வாழ்க நீ எம்மா!



இந்தாண்டு யுஎஸ் ஓபன் மகளிர் பட்டத்துக்கான இறுதியாட்டம் பல விதங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.முதலில் இம்மாதிரி இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் - சொல்லப்போனால் சிறுமியர்-மகளிர் பட்டத்துக்கான இறுதியாட்டத்தில் ஆடி பல்லாண்டுகள் ஆகிவிட்டன.
கடைசியாக 1999ல் செரினா வில்லியம்ஸும்  மார்ட்டினா ஹிங்கிஸும் விளையாடியதற்குப் பின் இப்போதுதான் இது  நிகழ்ந்திருக்கிறது.இதைச் சாதித்தவர்கள், லைலா ஃ பெர்னாண்டஸ் (Leylah Fernandez ) மற்றும் எம்மா ரடுக்கானு (Emma Raducanu). முறையே கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இவர்கள்.

இறுதியில் எம்மா ரடுக்கானு யுஎஸ் ஓபன் மகளிர் பட்டத்தை வென்றதன் வழியாக மிக நீண்ட காலத்துக்குப்பின் பிரிட்டிஷ் பெண் ஒருவர் டென்னிஸில் பட்டம் வென்றார் என்ற பெருமையைப் படைத்திருக்கிறார்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சம், இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்த இருவருமே கலப்பினத்தவர் என்பது. லைலா ஈக்வடார் நாட்டு கறுப்பினத் தந்தைக்கும், கனடாவில் குடியேறிய பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மங்கோலிய இனத் தாய்க்கும் பிறந்தவர். எம்மா ரடுக்கானுவின் தாய் ஒரு சீனர், தந்தை ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர். அசப்பில் நேபாளிய அல்லது நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த ஒரு பெண் போல எம்மா இருக்கிறார்.

உலகெங்கும் மக்களின் குடிப்பெயர்ச்சிகளும்,பயணங்களும் மிகவும் அதிகரித்துவிட்ட இந்தச் சூழலில் இனி இம்மாதிரி கலப்பினத்தவர்களின் இருப்பு சர்வ சாதாரணமாகிவிடும்.
யுஎஸ் ஓபன் மகளிர் பட்டம் வென்ற எம்மா குறித்து பேச அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

ஏனெனில், தகுதிச்சுற்று வீரராக களம் இறங்கி பல முன்னணி வீரர்களைத் தோற்கடித்து, விளையாடிய பத்து போட்டிகளிலும் ஒரு செட் கூட இழக்காமல் இறுதிப் போட்டியில் வெல்வது எல்லாம் அசாத்தியமான சாதனை. 18 வயதேயான எம்மா ரடுக்கானுக்கு இதெல்லாம் கைகூடியிருக்கிறது.

150வது ரேங்க் வீரராக தொடருக்குள் நுழைந்து, இறுதிப்போட்டியில் மற்றொரு இளம் வீராங்கனையான லைலா ஃபெர்னாண்டஸை 6-4, 6-3 என நேர்செட்டில் தோற்கடித்து, புதிய சகாப்தம் படைத்து, அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் எம்மா ரடுக்கானு.கோப்பையை வெல்ல ரடுக்கானு கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல.

மெயின் டிராவில் பங்கேற்க முதலில் மூன்று தகுதிச்சுற்று போட்டிகளை ரடுக்கானு வென்றாக வேண்டியிருந்தது. அந்தப் போட்டிகளை அசால்ட்டாக டீல் செய்து வெற்றி வாகை சூடினார்.அதன்பிறகு அடுத்தடுத்து டாப்-50 ரேங்க்கில் உள்ள மூன்று வீரர்களைத் தோற்கடித்து, ஆச்சர்யப்பட வைத்தார்.

நம்பர் ஒன் வீராங்கனை அஷ்லி பார்டியைத் தோற்கடித்த ஷெல்பி ரோஜர்ஸ், காலிறுதியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெலிண்ட பெனிக் ஆகியோர் ரடுக்கானுவின் வெற்றிக்கு தடங்கலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களை வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். பொதுவாக டென்னிஸ் உலகில் சிறுவயதிலேயே பயிற்சி கொடுத்து வீரர்களை வளர்த்தெடுப்பார்கள். இளம் வயதிலேயே இவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சப்படும். விளம்பர ஒப்பந்தங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என இவர்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகள் அள்ளி வீசப்படும்.

ஆனால், இவர்கள் கண்ணில் எல்லாம் ரடுக்கானு படவில்லை. அதற்குக் காரணம் இவரது பெற்றோர்கள். டென்னிஸை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்பதே பெற்றோர்கள் அவருக்கு இட்ட கட்டளை. இவரது தாயார் சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் படிப்பும், கடின உழைப்பும் இளம் வயதிலிருந்தே இவரிடம் ஒட்டிக் கொண்டது. ஒருபக்கம் பள்ளி வகுப்புகள், மறுபக்கம் கொரோனா நோய்த்தொற்று என 18 மாதங்களாக எந்தப் போட்டியிலும் ரடுக்கானுவால் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆனாலும், அமெரிக்க ஓபனில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் ரடுக்கானு. இந்தத் தொடர் முழுக்க அவரது ஆட்டம் முறையாகவும், திட்டமிட்டதாகவும், எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என நேர்த்தியான ஆட்டமாகவும் இருந்தது. இவரை இளம் அறிமுக வீரராகவோ உற்சாகத் துள்ளல் கொண்ட இளைஞர்களின் அடையாளமாகவோ மட்டும் குறுக்கி விட முடியாது. இவரது ஸ்ட்ரோக்ஸ் ஒவ்வொன்றும் அச்சு பிசகாமல் டெக்ஸ்ட்புக் ஷாட்களாக இருந்தன. இவரது டெக்னிக் அவ்வளவு எளிதில் தகர்க்க முடியாதவை. ஒன்டைம் வொண்டராக இல்லாமல் டென்னிஸ் உலகில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைப்பார் இந்த எம்மா என எதிர்பார்க்கலாம்!

என்.ஆனந்தி