம். பேசத்தெரிந்த மிருகம். தன்னை நம்பியிருக்கும் மனைவியையும், குழந்தைகளையும் பாதுகாக்கத் தெரியாத மிருகம்.

ராசப்பன் யோக்கியனாய் இருந்திருந்தால் செடிபவுனுக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்காது. ராணி மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கலாம். மனசாட்சியோ, பொறுப்போ, நல் ஒழுக்கமோ இல்லாத ஆணுக்கு கழுத்தை நீட்டினால் இதுதான் கதி.ராசப்பன் ஈன ஜென்மம். செடிபவுனு பாவ ஜென்மம்.தினம் தினம் குடித்துவிட்டு தள்ளாடுகிறவனுக்கு, வேலை செய்கிற இடத்தில் எல்லாம் பிரச்னை செய்கிறவனுக்கு இங்கே யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.

இரண்டு பெண் குழந்தைகளையும், செடிபவுனுவையும் விட்டுவிட்டு கேரளா பக்கம் வேலை தேடி ஓடியவன்... இன்றுவரை திரும்பி வரவில்லை. வருடங்கள் இரண்டாகின்றன. உயிரோடு இருக்கிறானா..? தெரியாது. அங்கேயே இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு தங்கிவிட்டானா? தெரியாது.செடிபவுனுவின் மனசு ரணமாய்க் கிடந்தது.

அழுவதற்கு கண்ணீரும் மிச்சமில்லை. அவளுக்காக இரவும் நிற்கவில்லை. பகலும் நிற்கவில்லை. கடிகாரமும் காத்திருக்கவில்லை. நாட்கள்ஓடிக்கொண்டேயிருந்தன.
கருவேலங்காட்டில் விறகு வெட்டியும், மணியக்காரர் வீட்டில் பத்துபாத்திரம் தேய்த்தும் தன் இரு பிஞ்சுக் குழந்தைகளுடன் சேர்ந்து தன் வயிற்றையும் நனைத்துக் கொண்டிருந்தாள்.
கோயிலின் முன்மண்டபம் முழுக்க பெண்கள் கூட்டம்.

அலங்கரிக்கப்பட்டிருந்த வீதியுலா அம்மன் சிலைக்கு முன்னால் அவரவர் பாத்திரங்களில் மாவிளக்கு தீபங்கள் மினுக்கிக் கொண்டிருந்தன.முட்டி மோதி கூட்டத்திற்குள் புகுந்து மாவிளக்கில் தீபமேற்றிவிட்டாள் செடிபவுனு.வடிவின் அழுகை நின்றபாடில்லை. முத்துப்பேச்சியோ திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள். நினைப்பெல்லாம் கோயில் வளாகத்தில் விற்கப்படுகிற பலூன்களின் மீதே இருந்தது.

காற்றடைக்கப்பட்ட பெரிய பெரிய பலூன்கள்... வண்ண வண்ண பலூன்கள்... கிளிமாதிரி, மீன் மாதிரி, முயல் மாதிரி, மயில் மாதிரி வடிவமைக்கப்பட்ட பலூன்கள்...
கோயிலை விட்டு வெளியேறும் முன்னால் எப்படியும் தன் தாய் தனக்கொரு பலூன் வாங்கித் தந்துவிடுவாள் என்ற நப்பாசையில் இருந்தாள். அதனாலேயே செடிபவுனு மாவிளக்குப் போட்டு முடிக்கும்வரை அமைதியாகக் காத்திருந்தாள்.

‘மயில் பலூனை வாங்கிக்கலாமா..? இல்லே முயல் பலூனை வாங்கிக்கலாமா..? ம்ஹும்... கிளி பலூன்தான் எல்லாத்தையும் விட அழகா இருக்கு. பச்சையும் சேப்பும் கலந்த நெறத்துல அழகோ அழகு! நெசக்கிளியாட்டம் தெரியுது. வேணுமின்னா வடிவுக்கு மயில் பலூனை வாங்கிக்கலாம்... எனக்கு கிளி பலூன்தான் வாங்கணும்...'முத்துப்பேச்சிக்குள் கற்பனைகள் விரிந்தன.மாவிளக்குச் சட்டியில் இருந்த தேங்காயை உடைத்து... கற்பூரம் ஏற்றி... நெய்தீபம் காட்டி... குங்குமப் பிரசாதம் கொடுத்தார் பூசாரி.

பயபக்தியோடு மாவிளக்குச் சட்டியை வாங்கிக்கொண்டு கர்ப்பக்கிரகத்தில் இருந்த காத்தாயி அம்மனைக்கும்பிட்டு விட்டு ஒரு வழியாய் வெளியே வந்திருந்தாள் செடிபவுனு.
பகட்டான சேலைகட்டி தலைநிறைய பூவைத்து, இருக்கிற ந கைகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருக்கிற பெண்களுக்கு மத்தியில்... தன் தோற்றத்தை நினைத்து கூனிக் குறுகிப்போனாள்.

மாவிளக்குப் போட சாமான்கள் வாங்குவதற்கு அவள்பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும்.பூமாலை, தேங்காய், சூடம், சாம்பிராணி, பத்திக்கட்டு, பச்சரிசி, சர்க்கரை, நெய், வாழைப்பழங்கள்... என எல்லாம் வாங்குவதற்கு இருநூறு ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது.

ஏற்கனவே நூறு ரூபாய் வைத்திருந்தாள். மிச்சம் நூறு ரூபாய் மணியக்கார மனைவியிடம் கெஞ்சிக்கூத்தாடி வாங்கியது.கருவேலங்காடு நிறைய மரங்கள் இருந்தாலும்... இவள் கட்டுக்கட்டாய் விறகுகளை வெட்டினாலும் அதை வாங்க நாதியில்லை. பெரிய கட்டு விறகை பத்துக்கும் இருபதுக்கும் கேட்டார்கள். மரக்கடைக்காரர்கள் எல்லாம் பானிப்புயலின் காரணமாக வீழ்ந்திருந்த மரங்களை உடைத்து விறகாக்கி மரவாடி போல அடுக்கி வைத்திருந்தார்கள்.

“சும்மா கொடுத்தின்னாக்கூட விறகு வேணாம்...” விரட்டினார்கள்.விறகிற்கு விலை இல்லை. கேட்டவர்களிடம் கேட்ட விலைக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.
காத்தாயி அம்மன் சக்தி வாய்ந்த அம்மன். ஊரே கொண்டாடும் அம்மன். உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரிலிருந்தெல்லாம் பக்தர்கள் வந்து வழிபடுகிற அம்மன். உள்ளூரிலிருந்து கல்யாணமாகி வெளியூர் போய்விட்ட பெண்கள் எல்லாம் தங்களுடைய புகுந்தவீட்டு உறவுகளுடன் வந்து வழிபடுகிற அம்மன்.

திருவிழாவிற்குப் போகாமல் இருக்கக் கூடாது. மாவிளக்குப் போடுவதை நிறுத்தக் கூடாது. திருவிழா சமயத்திலாவது காத்தாயி அம்மனைப் போயி கும்பிடலைன்னா நல்லாவா இருக்கும்..?
எப்படியோ ரூபாயைப் புரட்டி வந்துவிட்டாள். மாவிளக்கும் போட்டு விட்டாள். மாவிளக்கு சீட்டு வாங்கவும், பூசாரிக்கு தட்டில் தட்சணை வைக்கவும் முந்தானையில் முடிந்து வைத்திருந்த சில்லறைக் காசுகள் தீர்ந்து விட்டன.

இனி ஒற்றை ரூபாய்கூட கையில் இல்லை...‘அது வேணும் இது வேணும்னு முத்துப்பேச்சியும் வடிவும் அழறதுக்குள்ளே... வூட்டைப் பார்க்க போயிடணும்... இனி இங்கே நிற்கக் கூடாது...’கோயில் மண்டபத்தை மூன்று சுற்று சுற்றி வந்து... முகப்புக் கொடிமரத்திற்கு முன்னால் விழுந்து வணங்கினாள்.“யம்மா... பலூன்மா...”முத்துப்பேச்சி முனகலாய் ஆரம்பித்தாள்.
“வூட்டுக்குப் போலாமா கண்ணு..?” பேச்சை மாற்றினாள் செடிபவுனு.

“பலூன் வாங்கிட்டு வூட்டுக்குப் போவலாம்மா... எனக்கு கிளி பலூனு... வடிவுக்கு மயில் பலூனு... ரெண்டு போதும்மா...”
“மாவௌக்கு மாவை உருட்டித் தர்றேன்... ரெண்டு பேரும் தின்னுக்கிட்டே வர்றியளா..? நெறைய சர்க்கரை போட்டு பெசைஞ்சிருக்கேன்... நல்லா இருக்கும்...” வாஞ்சையோடு கேட்டாள்.
“ஊகூம்... வேணாம்...” முத்துப்பேச்சி உதட்டைச் சுழித்தாள். கண்கள் பலூன் வியாபாரி மீதே பதிந்திருந்தன.

தன் சைக்கிளில் சாய்ந்தபடி இருபது முப்பது பலூன்களை நூலில் கட்டி தலைக்குமேலே பிடித்துக் கொண்டிருந்தான். “பலூன்... பலூன்... மயில் பலூன்... கிளி பலூன்... முயல் பலூன்... வாங்கிப் போங்கம்மா... பத்து ரூவாதான்...” வியாபாரிக்கு விற்பனை ஒன்றேதான் குறி. செடிபவுனுவிடம் ரூபாய் இருப்பதும் இல்லாததும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
குறைந்தது ஐம்பது பலூன்களாவது விற்றால்தானே அவனுடைய அன்றைய பிழைப்பு நடக்கும்..? வியாபாரியைக் குறை சொல்ல முடியுமா? கூவிக்கூவி விற்காதே என சண்டைதான் போட முடியுமா..?

குழந்தைகளோடு கோயில் திருவிழாவிற்கு வருகிறபோது சாமி கும்பிடுகிறோமோ இல்லையோ குழந்தைகள் கேட்கிற பொம்மையையோ, பலூனையோ, பலகாரத்தையோ வாங்கிக் கொடுத்தால்தான் திருப்தி கிடைக்கும். நிம்மதி பரவும்.செடிபவுனுவின் மனசு அல்லாடியது. தவியாய்த் தவித்தது. துடியாய்த் துடித்தது. தன் இயலாமையை எண்ணி விம்மினாள். ‘பத்து ரூவாய்க்கு பலூன் வாங்கிக் குடுக்கக் கூட வக்கில்லாதவளா ஆயிட்டேனே..!’ உள்ளுக்குள் ஊனமாய்க் கதறினாள்.

“யம்மா... பலூன்மா...” முத்துப்பேச்சி கெஞ்சினாள்.“ப்ச்... வாயை மூட மாட்டியா நீ...”
“ஒண்ணாவது வாங்கிக் குடும்மா... நானும் வடிவும் அதை வெச்சே வெளையாடிக்கறோம்...” முத்துப்பேச்சி திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தாள். தோளில் கிடந்த வடிவும் அவளோடு சேர்ந்து கொண்டாள். “ப... பலூன்... எனக்கும் வேணும்...” கையையும், கால்களையும் ஆட்டி, உதைத்து கீழே இறக்கிவிடச் சொல்லி பிடிவாதம் பண்ணினாள்.செடிபவுனுக்கு எரிச்சல் பீறிட்டது. காத்தாயி அம்மன் கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் இருக்கும் வீரன்சாமி, பெரியாச்சி, முனியன், தூண்டிக்கார சின்னான் சாமி சன்னதி பக்கமெல்லாம் போகவே முடியவில்லை. விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கக் கூட முத்துப்பேச்சியும், வடிவும் விடவில்லை.

“பலூன் வேணும்... பலூன் வேணும்...” பாடாய்ப் படுத்தினார்கள்.வாரா வாரம் தெருவிற்கு வந்து வளையல் விற்கிற செண்பகம் அக்காவும் வளையல் கடை போட்டிருந்தாள். கையில் காசு இருக்கிறபோது செண்பகம் அக்காவிடம்தான் செடிபவுனு ரிப்பன், பாசிமணி எல்லாம் வாங்குவாள்.‘செம்பகம் அக்காகிட்ட போயி இருபது ரூவா கடன் வாங்கியாச்சும் இந்த சனியனுங்களுக்கு பலூனை வாங்கிக் குடுத்துடலாம்... வேற வழியே இல்ல. இல்லாட்டி இங்கயே உசிரை எடுத்துடுங்க...’கண்கள் மினுக்க முகத்தில் மலர்ச்சியாய் செண்பகம் அக்காவின் வளையல் கடையை நோக்கி ஓடினாள். அதற்குள் வடிவு அவளுடைய தோளில் இருந்து கீழே இறங்கிவிட முத்துப்பேச்சி அவளை இழுத்துக்கொண்டு பலூன் வியாபாரியிடம் ஓடினாள்.

“யக்கா... ஒரு இருபது ரூவா கடனா தந்தீன்னா நாளபின்ன தெருவண்ட வர்றப்ப தந்துடுவேன்க்கா...”அதைக்கேட்டதும் செண்பகம் அக்காவின் முகத்தில் தீப்பற்றிய வைக்கோல் போர் போல தகதகத்தது கோபம்.“எட்டிப்போடி... திருவிழாவுக்கு வர்றவ குங்குமமும் மஞ்சளும் வாங்கிப் போவான்னு பேரு... ஆனா, நீ... வெக்கமே இல்லாம கடன் கேக்க வந்துட்ட! புள்ள குட்டியோட கோயிலுக்கு வர்றவ வெறுங்கையை வீசிக்கிட்டா வருவே..?”குதப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சிலை கடைக்கு வெளியே ஒரு ஓரமாய்த் துப்பினாள்.

செடிபவுனுக்கு தன் முகத்திலேயே துப்பியது போல அவமானமாக இருந்தது.“பத்து ரூவாயாச்சும் தாக்கா...”“யேவாரத்தைக் கெடுக்காம நகருடி... நீ எல்லாம் கோயிலுக்கு வந்து சாமி கும்பிடலேன்னு, மாவிளக்கு போடலேன்னு யாரு அழுதா..?”அந்த வார்த்தைகள் கன்னத்தில் அறைபட்டதுபோல வலித்தது. குங்குமம், மஞ்சள் வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் ஒரு கணம் நிமிர்ந்து செடிபவுனுவை பரிதாபமாக வேடிக்கை பார்த்தார்கள்.

செடிபவுனுக்கு தேகம் கூசியது. ‘ரூவா இல்லைன்னா கோயிலுக்கு வரக்கூடாதா..? சாமி கும்பிடக் கூடாதா? மாவிளக்கு போடக்கூடாதா..? நாந்தான் தப்பு பண்ணிட்டேன்... இருந்த ரூவாய்க்கு பூ, பழம், மாவிளக்கு சாமான்னு வாங்காம கோயிலுக்கு வந்து புள்ளைங்க கேட்டதை வாங்கிக் குடுத்திருக்கலாம்... சாமி எதையும் கேக்காது... கோச்சுக்காது. அழாது. பிடிவாதம் பிடிக்காது. ஆனா, புள்ளைங்க ரெண்டும் கேக்குமே... கோச்சுக்குமே... அழுமே... பிடிவாதம் பிடிக்குமே... இதைப்பத்தி யோசிக்காமலே வந்துட்டேனே!’செண்பகம் அக்காவின் வளையல் கடையை விட்டு நகர்ந்து வடிவையும், முத்துப்பேச்சியையும் தேடினாள்.

இருவரும் பலூன் வியாபாரியிடம் நின்றிருந்தார்கள். முத்துப்பேச்சி கையில் கிளி பலூன்... வடிவு கையில் மயில் பலூன்... நூலின் முனைகளில் கட்டப்பட்டிருந்த பலூன்கள் பறக்க... முத்துப்பேச்சி, வடிவு இருவருடைய முகங்களிலும் அத்தனைப் பிரகாசம். நுப்பும் நுரையுமாய் வழிகிற மட்டற்ற குதூகலம். வெள்ளமாய் உற்சாகம்...
“ஏதுங்கடி இதெல் லாம்...?”

செண்பகா அக்காவிடம் பட்ட அவமானம் அவளுக்குள் திகுதிகுவென எரிந்தது. செண்பகா அக்காவிடம் பேச முடியாத இயலாமை தன் குழந்தைகளிடம் வெடித்தது.
முத்துப்பேச்சியும், வடிவும் அவள் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.இருவருடைய கைகளிலும் இருந்த பலூன்களை நூலோடு சேர்த்து வெடுக்கென பிடுங்கினாள்.
“யோவ்... காசு இல்லாம ஒன்னைய யாருய்யா இதுங்க கையில குடுக்கச் சொன்னது..?” பலூன் வியாபாரியைப் பார்த்துச் சீறினாள். பலூன்களை
அவனிடமே நீட்டினாள்.

“வேணாம்மா... கொழந்தைங்ககிட்டயே குடுங்க...” பலூன் வியாபாரி பதறினான்.“இனாமா குடுக்கறியாக்கும்? அடுத்த வருஷம் திருவிழாவுக்கு வர்றப்ப கையில காசு இருந்துச்சுன்னா நானே வாங்கிக் குடுத்துக்கறேன்...” பலூன் வியாபாரியின் கையில் திணித்தாள்.செடிபவுனு தங்களிடமிருந்த பலூன்களைப் பறித்ததுமே முகம் வாடி, முத்துப்பேச்சியும், வடிவும் அழ ஆரம்பிக்க... இருவருடைய முதுகிலும் பளீரென்று ஒரு அடி போட்டாள்.

“யாராவது குடுத்தாங்கன்னு எதையாச்சும் வாங்குனீங்க... தொலைச்சுடுவேன்...” விரலை உயர்த்தி எச்சரித்தவள் வடிவைத் தூக்கி தோளில் போட்டாள். முத்துப்பேச்சியின் கையை கெட்டியாய்ப் பற்றினாள்.பலூன் வியாபாரி செடிபவுனுவின் பின்னாலேயே ஓடி வந்தான். “பலூனை வாங்கிக்கங்கம்மா... நா ஒண்ணும் இனாமா குடுக்கலை... காசு வாங்கிட்டுதான் குடுத்தேன்...”
செடிபவுனு திகைத்து திடுக்கிட்டு பலூன் வியாபாரியைப் பார்த்தாள். “காசா... யாரு குடுத்தா..?”
“அதோ.. அந்தாளுதான்...”

பலூன் வியாபாரியின் விரல்காட்டிய திசையில் செடிபவுனுவின் பார்வை போனது.அங்கே வீரன்சாமி சன்னதி பக்கமாய் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான் ராசப்பன்.
பலூன் வியாபாரி திரும்பவும் பலூன்களை குழந்தைகளின் கைகளில் திணித்துவிட்டுப் போய்விட்டான்.“யோவ்... நீயா..? எப்பய்யா வந்தே..?”“இப்பத்தான் ஊருக்குள்ளே வந்தேன்... குடிசையில நீ இல்ல. கோயிலுக்குத்தான் போயிருப்பேன்னு வந்தேன்! செடிபவுனு... என்னைய மன்னிச்சிடு... நா இப்பல்லாம் குடிக்கறதே இல்ல.

கேரளாவுல வேலை செஞ்சப்ப குடிபோதையில லாரில அடிபட்டு. காலு முறிஞ்சிடுச்சு... யாரோ நாலு நல்ல மனுஷங்கதான் காப்பாத்தினாங்க.. காய்கறி தோட்டத்துல வேலை செய்யறேன்... சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிக்காம. சாப்பாடு போக. சேர்த்து வெச்சிருக்கேன். குறிப்பிட்ட அளவு ரூபா சேர்ந்ததும் திடுதிப்புன்னு உம்முன்னாடி வந்து நிக்கணும்னு வைராக்கியத்தோட இருந்தேன்...” சற்றே கால்களைச் சாய்த்து தள்ளாடித் தள்ளாடி அவளை நோக்கி வந்தான்.

அடையாளம் கண்டுகொண்ட முத்துப்பேச்சி ஓடிப்போய் அவனைக் கட்டிக்கொள்ள... வடிவு அழுகையை நிறுத்தி அவனை மிரளமிரளப் பார்த்தது.“நா வரலைன்னாலும் ஊருல எதுவும் கொறைஞ்சு போயிடாது... எப்பவும்போல கோயில் திருவிழா நடக்கும்... தேரு ஓடும்... ராட்டினம் சுத்தும்... ஆனா, ஒனக்கும் எம்புள்ளைங்களுக்கும் நா இருந்தாதானே எல்லாமே கெடைக்கும்?”வளையல் கடைக்குப் போனான். கைகள் நிறைய மஞ்சளும் குங்குமமும் வாங்கி வந்து நீட்டினான்.கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.

செடிபவுனு பதிலேதும் பேசாமல் புன்முறுவல் பூத்தாள். ராசப்பன் தன் குழந்தைகளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தான்.மயில்காவடி, பால் காவடி, பன்னீர் காவடி ஏந்திய பக்தர்களும் வாத்தியக் கருவிகளின் முழக்கத்தோடு கோயிலை நெருங்கியிருந்தார்கள்.முத்துப்பேச்சியும், வடிவும் பிடித்திருந்த நூலின் முனையில் கட்டப்பட்டிருந்த கிளி பலூனும் மயில் பலூனும் உயரே உயரே பறக்கத் தொடங்கின.செடிபவுனுவின் கண்களில் இப்போது நிஜமான திருவிழா.

மகேஷ்வரன்